பக்கம் எண் :

பாண்டியன் பரிசு

இயல் 1


{ கதிர்நாட்டை நோக்கி வேழநாட்டுப் படை }சீர்மிகுந்த கதிர் நாட்டின் மேலே, அந்தத்
திறல்மிகுத்த வேழநாட்டுப் படைகள்,
போர்தொடுக்கப் பாய்ந்தனவாம் கடலைப் போலே!
பொன்னொளியைப் பாய்ச்சுகின்ற தேர்ப டைகள்,
கார்மிகுந்தாற் போலே யானைப் படைகள்,
கழுத்துமயிர் ஆடுகுதி ரைப்படைகள்,
நேர்மிகுத்த வில், வேல் வாள் தூக்கி வந்த
நெடியகா லாட்படைகள் இவைகள் யாவும்,

மண்ணதிர விரைந்தனவாம்! முரசு, "வெற்றி
வாய்க" என முழங்கினவாம்! சங்கும் மற்றும்
பண்ணதிரும் கருவிபலப் பலவும் கூடிப்
பாரதிரச் செய்தனவாம்! கொடியின் கூட்டம்
விண்ணதிரப் பறந்தனவாம்! ஆயுதங்கள்
விழியதிர மின்னினவாம்! படைத்த லைவர்,
கண்ணதிரும் கனல்சிந்திப் படைந டத்தக்
கழறுமொழி ஒவ்வொன்றும் அதிர்வேட் டேயாம்!

கதிர்நாட்டின் நெடுங்கோட்டை மதிலின் மீது
கைகாட்டி "வாபகையே" எனஅ ழைக்கும்
புதுமைபோல் கொடிபறக்கக் கண்டார் அன்னோர்
"போவீர்கள் விரைவாகப் பகைவர் கோட்டை
அதே பாரீர என உரைத்தார், படைத்த லைவர்;
"ஆம்'என்று குதித்தார்கள் மறவ ரெல்லாம்;
அதிரும்நடை யாற்புழுதி விண்ணில் ஏற
ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டுப் பாடிச் சென்றார்!
( 5 )

( 10 )
( 15 )

( 20 )
இயல் 2

{ கதிர் நாட்டின் வேவு பார்ப்போர் பகைப்படை
வருவதைப் பார்த்தார்கள் }


அழகிய அக்கதிர்நாட்டுக் கோர்கா தத்தில்
அவ்வேழப் படைநெருங்கும் காட்சி தன்னை,
விழிஇமைத்தல் இல்லாமல் வேவு பார்ப்போர்
விண்ணுயர்ந்த மதிலின்மேல் நின்று பார்த்தார்,
மொழிஅதிர்த்தார், பறை அதிர்த்தார்; "வேழ நாட்டான்
முழுப்படையும் எழுப்பிவந்தான என்று தங்கள்
பழியற்ற தாய்நாட்டார் அறியச் செய்தார்;
கதிர்நாட்டின் படைமறவர் கொதித்தெழுந்தார்!

அமைதிகுடி கொண்டிருந்த கதிர் நாடந்தோ
அலறிற்று! முதியோர்கள் கலங்கி னார்கள்!
தமக்காக அன்றித் தம் கணவர் மக்கள்
தமைஎண்ணி மகளிரெல்லாம் நடுங்கி னார்கள்!
"நமக்குரிய நாட்டினிலே பகைவர் கால்கள்
நாட்டுவதை நாம்ஒப்ப லாமோ?" என்று
சிமிழ்க்காத விழியினராய் வாளைத் தூக்கிச்
சினத்தோடு வெளிப்போந்தார் இளைஞர் எல்லாம்!
( 25 )
( 30 )

