{ நரிகண்ணன்
வஞ்சம் பேசுகையில், இவனிடம்
கரியஉடை பெற்ற ஆள் வந்தான். அவள் அவனை
எதிர்க்கிறாள். அவன், மன்னனைக் கொன்றவன்
இவனே என்று நரிக்கண்ணனைக் காட்டிவிடு
கிறான். அதற்குள் நரிக்கண்ணன் அரசியைக்
கொன்றான். }
என உரைத்தான்; துடித்தழுதான்: மேலும் பேச்சை
எடுக்கையிலே, கரியஉடை போர்த்த ஓர் ஆள்.
"இனி என்ன செய்வ" தென நரியைக் கேட்டே
எதிர்வந்தான், அவள் கண்டாள் வாளைத்தூக்கிப்
"புனையுந்தார் மன்னனின்பின் புறத்தில் ஈட்டி -புகுத்தியவன் நீ தான என்றாள். "இல்லை
எனக்கிந்தக் கரியஉடை இவரே தந்தார்
ஈயுமுன்னே மன்னவர்மேல் ஈட்டிஎய்தார
என்றுரைத்தான்! அதேநொடியில் நரிக்கண்ணன் தான்
இடையினிலே மறைத்திருந்த வாளெ டுத்து
நின்றிருந்த உடன்பிறப்பை, அரதன்னை
நிலத்தினிலே விழுமாறு வெட்டிச் சாய்த்தே
"ஒன்றுக்கும் அஞ்சாத என்னைஇந்நாள்
உயிர் நடுங்க வைத்தவனை ஒழித்தேனஎன்று
நின்றுபெரு மூச்சுவிட்டான்! எங்கே அந்த
நேரிழையாள் அன்னம்என உள்ளே சென்றான்.
|
( 5 )
( 10 )
( 15 ) |
{ நரிக்கண்ணன்
அன்னத்தைத் தேடி உள்ளே செல்ல,
அங்கிருந்த ஆள் நடந்ததைத் தன் வேழ நாட்டு மன்
னரிடம் சென்று கூறினான். மன்னன் வியப்புறுகின்றான். }
கரியஉடை போர்த்துவந்த காலாள் சென்று
கண்டவற்றை அரசனிடம் நன்று சொன்னான்!
பெருவாளால் தன்கையால் உடன் பிறந்த
பெண்ணாளைக் கொன்றானா? என்று மன்னன்
உருகினான்! "மக்களிடை மகனாய் வாழ
ஒண்ணாத கொடுவிலங்கை இந்நாள் மட்டும்
தெரியாதேன் வைத்திருந்தேன் அரண்மனைக்குள்!
தீருவதெந் நாள் இந்தப் பழிதான என்றான்
அரசனிது கூறுங்கால் அங்கி ருந்த
அழிவொன்றே தொழிலான மறவர் தாமும்
இரக்கமுற லானார்கள்! நரைத்த தாடி,
இளைத்தஉடல் களைத்தவிழிக், கிழவன், "வேந்தே
கரிப்பின்றேல் இனிப்பருமை யாரே காண்பார்!
காயின்றேல் கனியருமை யாரே காண்பார்? - நரிக்கண்ணார் இலைஎனில் நும் அருமை தன்னை
நானிலந்தான், அறிந்திடுமோ நவில்க"என்றான்.
|
( 20 )
( 25 )
( 30 )
|
{ அன்னத்தைத் காணாது திரியும் நரிக்கண்ணன்
எதி
ரில் தேரோட்டியான குப்பன் வந்தான். }
அன்னத்தை அரண்மனையில் காண வில்லை!
ஆத்தாவைக் காணவில்லை! நரிக்கண்ணன்தான்
என்னத்தைச் செய்வதென ஏங்கி நின்றான்!
எதிரினிலே தேரோட்டும் குப்பன் வந்தான்!
"பொன்னான பேழையினைப் பெற்றாயே? என்
புகழுக்கும் ஆட்சிக்கும் ஆணி வேரை
உன்னிடத்தில் தந்துள்ளேன்; அதனைக் காப்பாய்
ஒருத்தரிடம் சொல்லாதே' என்று ரைத்தான்.
