பக்கம் எண் :

கருத்தடை மருத்துவமனையில் ஒருத்தி வேண்டுகோள்

இருக்கும் பிள்ளைகள் எனக்குப்போதும் அம்மா - என்
கருக்கதவை மூடிவிடுங்கள் அம்மா - அம்மா
இருக்கும் பிள்ளைகள்...

பெருத்த வருமானம் எனக்கில்லை-இனிப்
பிள்ளை பெறும் வலிவும் உடம்பில் இல்லை;
வருத்தில் ஏதும் மீதம் ஆவதுமில்லை-அடகு
வைத்து வாங்க மூக்குத் திருகுமில்லை,
இருக்கும் பிள்ளைகள்...

மக்கள் தொகை பெருத்தால் வரும் பஞ்சம்-இங்கு
வரும் பஞ்சத்தால் ஒழுக்கக்கேடே மிஞ்சும்;
தக்கோர் இவ்வாறு சொன்னார் (என்) நெஞ்சம்
தாங்குவதோ அருள் புரிவீர் கொஞ்சம்
இருக்கும் பிள்ளைகள்...

தாய்மொழியில் அன்பிராது நாட்டில்
தன்னலமாம் அவரவர் கோட்பாட்டில்
தூய்மையே இராது நெஞ்ச வீட்டில்-மக்கள்
தொகைப் பெருக்கம் ஏன் இந்தக் கேட்டில்
இருக்கும் பிள்ளைகள்...

தோன்றியுள்ள மக்கள் நலம் யாவும்-இங்குத்
தோன்றாத மக்கள் தந்த தாகும்
தோன்றாமை இன்பம் என்று சொன்னார்-மிகத்
தூயரான புத்தர் ஐயாவும்
இருக்கும் பிள்ளைகள்...







( 5 )





( 10 )





( 15 )





( 20 )

அரசினரே நடத்தவேண்டும்!

   
தனியாரிடத்தில் வாணிகம் இருந்தால்
சரிவிலைக்குச் சரக்கப்படுமா?

இனியும் அரசினர் கண்மூடி இருத்தல்
ஏழை மக்களை மண்ணிற் புதைத்தலே!

எள்முதல் அரசினர் கொள்முதல் செய்க
எப்பாங்கும் கடைவைத்து விற்பனை செய்க
கண்படாது சரக்கைப் பதுக்கிடும்
கயவர் எதிர்ப்பைக் கான்றுமிழ்ந்திடுக.

வாங்கிய தொருவெள்ளி ஒருதூக்குப் புளி
மறுகிழமை மூன்று வெள்ளி என்பான்; அதேபுளி
பாங்கிரக்கம் இருக்காதொருதுளி
பஞ்சைகள் உயிரைக் கழற்றும் திருப்புளி

பெருங்காயம் ஒரு பெட்டி வைத்திருப்போன்
பிள்ளை பெற்றவளுக்கும் இல்லையே என்பான்;
ஒரு கிழமை போனால் விலை ஏறிற் றென்பான்
ஒழிய வேண்டும் தனித்துறை வாணிகம்.



( 25 )






( 30 )





( 35 )


நிலையானது புகழ் ஒன்றே!

கணக்கன் சொல்லோவியமே கடவுள்!
இன்றைக் கொன்று நாளைக் கொன்றென
ஒருவன் குறித்ததை மற்றவன் ஒப்பான்
ஆதலின் தெய்வம் நிலையிலது ஆகும்.
தேடத்தக்கது தெய்வமா? எண்ணுக!

ஆயிரம் வேலி நன்செய் ஆயினும்
தாயக ஏழைகள் தலைக் கொன்றாக
அடைவர், அவையும் நிலையில வாகும்.
தேடத்தக்கது செழுநில மன்று!

பணத்தாள் பத்துக்கோடி சேர்க்கலாம்
கருவூலம் தங்கக் கட்டியை இழந்தால்
பணத்தாள் குப்பை மேட்டுக்குப் பயன்படும்
தேடத் தக்கது செல்வமன்று!

