பக்கம் எண் :

குடும்ப விளக்கு

முதற் - பகுதி
ஒருநாள் நிகழ்ச்சி

அகவல்

காலை மலர்ந்தது


இளங்கதிர் கிழக்கில் இன்னும் எழவில்லை.
இரவு போர்த்த இருள்நீங்க வில்லை
ஆயினும் கேள்வியால் அகலும் மடமைபோல்,
நள்ளிரவு மெதுவாய் நடந்துகொண் டிருந்து
தொட்டி நீலத்தில் சுண்ணாம்பு கலந்த
கலப்பென இருள்தன் கட்டுக் குலைந்தது.
புலர்ந்தி டப்போகும் பொழுது, கட்டிலில்
மலர்ந்தன அந்த மங்கையின் விழிகள்.




( 5 )
அவள் எழுந்தாள்

தூக்கத் தோடு தூங்கி யிருந்த
ஊக்கமும் சுறுசுறுப் புள்ளமும், மங்கை
எழுந்ததும் எழுந்தன இருகை வீசி ;
தெளிவிலாக் கருக்கலில் ஒளிபடும் அவள்விழி
குளத்து நீரில் குதிக்கும் கெண்டைமீன்!

( 10 )



கோலமிட்டாள்

சின்ன மூக்குத் திருகொடு தொங்கும்
பொன்னாற் செய்த பொடிமுத் தைப்போல்
துளிஓளி விளக்கின் தூண்டு கோலைச்
செங்காந் தள்நிகர் மங்கை விரலால்
பெரிது செய்து விரிமலர்க் கையில்
ஏந்தி, அன்னம் வாய்ந்த நடையொடு,
முல்லை அரும்பு முத்தாய்ப் பிறக்கும்,
கொல்லை யடைந்து குளிர்புதுப் புனலை
மொண்டாள்; மொண்டு, முகத்தைத் துலக்கி
உண்டநீர் முத்தாய் உதிர்த்து பின்னும்
சேந்துநீர் செங்கை ஏந்தித் தெருக்கதவு
சார்ந்ததாழ் திறந்து, தகடுபோற் குறடு
கூட்டி, மெருகு தீட்டிக் கழுவு,
அருசிமாக் கோலம் அமைத்தனள்; அவளுக்குப்
பரிசில் நீட்டினான் பகலவன் பொன்னொளி,

( 15 )




( 20 )




( 25 )

காலைப் பாட்டு

இல்லத் தினிலே ஏகினாள் ஏகி
யாழின் உறையினை எடுத்தாள்; இசையில்
'வாழிய வையம் வாழிய' என்று
பாவலர் தமிழிற் பழச்சுவை சேர்த்தாள்.
தீங்கிலாத் தமிழில் தேனிசைக் கலவைபோல்
தூங்கிய பிள்ளைகள், தூங்கிய கணவனின்
காதின் வழியே கருத்தில் கலக்கவே,
மாதின் எதிர்அவர் வந்துட் கார்ந்தனர்
அமைதி தழுவிய இளம்பகல்,
கமழக் கமழத் தமிழிசை பாடினான்

( 30 )




( 35 )




வீட்டு வேலைகள்

பறந்தனள் பச்சைப் பசுங்கிளி ; மாடு
கறந்தனள்; வீட்டை நிறம் புரிந்தனள்;
செம்பு தவலை செழும்பொன் ஆக்கினாள்;
பைம்புனல் தேக்கினாள் பற்ற வைத்த
அடுப்பினில் விளைத்த அப்பம் அடுக்கிக்
குடிக்க இனிய கொத்து மல்லிநீர்
இறக்கிப் பாலொடு சர்க்கரை இட்டு
திறக்க அன்பு நிறையப் பிசைந்த
முத்தான வாயால் முழுநிலா முகத்தாள்
'அத்தான்' என்றனள்; அழகியோன் வந்தான்

( 40 )





( 45 )


கணவனுக்கு உதவி

வந்த கணவன் மகிழும் வண்ணம்
குளிர்புனல் காட்டிக் குளிக்கச் சொல்லி,
துளிதேன் சூழும் களிவண்டு போல
அன்பனின் அழகிய பொன்னுடல் சூழ்ந்து,
மின்னிடை துவள, முன்னின்றுதவி,
வெள்ளுடை விரித்து மேனி துடைத்தபின்.

( 50 )




குழந்தைகட்குத் தொண்டு

'பிள்ளைகாள்' என்றனள்! கிள்ளைகள் வந்தனர்
தூய பசும்பொன் துளிகளைப் போன்ற
சீயக் காய்த்தூள் செங்கையால் அள்ளிச்
சிட்டுக் காட்டியும் சிறுகதை சொல்லியும்
தொட்டுத் தேய்த்துத் துளிருடல் நலங்காது
நின்ற திருக்கோலம் பொன்னின் சிலைகட்கு
நன்னீராட்டி நலஞ்செய்த பின்னர்
பூவிதழ் மேற்பனி தூவிய துளிபோல்
ஒவியக் குழந்தைகள் உடலில்நீர் துளிகளைத்
துடைத்து நெஞ்சில் சுரக்கும் அன்பு
அடங்கா தவளாய் அழகுமுத் தளித்தே
'பறப்பீர்' பச்சைப் புறாக்கள்' என, அவர்
அறைக்குள் ஆடைபூண்டடு அம்பலத்தாடினார்
( 55 )




( 60 )




( 65 )
காலை உணவு

'அடுக்களைத் தந்தி அனுப்பினாள் மங்கை;
''வந்தேன்'' என்று மணாளன் வந்தான்;
''வந்தோம்'' என்று வந்தனர் பிள்ளைகள் .
பந்தியில் அனைவரும் குந்தினர் வரிசையாய்த்
தழைத்த வாழைத் தளிரிலை தன்னில்
பழத்தோடு படைத்த பண்டம் உண்டனர்;
காய்ச்சிய நறுநீர் கனிவாய்ப் பருகினர்.