"நானறியேன் பேழையினை" என்றான் குப்பன்!
நடுங்கினான் நரிக்கண்ணன்!'ஐயோ ஐயோ
போனதோ! இங்கிருந்த ஆளிடத்தில்
போயிதனைக் குப்பனிடம் கொடுஎன் றேனே.
ஊனமிலா நம்மறவர் போலே அன்றோ - உடையுடுத்து நின்றிருந்தான்; ஏய்த்தான் போலும்!
ஏனிந்தப் பிழை செய்தேன்?என் வாழ்வுக்கே
இடையூறு சூழந்தேனே' எனத்துடித்தே,
அன்னத்தின் ஆவியினை அகற்ற வேண்டும்;
ஆவிநிகர் பேழையினை அடைதல் வேண்டும்;
என்னுமொரு கருத்தோடும் அரண்ம னைக்குள்
இட்டிருந்த ஓர் தவிசில் சென்றுட் கார்ந்தான்!
மன்னவனை ஏமாற்றி கதிர் நாட் டாட்சி
வாங்குவதில் சிறிதேனும் தொல்லை யில்லை
அன்னத்தை ஆத்தாவைத் தேடவேண்டும்,
அரும்பேழை வேண்டும்எனப் பெருந்துன்புற்றான்!
|
( 35 )
( 40 )
( 45 )
-
( 50 )
( 55 )
|
{ அவன் எதிர் வேழநாட்டு மன்னன்
வருகின்றான்
அவனிடம் தொடங்குகிறான் பொய்மூட்டைகளை
நரிக்கண்ணன். }
ஆத்தாவை, அன்னத்தைப் பேழை தன்னை
அடையாளப் படிஎங்கும் படையா ளர்கள்
போய்த்தேட வகைசெய்து கொண்டிருந்த
பொல்லாத நரியானின் எதிரில், மன்னன்
கோத்தான முத்துலவு மார்பி னோடு
குன்றுநடை கொண்டதுபோல் சென்று நின்றாள்!
சாய்த்தானே நரிக்கண்ணன் மன்ன வன்பால்
சரசரெனச் சொற்பெருக்கை, எழுந்து நின்றே.
"நாளும்எனைக் காப்பாற்றி ஆளாக்கிப் பின்
நாற்படைக்கும் தலைவனென ஏற்ப டுத்திக்
கோளும் பொய் சூதுமிலான் என உணர்ந்து
கொண்டு, பெருந் தொண்டெல்லாம் எனக்கே தந்து
நீளிஎனும் மன்னனை நான் போரில் வென்ற
நினைவாகப் பரிசீந்த கனியே உன்றன் தோளைஇகழ்ந் தாளிவள்; என் வாளால் வெட்டித்
தொடுகழற்குக் காணிக்கை இட்டேன் காண்க".
"வஞ்சகத்தால் கதிரைவேல் மன்னன் தன்னை
'மறவேந்தே நீகொன்றாய என்று தீய
நெஞ்சத்தால் நினைத்தாளே! 'தின்தோள், மானம்
நீத்ததோள்' என்றாளே! ஐயோ, அன்னாள்,
கொஞ்சத்தால் மாண்டாளே 'நாளடைவில்
கொடுவாளால் சிறிதுசிறி தாயரிந்துக்
கெஞ்சத்தான் வைத்தேனா! உன்பால் அன்பு
கெட்டேனே கெட்டேனே கெட்டேன் ஐயா.
"உடன்பிறந்தேன என்றுரைத்தாள் ஆமாம் என்றேன்
'உன்னரசை இநநொடியில் சூழ்ச்சி யாலே
மடியும்வகை செய்துவிடு; முடியும் உன்னால்!
மன்னவனைப் பழிவாங்கி விட்டே இந்தக்
கடல்நிகர்த்த கதிர்நாட்டை ஆள்' என்றாள்என்
காதுபெற்ற துன்பத்தை என்ன சொல்வேன்!
கொடியாளின் உடன்பிறந்த பழியுந் தாளேன்
கொடைமன்னா அருள்புரிக தருக வாளை.
நல்லாரின் பெருநிலையம் இந்த வையம்!
நான்தீயா ளொடுபிறந்த தாலே தீயன்!