( 40 )





( 45 )





( 50 )


காதலி இருக்கும் மாளிகைக் கற்சுவர்
காதலன் கால்வைத்து ஏறிக்குதிக்க
வளைந்து கொடுத்த தொருநாள்! முதுமையில்
அவளால் அண்டையில் அணைக்க வருங்கை

உலக்கை என்றே அவன் ஒதுங்குவாம் பின்னாள்,
இளமையில் இனித்ததே முதுமையில் கசந்தது
தேடத் தகுந்தது சேயிழை இன்பமா?
பொன்றாது நிற்பது புகழே, புகழே!

அப்புகழ் வருவ தெப்படி என்னில்
செப்புவேன் கேட்க, தாயகம் தீயரால்
அடைந்த அடிமை நீக்க
உடல் பொருள் ஆவி உதவிட வருமே!


( 55 )





( 60)

கையேந்துவார் மகிழச்சி கடவுள் மகிழ்ச்சி

முறிந்த உள்ளங்கள்! ஏந்தும் கைகளைத்
திரும்பிப் பாரப்பா-கெஞ்சுவதை
விரும்பிக் கேளப்பா-அந்தக்
கருங்கற் கோயில் கேட்டதா உனைக்
காசு பணம் அப்பா-மனத்தின்
மாசு தவிர் அப்பா!

பசிக்குமா கல்லுக்கும் செம்புக்கும்
பாலொடு பழமா?-கொடுக்
காவிடில் அழுமா?-அவற்றைப்
புசிக்குமா? பொன்னான மக்கள்
புலம்புகின்றாரே-இங்குக் கண்
கலங்குகின்றாரே!

நடமாடும் கோயில்கட்கே
நாமொன்று தந்தால்-இரங்கி
நலமொன்று புரிந்தால்-அதுதான்
உடனே போய்ப் பரமனுக்கே
உவப்பைச் செய்யுமப்பா-பெரியார்
உரைத்ததும் தப்பா?

பஞ்சமிலாக் கோயிலுக்குப்
பஞ்சாமிர்தமா?-படையல்
அஞ்சாறு தரமா-இங்கே
கெஞ்சுகின்ற தெய்வங்கட்குக்
கிண்டலா-அப்பா? கெஞ்சுவதைக்
கேட்பது கசப்பா?

( 65 )




( 70 )





( 75 )





( 80 )





( 85 )



செல்வக் கு ழந்தை தாய்ப்பால் இன்றித்
திடுக்கிடும் போதே-அப்பனே
துடித்தழும்போதே-கோயிலின்
கல்லின் தலையில் பாலூற்றினால்
உலகம் ஒப்பாதே-திருந்திடு
வாயோ இப்போதே!

எங்கும் நிறைந்ததே கடவுள்
எண்ணிப் பாரப்பா-பெரியா
ரும் சொன்னாரப்பா-நீதான்
இங்கி வர்க்கே ஒரு தருமம்
பண்ணிப் பாரப்பா-பசி இவர்
கண்ணில் பாரப்பா!

எவ்வுயிரும் பராபரன்
சன்னதி அப்பா-பெரியார்
சொன்னது தப்பா-அப்பனே
அவ்வுயிர்தான் கல்லில் செம்பில்
இருக்குமோ செப்பாய்-நெஞ்சை
உருக்குமோ செப்பாய்!

மெய்யறிவே கடவுள் என்று
விளம்பவில்லையா?-வள்ளுவர்
விளக்கவில்லையா?- கருமான்
செய்து வைத்த உருவங்கட்குச்
செலவுத் தொல்லையா? இதெல்லாம்
கலகம் இல்லையா?


( 90 )







( 95 )





( 100 )





( 105 )





( 110 )

நம்பிக்கை வைத்தான்!

நம்பிக்கை வைத்தான்-அவள் மேல்
நம்பிக்கை வைத்தான்
கம்மாளன் திறம்என் றாலும்
கற்பாவை அதுவென் றாலும்
அம்மையே உன்னை அல்லால்
அணுவும் அசையாதென்றே
                       (நம்பிக்கை)
கைகூப்பி நிற்பான்-அவன்
கண்ணீர் உகுப்பான்
கொய்தோடி மலர்கள்-அவள்
கோயிலுக் களிப்பான்
வையமெல் லாம் பார்க்க
வாயார அவனை வாழ்த்த
உய்விக்க வேண்டும் இன்றே
உன்னடியே துணை என்றே
(நம்பிக்கை)
நீஇருக்கையிலே என்
தாய் எதற்கென்பான்-உன்
கோயில் இருக்கையில் என்
குடிசை ஏன் என்பான் ?
கோயிலிற் போய்ப் படுத்தான்
குடும்பத்தையும் விடுத்தான்
ஆய பண்ணே படித்தான்
அன்னையே துணை என்றே
(நம்பிக்கை)