( 70 )



தாய்தான் வாத்திச்சி

நேரம் போவது நினையா திருக்கையில்
பாய்ச்சிய இளங்கதிர் பட்டது சுவர்மேல்;
அவள் கண்டு, காலை ''ஆறுமணி'' என
உரைத்தாள்; கணவன், 'இருக்கா தென்றான்.
உண்டுண் டுண்டென ஓலித்தது சுவரின்
அண்டையில் இருந்த அடுக்கும் மணிப்பொறி
பாடம் சொல்லப் பாவை தொடங்கினாள்.
அவள்வாத் திச்சி; அறைவீடு கழகம்;
தவழ்ந்தது சங்கத் தமிழ்சுவை; அள்ளி
விழுங்கினார் பிள்ளைகள்; வேளையாயிற்றே!
( 75 )




( 80 )



பள்ளிக்குப் பிள்ளைகள்

எழுங்கள் என்றவள், எழுந்தனர்; சுவடியை
ஒழுங்குற அடுக்கி, உடை அணிவித்துப்
புன்னை இலைபோல் புதையடிச் செருப்புகள்
சின்னவர் காவிற் செருகிச் சிறுகுடை
கையில் தந்து, கையொடு கூட்டித்
தையல் தெருவரை தானும் நடந்து,
பள்ளி நோக்கித் தள்ளாடி நடக்கும்
பிள்ளைகள் பின்னழகு வெள்ளம் பருகிக்
கிளைமா றும்பசுங் கிளிபோல் ஓடி
அவைளாவினாள் ஆளனிடத்தில்
( 85 )




( 90 )




கடைக்கு போகும் கணவன்

கடைக்கு செல்லக் கணவன், அழகிய
உடைகள் எடுத்தே உடுக்க லானான்,
''கழுத்துவரை உள்ள கரிய தலைமயிர்
மழுக்குவீர் அத்தான்'' என்று மங்கை சொன்னாள்
நறுநெய் தடவி நன்றாயச் சீவி
முறுக்கு மீசையை நிறுத்திச் சராயினை
இட்டிடை இறுக்கி எழிலுறத் தொங்கும்
சட்டை மாட்டத் தன்கையில் எடுத்தான்.
பொத்தலும் கிழிசலும் பூவை கண்டாள்;
தைத்தாள் தையற் சடுகுடு பொறியால்
ஆண்டநாள் ஆண்டு மாண்ட செந்தமிழ்ப்
பாண்டிய மன்னன் மீண்டது போல,
உடுத்திய உடையும் எடுத்த மார்பும்
படைத்த கணவனைப் பார்த்துக் கிடந்தாள்
( 95 )




( 100 )




( 105 )
வெற்றிலைச் சுருள்

ஓற்றி வைத்த ஒளிவிழி மீட்டபின்
வெற்றி லைச்சுள் பற்றி ஏந்தினாள்;
கணவன் கைம்முன் காட்டி, அவன்மலர்
வாயில் தரத்தன் மனத்தில் நினைத்தாள்.
தூயவன் அப்பொது சொன்ன தென்னெனில்,
''சுருளுக்கு விலைஎன்ன? சொல்லுவாய்?'' என்ன :
''பொளுக்குத் தக்கது போதும்'' என்றாள்.
கையிற் கொடுப்பதைக் காட்டிலும் சுருளை
வாயிற் கொடுத்திடு மங்கையே'' என்றான்
சேயிழை அன்பாய்ச் செங்கை நீட்டினாள்
குடித்தனப் பயனைக் கூட்டி எடுத்து
வடித்த சுவையினை வஞ்சிக்கு அளித்தல்போல்
தளிர்க்கைக்கு முத்தம் தந்து
குளிர்வாய் வெற்றிலை குழைய ஏகினனே!

( 110 )




( 115 )




( 120 )
அறுசீர் விருத்தம்

அவளின் காதல் உள்ளம்


உணவுஉண்ணச் சென்றாள், அப்பம்
   உண்ட னள் சீனி யோடு
தணல்நிற மாம்ப பழத்தில்
   தமிழ்நிகர் சுவையைக் கண்டாள்!
மணவாளன் அருமை பற்றி
   மனம் ஒரு கேள்வி கேட்க,
'இணையற்ற அவன் அன்புக்கு
   நிகராமோ இவைகள்' என்றாள்.

( 125 )




( 130 )
பிள்ளைகள் நினைவு

பள்ளிக்குச் சென்றிருக்கும்
   பசங்களில் சிறிய பையன்
துள்ளிக் குதித்து மான்போல்
   தொடர்ந்தோடி வீழ்ந்தா னோ, என்(று)
உள்ளத்தில் நினைத்தாள்; ஆனால்
   மூத்தவன் உண்டென்றெண்ணித்
தள்ளினாள் அச்சந் தன்னை!
   தாழ்வாரம் சென்றாள் நங்கை




( 135 )
வீட்டு வேலைகள்

ஓட்டடைக் கோலும் கையும்
   உள்ளமும் விழியும் சேர்த்தாள்;
கட்டிய சிலந்திக் கூடு,
   கரையானின் கோட்டை யெல்லாம்
தட்டியே பெருக்கித் ''தூய்மை''
   தனியர சாளச் செய்து,
சட்டைகள் தைப்பதற்குத்
   தையலைத் தொட்டாள் தையல்

( 140 )




( 145 )
தையல் வேலை

ஆடிக்கொண்டிருந்த தையற்
   பொறியினை அசைக்கும் ஓர்கை;
ஓடிக்கொண் டிருக்கும் தைத்த
   உடையினை வாங்கும் ஓர்கை!
பாடிக்கொண்டே இருக்கும்
   பாவையின் தாம ரைவாய்;
நாடிக்கொண்டே இருக்கும்
   குடித்தன நலத்தை நெஞ்சம்!