எல்லோரும் போலேநான் இன்னும் இங்கே
இருக்கின்றேன் சாகாமல்! ஒன்று மட்டும்
சொல்லுவேன் நானண்டி வாழ்ந்தி ருந்த
தூயோய்நின் புகழுக்கும் அறத்தி னுக்கும்
முல்லைமுனை அளவென்னால் பழிநே ராமல்
முழுதுண்மை யாய் நடந்தேன் இதன் பொருட்டு
நான் செத்த பின் அடையும் வானாட்டின்கண்
நானூறு சிற்றூர் கொள் ஒருபே ரூரும்
தேனூறும் சோலைசூழ் அப்பேரூரில்
செப்பரிய அரண்மனையும் அரண் மனைக்குள்
பால்நேரில் காய்ச்சி, அதில் சீனி இட்டுப்
பத்துவகைச் சிற்றுணவும் ஒத்த பெண்ணும்
ஊனின்ப நுகர்கின்ற அறைஇ ருந்தால்
ஒருத்தருக்கும் இல்லை அது எனக்கே என்றான்,
|
( 60 )
( 65 )
( 70 )
( 75 )
( 80 )
( 85 )
( 90 )
( 95 )
( 100 )
|
{ நரிக்கண்ணன் பேச்சை நம்பிவிட்ட
வேழ மன்னன்
நரிக்கண்ணனுக்கு இரங்கினான்; இந்த நாடு உன்னு
டைய முன்னோருடையது என்பதற்குப் பட்டயம்
உண்டா என்றான். }
அரசனுரைத் திடுகின்றான்; "அப்ப னேஉன்
அன்பினையும் பண்பினையும் அறியார் யாவர்?
ஒருகுலையில்ஒருகாயில் தீமை காணில்
உயர்காய்கள் அத்தனையும் வெறுப்பதுண்டோ?
அரசியவள் தீயவள்தான், உடன்பிறந்த
அறம்பிழையா மறவன் நீ! அழுதல் வேண்டாம்
நரிக்கண்ணா பழநாளில் இதுஉன் பாட்டன்
நாடென்றாய்! அதற்குள்ள சான்று முண்டோ?
அதுவிருந்தால் காட்டுகநீ! இந்தநாட்டின்
ஆட்சியினை உனக்களித்து விடுவேன என்றான்!
பதிவிருந்தால் ஏனுனைநான் நத்த வேண்டும்!
பாட்டனுக்குப் பாட்டனாம் பறைக்கண் ணற்குக்
குதிரை திரை கொண்டநெடு முடயான் என்னும்
கொடுநாட்டு மன்னன் அளித்தான்இந் நாட்டைப்
பதினாயிரம்பேரை வென்ற தாலே!
பரிசாகத் தந்ததன்றி வேறொன்றில்லை!
அந்நாளில் மன்னவனால் கொடுக்கப் பெற்ற
அருஞ்செப்புப் பட்டயத்தைக் கதிரை வேலன்
முன்னோனாம் முத்தப்பன் மறைத்த தோடு,
மூன்றாநாள் தூங்கையிலே கொலையும் செய்தான்!
தன்னிடத்தில் படையிருந்த தாலே அன்றோ
சழக்கனவன் குடிகளிடம் தப்பி வாழ்ந்தான்?
என்னையுமிக் கதிர்நாட்டான் விட்ட தில்லை;
இங்கிரா தேஎன்றான் அங்கு வந்தேன்!
இந்நாட்டை நானாள வேண்டும் என்ற
எண்ணமே எனக்கில்லை; என்றன் தந்தை
அந்நாளில் சாகுங்கால் எனைஅ ழைத்தே
அங்கையினைத் தன்மார்பில் அழுத்தி,"அப்பா
உன்னைநான் ஓருறுதி கேட்கின் றேன் நீ
ஒப்பிடுக, உன்நாளில் வேழ நாட்டின்
மன்னவரின் அருள்பெற்றுக் கதிர்நாட்டுக்கு
மன்னவனாய் இரு! நமது மானங் காப்பாய
எனக்கூறி உயிர்நீத்தான்; அதனா லன்றோ
எழில்வேழ நாட்டினில்நான் அடைந்தி ருக்கும்
தனிப்பெருமை, தனிமகிழ்ச்சி இவற்றை யெல்லாம்
தவிர்ப்பதற்கும் துணி்கின்றேன்; ஐய னேநீ
எனைத்தமிழில் "படைத்தலைவா"என்றழைக்கும் இன்பத்துக் கீடாக இந்த வையம்
தனைத்தரினும் ஒப்பேனே! ஒரு சொல் சொல்க;
"தாளடைந்த நரிக்கண்ணன் ஆள்க" என்றே!
