பக்கம் எண் :

குடும்ப விளக்கு

(இரண்டாம் பகுதி - விருந்தோம்பல் )

சிந்துகண்ணி

தலைவன் கடைக்குச் சென்றான்

அன்பு மணவாளன்
   ஆன வுணவருந்திப்
பின்பு, மனைவிதந்த
   பேச்சருந்தித் - தன்புதுச்
சட்டை யுடுத்துத்
   தனிமூ விரற்கடையில்
பட்டை மடித்த
   படியணிந்து - வட்டநிலைக்

கண்ணாடி பார்த்துக்
   கலைந்த முடியொதுக்கிக்
''கண்ணேசெல் கின்றேன்
   கடைக்'' கென்றான் - பெண்வாய்க்
கடைவிரித்துப் புன்னகைப்புக்
   காட்டி ''நன்''றென்றாள்;
குடைவிரித்துத் தோள்சாய்த்துக்
   கொண்டே - நடை விரித்தான்.




( 5 )




( 10 )




( 15 )
தலைவி விருந்தினரை வரவேற்றாள்

தன்னருமை மக்கள்
   தமிழ்க்கழகம் தாம்செல்லப்
பின்னரும் ஐயன்செல்லப்
   பெண்ணரசி - முன்சுவரில்

மாட்டி யிருந்த
   மணிப்பொறி ''இரண்டென்று''
காட்டி யிருந்ததுவும்
   கண்டவளாய்த் - தீட்டிச்

சுடுவெயிலில் காயவைத்த
   சோளம் துழவி
உடல்நிமிர்ந்தாள் கண்கள்
   உவந்தாள் - நடைவீட்டைத்

தாண்டி வரும்விருந்தைத்
   தான்கண்டாள் கையேந்திப்
பூண்ட மகிழ்வால்
   புகழேந்தி - வேண்டி

''வருக! அம் மாவருக!
   ஐயா வருக!
வருக! பாப்பா தம்பி''
   யென்று - பெருகன்பால்

பொன்துலங்கு மேனி
   புதுமெருகு கொள்ள முகம்
அன்றலர்ந்த செந்தா
   மரையாக - நன்றே

வரவேற்றாள்; வந்தவரின்
   பெட்டி படுக்கை
அருகில் அறைக்குள்
   அமைத்தாள் - விரைவாக

அண்டாவின் மூடி
   அகற்றிச்செம் பில்தண்ணிர்
மொண்டுபுறந் தூய்மை
   முடிப்பிரென்று - விண்டபின்

சாய்ந்திருக்க நாற்காலி
   தந்தும்வெண் தாழையினால்
வாய்ந்திருக்கும் பாய்விரித்தும்
   மற்றதிலே - ஏய்ந்திருக்க

வெள்ளையுறை யிட்டிருக்கும்    மெத்தை தலையணைகள்
உள்ளறையில் ஓடி
   யெடுத்துதவி - அள்ளியே

தேன்குழலும் உண்ணத்
   தெவிட்டாத பண்ணியமும்
வான்குழலாள் கொண்டுவந்து
   வைத்தேகி - ஆன்கறந்த

பாலும் பருகும்
   படிவேண்டி, வெற்றிலைக்கு
நாலும் கலந்து
   நறுக்கியகாய் - மேலுமிட்டுச்

செந்தாழை, பல்பூக்கள்
   பச்சையொடு சேர்கண்ணி
வந்தாள் குழல்சூட்டி
   மற்றவர்க்கும் - தந்துபின்

நின்ற கண்ணாடி
   நெடும்பேழை தான் திறந்(து)
இன்று மலர்ந்த
   இலக்கியங்கள் - தொன்றுவந்த

நன்னூற்கள் செய்தித்தாள்
   நல்கி, ''இதோ வந்தேன்''
என்று சமைக்கும்
   எதிர் அறைக்குள் சென்றவளை


( 20 )





( 25 )






( 30 )





( 35 )





( 40 )




( 45 )






( 50 )




( 55 )





( 60 )





( 65 )





( 70 )






( 75 )
விருந்தினர் வரவை மாமன் மாமிக்கு!!

வந்தோர்கள் கண்டு
   மலர்வாய் இதழ்நடுங்க,
''எந்தாயே எந்தாயே
   யாமெல்லாம் - குந்தி

விலாப்புடைக்க வீட்டில் இந்த
   வேளையுண வுண்டோம்
பலாப்பழம்போல் எம்வயிறு
   பாரீர் - நிலாப்போலும்

இப்போதும் பண்ணியங்கள்
   இட்டீர் அதையுமுண்டோம்
எப்போதுதான் அமைதி''
   என்றுரைக்க - ''அப்படியா!