( 150 )




மரச்சாமான்கள் பழுது பார்த்தல்

முடிந்தது தையல் வேலை
   முன்உள்ள மரச்சாமான்கள்
ஓடிந்தவை, பழுது பார்த்தாள்
   உளியினால் சீவிப் பூசிப்
படிந்துள்ள அழுக்கு நீக்கிப்
   பளபளப்பாக்கி வைத்தாள்;
( 155 )




( 160 )
கொல்லூற்று வேலை


இடிந்துள்ள சுவர் எடுத்தாள்
   சுண்ணாம்பால் போரை பார்த்தாள்

மாமன் மாமிக்கு வரவேற்பு


நாத்தியார் வீடு சென்ற
   நன்மாமன், மாமி வந்தாள்
பார்த்தனள்; உளம்ம கிழ்ந்தாள்
   பறந்துபோய்த் தெருவில் நின்று
வாழ்த்திநல் வரவு கூறி
   வணக்கத்தைக் கூறி, ''என்றன்
நாத்தியார், தங்கள் பேரர்
   நலந்தானா மாமி'' என்றாள்

வண்டிவிட்டிறங்கி வந்த
   மாமியும் மாமனும், கற்
கண்டொத்த மருமகட்குக்
   கனியொத்த பதிலுங் கூறிக்
கொண்டுவந் திட்ட பண்டம்
   குறையாமல் இறக்கச் சொன்னார்
வண்டியில் இருந்த வற்றை
   இறக்கிடுகின்றாள் மங்கை



( 165 )





( 170 )




( 175 )

மாமி மாமன் வாங்கி வந்தவை


கொஞ்ச நாள் முன்வாங்கிட்ட
   கும்ப கொணத்துக் கூசா,
மஞ்சள், குங்குமம், கண்ணாடி,
   மைவைத்த தகரப் பெட்டி,
செஞ்சாந்தின் சீசா, சொம்பு,
   வெற்றிலைச் சீவற் பெட்டி,
இஞ்சியின் மூட்டை ஓன்றே,
   எலுமிச்சைச் சிறிய கோணி

புதியஒர் தவலை நாலு,
   பொம்மைகள், இரும்புப் பெட்டி,
மிதியடிக் கட்டை, பிள்ளை
   விளையாட மரச்சா மான்கள்,
எதற்கும்ஓன்றுக்கி ரண்டாய்
   இருக்கட்டும் வீட்டில் என்று
குதிரினில் இருக்கும் நெல்லைக்
   குத்திர மரக்குந்தாணி;

தலையணை, மெத்தைக் கட்டு,
   சல்லடை, புதுமு றங்கள்,
எலிப்பொறி, தாழம் பாய்கள்,
   இப்பக்கம் அகப்ப டாத
இலுப்பெண்ணெய்? கொடுவாய்க் கத்தி,
   இட்டலித் தட்டு, குண்டான்,
கலப்பட மிலாநல் லெண்ணெய்,
   கைத்தடி, செந்தாழம்பூ;

திருமணம் வந்தால் வேண்டும்
   செம்மரத் தினில்முக் காலி,
ஓருகாசுக் கொன்று வீதம்
   கிடைத்த பச்சரிசி மாங்காய்,
வரும்மாதம் பொங்கல் மாதம்
   ஆதலால் விளக்கு மாறு,
பரிசாய்ச் சம்பந்தி தந்த
   பாதாளச் சுரடு தேங்காய்

மூலைக்கு வட்டம் போட்டு
   முடித்தமே லுறையும், மற்றும்
மேலுக்கோர் சுருக்குப் பையும்
   விளங்கிடும் குடை, கறுப்புத்
தோலுக்குள் காயிதத்தில்
   தூங்கும்மூக் குக்கண் ணாடி,
சேலொத்த விழியாள் யாவும்
   கண்டனள் செப்பலுற்றாள்

( 180 )




( 185 )





( 190 )





( 195 )




( 200 )





( 205 )





( 210 )


( 215 )
மருமகள் வினா


'இவையெல்லாம் வண்டிக் குள்ளே
   இருந்தன என்றால் அந்த
அவைக்களம் தனிலே நீவிர்
   எங்குத்தான் அமர்ந்திருந்தீர்?
சுவைப்புளி அடைத்து வைத்த
   தோண்டியின் உட்புறத்தில்
கவர்ந்துண்ணும் பூச்சி கட்கும்
   கால்வைக்க இடமிராதே?''


( 220 )




( 225 )
மாமி விடை


'என்றனள்; மாமி சொல்வாள்;
    ''இவைகளின் உச்சி மீதில்
குன்றுமேல் குரங்கு போல
    என்றனைக் குந்த வைத்தார்!
என்தலை நிமிர, வண்டி
    மூடிமேல் பொத்தலிட்டார்;
உன்மாமன் நடந்து வந்தார்
    ஊரெல்லாம் சிரித்த'' தென்றாள்!




( 230 )


மாமன் பேச்சு


'ஊரெல்லாம் சிரிக்க வைத்தேன்
   என்றாலே உன்தன் மாமி!
யாரெல்லாம் சிரித்து விட்டார்?
   எனஉன்றன் மாமியைக்கேள்;
பாரம்மா பழுத்த நல்ல
   பச்சைவாழைப் பழங்கள்!
நேரிலே இதனை யும்பார்
   பசுமாட்டு நெய்யின் மொந்தை;

''வண்டியில் எவ்விடத்தில்
   வைப்பது? மேன்மை யான
பண்டத்தைக் காப்ப தற்குப்
   பக்குவம் தெரிந்திருந்தால்
முண்டம்இப்படிச்சொல் வாளா?
   என்னத்தான் முழுகிப் போகும்
அண்டையில் நடந்து வந்தால்?''
   என்றனன், அருமை மாமன்

( 235 )




( 240 )





( 245 )
மருமகள் செயல்


மாமனார் கொண்டு வந்த
   பொருளெல்லாம் வரிசை செய்து,
தீமையில் லாத வெந்நீர்
   அண்டாவில் தேக்கி வைத்துத்
தூய்மைசேர் உணவு தந்து
   துப்பட்டி விரித்த மெத்தை
ஆம், அதில் அமரச் சொல்லிக்
   கறிவாங்க அவள் நடந்தாள்

கடையிலே செலவு செய்த
   கணக்கினை எழுதி வைத்தாள்
இடையிலே மாமன் ! விக்குள்
   எடுத்தது தண்ணீர் கொஞ்சம்
கொடு எனக் கொடுத்தாள். பின்னர்க
   கூடத்துப் பதுமை ஓடி
அடுக்களை அரங்கில், நெஞ்சம்
   அசைந்திட ஆடலானாள்.