( 35 )
( 40 )
இயல் 3

{ சதிராடு கூடத்தில் அரசன், அரசி. }

கதிர்நாட்டின் கதிரைவேல் மன்னன் தானும்,
காதல்மனை யாம் கண்ணுக் கினியாள் தானும்
சதிராடு கூடத்தில் தவிச மர்ந்து
தமிழ்ப்பூவால் இசைப்பாக்கள் புனைந்தி ருந்தார்.
"அதிர்படைகள் கூட்டிவந்தான் வேழ நாட்டான்,
அதோ ஒருகா தத்தில என்றான் படைத்த லைவன்,
"எதிர்த்தானா வேழமன்னன்? நரிக்கண் ணன்தான்
எமைநோக்கிப் படைநடத்த ஒப்பி னானா?
என்கண்ணுக் கினியாளே அன்பே, உன்றன்
எழில் அண்ணன் நரிக்கண்ணன், வேழநாட்டின்
வன்மையுறு படைத்தலைவ னாய்இருந்தும்
வேழர்படை வருவதை,ஏன் என்னி டத்தில்
முன்னமேயே சொல்லவில்லை? வேழநாட்டான்
முழுதும்நமை ஆதரிப்ப தாகஅன்றோ
சொன்னான்? இந் நாட்டினிலே நம்படைகள்
தோதில்லா திருக்கையிலே நமைஎதிர்த்தார்!

இந்நாட்டை உன் அண்ணன் பெறநி னைத்தான்!
என்படையின் தளர் நிலையை, அவனை யல்லால்
பின்எவரும் அறியாரே! உடன்பி றந்தான்
பெரும்பகைவன் எனக்கு! நெடு வைய மீதில்
என் ஆவி போன்றவள் நீ! என்ன செய்வேன்!
என்வெற்றி உன்துன்பம் அன்றோ பெண்ணே
மன்னவன் நான்!எனை நம்பி வாழு கின்ற
மக்கட்கோ என்கடமை ஆற்ற வேண்டும

என்றுபல வாறுரைத்து நின்றான்! அங்கே
எதிரினிலே அரசனது கட்டளைக்கு
நின்றிருந்தான் படைத்தலைவன். அமைச்சன்-நின்றான்!
நெடுவிழியிற் கனல்சிந்த அரசி சொல்வாள்:
'முன்ஒருநாள் என் அண்ணன் இங்கு வந்தான்,
ஏதேதோ மொழிந்திட்டான், என்னிடத்தில்
அன்னவற்றின் பொருள் இந்நாள் அறியலானேன்
அழகியஎன் திருநாட்டை அவன்பறிக்கத்

திட்டமிட்டான்! மணவாளா! உன்றன் ஆணை!
திருநாட்டின் மீதாணை! இந்நாட்டின்கண்
மட்டற்ற மகிழ்ச்சியுடன் வாழு கின்ற
மக்கள்மேல் எனக்குள்ள அன்பின் ஆணை!
விட்டேனா அன்னவனை! அண்ணன் அல்லன்!
விரைவினிலே போர்க்களத்தை அடைவேன்; எந்த
வட்டத்தில் அவனுண்டோ ஆங்கன் னோனை
மாய்த்திடுவேன் அல்லது நான் அவனால் மாய்வேன்!

என் அண்ணன் இந்நாட்டில் நுழைவ தாயின்
என்உயிரில் நுழைந்ததன்பின் நுழைக! நானோ
அன்னவனின் உயிர்குடித்த பின்ன ரேஇவ்
அரண்மனையில் அகத்தூய்மை நிரம்பப் பெற்றே
என்கால்வைப் பேன்உறுதி!" என்றாள்;ஓடி
எதிரில் உறு படைவீடு சென்று மீண்டே
என் அண்ணன் எங்குள்ளான் அங்கே செல்க
என்றாள்; தேர் ஏறினாள் எரியும் கண்ணாள்!