வணங்குகின்றேன், எனக்கூறி வணங்கி நிற்க
மன்னவனும் மனமிரங்கி "அஞ்சேல்! அஞ்சேல்!
இணங்குகின்றேன்." "நீ ஆள்க" என உரைத்தான்
"இன்றைக்கே முடிசூட்டிக்கொள்க" என்றான்!
பிணங்குவித்தும் மைத்துனனை உடன் பிறப்பைப்
பெருவஞ்ச கத்தாலே சாகச் செய்தும்
அணியுமொரு மணிமுடிக்கே நரிக்கண் ணன்தான்
அன்பில்லாத் தன்னுளத்தால் மகிழ்ந்து நின்றான்.
|
( 105 )
( 110 )
( 115 )
( 120 )
( 125 )
( 130 )
( 135 )
( 140 )
( 145 )
( 150 ) |
{ வீரப்பன் என்னும் திருடர்தலைவன்
தோழர்களிடம்
தன் வரலாறு கூறுகிறான். }
கதிர்நாடு சார்ந்திருக்கும் தென்ம லைமேல்
கருநொச்சிக் காட்டினிலோர் பாறை மீதில்
மிதியடிக்கால் மீதிலோர் காலைப் போட்டு
வீரப்பன் எனும் திருடர் தலைவன் குந்தி
எதிர்நிற்கும் தோழர்கள்பால் இதனைச் சொன்னான்;
எல்லாரும் கேட்டிருந்தார் கைகள் கட்டி!
'முதுமையினை அடைந்துவிட்டேன் வாழ்நாள் எல்லாம்
முட்டின்றிக் கழித்துவந்தேன், ஆனால் கேளீர்!
ஒருபிள்ளை கொடிவேங்கை போல்வான், கண்போல்
ஒருமனைவி! இருவரையும் பிரிந்தேன், ஆண்டும்
இருபது ஆயின என்றன் தீயொ ழுக்கம்
என்மனை வியாம் ஆத்தா வெறுத்தாள்! நீயோ
திருடுவதை விட வேண்டும்! அன்றி என்னைத்
தீண்டுவதை விட வேண்டும் என்றாள்! என்பால்
வரவேண்டாம் இவ்விடத்தில் என்றாள்! என்றன்
மகனைநான் நல்வழியில் வளர்பேன் என்றாள்!
ஒருவனிடம் ஏற்பட்ட தீயொ ழுக்கம்
உடன்வளர்ந்தே, பின்னதுதான் நீக்க ஒண்ணாப்
பெருநோயாய் மாறுவது மெய்யே; நானும்
பெண்டாட்டி பிள்ளைகளை விட்ட தன்றி ஒருநாளும் தீத்தொழிலை விடுவ தென்றே
உள்ளத்தால் நினைத்ததுவும் இல்லை! ஐயோ
அருமையுற பெண்டுபிள்ளை நினைவே யாக
அகன்ற நாள் ஒவ்வொன்றும் துன்ப நாளே,
நானும்என் மனையாளும் வாழ்ந்தி ருந்த
நல்லூரை அவள் அகன்றாள்; புல்லூர் ஏகித்
தானங்குக் கைப்பாடு பட்டாள்; சின்ன
தனிக்குடிசை ஒன்றினையும் கட்டிக்கொண்டாள்;
தேனடையும் ஈயும்போல் மகனும், தானும்
வறுமையிலும் செம்மையினைக் கண்பா ராகிச்,
சீனிஎனும் கணக்காயர் இடத்தில் அன்பின்
சிறுவனையும் படிக்கவிட்டாள்; சிலநாள் செல்ல
கணக்காயர் முயற்சியினால் அரண்ம னைக்குள்
கால்வைத்தாள்; பணிச்சியாய் இருந்தாள்; பின்னர்த்
துணையானாள் கதிர் நாட்டின் அரசி யார்க்கே!