( 250 )




( 255 )





( 260 )
என்ன கூறி வாங்கலாம்?


கொண்டவர்க்கு எதுபி டிக்கும்
   குழந்தைகள் எதைவி ரும்பும்
தண்டூன்றி நடக்கும் மாமன்
   மாமிக்குத் தக்கதென்ன
உண்பதில் எவருடம்புக் (கு)
   எதுவுதவாதென் றெல்லாம்
கண்டனள், கறிகள் தோறும்
   உண்பவர் தம்மைக் கண்டாள்
( 265 )




( 270 )
பிள்ளைகள் உள்ளம் எப்படி?

பொரியலோ பூனைக் கண்போல்
   பொலிந்திடும்; சுவைம ணக்கும்!
"அருந்துமா சிறிய பிள்ளை ''
   எனஎண்ணும் அவளின் நெஞ்சம்;
இருந்தந்தச் சிறிய பிள்ளை
   இச்சென்று சப்புக் கொட்டி
அருந்தியே மகிழ்ந்த தைப்போல்
   அவள்காதில் ஓசை கேட்கும்!


( 275 )




( 280 )
அத்தானுக்கு எது பிடிக்கும்


பொருளையும் பெரிதென்ய்று எண்ணாள்,
   பூண்வேண்டாள்; தனைம ணந்தோன்
அருளையே உயிரென்று எண்ணும்
   அன்பினாள்; வறுத்தி றக்கும்
உருளைநற் கிழங்கில் தன்னை
   உடையானுக் கிருக்கும் ஆசைத்
திருவுளம் எண்ணி எண்ணிச்
   செவ்விள நகைசெய் கின்றாள்.




( 285 )



எதிர்கால நினைவுகள்


இனிவாழும் நாள்நி னைத்தாள்
    இளையவர் மாமன் மாமி்;
நனி இரங் கிடுதல் வேண்டும்
    நானவர்க் கன்னை போல்வேன்;
எதைத்தான் தனையும் பெற்று
    வாழ்ந்தநாள் எண்ணும் போதில்
தனிக்கடன் உடையேன், நானோர்
    தவழ்பிள்ளை அவர்கட் கென்றாள்.

கிழங்கினை அளியச் செய்வாள்,
    கீரையைக் கடைந்து வைப்பாள்
கொழுங்காய்ப்பச் சடியே வைப்பாள்
    கொல்லையின் முருங்கைக் காயை
ஒழுங்காகத் தோலைச் சீவிப்
    பல்லில்லார் உதட்டால் மென்று
விழுங்கிடும் வகை முடித்து
    வேண்டிய எல்லாம் முடித்தே.

( 290 )




( 295 )





( 300 )




முதியவருக்குத் துணை


தூங்கிய மாமன் "அம்மா
   தூக்கென்னை "என்று சொல்ல,
ஏங்கியே ஓடி மாமன்
   இருக்கின்ற நிலைமை கண்டு,
வீங்கிய காலைப் பார்த்தாள்
   "எழுந்திட வேண்டாம என்றாள்;
தாங்கியே மருந்து பூசிச்
   சரிக்கட்டிப் படுக்க வைத்தாள்;
( 305 )




( 310 )
அவளோர் மருத்துவச்சி


நாடியில் காய்ச்சல் என்றே
   நன்மருந்து உள்ளுக் கீந்தாள்;
ஓடிநற் பாலை மொண்டு,
   மறுவுலைக் கஞ்சி ஊற்றி,
வாடிய கிழவர்க் கீந்தாள்;
   மாமிக்கோ தலைநோக் காடாம்,
ஓடிடச் செய்தாள் மங்கை
   ஒரேபற்றில் நொடிநேரத்தில்.


( 315 )




( 320 )
அள்ளி அணைத்தாள் பிள்ளைகளை


குழந்தைகள் பள்ளி விட்டு
   வந்தார்கள்; குருவிக் கூட்டம்
இழந்தநல் உரிமை தன்னை
   எய்தியே மகிழ்வதைப்போல்;
வழிந்தோடும் புதுவெள்ளத்தை
   வரவேற்கும் உழவரைப்போல்,
எழுந்தோடி மக்கள் தம்மை
   ஏந்தினாள் இருகையாலும்!




( 325 )


உடை மாற்றினாள்


பள்ளியில் அறிஞர் சொன்ன
   பாடத்தின் வரிசை கேட்டு,
வெள்ளிய உடை கழற்றி,
   வேறுடை அணியச் செய்தே,
உள்வீட்டில் பாட்டன் பாட்டி
   உள்ளத்தை உணர்த்தி, அந்தக்
கள்ளினில் பிள்ளை வண்டு
   களித்திடும் வண்ணம் செய்தாள்

( 330 )




( 335 )
தலைவி சொன்ன புதுச்செய்தி


அன்றைக்கு மணம்புரிந்த
   அழகியோன் வீடு வந்தான்;
இன்றைக்கு மணம் புரிந்தாள்
   எனும்படி நெஞ்சில் அன்பு
குன்றாத விழியால், அன்பன்
   குளிர்விழி தன்னைக் கண்டாள்;
'ஒன்றுண்டு சேதி' என்றாள்;
   'உரை' என்றான்; 'அம்மா அப்பா'.