( 115 )




( 120 )




( 125 )




( 130 )




( 135 )

இரவினில் எழுந்தான் கோயில்
எங்கும் திரிந்தான்
கருவறை நுழைந்தான்-நகை
கண்டே விழைந்தான்
திருத்தாலி கழுத்தில் கண்டான்
திருமணி முடியும் கண்டான்
திருமார்பின் ஒளியும் கண்டான்
நம்பிக்கை வைத்தான்-அவள்மேல்
நம்பிக்கை வைத்தான்!

தன்-வேட்டியை அவிழ்த்தான் எதிர்
போட்டு விரித்தான்
பூட்டிய நகைகள்-கழற்றிப்
போட்டுக்குவித்தான்

காட்டுக் கேன் மலர் ஓடை?
கல்லுக் கேன் பொன் னாடை?
கேட்டுக் கொண்டே நொடிக்குள்
கேளாத அவள் இடுப்பில்
நம்பிக் கை வைத்தான்-அவள்மேல்

நம்பிக் கை வைத்தான்!
நம்பிக்கை வைத்தார் என்று
நம்பிக் கை வைத்தான்
தம்பி கை வைத்தான் எனினும்
தாய் கண் வைத்தாளா?

கம்பிநீட் டினான் அன்றோ
கைவைத்த இடம் ஒன்றோ?
நம்பாதார் நம்பிக்கையில்
நம்பிக்கை வைத்தல் நன்றோ?

நம்பிக் கை வைத்தான் -அவள்மேல்
நம்பிக் கை வைத்தான்.



( 140 )





( 145 )





( 150 )





( 155 )





( 160 )






( 165 )

எவர்சில்வர் ஏனம்!

ஏனமெல்லாம் எவர் சில்வர்
இருந்து விட்டால் அவர் செல்வர்
ஏழைப் பெண்களும் வேண்டும் என்று சொல்வர்-கணவர்
இல்லை என்றால் தொல்லை பண்ணிக் கொல்வர்.

எவர் சில்வர் என்றுகூவி
இல்லாதவரிடம் உலாவித்
தவறாமல் சொக்குப்பொடி தூவிக் கேட்பான்
தட்டைக் கொடுத்துப் பட்டு சேலையைப் பாவி.

சரிகைச் சேலையைச் சுரண்டித்
தரவருவான் சிறு கரண்டி
அரசே அத் திருடர்களை அண்டி-நீ
ஐந்தாறுநாள் சிறைக்குப் போகத் தண்டி.




( 170 )






( 175 )

ஏய்க்கின்றாரே

அறிவு வளர வளரத் தருமம் அரோகரா-ஒழுக்கம்
அரோகரா!
பிறர் பொருளைப் பறிப்பதற்குப் பெருமாளுண்டு-
                                  பொருளைப்

பின்னின்று பங்குபோடக் குருமார் உண்டு
நிறுப்பதிலே அளப்பதிலே கடைகாரர்கள்
நினைத்தபடி ஏய்க்க நெஞ்சம் உண்டு
                                  (அறிவு வளர வளர...)

பாலென்றால் படிக்குப் பாதி நீர் தானுண்டு
பாட்டென்றால் பிறர் எழுதிய படிதானுண்டு
நூல் என்றால் தமிழிற் பிழை நூற்றுக் கைம்பதாம்
நொடிக்கு நொடி விலையேற்றம் நூற்றுக்குஎகண்பதாம்
                                  (அறிவு வளர வளர...)

அரிசி என்றால் கல்லும் புழுவும் அளந்து கொடுப்பார்
அவிந்த காயைக் கனிந்த வாழை என்று கொடுப்பார்
வருந்துவரை படிக்குப்படி மண்ணுருண்டைதான்
மடிந்த வெல்லத்தின் இளகலின்பேர் மருந்து குழைக்கும் தேன்.