தூயதன் மகன் இன்னும் கணக்கா யர்பால்
இணக்கமுறக் கலைபலவும் பயில்கின் றான் நான்
இவையனைத்தும் அறிந்துள்ளேன்; எனினும் அங்கே
அணுகினேன் இல்லை, எனை அவள்கண் டாலும்
அகம்வெறுத்துத் தலை குனிந்து மறைந்து போவாள்.
'அப்பையன் வேலனுக்கு நான்தான் தந்தை
ஆத்தா தான் என் மனைவி' என்ற உண்மை
இப்பெரிய நாட்டினிலே இந்த நாளில்
யானறிவேன்; அவளறிவாள்; அறியார் மற்றோர்!
செப்பினேன் இன்றுதான் உம்மிடத்தில்!
செப்பாதீர் யாரிடத்தும்! இன்று நானோ
எப்பாடும் படவில்லை காலாள் போலே
எதிர் நின்றேன் நரிக்கண்ணன் பேழை தந்தான்.
இடுகாட்டில் நரிக்கூட்டம் உலாவல் போலே
எவ்விடத்தும் அரண்மனையில் வேழ நாட்டின்
படைவீரர் உலாவினார்! எலிகள் ஓடிப்
பண்டங்கள் உருட்டுதல்போல் பொருளை யெல்லாம்
தடதடென உருட்டினார் அவர வர்கள்
சலிப்பின்றிக் கவர்ந்தார்கள் கலைப்பொ ருள்கள்!
இடையிடையே நரிக்கண்ணன் செல்வான் மீள்வான்.
எதையோதான் மிக்ககருத்தாய்த் தேடலானான்.
|
( 155 )
( 160 )
( 165 )
( 170 )
( 175 )
( 180 )
( 185 )
( 190 )
( 195 )
( 200 )
( 205 ) |
{ வீரப்பன் நரிக்கண்ணன் தந்த
பாண்டியன் பரிசு
என்னும் பேழையைத் திருடர்களிடம் காட்டினான். }
ஓர் அறையில் பேழையினை அரிதிற் கண்டான்
உண்டான மகிழ்ச்சிக்கோர் அளவே இல்லை
யாருக்கும் தெரியாமல், அதைத்தே ரோட்டி
இடம்சேர்க்க எண்ணினான். அங்கு நான்தான்
நேரினிலே நின்றிருந்தேன். தன்ஆள் என்றே
நினைத்திட்டான்! "தேரோட்டி இடம்சேர என்றான்
பாராட்டி னேன் அவனை?! எடுத்து வந்தேன்!
பாருங்கள் எனப்பேழை தனைக்காட்டிட்டான்.
சிரித்திட்ட திருடர்களில் ஒருவன் சொல்வான்;
திருடர்களைக் குறைவாகச் சொல்வார் மக்கள்;
இருக்கின்ற பேழையினைத் தேடித் தூக்கி
எடுத்துப்போ, என்றானே, அவனை யாரும்
ஒரு பேச்சும் பேசார்கள்; சும்மா நின்ற
உம்மை அவன் திருடனென்று சொன்னா னன்றோ?
பொருளாளி திருடர்களை விளைவிக் கின்றான்
பொதுவுடைமை யோன் திருட்டைக் களைவிக்கின்றான்!"
என்றுரைத்தான்! மற்றொருவன் இயம்பு கின்றான்;
"என்னெண்ணம் அதுவல்ல, வேண்டு மென்றே
பொன்னையோ காசினையோ நாமெ டுத்துப்
போம்படிசெய் கின்றார்கள். அதன்பின் நம்மை
வன் சிறையில் அடைப்பார்கள். திருட ரென்று
மக்களிடம் சொல்வார்கள். இவைஏன் என்றால்
'மன்னர்' பழம்புலவர், வாணி கர்கட் கெல்லாம்
வரும் பெயரை நமக்காக்கும் முயற்சி' என்றான்.