'வந்தார்' என்றுரைத்தாள், கேட்டு
   'வாழிய' என்று வாழ்த்தி,
'நொந்தார்கள்' என்று கேட்டு
   நோயுற்ற வகைய றிந்து,
தந்தைதாய் கண்டு 'உங்கள்
   தள்ளாத பருவந் தன்னில்
நைந்திடும் வண்ணம் நீங்கள்
   நடந்திடலாமா? மேலும்,




( 340 )





( 345 )




( 350 )

முதியோர்க்கு


ஒக்கநல் இளமை கண்டீர்;
   கல்விநல் ஒழுக்கம் கண்டீர்;
மெய்க்காதல் மணமும் பெற்றீர்;
   இல்லற வெற்றி பெற்றீர்;
மக்களைப் பெற்றீர்; வைய
   வாழ்வெலாம் பெற்றீர்; என்னால்
எக்குறை பெற்றீர்? இன்னும்
   ஏனிந்தத் தொல்லை ஏற்றீர்?'

''அதிர்ந்திடும் இளமைப் போதில்
   ஆவன அறங்கள் செய்து
முதிர்ந்திடும் பருவந் தன்னில்,
   மக்கட்கு முடியைச் சூட்டி,
எதிர்ந்திடும் துன்பமேதும்
   இல்லாமல் மக்கள், பேரர்
வதிந்திடல் கண்டு, நெஞ்சு
   மகிழ்வதே வாழ்வின் வீடு.''


( 355 )




( 360 )





( 365 )

அறிவுக்குத் திருவிளக்கு


என்றனன்;தந்தை சொல்வார்;
   என்னரும் மகனே, மெய்தான்
ஒன்றிலும் கவலை கொள்ளேன்,
   உன்னைநான் பெற்றதாலே!
அன்றியும் உன்பெண்டாட்டி
   அறிவுக்கோர் திருவிளக்காம்;
இன்று நான் அடைந்த நோய்க்கும்
   நன்மருந்திட்டுக் காத்தாள்

செல்லப்பா உணவு கொள்ளச்
   சிறுவர்கள் தமையும் உண்ணச்
"சொல்லப்பா" எனவே, அன்பு
   சொரிந்திடச் சொல்லி டுந்தன்
நல்லப்பா மகிழும் வண்ணம்
   நல்லதப்பாஎன் றோதி,
மெல்லப்பாவை புரிந்த
   விருந்தினை அருத்தலுற்றான்

( 370 )




( 375 )





( 380 )
பிள்ளைக்கு அமுது


குழந்தைகள் உடனி ருந்து
   கொஞ்சியே உண்ணு கின்றார்
பழந்தமிழ்ப் பொருளை அள்ளிப்
   படித்தவர் விழுங்கு தல்போல்!
ஒழுங்குறு கறிகள் தம்மில்
   அவரவர் உளமறிந்து
வழங்கினாள் அள்ளி அள்ளி,
   வழிந்திடும் அன்புள்ளத்தாள்
( 385 )




( 390 )


பாடு என்றான்


அனைவரும் உண்டார் அங்கே
   கூடத்தில் அமர்ந்தி ருந்தார்
சுனைவரும் கெண்டைக் கண்ணாள்
   துணைவனை அணுகி, "நீவிர்
எனைவரும் படிஏன் சொல்ல
   வில்லை" என்றாள் சிரித்தே!
தினைவரும் படிஇல் லார்க்கும்
   திருநல்கும் தமிழ்பாடென்றான்


( 395 )




( 400 )

யாழ் எடுத்தாள்


குளிர்விழி இளநகைப்பூங்
   குழலினாள் குந்தினாள்;தன்
தளிருடல் யாழ்உடம்பு
   தழுவின; இருகுரல்கள்
ஒளியும் நல்வானும் ஆகி
   உலவிடும் இசைத்தேர் ஏறித்
"தெளிதமிழ பவனி வந்தாள்
   செவிக்கெலாம் காட்சி தந்தாள்




( 405 )
கவிதை பாய்ச்சினாள்


உள்ளத்தில் கவிதை வைத்தே
   உயிரினால் எழுப்பினாள்;அவ்
வெள்ளத்தில் சுவையைக் கோத்தாள்;
   வீணையின் அளவிற் சாய்த்தாள்;
தெள்ளத்தெளித்த நீர்போல்,
   செந்தமிழ்ப் பொருள்போல் நெஞ்சப்
பள்ளத்தில் கோடைத் துன்பம்
   பறந்திடப் பாய்ச்சி விட்டாள்,




( 410 )
உயிரெல்லாம் தமிழில் தொக்கின


வீடெல்லாம் இசையே; வீட்டில்
   நெஞ்செலாம் மெருகே; நெஞ்ச
ஏடெலாம் அறிவே; ஏட்டின்
   எழுத்தெலாம் களிப்பே; அந்தக்
காடெலாம் ஆடும் கூத்தே;
   காகங்கள் குருவி எல்லாம்
மாடெல்லாம் இவ்வாறானால்
   மனிதர்க்கா கேட்க வேண்டும்?

( 415)




( 420 )
கடையை மறந்தீரோ?


இசையினில் தனை மறந்தே
   இருந்ததன் கணவன் தன்னைக்
"கடையினை மறந்து வீட்டீர்
   கணக்கர் காத்திருப்பார என்று
நடையினில் அன்னம் சொன்னாள்;
   நல்லதோர் நினைவு பெற்ற
உடையவன் "ஆம் ஆம
   ஆயினும் "உம் உம என்றான்



( 425 )



மனைவியிடம் பிச்சை கேட்டான்


"கண்ணல்ல; நீதான் சற்றே
   கடைக்குப்போய்க் கணக்கர் தம்மை
உண்பதற்கு அனுப்பி, உண்டு
   வந்தபின் வா; என் னாசைப்
பெண்ணல்ல" என்று சொல்லிச்
   சோல்பலால் பிச்சை கேட்டான்.
கண்ணல்ல கருத்தும் போன்றாள்
   "சரி" என்று கடைக்குச் சென்றாள்
( 430 )




( 435 )

கடையின் நடைமுறை


மல்லியை அளப்பார்; கொம்பு
   மஞ்சளை நிறுப்பார்; நெய்க்குச்
சொல்லிய விலை குறைக்கச்
   சொல்லுவார்; கொள் சரக்கின்
நல்லியல் தொகை கொடுப்பார்;
   சாதிக்காய் நறுக்கச் சொல்வார்;
வெல்லம்என்றொரு குழந்தை
   விரல்நீட்டும் கடைக்கு வந்தாள்.