( 180 )





( 185 )





( 190 )





( 195 )

சாவதற்கு மருந்து உண்டோ!

'அடிகளே' என்று வணங்கினான் அரங்கன்!
'நெடுநாள் வாழ்க' என்று நிமிர்த்தினேன்
விரைவில் சாக வேண்டும் என்னைப்
பெருநாள் வாழ. வைப்பது சரியா?
என்றான்-ஏனப்பா என்று கேட்டேன்!
''அரைப்படி அரிசி அரை ரூபாய் விலை,
ஒருபடி உப்போ பதினெட்டுப் புதுக்காசு,
தண்ணீர் இலவச மாயினும், மனிதன்
உண்ணீர் அல்ல! வேட்டி ஒன்றை
ஏழு ரூபாய் என்றான் வணிகன்
ஏழு பணத்துக்குக் கேட்டேன், எனை அவன்
வண்டி கொண்டு வந்தாயா என்றான்.

ஆள்மேல் ஆளை அடுக்க இடமிலாத்-
தேள் மேல் விழும் ஒரு சிறு குடிசைக்கும்
அறுபது ரூபாய் வாடகை ஆகுமாம்
நகராட்சி வரி நாலு ரூபாயாம்
ஐந்து கட்சிகளின் ஆண்டு விழாவுக்கு
ஐந்தோ பத்தோ அதுவோர் இழவு!
குழந்தை படிக்கக் கொடுக்கச் சொல்லி
முழுநீளத்தில் சுவடி முன் வைப்பதும்
நாராயண கோபாலம் நவில்வதும்
இருக்கும் பிள்ளைகட்கு ஏதேனும் கேட்பதும்
சுருண்டு படுப்பினும் தூங்க விடுமோ?
எதிர் பாராமல் இலேசாய்த் திடிரென்று
சாகும் வழியொன்று சாற்றுக'' என்றான்.





( 200 )




( 205 )





( 210 )




( 215 )




( 220 )

அப்பனே இங்கு வா, இப்படி அமர்வாய்
இருக்க வழிதான் இல்லையே தவிர
இறக்க வழிகள் எத்தனை வேண்டும்?

வான ஊர்தி வரும் அதில் ஏறு
கானமோ கடலோ மலையோ எங்கோ
துணிந்து விழுந்திடும்; தொல்லை இல்லை உன்
பிணமும் கிடைத்ததென்றே பேச்சே
இல்லை-இதுவுனக்குப் பிடிக்காவிட்டால்,
அதோ பார் சுங்கான புகைவிட்டு அதிரத்
தடதடா என்று சாவுக்கு வழிகாட்டி
வந்ததே அதனை ஆங்கில வல்லவர்
இண்டியன் ரெயில்வே இஞ்சின் என்பர்

முப்பது மூடு பல்லக்கை அதுதான்
இழுத்து வந்ததே! ஏறு! சாவு!!
இதற்கேன் இத்தனை தொல்லை? ரூபாய்
ஒன்று கொடு-உணவு விடுதி உள் போ
உண்! நீ திரும்புவது உன் செயலல்ல!
அது மருத்துவ விடுதியார் அறக்கடன்!

இறுதி விடைபெற்றுச் சென்றான்
இறந்த செய்தி கிடைத்தது மறுநாளே!





( 225 )




( 230 )





( 235 )





( 240 )

மக்கள் நிகர்!

தொழிலெல்லாம் நின்று விட்டால்
எழிலெல்லாம் பறிகொடுக்கும் இந்தவுலகம்
தொழிலாளர் மகிழ மகிழப்
பழியில்லை பகையில்லை இல்லை கலகம்!

முதலாளி இருக்கு மட்டும்
தொழிலாளிக் கேற்படுமோ முன்னேற்றமே?
முதலெல்லாம் பொதுவானால்
தொழிலாளிக் கேற்படுமோ ஏமாற்றமே!
உண்டான தொழி லெல்லாம்
கொண்டாளா ஆட்சியுமோர் ஆட்சியாகுமா?

பண்டான முதலெல்லாம்
பற்றாத ஆட்சியிலே கலகம் போகுமா?
எல்லோரும் தொழிலாளர்
எல்லாரும் ஆளவந்தார் என்றாக்குவோம்
பொல்லாதார் இல்லை! தமிழ்
கல்லாதார் இல்லாநிலை உண்டாக்குவோம்!