துணையாக ஒருபடையும் அவனின் தேரைத்
தொடர்ந்ததுதன் நிழல்போலே! கதிரை வேலன்
தணல்சிந்தும் விழியாலே நாற்புறத்தும்
தமிழ்மறவர் தமைஏவித் தெற்குக்கோட்டை
மணிவாயில் தனையடைந்தான் சிங்கத்தைப்போல்!
மன்னவன்தான் பெற்றெடுத்த அன்னம் என்பாள்,
அணிமலர்ச்சோ லைவிட்டே அரண்மனைக்குள்
அடிவைத்தாள்; நொடிப்போதில் நிலமைகண்டாள்!
( 45 )
( 50 )
( 55 )

( 60 )

( 65 )
( 70 )

( 75 )
( 80 )

( 85 )

( 90 )
( 95 )
இயல் 4

{ கதிரைவேல் மன்னன் மகள்
அன்னம் திகைத்தாள் }


கோட்டைவா யிற்புறத்தே வாள்அ திர்ப்பும்
குதிரைகளின் குளம்படியின் ஒலியும், யானைக்
கூட்டத்தின் மோதுதலும், தேர் அதிர்ப்பும்,
கொலையுண்ணும் மறவர்விழும் ஒலியும் நன்கு
கேட்டிருந்தாள் இளமங்கை வள்ளைக் காதில்!
கிளியுதடு கனல்சிந்தும், துடிக்கும்; அஞ்சும்
வாட்போரை விரும்பும் அவள் தமிழ் நெஞ்சம்!
வகையறியா அவள் இளமை மறுத்து நிற்கும்!

'என் ஆத்தா என்செய்வேன்?' என்றாள் மங்கை!
எதிர்நின்ற அக்கிழவி இயம்பு கின்றாள்;
'உன்மாமன் படைகூட்டி வந்தான் பெண்ணே
உன்பெற்றோர் வாள் தூக்கி ஓடி யுள்ளார்.
இந்நிலையில் இறக்கைமுளைக் காத அன்னம்
ஏன்பறக்க நினைக்கின்றாய்? முடிவு காண்போம்;
கன்னலின்சா றேஇங்கு வந்தமர்வாய்;
கைப்புறத்தில் வா!' என்று சென்றணைத்தாள்.( 100 )

( 105 )
( 110 )
இயல் 5

{ கடும் போர் }

வடக்கிருந்த வாயிலிலே கதிரை வேலன்
வந்தெதிர்த்த பெரும்படைமேற் படையை ஏவி
அடுத்து நின்ற வேழமன்னன் வாள்வீச் சுக்கள்
அத்தனைக்கும் விடைகூறித் தன்வீச்சுக்கும்
கொடுத்தவிடை பெற்றபடி இருந்தான்!சாவு
கொற்றவர்கள் இருவர் பால் மாறி மாறி
நொடிக்குநொடி நெருங்கிற்று! வெற்றி மங்கை
நூறுமுறை ஏமாந்தாள் ஆளைத்தேடி!

கனல்நிகர்த்த வேழவனின் பெரும்ப டைமேல்
கதிரைவேல் மன்னவனின் மறவர் சில்லோர்
சினங்கொண்டு பாய்ந்தார்கள்! வேழநாட்டுத்
திறல் மறவர் நூற்றுவர்க்குக் கதிர் நாட்டார்கள்
தனியொருவன் விழுக்காடு தோள் கொடுத்துத்
தனித்துநின்றார் கோட்டைக்குள் பகைபு காமல்!
பனைமரங்கள் இடிவீழக் கிழிந்து வீழும்
பான்மைபோல் இருதிறத்தும் மறவர் வீழ்ந்தார்.

என்செய்வார் கதிர் நாட்டார்? வேழ வர்க்கோ
இரும்படைகள் அணைகடந்த வெள்ளத்தைப்போல
பின்னுதவி செய்தனமேல் வந்து வந்து!
கதிர் நாட்டார் பெருந்தோளும் கூர்மை வாளும்
முன்னிலும்பன் மடங்குவிரைந் தனஎன் றாலும்
முனை நடுங்கப் போராடும் கதிரைவேலன்
இந்நிலைமை தனையுணர்ந்து வேழன் தன்னைத்
தனிப்படுத்த எண்ணினான் இறங்கினான்கீழ்;

ஏறிவந்தான் வேழத்தான் கோட்டைக் குள்ளே
இருவேந்தர் தனியிடத்தில் போர்புரிந்தார்!
சீறினஅங் கிருவாள்கள்! மோத லாலே
செம்பொறிகள் எழுந்தனமேல்! வெற்றி தோல்வி
கூறிடவும் வழியின்றி வலம்இடம்போய்க்
குறிப்பொன்றும் தவறாமல் சுழன்று, வாளை
மாறிப்பின் வாங்குங்கால் பலகை தூக்கி
வாட்போருக்கிலக்கியத்தை நல்கும் போதில்!