வீரப்பன் கூறுகின்றான என்தோ ழர்காள்!
வேலனுக்கு நானளித்த தொன்று மில்லை,
ஆர் அப்பன் என்பதையும் அறியான் வேலன்;
ஆத்தாவும் அதைக்கூற விரும்பவில்லை!
நேரிற்போய் இருவரையும் காணு தற்கும்
நெஞ்சமோ ஆவலடை கின்ற துண்டு
சீரில்லை என்னுடம்பின் நிலையில்! என்ன
செய்வதென எண்ணுகின்றேன்! பேழை தன்னை
நான் திறந்து பார்த்ததிலே விலையு யர்ந்த
நகைஆடை, அழகியவாள் முடிஇ வைகள்,
வான்திறந்த உடுக்கள் போல் கதிர்போல் கண்டேன்!
மன்னர்தரும் பட்டையமும் ஒன்று கண்டேன்;
ஈன்றானின் சொத்தாக அதனை என்றன்
எழில்மகனுக் குச்சேர்க்க இங்கு யார்க்கும்
தோன்றாத இடந்தினிலே புதைப்பேன் பின்பு
சொல்வேன் இருக்குமிடம், என்று சொன்னான்.
ஆண்டரே, நும்மனைவி எங்க ளன்னை
அடியேங்கள் உடன்பிறந்த வேலன் ஆன
ஈண்டுள்ள இருவரையும் அறியேம் யாமும்!
இம்பமுறும் மனைவியார் உம்மை விலக்கிப்
பூண்டுள் உறுதியோ பெரிது! தாங்கள்
போகாமல் இருந்ததுவும் புதுமை ஆகும்!
ஊன்தளர்ந்தீர்; உடல் தளர்ந்தீர்; இனியும் செல்ல
ஒப்பிரோ என்றுரைத்தார் நட்புக் கொண்டோர்.
"நீங்களெலாம் இங்கிருப்பீர், பேழை தன்னை
நிலையாக ஓரிடத்தில் மறைத்து வைத்துத்
தாங்காத ஆவியினைத் தவிப்ப தற்குத்
தனியாகப் புல்லூர்போய் வருவேன என்று
வாங்கியதோர் வில்லைப்போல் வளைந்த மேனி
வானுயர்ந்த குன்றுபோல் நிமிர்ந்து நின்றான்;
ஓங்கியதோள் மீதினிலே பேழை தன்னை
உம்மென்று தூக்கினான்; உடன் நடந்தான்!
|
( 210 )
( 215 )
( 220 )
( 225 )
( 230 )
( 235 )
( 240 )
( 245 )
( 250 )
( 255 )
( 260 ) |
{ வேலன் ழுதலியவர்க்குச் சீனி என்னும்
கணக்காயர்
நாட்டின் உண்மை செப்பினார். }
சீனியெனும் கணக்காயர் வீற்றி ருந்தார்,
சேணுயர்ந்த ஆலடியில்! எதிரில் சிங்கம்
போனிமிர்ந்து பார்வையினால் வேலன், மற்றும்
புலியிளைஞர் அமர்ந்திருந்தார்! கணக்கா யர்தாம்
தேனிகர்த்த தமிழாலே புதிய செய்தி
செப்பினார்; இளைஞர்களே அன்புள் ளாரே
ஏனிந்த நாட்டின் மேல் வேழநாட்டான்
எழுப்பினான் தன்படையை? அதுவு மின்றி
பெருமைமிகு கதிரைவேல் மன்னன் மீது
பின்னிருந்தே எவன்ஈட்டி தன்னை எய்தான்?
அரசியினைக் கொன்றவன் யார்? அரசர் பெற்ற
அன்னத்தைக் கொலைசெய்ய நினைப்போன் யாவன்?
திருநிறைந்த கதிர்நாட்டின் அரச னென்று
திகழுமுடி தனைச்சூடிஇந்த நேரம்
அரண்மனையின் நடுவினிலே வேழ நாட்டின்
அரசனெதிர் நின்றிருப்போன் எவன்கண் டீரோ?
கதிர் நாட்டின் மேலந்த வேழ நாட்டான்
கடும்பகைகொள் ளச்செய்தோன் நரிக்கண்ணன்தான்!