( 245 )




( 250 )





( 255 )

உழைப்பவரும் ஊராள்பவரும்

மாடாய் உழைப்பார்க்கு வீடில்லை சோறில்லை
நாடோறும் அங்கம் வளையல் -ஆண்டை மனைவி
போடமட்டும் தங்கவளையல்;

பாடே படுவார்க்குக் காடோ கரிக்கலோ கண்
மூடாமல் களம் காப்பே-ஆண்டை மனைவி
போடமட்டும் பவுன் காப்பே.

சாகுபடி தீர்ந்ததென்று
போகும்படி யாட்களுக்கு
நோகும்படி தொண்டைக்கம்மல்-ஆண்டை மனைவிக்
காகமட்டும் கெம்புக்கம்மல்.

பாதிரத்தம் கண்டுமட்டும்
பாடுபட்டுச் சாடுமக்கள்
மீதிவைக்க ஏதுகாசு-நல்லாண்டையரின்
மோதிரமெல்லாம் நகாசு.

தூசின்றி நெல் மணியைத்
தூற்றித்தரும் தோழர்கட்குக்
காசில்லை கட்டத் துணியில்லை-ஆண்டையர்க்கு
வேசு கிட்டப்பா புகையிலை.

கையலுத்துக் காலலுத்துக்
காலமெல்லாம் உழைப்பவர்
கண்டதில்லை ஒரு தானம்-ஆண்டைகள் வீட்டில்
ஐயருக்கோ கோதானம்.





( 260 )





( 265 )





( 270 )






( 275 )

புத்துணர்வு பெறுவீர்!

மேகம் பொழிவதற்குள்
வியர்வை பொழிந்து, மண்ணை
வெட்டி வரபெ்படுத்தீரே நீரே தோழரே.

காகமும் அஞ்சும் அதி
காலைமுதல் முள்வேலி
கட்டிக்காவலும் செய்திரே நீரே தோழரே.

உள்ளங்கால் வெள்ளெலும்பு
தோன்ற உளைச் சேற்றையே
உழுது பயிரும் இட்டிரே நீரே தோழரே.

வெள்ளம் மறித்துக் களை
போக்கிக் கொடு வெய்யில்
மேைி இளைத்து நொந்திரே நீரே தோழரே.

கண்மணிபோற் பயிரைக்
காத்தும் தண்ணீர் இறைத்தும்
கையறு வடை செய்திரே நீரே தோழரே.

பெண்மணியுடன் ஆணும்
ஆகக் களம் அடித்து
நெல்மணியை எடுத்திரே நீரே தோழரே.

இத்ைனை பட்டும் ஊசி
குத்த நிலமுமின்றிக்
கொத்தடிமையும் பட்டிரே நீரே தோழரே.

ஒத்து விவசாயிகள்
உரிமையை நிலைநாட்டப்
புத்துணர்வு பெறுவிரே நீரே தோழரே!


( 280 )






( 285 )





( 290 )






( 295 )





( 300 )

தொழில்

விரலே நாணுதே அண்ணா
என் வாழ்வும் விழலோ!

உரமிழந்ததோ எனதொரு மார்பும்!
ஓதுநாட்டில் ஏது தொழிற் புலமை?
தமிழர் நாட்டினிலே பலபல பொருள்கள்
சார்ந்திட்டதில் என்ன பயன்?

சுமைகொள் தேவதைகள் ஒரு நொடியில் பெறத்
தோன்ற வேண்டும் நாட்டில் தொழில்...




( 305 )





( 310 )

நலம் தேடு!

நலம் தேடுவோம் உடலோம்புவோம்
நரம்போடு தசை நாளும் வன்மை ஏறி
நாம் வாழ -நலம் தேடு...

கலங்காத நெஞ்சமே பெற்றாலென்ன
கற்றூண் நிகருடல் பெற வேண்டியே
இலங்கு புனல் குளிர் தென்றலும் இல்லமும்
அமைவுணவும் நிறைவு பெறுமாறே நாம் -நலம் தேடு...






( 315 )

புத்தர் புகன்றார் இல்லை!