சற்றே விடைதருவீர்
   தங்களருந் தோழர்தமைப்
பெற்றெடுத்த என்மாமன்
   மாமியர்பால் - உற்ற செய்தி

சொல்லிவரு வேன்'' என்று
   தோகை பறந்தோடி
மெல்ல ''மாமன் மாமி
   வில்லியனூர்ச் -செல்வர்திரு

மாவரச னாரும்
   மலர்க்குழலி அம்மாவும்
நாவரசும் பொண்ணாள்
   நகைமுத்தும் - யாவரும்
வந்துள்ளார்'' என்றுரைத்தாள்
   மாமனார் கேட்டவுடன்.

( 80 )






( 85 )





( 90 )





( 95 )





( 100 )


மாமன் மாமி மகிழ்ச்சி

''வந்தாரா? மிக்க
   மகிழ்ச்சியம்மா - வந்தவரைக்

காணவோ கண்டு
   கலகலெனப் பேசவோ
வேணவா உற்றேன்
   விளைவதென்ன! - நாணல்

துரும்பென்றும் சொல்லவொண்ணா
   என்றன் உடம்பை
இரும்பென்றா எண்ணுகின்றாய்
   நீயும் - திரும்பிப்போய்க்

கேட்டுக்கொள் நான் அவரை
   மன்னிப்புக் கேட்டதாய்
வீட்டுக்க வந்த
   விருந்தோம்பு; - நாட்டிலுறு

நற்றமிழர் சேர்த்தபுகழ்
   ஞாலத்தில் என்னவெனில்
உற்றவிருந்தை
   உயிரென்று - பெற்றுவத்தல்;

மோந்தால் குழையும்அனிச்
   சப்பூ முகமாற்றம்
வாய்ந்தால் குழையும்
   வருவிருந்தென்(று) - ஆய்ந்ததிரு

வள்ளுவனார் சொன்னார்
   அதனை நீ எப்போதும்
உள்ளத்து வைப்பாய்
   ஒருபோதும் - தள்ளாதே!

ஆண்டு பலமுயன்றே
   ஆக்குசுவை ஊண்எனினும்
ஈண்டு விருந்தினர்க்கும்
   இட்டுவத்தல் - வேண்டுமன்றோ?

வந்தாரின் தேவை
   வழக்கம் இவைஅறிக,
நந்தா விளக்குன்றன்
   நல்லறிவே! செந்திருவே!

இட்டுப்பார் உண்டவர்கள்
   இன்புற்று இருக்கையிலே தொட்டுப்பார் உன்நெஞ்சைத்
   தோன்றுமின்பம் - கட்டிக்

கரும்பென்பார் பெண்ணைக்
   கவிஞரெலாம் தந்த
விருந்தோம்பும் மேன்மையினா
   லன்றோ? - தெரிந்ததா?''

என்றுரைக்க, மாமி
   இயம்பலுற்றாள் பின்னர்,

( 105 )






( 110 )




( 115 )




( 120 )





( 125 )





( 130 )





( 135 )






( 140 )




( 145 )




( 150 )
மாமி மருமகளுக்கு

''முன்வைத்த முத்துத்
   தயிரிருக்கும் - பின்னறையில்

பண்ணியங்கள் மிக்கிருக்கும்
   பழமை படாத
வெண்ணெய் விளங்காய்
   அளவிருக்கும் - கண்ணே

மறக்கினும் அம்மாவென்(று)
   ஓதி மடிப்பால்
கறக்கப் பசுக்காத்
   திருக்கும் - சிறக்கவே

சேலத்தின் அங்காடிச்
   சேயிழையார் நாள்தோறும்
வேலைக் கிடையில்
   மிகக்கருத்தாய் - தோலில்

கலந்த சுளைபிசைந்து
   காயவைத்து விற்கும்
இலந்தவடை வீட்டில்
   இருக்கும் - மலிந்துநீர்

பாய்நாகர் கோவில்
   பலாச்சுளையின் வற்றலினைப்
போய்நீபார் பானையிலே
   பொன்போலே! - தேய்பிறைபோல்