( 115 )
( 120 )

( 125 )

( 130 )
( 135 )

( 140 )


இயல் 6

{ கண்ணுக்கினியாள் அண்ணனைத் தேடினாள் }

"அண்ணன் எங்கே! அன்பில்லாக் கொடிய னெங்கே!
ஆட்சியைனை யே விரும்பி உடன்பி றந்த
பெண்ணாளை வஞ்சிக்க எண்ணி வந்து
பிழைசுமந்த நரிக்கண்ணன் வாள்சுமந்து
கண்ணெதிரில் வாரானோ!" என்று கூறிக்
கடிவாளம் ஒருகையில், பகைவர் பெற்ற
புண்ணினிலே குதித்தெழுந்த வாளோர் கையில்,
புதுமைசெய ஒருகுதிரை மீதி லேறி

பகைப்படையின் உட்புகுந்து தேடிக் கண்ணிற்
பட்டவரின் உடல்சாய்த்தே, புறங்கள் எட்டும்,
நகைப்பாலே நெருப்பாக்கிப் புருவம் ஏற்றி
நாற்புறத்து வாயிலையும் சுற்றி வந்தாள்!
மிகப்பெரிய குதிரைமேல் கரிய ஆடை
மேற்போர்த்து முகமூடி அணிந்தே ஓர் ஆள்
புகப்பார்த்தான் வடக்கிருந்த வாயில் நோக்கி!
'போ' என்றாள். பறந்தது தன் குதிரை அங்கே!
( 145 )
( 150 )

( 155 )

இயல் 7

{ வேழ மன்னனோடு போர் புரிந்திருந்த கதிரைவேல்
மன்னனைப் பின்னிருந்து கொன்றான் நரிக்கண்ணன் }


போர் செய்து கொண்டிருந்த கதிரை வேலன்
பொத்தென, வீழந்தான், அவனின் முதுகின் மீதில்
ஓர்ஈட்டி பாய்ந்துபோய்க்; கருந்தி ரைக்குள்
உடல்மறைத்துக் கொண்டிருந்த நரிக்கண்ணன்! தன்
பேர்மறைக்க எண்ணித் தான் அணிந்திருந்த
பெருந்திரையை, முகமூடித்துணியை, அங்கு
நேர்நின்ற தன்ஆளை அணியச் செய்து
நெடிதுபோய் அரண்மனையில் நின்றிருந்தான்.

நின்றிருந்த நரிக்கண்ணன், உடன்பிறந்த
நேரிழையாள் வரும்வழியில் விழியை வைத்தான்;
'அன்றிருந்த என்கருத்தில் பாதி தீர்த்தேன்;
அவள் ஒழிந்தால், முக்காலும் தீரும்; பின்னும்
அன்னத்தைக் கொன்றொழித்தால் முழுதும் தீரும்;
அதன்பிறகன் றோஇந்த நாட்டின் ஆட்சி,
என்றென்றும் என்கையில் நிலைத்து நிற்கும்?'
என நினைத்தான் தினையேனும் மானம் இல்லான்.