முதுகினிலே பின்னின்று ஈட்டி எய்தோன்,
மொய்குழலைக் கொலைசெய்தோன்,அன்னந் தன்னை
எதிர்பட்டால் கொலைசெய்ய இருப்போன் அன்னோன்,
இப்போது மணிமுடியும் பெறப்போ கின்றான்!
மதியுடையாய் வேலனே, உன் அன்னைக்கும்
மாக்கொடுமை நரிக்கண்ணன் ஆக்கக் கூடும்!
|
( 265 )
( 270 )
( 275 )
( 280 )
( 285 )
|
{ வேலா உன்அன்னை ஆத்தாக் கிழவியைக்
காப்பாற்ற
நீ உடனே போ என்றான் கணக்காயன். }
உன் அன்னை ஆத்தாவைக் காப்பதற்கோ
உடனேபோ! இந்தாவாள்! குதிரை தந்தேன்!
என்கலைகள் உன்னுயிரைக் காக்க! நாட்டின்
இகழ்ச்சியினைப் போக்குக! நீ புகழ்ச்சி கொள்க!
பின் உனக்கு வேண்டுமெனில் இங்கிருக்கும்
பிறதோழர் துணைபுரிவார்; விடைபெற்றுக்கொள்!"
என்றுரைத்தார் வாள்எடுத்துக் குதிரை ஏறி
எதிர்வணங்கிப் புல்லூரே அதிரச் சென்றான்.
"ஐயாவே வேலனுக்குத் துணையாய்ச் செல்ல
ஐந்தாறு குதிரைகளை எமக்கிப் போதே
கையாலே இவைஎன்று காட்டி விட்டால்
கண்ணாலே பார்த்திடுவோம்; அவன ழைத்தால்
நெய்யாலே மூண்டெழுந்த நெருப்பைப் போல்
நெஞ்சாலே கொள்கின்ற விசையி னோடு
வையாலே ஆனதொரு பகைமேற் செல்வோம்;
வாளாலே தங்கள் புகழ் வள்ர்ப்போம என்றே
இருகைகூப் பிச்சொன்னான் ஒருசேய்! அங்கே
இருக்கைவிட் டெழுந்தொருசேய் அறிக்கை செய்வான்;
'வருகைக்குக் காத்திருப்பான் ஐயா; வேலன்
வாழ்க்கைக்கும் உதவாது தாழ்க்கை செய்தால்!
பருக்கைக்கு நஞ்சளித்த பழிக்கை ஏற்பேன்;
பதைக்கையிலே தடுப்பீரோ? இதைக்கை விட்டால்
அருள்கைக்கு நாளெதுதான்? என்மேல் வேலன்
அன்புகைக்கும்; அவன்பகைக்கும் கைவலுக்கும்!
போமாறு தலைசைப்பீர்!" என்று சொன்னான்!
புதுமாறு தலைவேண்டும் ஒருவன் நின்றே
ஆமாறு நாமுணர்ந்தோம்;வேலன் அங்கே
அழுமாறு தலையிடா திருந்து விட்டால்,
ஏமாறு தலையடைந்த இந்த நாட்டின்
எழில்மாறும்! நிலைமாறும்! ஆட்சி மாறும்!
நாம்ஆறு தலையடைய நரியின் நோக்கம்
நகுமாறு தலையிடுவோம், நவில்க' என்றான்.
பொறுத்திருப்பார் வாழ்ந்திருப்பார்! இந்த நாட்டில்
புகுந்திருப்பார்; இங்கிருப்பார் தம்மை யெல்லாம்
நிறுத்திருப்பார்; இலேசென்று நினைத்திருப்பார்
நிகழ்வதைக்கண் திருப்பாது பார்த்திருப்பார்;
குறித்திருப்பார் ஆத்தாவைத் தீயோள் என்று
குளிர்த்திருப்பார்; அவளிறந்தால்! செம்மல் வேலன்
மறந்திருப்பார் அவைகாணா திருப்பார், காண்பார்!