கொத்தவரை வற்றல்முதல்
   கொட்டிவைத்தேன், கிள்ளியே
வைத்தவரை உண்டுபின்
   வையாமைக் - குத்துன்பம்

உற்றிடச்செய்! ஊறுகாய்
   ஒன்றல்ல கேட்பாய்நீ;
இற்றுத்தேன் சொட்டும்
   எலுமிச்சை! வற்றியவாய்

பேருரைத்தால் நீர்சுரக்கும்
   பேர்பெற்ற நாரத்தை
மாரிபோல் நல்லெண்ணெய்
   மாறாமல் - நேருறவே

வெந்தயம் மணக்கஅதன்
   மேற்காயம் போய்மணக்கும்
உந்துசுவை மாங்காயின்    ஊறுகாய் - நைத்திருக்கும்

காடி மிளகாய்
   கறியோடும் ஊறக்கண்
ணாடியிலே இட்டுமேல்
   மூடிவைத்தேன் - தேடிப்பார்

இஞ்சி முறைப்பாகும்
   எலுமிச்சை சார்பாத்தும்
பிஞ்சுக் கடுக்காய்
   பிசைதுவக்கும் - கொஞ்சமா?

கீரை தயிர்இரண்டும்
   கேடுசெய்யும் இரவில
மோரைப் பெருக்கிடு
   முப்போதும் - நேரிழையே

சோற்றை அள் ளுங்கால்
   துவள்வாழைத் தண்டில்உறும்
சாற்றைப்போ லேவடியத்
   தக்கவண்ணம் - ஊற்றுநெய்யை!

வாழை இலையின்அடி
   உண்பார் வலப்புறத்தில்
வீழ விரித்துக்
   கறிவகைகள் - சூழவைத்துத

தண்ணீர்வெந் நீரைத்
   தனித்தனியே செம்பிலிட்டு
வெண்சோறிடுமுன்
   மிகஇனிக்கும் - பண்ணியமும்

முக்கனியும் தேனில்
   நறுநெய்யில் மூழ்குவித்தே
ஒக்கநின்றே உண்டபின்பால்
   சோறிட்டுத் - தக்கபடி

கேட்டும் குறிப்பறிந்தும்
   கெஞ்சியும் மிஞ்சுமன்பால்
ஊட்டுதல்வேண் டும்தாய்போல்
   ஒண்டொடியே! - கேட்டுப்போ;

எக்கறியில் நாட்டம்
   இவர்க்கென்று நீயுணர்ந்தே
அக்கறியை மேன்மேலும்
   அள்ளிவை - விக்குவதை

நீமுன் நினைத்து
   நினைப்பூட்டு நீர் அருந்த!
ஈமுன்கால் சோற்றிலையில்
   இட்டாலும் - தீமையம்மா!

பாய்ச்சும் பசும்பயற்றுப்
   பாகுக்கும் நெய்யளித்துக்
காய்ச்சும் கடிமிளகு
   நீருக்கும் - வாய்ப்பாகத்

தூய சருகிலுறு
   தொன்னைபல வைத்திடுவாய்
ஆயுணவு தீர்ந்தே    அவர் எழுமுன் - தாயே

அவர்கைக்கு நீர் ஏந்தி
   நெய்ப்பசை யகற்ற
உவர்க்கட்டி தன்னை
   உதவு - துவைத்ததுகில்

ஈரம் துடைக்கஎன
   ஈந்து, மலர்ச் சந்தனமும்
ஓரிடத்தே நல்கியே
   ஒன்இலைகாய் - சேரவைத்து

மேல்விசிறி வீசுவிப்பாய்
   மெல்லியலே! ' - என்றுரைத்தாள்.





( 155 )







( 160 )




( 165 )





( 170 )





( 175 )





( 180 )






( 185 )




( 190 )





( 195 )





( 200 )






( 205 )





( 210 )




( 215 )





( 220 )





( 225 )






( 230 )




( 235 )





( 240 )





( 245 )
தலைவி விருந்தினரிடம்

கால்வலியும் காணாக்
   கனிமொழியாள் - வேல்விழியை

மிக்க மகிழ்ச்சி
   தழுவ விடைபெற்றுத்
தக்க விருந்தினர்பால்
   தான்சென்றே - ' ஒக்கும்என்

அன்புள்ள அம்மாவே
   ஐயாவே, அம்முதியோர்
என்பு மெலிந்தார்
   எழுந்துவரும் - வன்மைஇலார்.