( 160 )
( 165 )

( 170 )
இயல் 8

{ கண்ணுக்கினியாள் மன்னன் இறந்தது கண்டாள். }

கொலைவாளும் கையுமாக அரசி வந்தாள்;
கொண்டவனைப் பிணமாக் கண்டாள். ஆங்கே
நிலைகலங்கி நின்றிட்டாள். 'வீழந்த தோநின்
நெடுமேனி! வீழ்ந்ததோ கதிர் நாடிந்நாள்!
இலைநீதான் என அறிந்தால் அஞ்சி வாடும்
இந்நாட்டு மக்களை, யார் தேற்று வார்கள்?
கலைந்துவோ என்காதல் ஓவியந்தான்!'
எனக்கூறிக் கட்டழகன் உடலை அள்ளி

அணைத்திட்டாள்! மலர்க்கையால் கன்னம் உச்சி
அணிமார்பு தடவினாள்!ஈட்டி யாலே
தணல்போலும் புண்பட்ட முதுகு கண்டாள்
தலைகுனிந்தாள்! அப்பிணத்தை நிலத்திற்போட்டாள
இணைபிரியா மானமதும் எம்மை விட்டே
ஏகிற்றோ, ஐயகோ! முதுகு காட்டத்
துணிந்ததுவோ தழிழாநின் தமிழ நெஞ்சம்!
தூயநின் மூதாதை, என்மூதாதை,

அனைவருள்ளும் எவரேனும் பகைவன் வாளை
அருமார்பில் முன்தோளில் ஏற்ற தன்றித்
தினையளவும் திரும்பிப்பின் முதுகில் ஏற்ற
சேதியினை இவ்வையம் கேட்ட துண்டோ?
எனக்கூவித் திரும்புங்கால்,எதிரில் நின்ற
இளவேழ நாட்டரசன், இரக்கமிஞ்ச;
'மனைவிளக்கே, நின் துணைவன் கதிரை வேலன்
வாட்போரை என்னோடு நிகழ்த்துங்காலை,

முகமறைத்த ஒருதீயன் எவனோ பின்னே
முடுகிவந்து நடுமுதுகில் எறிந்தான் ஈட்டி!
திகைத்தேன் நான்! சாய்ந்தான் அம்மறவோர் மன்னன்!
திகழிமய மலைபோலும் அவன் கொண்டுள்ள
புகழ்க்கென்ன? உன்குடிக்கு வாய்த்த மானம்
போனதெனப் புலம்புவது என்ன? பெண்ணே!
அகத்துன்பம் நீங்கியிரு! செல்க உன்றன்
அரண்மனைக்கே" என்றுரைத்தான்; சென்றாள் பெண்ணாள்.( 175 )
( 180 )

( 185 )
( 190 )
( 195 )

( 200 )

( 205 )
இயல் 9

{ அரண்மனைக்குள் படை புகுந்தது, அன்னத்தை
ஆத்தாக்கிழவி காத்தாள். }

வேழவனின் படைவீரர் அரண்ம னைக்குள்
விரிநீர்போய் மடைதோறும் பாய்வ தைப்போல்
சூழலுற்றார்; பொன்னிருப்புச் சாலைக் குள்ளும்
தொகுநெற்க ளஞ்சியத்தும் எவ்விடத்தும்!
ஏழடுக்கும் படைவீரர் கைப்பற்றுங்கால்
இருந்த ஆத்தாக் கிழவி உளம்ப தைத்துக்
கீழைவழி நிலவறையால் அன்னந் தன்னைக்
கிளியேந்தல் போலேந்தி வெளியில் சென்றாள்.

நிலவறையால் வெளிப்புறத்தில் சென்ற ஆத்தா
நீங்கியபின் கதவுதனைச் சாத்தவில்லை,
சிலர்கண்டார் காணாத கதவு தன்னைச்
சிலர்புகுத்தார்! சிலர்உள்ளே செல்ல லானார்
சிலர்நெடிது சென்றதுமே அரண்மனைக்குள்
திறள்கொண்ட வேழநாட் டுப்படைகள்
அலைவதைக்கண்டையோ என்றுரைத்து மீண்டார்,
ஆயினும்சிற் சிவர் இருந்தார்! நரிக்கண்ணன்தான்,

