|
சொல்
|
[சொல் ஒன்று வேண்டும்.
தேவ சக்திகளை நம்முள்ளே நிலைபெறச் செய்யும் சொல் வேண்டும்.]
|
தேவர் வருகவென்று சொல்வதோ? -- ஒரு
செம்மைத் தமிழ்மொழியை நாட்டினால்
ஆவ லறிந்துவரு வீர்கொலோ? -- உம்மை
யன்றி யொருபுகலும் இல்லையே. |
1 |
‘ஓம்’ என் றுரைத்துவிடிற் போதுமோ? -- அதில்
உண்மைப் பொருளறிய லாகுமோ?
தீமை யனைத்துமிறந் தேகுமோ? -- என்றன்
சித்தம் தெளிவுநிலை கூடுமோ? |
2 |
‘உண்மை ஒளிர்க’ என்று பாடவோ? -- அதில்
உங்கள் அருள் பொருந்தக் கூடுமோ?
வண்மை உடையதொரு சொல்லினால் -- உங்கள்
வாழ்வு பெறவிரும்பி நிற்கிறோம். |
3 |
“தீயை அகத்தினிடை மூட்டுவோம்” -- என்று
செப்பும் மொழிவலிய தாகுமோ?
ஈயைக் கருடநிலை யேற்றுவீர் -- எம்மை
என்றுந் துயரமின்றி வாழ்த்துவீர். |
4 |
வான மழைபொழிதல் போலவே -- நித்தம்
வந்து பொழியுமின்பங் கூட்டுவீர்
கானை அழித்துமனை கட்டுவீர் -- துன்பக்
கட்டுச் சிதறிவிழ வெட்டுவீர். |
5 |
விரியும் அறிவுநிலை காட்டுவீர்-அங்கு
வீழும் சிறுமைகளை ஓட்டுவீர்
தெரியும் ஒளிவிழியை நாட்டுவீர் -- நல்ல
தீரப் பெருந்தொழிலில் பூட்டுவீர். |
6 |
மின்ன லனையதிறல் ஓங்குமே -- உயிர்
வெள்ளம் கரையடங்கிப் பாயுமே
தின்னும் பொருளமுதம் ஆகுமே -- இங்குச்
செய்கை யதனில் வெற்றி யேறுமே. |
7 |
தெய்வக் கனல்விளைந்து காக்குமே -- நம்மைச்
சேரும் இருளழியத் தாக்குமே.
கைவைத் ததுபசும்பொன் ஆகுமே -- பின்பு
காலன் பயமொழிந்து போகுமே. |
8 |
‘வலிமை’ வலிமை என்று பாடுவோம் -- என்றும்
வாழும் சுடர்க்குலத்தை நாடுவோம்
கலியைப் பிளந்திடக்கை யோங்கினோம் -- நெஞ்சில்
கவலை இருளனைத்தும் நீங்கினோம். |
9 |
‘அமிழ்தம் அமிழ்தம்’ என்று கூவுவோம் -- நித்தம்
அனலைப் பணிந்துமலர் தூவுவோம்
தமிழில் பழமறையைப் பாடுவோம் -- என்றும்
தலைமை பெருமை புகழ் கூடுவோம். |
10 |
[பாட பேதம்]: ‘இங்குச்’
-- கவிமணி
|
|