பக்கம் எண் :

பிற்சேர்க்கை : பல புதிய பாடல்கள்

செட்டிமக்கள் குலவிளக்கு


பல் லாண்டு வாழ்ந் தொளிர்க! கானாடு
காத்த நகர்ப் பரிதி போன்றாய்
சொல் லாண்ட புலவோர்த முயிர்த்துணையே
தமிழ் காக்குந் துரையே, வெற்றி
வில்லாண்ட இராமனைப் போல், நிதியாளும்
இராமனென விளங்கு வாய்நீ
மல்லாண்டதிண் டோளாய், சண்முக
நாமம் படைத்த வள்ளற் கோவே.
1

செட்டி மக்கள் குலத்தினுக்குச் சுடர்விளக்கே
பாரதமா தேவி தாளைக்
கட்டியுளத் திருத்தி வைத்தாய், பராசக்தி
புகழ்பாடிக் களித்து நிற்பாய்,

ஒட்டிய புன்கவலை பயஞ் சோர் வென்னும்
அரக்க ரெல்லாம் ஒருங்கு மாய
வெட்டி யுயர் புகழ் படைத்தாய் விடுதலையே
வடிவ மென மேவி நின்றாய்.
2

தமிழ் மணக்கும் நின்னாவு; பழவேத
உபநிடதத்தின் சார மென்னும்
அமிழ்து நின தகத்தினிலே மணம் வீசும்;
அதனாலே யமரத் தன்மை
குமிழ்பட நின் மேனியெலா மணமோங்கும்;
உலகமெலாங் குழையு மோசை
உமிழ்படு வேய்ங்குழ லுடைய கண்ணனென
நினைப் புலவோர் ஓதுவாரே.
3

பாரத தனாதிபதி என நினையே
வாழ்த்திடுவார் பாரி லுள்ளோர்;
ஈர மிலா நெஞ்சுடையோர் நினைக் கண்டா
லருள் வடிவ மிசைந்து நிற்பார்;
நேரறியா மக்க ளெலா நினைக்கண்டால்
நீதி நெறி நேர்ந்து வாழ்வார்
யாரறிவார் நின்பெருமை? யாரதனை
மொழியி னிடையமைக்க வல்லார்.
4

பல நாடு சுற்றிவந்தோம்; பல கலைகள்
கற்று வந்தோ மிங்கு பற்பல
குல மார்ந்த மக்களுடன் பழகிவந்தோம்;
பல செல்வர் குழாத்தைக் கண்டோம்;
நில மீது நின் போலோர் வள்ளலையாங்
கண்டிலமே, நிலவை யன்றிப்
புலனாரச் சகோர பக்ஷி களிப்பதற்கு
வேறு சுடர்ப் பொருளிங் குண்டோ?
5


மன்னர் மிசைச் செல்வர் மிசைத் தமிழ்பாடி
யெய்ப் புற்றுமனங் கசந்து
பொன் னனைய கவிதையினி வானவர்க்கே
யன்றி மக்கட் புறத்தார்க் கீயோம்
என்ன நம துளத்தெண்ணி யிருந்தோ மற்
றுன் னிடத்தே இமையோர்க்குள்ள
வன்ன மெலாங் கண்டுநினைத் தமிழ்பாடிப்
புகழ்வதற்கு மனங் கொண்டோமே.

6

மீனாடு கொடி யுயர்ந்த மதவேளை
நிகர்த்த வுருமேவி நின்றாய்
யா(ம்) நாடு பொருளை யெமக் கீந்தெமது
வறுமையினை யின்றே கொல்வாய்
வானாடு மன்னாடுங் களியோங்கத்
திரு மாது வந்து புல்கக்
கானாடு காத்தநக ரவதரித்தாய்,
சண் முகனாங் கருணைக் கோவே
7