எப்புறத்தும் திரிகன்றான், ஓர் அறைக்குள்
எதிர்பார்த்த ஒரு பேழை தன்னைக் கண்டான்
அப்படியே தூக்கினான்; அடுத்தி ருந்த
ஆள் ஒருவ னிடந்தந்தான்; "இதனை என்றன்
குப்பனெனும் தேரோட்டி இடம்சேர என்று
கொடுத்தனுப்பித், தான்நினைத சூழ்ச்சி தன்னை
அப்போதே தொடங்கினான், பொய்ப்பால் வாழ்வான்!
அரசிக்கு நல்லவனாய்த் தன்னைக்காட்ட

அரசர்தமைக் குடிகள்எலாம் காணுகின்ற
அழகியதோர் கூடத்தில் கீழ்க்கிடந்து
சரசரெனப் புரண்டபடி "எனக்கேன் வாழ்வு?
சாக்காடே வாராயோ? உடன்பி றந்தாள்
அரசியென வாழ்கின்றாள் எனஇருந்தேன்,
அத்தீயன் வேழத்தான் கதிர்நா டாளும்
பெருமைகொள்என் மைத்துனனைக் கொலைபுரிந்து
பீடுங்கினான் நாட்டையும என்றழுதிருந்தான்.( 210 )

( 215 )
( 220 )

( 225 )
( 230 )

( 235 )
இயல் 10

{ கண்ணுக்கினியாள் வந்தாள், நரிக்கண்ணன்
வஞ்சம் பேசினான், }


வாள்தொங்க, வாள்பெற்ற வலக்கை தொங்க,
வல்லியிடை துவள, மேல் நல்ல தோள்கள்
ஆட,எடுத் தூன்றும் அடி இடறக் கண்ணில்
அழகிழந்து குழல்சரிந்து வீழ, மங்கை
"நாடிழந்தேன் நலமிழந்தேன் கண்ணில் வைத்து,
நாளும்எனைக் காத்துவந்த துணைஇ ழந்து
வாடுகின்றேன எனக்கதறி நெஞ்சம் சோர,
வந்தாள் அண்ணன்புரளும் கூடந்தன்னில்

"மைத்துனனை நானிழந்தேன் தங்கையே! என்
மன்னன்எனைத் தள்ளிவிட்டான்; அதுபோ கட்டும்;
செத்தானை இனிக்காண முடிவ துண்டோ?
திருநாட்டை நீஇழந்து, துணை இழந்து,
கைத்தூண்டிற் சிறுமீனாய்க் கலங்கு கின்ற
காட்சியினை நான் காண நேர்ந்ததேயோ!
வைத்திருந்தான் படைத்தலைவனாக என்னை;
மைத்துனனை இகழ்ந்துரைத்தால் பொறுப்பேனோநான்?

கதிர்நாட்டைப் பிடிப்பதென வேழன் சொன்னான்;
கடிந்துரைத்தேன்; மறுநொடியில் அமைச்ச னுக்குப்
புதுத்தலைமை தந்தேபின் படையெழுப்பிப்
பொன்னான கதிர் நாட்டின் மேல்வி டுத்தான்;
எதிர்பாராப் படையெடுப்பை அறியீர் அன்றோ;
இதைக்கூற இங்குவந்தேன்; வருவ தற்குள்
சிதைத்தானே கதிர் நாட்டின் உரிமை தன்னைத்
தீர்த்தானே மைத்துனனை! அன்பு வேந்தை!

உயிர்போன்றாய்! உடன்பிறப்பே என்றன் ஆவி
உடலைவிட்டுப் போவதுமெய்! வைய கத்தில்
துயர் தாங்க அட்டியில்லை; எனைஇ கழ்ந்து
சொல்லுமோர் சொல்லையும்நான் பொறுப்ப துண்டோ?
முயல்போன்றான் நரிக்கண்ணன் என்றாலுந்தன்,
முத்தான தங்கையவள் வாழ்க்கைப் பட்ட
வயவேந்தன் கதிர் நாட்டான், நரிக்கண்ணற்கு
மைத்துனன் என்றுரைத்த பெருமை போயிற்றே"


( 240 )
( 245 )

( 250 )

( 255 )
( 260 )

( 265 )