( 440 )




( 445 )
அவள் வாணிபத் திறமை


களிப்பாக்குக் கேட்பார்க்கு ஈந்து
   களிப்பாக்கிக் கடனாய்த் தந்த
புளிப்பாக்கி தீர்ந்த பின்பு
   கடனாகப் புதுச்ச ரக்கை
அளிப்பார்க்குப் பணம்அ ளித்தாள்;
   அதன்பின்னர் கணக்கர் எல்லாம்
கிளிப்பேச்சுக்காரி யின்பால்
   உணவுண்ணக் கேட்டுப் போனார்,

இளகிய நெஞ்சத் தாளை
   இளகாத வெல்லம் கேட்பார்;
அளவாக இலாபம் ஏற்றி
   அடக்கத்தை எடுத்து ரைப்பாள்!
மிளகுக்கு விலையும் கூறி
   மேன்மையும் கூறிச் சற்றும்
புளுகாமல் புகன்ற வண்ணம்
   புடைத்துத்தூற்றிக் கொடுப்பாள்.




( 450 )





( 455 )




( 460 )
கணவனிடம் கணக்கு ஒப்புவித்தாள்


கொண்டவன் வந்தான்; கண்கள்
   குளிர்ந்திடக் கண்டாள்; "அத்தான்
கண்டுள்ள கணக்கின் வண்ணம்
   சரக்குகள் கடன்தந் தார்க்குத்
தண்டலும் கொடுத்தேன்; விற்று
   முதலினைத் தனியே வைத்தேன்;
உண்டங்கு வேலை" என்றே
   உரைத்தனள்; வீடு சென்றாள்.



( 465 )



வீட்டறை மருத்துவமனை


படுக்கையில் மாம னாரைப்
   பார்த்தனள்; "காலில் இன்னும்
கடுக்கை தீர்ந்திலதோ" என்று
   கனிவோடு கேட்டுடுக்கும்
உடுக்கையும் மாற்று வித்து,
   மட்டான உணவு தந்து
தடுக்கினிலிருந்து தூக்கிச்
   சாய்வு நாற்காலி சேர்த்தாள்
( 470 )




( 475 )
மற்றும் வீட்டு வேலை


வரிசையாய்க் காய வைத்த
   வடகத்தை, வற்றல் தன்னைப்
பெரிசான சாலில் சேர்த்தாள்;
   பிணைந்துள்ள மாடு கன்றுக்(கு)
உரியநல் தீனி வைத்தாள்;
   உறிவிளக்குகள்துடைத்தாள்;
வரும்மக்கள் எதிர்ப்பார்த் திட்டாள்
   வத்தனர்; மகிழ்ச்சி பெற்றாள்


( 480 )




( 485 )
கடற்கரையில்


சிற்றுணவு அளித்தாள்; பின்பு
   திரைகடற் கரையை நாடிப்
பெற்றதன் மக்கள் சூழப்
   பெருவீதி ஓர மாகப்
பொற்கொடி படர்ந்தாள் தேனைப்
   பொழிந்திடு பூக்க ளோடு!
வற்றாத வெள்ளக் காட்டின்
   மணற்கரை ஓரம் வந்தாள்!




( 490 )
கடற்கரைக் காட்சி்


அக்கரை செலும்உள்ளத்தை
   அளாவிடக் கிடந்த வில்லும்,
இக்கரை அலையின் ஆர்ப்பும்,
   அவற்றிடைச் செவ்வானத்தின்
மிக்கொளி மிதக்கும் மேனி
   விரிபுனல் புரட்சிப் பாட்டும்,
"ஒக்கவே வாழ்க மக்காள
   என்பதோர் ஒலியும் கேட்டாள்,

( 500 )




( 505)
காட்சி இன்பம்


குளிர்புனல் தெளிவிலெல்லாம்
   ஒளிகுதி கொள்ளும்; வெள்ளத்
துளிதொறும் உயிர்துடிக்கும்;
   தொன்மைசேர் கடல் இவ்வைய
வெளியெலாம் அரசு செய்யும்
   விண்ணெலாம் ஒளியைச் செய்யும்!
களியெலாம் காணக் காணக்
   கருத்தெலாம் இன்பம் பொங்கும்!



( 510 )


கடல் காற்று


கடலிடைப் புனலில் ஆடிக்
   குளிரினிற் கனிந்த காற்றை
உடலிடைப் பூசு கின்ற
   ஒலிகடற் கரையின் ஓரம்
அடர்சிற கன்னப் புட்கள்
   அணிபோல அலைந டக்கும்
நடையொடு நடந்த வீடு
   நண்ணினாள் மக்களோடு,
( 515 )




( 520 )
இரவுக்கு வரவேற்பு


மேற்றிசைக் கதிர்ப்ப ழத்தை
   விருந்துண்டு நீல ஆடை
மாற்றுடை யாய் உடுத்து,
   மரகத அணிகள் பூண்டு,
கோற்கிளை ஒடுங்கும் புட்கள்
   கோட்டிடும் இறகின் சந்தக்
காற்சிலம் பசையக் காதற்
   கரும்பான இரவு தன்னை:

திருவிளக்கேந்தி வந்து
   தெருவினில் வரவேற் கின்றாள்,
உருவிளக் கிடவீட் டுக்குள்
   ஒளிவிளக்கனைத்தும் ஏற்றி
ஒருபெருங் கலயத் துள்ளே
   உயர்நறும் புகை எழுப்பிப்
பெரியோரின் உள்ளம் எங்கும்
   பெருகல்போல் பெருகச் செய்தாள்


( 525 )




( 530 )





( 535 )
அத்தானை எதிர்பார்க்கின்றாள்


கட்டுக்குள் அடங்காது ஆடிக்
   களித்திடும் தனது செல்வச்
சிட்டுக்கள், சுவடிக் குள்ளே
   செந்தமிழ்த் தீனி உண்ண
விட்டுப்பின் அடுக்க ளைக்குள்
   அமுதத்தை விளைவு செய்தாள்;
எட்டுக்கு மணி அடிக்க
   அத்தானை எதிர்பார்க் கின்றாள்