திங்களை அல்லி
   அரும்புவந்து தேடாதோ?
தங்கப் புதையல்எனில்
   தங்குவனோ - இங்கேழை?

பெற்ற பொழுது அன்பால்
   பெற்றாள்தன் பிள்ளையினைப்
பற்றி அணைத்துமுகம்
   பார்க்கஅவா - முற்றாளா?

தாய்வந்தாள் தந்தைவந்தான்
   என்றுரைக்கத் தான்கேட்டால்
சேய்வந்து காணும்அவாத்
   தீர்வானோ - வாய் ஊறிப்

போனாரே தங்களது
   பொன்வருகை கேட்டவுடன்
ஊன்உறுதி யில்லை
   உமைக் காணக் - கூனி

வரஇயலா மைக்காக
   மன்னிப்புத் தாங்கள்
தரஇயலு மாஎன்று
   சாற்றி - வருந்தினார் ''

என்றுரைத்தாள் இல்லத்
   தலைவி, இதுகேட்டு.

( 250 )





( 255 )





( 260 )





( 265 )





( 270 )






( 275 )





( 280 )
தலைவிக்கு விருந்தினர்

'' நன்றுரைத்தீர் நாங்கள் போய்க்
   காணுகின்றோம் ''' - என்றுரைத்தார்

அன்பு விருந்தினர்கள்
   அங்கு வருவதனைத்
தன்மாமன் - மாமியார்பால்
   சாற்றியே - பின்னர்

அறையை மிகத்தூய்மை
   ஆக்கி, அமர
நிறையநாற் காலி
   நெடும்பாய் - உறஅமைத்துச்

'' செல்லுக! நீர்'' என்றுரைத்தாள்
   செல்வி ; விருந்தினர்கள்
சொல்லலுற்றார் சென்றே
   வணக்கமென்று - சொல்லலுற்றார்.





( 285 )





( 290 )




விருந்தினரைக் கண்ட முதியோர்


வந்த விருந்தினர்க்கு
   வாழ்த்துரைந்துக் கையூன்றி
நொந்த படியெழுந்தார்
   நோய்க்கிழவர் - அந்தோ!
( 295 )

விருந்தினர் பெரியோர்க்கு


''படுத்திருங்கள் ஐயா !
   படுத்திருங்கள் அம்மா!
அடுத்திருந்து பேசல்
   அமையும் - கடற்கிணையாம்

ஆண்டு பலவும்
   அறமே புணையாகத்
தாண்டி உழைத்தலுத்துத்
   தள்ளாமை ஈண்டைந்தீர்!

சென்றநாள் என்னும்
   செழுங்கடலில் மாப்புதுமை
ஒன்றன்பின் ஒன்றாய்
   உருக்காட்டி - பின்மறையக

கண்டிருந்த தங்கள்
   அடிநிழலில் காத்திருந்து
பண்டிருந்த செய்தி
   பருகோமோ - மொண்டு மொண்டு!

வில்லியனூர் விட்டு
   விடியப் புறப்பட்டோம்
மெல்லநடக் கும்வெள்ளை
   மாட்டினால் - தொல்லை!

கறுப்புக்குத் தக்கதாய்க்
   காளையொன்று வாங்கப்
பொறுப்புள்ள ஆளில்லை!
   பூட்டை - அறுத்தோடி

மூலைக் குளத்தண்டை
   முள்வேலந் தோப்பினிலே
காலைப் பரப்பியது
   கண்டுபின் - கோல்ஒடித்துக்

காட்டிப் பிடித்துவந்து
   வண்டியிலே கட்டிநான்
ஓட்டிவந்தேன் ; இங்கே
   உயர்வான - நாட்டுப்

புடவைபல தேவை
   அதனால் புதுவைக்
கடைகளிலே வாங்கக்
   கருதி - உடன்வந்தேன்'
என்றுரைத்துப்பின்னும்
   இயம்புகையில், அவ்விடத்தில்

( 300 )





( 305 )





( 310 )






( 315 )





( 320 )





( 325 )





( 330 )






( 335 )
தலைவி விருந்துவந்த பெண்ணாளிடம்

நின்றிருந்த வீட்டின்
   நெடுந்தலைவி - நன்றே

விருந்துவந்த பெண்பால்
   விரும்பிய வண்ணம்
இருந்தொருபால் பேசி
   இருந்தாள் - பொருந்தவே.




( 340 )