மறைந்திருப்பார், கையிருப்பார் அறிவார் என்றான்.
|
( 290 )
( 295 )
( 300 )
( 305 )
( 310 )
( 315 )
( 320 )
( 325 )
|
{ புல்லூர்ச் சிறுகுடிசையில் ஆத்தாவும்
ஆன்னமும். }
புல்லூரிற் சிறுகுடிசை தனில் இரண்டு
புண்பட்ட நெஞ்சங்கள் ஒன்றை யொன்று
நல்லுரையிற் தேற்றியிருந் தன, அவற்றில்
நரைபட்ட ஆத்தாளின் நெஞ்ச மொன்று!
வல்லூறு குறிவைத்த புறாப்போல் வாழும்
மலர்க்கொடியாள் அன்னத்தின் உள்ள மொன்று!
சொல்லிஅழு தாள் ஆத்தா; ஆற்றாள் கண்ணீப்
சொரிந்தழுகின் றாளின்னும் பெண்ணை நோக்கி.
அன்னத்தின் கண்ணினிக்கும் மகனைத் தேடி
ஆவணியில் மணமுடித்துத்தைப் பிறப்பில்
மன்னியசிங் கஞ்சுமந்த தவிசில் ஏற்றிக்
கதிர் நாட்டின் மணிமுடியை அவளுக் காக்கி
என்கண்ணால் பார்த்துள்ளம் மகிழ்வே னென்ற
எழில்மன்னன் மொழி எண்ணி அழுவேனா நான்?
அன்னவனின் திருத்தோளும் அகன்ற மார்பும்
அழிவுற்ற தைஎண்ணி அழுவேனாநான்?
அருமைமகள் தனக்கேற்ற அன்ப னோடும்
ஆணிப்பொன் கட்டில் எனும் சேற்றி னுள்ளே
எருமைஎனக் கிடந்தின்பம் நுகரு கின்ற
எழில்நாளை நான்காணப் பெறேனோ என்ற
பெருமாட்டி மொழிஎண்ணி அழுவே னாநான்?
பிள்ளைக்கு நஞ்சூட்டும் தாய்போல் அந்த
நரிக்ண்ணன் வஞ்சித்துக் கொன்றபோது
நாளற்றுப் போனதெண்ணி அழுவேனோநான்?
எதிரேதிரே இருதழற்பந் துகள்சுழன்றே
இருப்பதுபோல் கதிர் நாட்டான் வேழ நாட்டான்
அதிர்கின்ற மெய்ப்பாடும் சுழற்றும் வாளும்
கட்புலனுக் கப்பாலாய் விசைகொள் ளுங்கால்
முதியோர் காலாள்போல் தாடி மீசை
முடித்துநான் அங்கிருந்தேன். நரிக்கண்ணன்தான்
பதுங்குகறுப் புடைபூண்டு வேந்தை மாய்த்தான்
பதைத்தேனே அதை எண்ணி அழுவேனாநான்?
நானிருந்தேன் காலாட்கள் பலரி ருந்தார்
நடுவினிலே வேழநாட்டரசன் நின்றான்
மேனிமிர்ந்த கரியுடைக்காலாள் வந்து
மெல்லிதனை நரிக்கண்ணன் வெட்டிச் சாய்த்த
ஊன் நடுங்கும் செய்தியினைச் சொன்னான். மன்னன்
உளம் நடுங்க மற்றவர்கள் உடல்நடுங்க
நானிருந்து மன்னவனைத் தேற்றுங் கால்என்
நல்லுயிரே ஒடுங்கியதற் கழுவே னாநான்?
பழநாள்பாண்டியன் உன்றன் மூதா தைக்குப்
பரிசளித்தான் இந்நாட்டை! அதைக்குறிக்கும்
முழுநீளப் பட்டயமும் உடைபூண் வாளும் மூடியஅப் பேழையும்போ யிற்றே அந்தோ!
இழந்ததனால் பேழையினை, அழகு மிக்க
இந்நாடு நின்உரிமை என்ற உண்மை
ஒழிந்திடுமே! அதைஎண்ணி அழுவேனோநான்?"
அவ்வண்ணம் உரைத்தழுது கொண்டிருந்தாள்.
|
( 330 )
( 335 )
( 340 )
( 345 )
( 350 )
( 355 )
( 360 )
( 365 )
( 370 )
( 375 )
|
|
|
|