( 540 )




( 545 )
எண்சீர் விருத்தம்

கட்டில் அழகு


சரக்கொன்றை தொங்கவிட்ட பந்தலின்கீழ்
   தனிச்சிங்கக் கால்நான்கு தாங்கும் கட்டில்
இருக்கின்ற மெத்தைதலை யணைகள் தட்டி
   இருவீதி மணமடிக்கும் சந்த னத்தைக்
கரைக்கின்ற கலையத்துட் கரைத்துத் தென்றல்
   கலக்கின்ற சன்னலினைத் திறந்து, நெஞ்சில்
சுரக்கின்ற அன்பினால், தெருவில் மீண்டும்
   துடிக்கின்றாள் கணவனது வரவு பார்த்தே



( 550 )


அவன் மலைபோன்ற செல்வம்


பறக்கின்ற கருங்குயிலாள் மீண்டும் வீட்டில்
   பழக்குலையைத் தட்டத்தில் அடுக்கிப் பாலைச்
சிறக்கின்ற செம்பினிலே ஊற்றி வைத்துச்
   சிரிக்கின்ற முல்லையினைக் கண்ணி யாக்கி
நிறக்கின்ற மணிவிளக்கைச் சிறிது செய்து
   நினைக்கின்ற இன்பத்தை நெஞ்ச வீட்டில்
மறைக்கின்ற படிமறைத்து மற்றும் சென்று
   மலைபோன்ற செல்வத்தின் வரவு பார்த்தான்.
( 555 )




( 560 )
பிள்ளைகட்குப் பரிசு


கால்ஓடிந்து போகுமுன்னே அவனும் வந்தான்;
   கதையொன்று கேட்டாயா? எனவுட் கார்ந்தான்.
மேலிருந்து "பிள்ளைவளர்ப் புப்போட்டிக்கு
   விடைவந்து சேர்ந்த' தென்றான்; எவ்வாறென்றாள்,
"ஆல்ஒடிந்து வீழ்ந்தாலும் தோள்கள் தாங்கும்
   அப்படிநாம் பிள்ளைகளை வளர்த்த தாலே,
பாலொடுசர்க் கரைகலந்த இனிய சொல்லாய்
   பரிசு நமக் குத்தந்தார் பாராய என்றான்


( 565 )




( 570 )
பழங்கலக் கிழங்கள்


அறையினிலே படுத்திருந்த பெற்றோர் காதில்
   அதைப்போடத் துவக்கினான். "வளர்ப்புப் போட்டி
அறியோமே எம்நாளில என்றார் பெற்றோர்
   அப்படிஎன் றாலின்ன தெனவி ளக்கிக்
"குறைவின்றி வளர்ப்பவர்கள் பரிசு கொள்ளல
   கூறினான் "குழந்தைகளை விசாரித் துத்தான்
அறிந்தாரோ?" எனக்கேட்டார் அக்கா லத்தார்;
   அதன்விரிவும் கூறியபின் மகிழ்வு கொண்டார்.




( 575 )

அடுக்களையில் பிள்ளைகள்


பரிசுதனைப் பெற்றபிள்ளை ஓடி வந்தான்;
   பலருமே சூழ்ந்தார்கள்; குருவிக் கூட்டம்
பெரிசாக, இன்மொழிகள் செவிபி ளக்கப்
   பெருமானும் பெருமாட்டி தானும், அன்பின்
அரசாட்சி செலுத்தியபின், எல்லா ரும்போய்
   அடுக்களையிற் கூடாரம் அடித்து விட்டார்;
ஒரு பெரும்போர்க் களம்புகுந்தார், உணவைத் தூக்கி
   ஓடிப்போ டா, என்றார்; "பசி" பறந்தான்.

( 580 )




( 585 )
குழந்தைகள் தூங்கியபின்


அவன்பாடிக் கொண்டிருந்தான் அறைவீட் டுக்குள்
   அருமையுள்ள மாமனார் மாமியார்க்கும்,
உவந்தருள உணவிட்டுக் கடன் முடித்தாள்;
   உட்பக்கத் தறைநோக்கி அவரும் போனார்;
குவிந்திருக்கும் சுவையுணவு தானும் உண்டாள்;
   கொக்கரிக்கும் நெஞ்சுக்குத் துணிவு கூறி,
அவிழ்ந்துவரும் நிலாஒளியால் இதழ்கள் மூடும்
   அல்லிப்பூ விழிகள்குழந் தைகளும் மூட.



( 590 )

கதவைத் தாழிட்டாள்


கண்டுபடுக் கைதிருத்தி உடைதிருத்திக்
   காற்றில்லாப் போதினிலே விசிறி, வீசி,
வண்டுவிழி திறக்குமொரு குழந்தை, "தண்ணீர்
   வை" என்னும்; ஒன்றுதலை தூக்கிப் பார்க்கும்:
பண்டிதர்கள் பழங்கதையின் ஒட்டைக் கெல்லாம்
   பணிக்கையிடல் போல் அனைத்தும் தணிக்கை செய்தே
ஒண்பசு, நற் கன்றுக்கு வைக்கோல் ஈந்தே
   உட்கதவு, வெளிக்கதவின் தாழ்அடைத்தாள்
( 595 )




( 600 )

கட்டிலண்டை மங்கை


தொண்டையினில் ஒன்றுமே அடைக்க வில்லை;
   துணைவனவன் சிறுகனைப்புக் கனைக்க லுற்றான்;
அண்டையிலே மங்கைபோய் "அத்தான்' என்றாள்;
   அத்தானா தூங்கிடுவான்? "உட்கார என்றான்
திண்தோளில் சந்தனத்தைப் பூசு கின்றாள்;
   சேயிழைக்கு முல்லைமலர் சூட்டு கின்றான்
கண்டான்! கண்டாள்! உவப்பின் நடுவி லே, "ஓர்
   கசப்பான சேதியுண்டு கேட்பீர என்றாள்!