நோன்பென்றால் கொல்லாமை என்று புத்தர்
நுவன்று வந்தார்! கொன்றுண்ணும் மக்கள் யாரும்
ஏன்று கொண்டார்; நல்லொழுக்கம் பரவிற்றெங்கும்!
இருள் உளங்கள் ஒளியாகும் நிலையில் ஓர் நாள்
தேன்பொழியும் மலர்த்தாரான்; திருவார் மன்னன்
சுதரிசனன், புத்தபிரான் திருத்தாள் நண்ணி
''ஊன் உண்ணும் வழக்கத்தை மறுக்கின்றீர்கள்.
ஊர் இதனை ஒப்பவில்லை!'' என்று சொன்னான்.

புத்தர்பிரான் சுதரிசற்குப் புகலுகின்றான்;
''பொன்னுயிர்கள் இன்னலுறப் புரிதல் வேண்டாம்!
இத்தரையில் உனக்கூறு நேரும் போதில்
எவ்வாறு துடித்திடுவாய்? அதுபோல் தானே
அத்தனையாம் உயிருக்கும் இருக்கும்! நீயே
அறிவிருந்தால் எண்ணிடுதல் வேண்டும்.'' என்றார்.
''அந்தனே ,நான் கொல்லேன் ,பிறர்க்கொன் றீந்தால்
அதையுண்பேன் அனுமதிப்பீர்! என்றான் மன்னன்.



( 320 )




( 325 )





( 330 )


"எவன்கொன்று நினக்கீவான்? ஈவானாயின்
ஏற்றுண்பாய்!'' என்றுரைத்தார் அருளின் மிக்கார்!
அவனுக்குக் கொன்றுவந்து கொடுத்தார் இல்லை!
அம்மன்னன் மகிழ்ந்துதவுமில்லை! ஆனால்
தவப்பெருமான் இவ்வாறு சொன்ன சொல்லைச்
சமணர்களும் சைவர்களும் தலையில் தூக்கி
''இவர் கண்டீர் மீனுண்ணச் சொன்னார்!'' ஆட்டை
இழுத்தறுத்துக் கொலைபுரியச் சொன்னார்!'' என்றார்!

''பன்றிவெட்டச் சொல்லினார் புத்தர்!'' என்றார்!
''பசுவெட்டச் சொல்லினார் புத்தர்!'' என்றார்;
இன்றுவரை புத்தர்மேற் பழிசு மத்த
இடை விடா மற்புளுகி வருகின் றார்கள்!
தன்னேரி லாப்புத்தர் நெறியை வீழ்த்தித்
தம்சமயம் மேலோங்கச் செய்யும் சூழ்ச்சி
நன்றாமோ? உனக்குக் கொல்லா நோன்பை
நடுவாய்ந்து முதற்புகன்றோர் புத்தர் தாமே!

( 335 )




( 340 )





( 345 )

தமிழன்

பிறக்கும்போதே பெருமையோடு
பிறந்தவன் தமிழன்-தமிழ்ப்
பெருங்குடி தன்னிற் பிறந்தவன் ஆதலால்
                              -பிறக்கும்போதே...

இறப்பதே இல்லை தமிழன் -புகழுடம்பை
எங்குமே வைத்தது காண்க
மறக்குமா வையம் தமிழன்-மனப்பாங்கு
வளர்த்த அறத்தையும் அறிவையும்?
சிறப்பதென்றால் தமிழாற் சிறக்க வேண்டும்
தீர்வதென்றால் தமிழ் மறந்து தீர்தல் வேண்டும்
                              -பிறக்கும்போதே...

( 350 )





( 355 )




( 360 )

முதலில் தோன்றிய மனிதன் தமிழன்
முதல்மொழி தமிழ் மொழி-ஆதலால்
புதுவாழ் வின்வேர் தமிழரின் பண்பாடே
                              -பிறக்கும்போதே...

முதுகிற்புண் படாதவன் தமிழன்-போர்எனில்
மொய்குழல் முத்தமென்றுஎறண்ணுவான்
மதிப்போடு வாழ்பவன் தமிழன்
வாழ்வதற்கென்று வாழ்பவன் அல்லன்
                              -பிறக்கும்போதே...





( 365 )