( 605 )




( 610 )
பொதுத்தொண்டு செய்தோமா?


"மிதிபாகற் காய்கசக்கும்; எனினும் அந்த
   மேற்கசப்பின் உள்ளேயும் சுவைஇ ருக்கும்;
அதுபோலத் தானேடி! அதனா லென்ன?
   அறிவிப்பாய் இளமானே" என்றான் அன்பன்;
அதிகாலை தொடங்கிநாம் இரவு மட்டும்
   அடுக்கடுக்காய் நமதுநலம் சேர்ப்ப தல்லால்,
இதுவரைக்கும் பொதுநலத்துக் கென்ன; செய்தோம்?
   என்பதைநாம் நினைத்துப் பார்ப்பதுவு மில்லை




( 615 )


வீட்டுத் தொண்ட பொதுத்தொண்டு?


"இன்றைக்கு கறிஎன்ன? செலவு யாது?
   ஏகாலி வந்தானா? வேலைக் காரி
சென்றாளா? கொழுக்கட்டை செய்ய லாமா?
   செந்தாழை வாங்குவமா? கடைச் சரக்கை
ஒன்றுக்கு மூன்றாக விற்ப தெந்நாள்?
   உன்மீதில் எனக்காசை பொய்யா? மாடு
குன்றுநிகர் குடம்நிறைக் கறப்ப துண்டா?
   கொடுக்கலென்ன? வாங்கலென்ன? இவைதான் கண்டோம்

( 620 )




( 625 )
தன்னலத்தால் என்ன நடக்கும்


"தமிழரென்று சொல்லிக்கொள் கின்றோம் நாமும்;
   தமிழ்நாட்டின் முன்னேற்றம் விரும்பு கின்றோம்;
எமதென்று சொல்கின்றோம் நாடோ றுந்தான்;
   எப்போது தமிழனுக்குக் கையாலான
நமதுழைப்பை ஓருகாசைச் செலவு செய்தோம்?
   நாமிதனை என்றேனும் வாழ்நாள் தன்னில்,
அமைவாகக் குந்திநினைத் தோமா? இல்லை;
   அனைவருமிவ் வாறிருந்தால் எது நடக்கும்?



( 635 )

பெரும்படியான தொண்டு செய்துள்ளோம்


கரும்படியின் சாறுநிகர் மொழியள் இந்தக்
   கனிந்தமொழி சொன்னவுடன் அவன்உரைப்பான்,
"வரும்படிவீ தப்படிநான் தரும்ப டிக்கு
   வாக்களித்த படிகணக்கர் திங்கள் தோறும்
கரம்படிவீ தித்தமிழர் கழகத் தார்கள்
   கடைப்படியை மிதித்தவுடன் எண்ணி வைப்பார்
பெரும்படியாய்ச் செய்ததுண்டு; படிக்க ணக்கைப்
   பேசிவிட்டாய் கண்டபடி" என்று சொல்ல
( 640 )




( 645 )

தமிழ்படிக்க வேண்டும் எல்லோரும்


"அப்படியா! அறியாத படியால் சொன்னேன்:
   அந்தமிழர் படிப்படியாய் முன்னேற் றத்தை;
எப்படியா யினும்பெற்று விட்டால் மக்கள்
   இப்படியே கீழ்ப்படியில் இரார்கள் அன்றோ?
மெய்ப்படிநம் மறிஞரின்சொற் படிந டந்தால்,
   மேற்படியார் செப்படி வித்தை பறக்கும்,
முற்படில் ஆகாததுண்டா? எப்ப டிக்கும்
   முதற்படியாய்த் தமிழ்படிக்க வேண்டும என்றாள்


( 650 )




( 655 )
தமிழ்நாடு தலைதூக்க உயிரையும் தருவேன்


"இழந்தபழம் புகழ்மீள வேண்டும் நாட்டில்
   எல்லோரும் தமிழர்களாய் வாழ வேண்டும்
வழிந்தொழுகும் சுவைத்தமிழே பெருக வேண்டும்
   மாற்றலர்கள் ஏமாற்றம் தொலைய வேண்டும்
விழுந்ததமிழ் நாடுதலை தூக்க என்றன்
   உயிர்தனையே வேண்டிடினும் தருவேன என்றான்.
"பழம்இடுவேன் சர்க்கரைப்பால் வார்ப்பேன் உங்கள்
   பண்பாடும் வாய்திறப்பீர் அத்தான என்றாள்




( 660 )


அன்றன்று புதுமை


"அன்றிலடி நாமிருவர் பழமும் பாலும்
   ஆருக்கு வேண்டுமடி! என்றன் ஆசைக்
குன்றத்திற் படர்ந்தமலர்க் கொடியே, மண்ணில்
   குவிந்திருக்கும் சுவையுள்ள பொருள்கள் எல்லாம்
ஒன்றொன்றும் மறுநாளே பழமை கொள்ளும்;
   ஒன்றொன்றும் சிலநாளில் தெவிட்டிப் போகும்;
அன்றன்று புதுமையடி, தெவிட்ட லுண்டோ!
   ஆருயிரே நீகொடுக்கும் இன்பம என்றான்.

( 665 )




( 670 )
இரவுக்கு வழியனுப்பு விழா


நள்ளிரவின் அமைதியிலே மணிவி ளக்கும்
   நடுங்காமல் சன்னலுக்குள் புகுந்த தென்றல்
மெல்லஉடல் குளிரும்வகை வீசா நிற்கும்;
   வீணையில்லை காதினிலே இனிமை சேர்க்கும்;
சொல்லரிதாய், இனிதினிதாய் நாழிகைபோம்
   சுடர்விழிகள் ஈரிரண்டு, நான்கு பூக்கள்,
புல்லிதழில் போய்ஒடுங்கும்; தமைம றந்து
   பூரிப்பார் நலம்பாடி இரவு செல்லும் .



( 675 )



( 679 )