பக்கம் எண் :

பாண்டியன் பரிசு

இயல் 31


   { "அன்னம் முதலியவரைக் காப்பாற்ற வேழ நாட்
டிலிருந்து ஒருவரை அனுப்பிக் கதிர்நாட்டை
ஆண்டுவரச் செய்க" என்றான் அமைச்சன். }


கதிர் நாட்டை நரிக்கண்ணன் ஆளும் ஆட்சி
கடுகளவும் தீங்கின்றி இருப்ப தற்குப்
பொது நாட்டம் உடையஓர் அறிஞர் தன்னைப்
போயிங்கு நீர்அனுப்ப வேண்டும என்றான்!
'எதுநாட்டம்! அன்னமே சொல்வாய்' என்றான்.
ஏந்தல்மொழி கேட்டமலர்க் கூந்தல் சொல்வாள்;
"சதுர்நாட்டிப் பகைமுடிமேல் தாளை நாட்டும்
தமிழ்நாட்டுப் பெருவேந்தே, அவையில் உள்ளீர்!

பழநாளிற் பாண்டியனின் படைந டத்திப்
பகைகொண்ட சோழனையும் வெற்றி கொண்ட
அழல்வேலான் என்னருமை மூதா தைக்கே
அளித்தான்ஓர் பேழையினைப் பரிசாய்! அந்த
எழிலான பேழையிலே ஞாலம் மெச்சும்
இழை, ஆடை, வாள் பலவும் இருக்கும்; மேலும்
அழகான கதிர்நாட்டின் வரலா றெல்லாம்
அப்பேழை சொல்லி விடும்; ஆத லாலே,









( 5 )





( 10 )




( 15 )
இயல் 32

   { அன்னம் கூறுவாள்; என்பேழை அரண்மனையில்
இருக்கும்; அதைக் காட்டச் செய்வீர் மன்னரே! }


வேழமா நாடுடைய வேந்தே, என்றன்
மேனாளின் நற்புகழை விளக்கும் அந்தப்
பேழைமா றாமல் அதைக் காட்டும் வண்ணம்
பெரியதோர் கட்டளையும் இடுதல் வேண்டும்;
ஏழையரின் குறைதீர்த்தல் கடமை யன்றோ?"
என்றுரைத்தாள்;"நன்றுரைத்தாய் பெண்ணே, அந்தப்
பேழைமாற் றம்சிறிதும் இன்றி இங்கே
பெரும்படையால் வரும்படிசெய் கின்றே" னென்று

'ஆளியெனும் படைத்தலைவா செல்க' என்றான்;
'ஆயரவர் உடன்செல்க' என்றான்! இந்த
நாளில் இதே நேரத்தில் அரண்ம னைக்கு
நாற்புறமும் காப்பமைத்தும் உட்பு குந்தும்
ஆளிருவர் மூவர்விழுக் காடு நீடும்
அறைதோறும் தேடிடுக எங்கும் பார்ப்பீர்!
-கேளிர்இதை, அப்பேழை அடையா ளத்தைக்
கிளிமொழியாள் சொல்லிடுவாள என்றான்மன்னன்.







( 20 )





( 25 )




( 30 )
இயல் 33

   { பேழையின் அடையாளம் கூறினாள் அன்னம். }

இளஞ்சி அன்னம்உரைத் திடுவாள்; 'ஐயா
என்பேழை மன்னவரின் வாளின் நீளம்!
உள்அகலம் மூன்றுசாண்! உயரம் நாற்சாண்;
ஒளிதிகழும் கிளிச்சிறைப்பொன் தகடு தன்னால்
வெளிப்புறமும், பொதிகமலைச் சந்த னத்தின்
வெண் பலகை உட்புறமும் காணும் மேலே
உளிஅழுந்தும் எழுத்தாலே உள்ளி ருக்கும்
உயர்பொருள்கள் அத்தனைக்கும் பெயர்கள் காணும்.

வாள், நகைகள், ஆடைவகை முழுநீ ளத்தில்
வைத்திடுபொற் பட்டயம்பே ழைக்குள் உண்டு!
காணுகநீ என்றுரைத்துத் தான ணிந்த
கழுத்தணியைக் கழற்றியதில் அமைத்திருந்த
ஆணிப்பொற் பேழையதன் அடையாளத்தை
- அரசருக்கும் படையாட்சி தனக்கும் காட்டிச்
சேணுயர்ந்த அரண்மனைக்குள் ஆடற் கட்டின்
தென்அறையில் அப்பேழை" இருக்கும் என்றாள்,





( 35 )




( 40 )





( 45 )
இயல் 34

   { அன்னம் முதலியவர்களுடன் படையை அனுப்பி
அரண்மனையில் பேழையைத் தேடச் செய்தான்
மன்னன். }


"ஓடுக, பாண்டியன் பரிசை நோக்கி நீவிர்!
உமைத்தடுத்தால் நமதாணை அவர்க்குச் சொல்க!
தேடுக"என் றான்மன்னன்! சென்றிட்டார்கள்!
"திருநாட்டை வென்றேன்நான் எனினும் அந்த
நாடுதனை உடையவர்க்கே நான் அளித்து
நாளடைவில் அவரிடத்தில் கப்பம் கொள்ளல்
பீடுடைய அறமாகும்! இந்த நாட்டின்
பேருரிமை ஆராய்வேன என்றான் மன்னன்.

அந்நேரம் எண்ணத்தில் ஆழ்ந்தி ருந்த
அமைச்சன் இது கூறுகின்றான் மன்ன வன்பால்;
மன்னவரே ஆளியினைப் போகச் சொன்னீர்
மற்றந்தப் படைத்தலைவன் நரிக்கண் ணற்குச்
சின்னவனே ஆதலினால் பேழை தேடும்
திறத்தினிலே குறைச்சல்வந்து சேரக் கூடும்
இந்நிலையில் பொறுப்புள்ள ஆள னுப்பி
எழில்பேழை தனைத்தேடச் செய்க என்றான்,

ஆத்தாவும் உரைத்திடுவாள்; ஆம்ஆம் நானே
அவ்விடத்தில் போகின்றேன்; துணையளிப்பீர்!
- தீத்தாவும் கண்ணாலே நரிக்கண் ணன்தான்
சிறியபடைத் தலைவனையே அஞ்ச வைத்துக்
காத்தாளும் அரண்மனையில் பேழை தன்னைக்
கைப்பற்றிக் கொள்வானே!" என்று கூறத்
தாத்தாவைப் போலுருவை மாற்றிக் கொள்க,
தக்கபடை யொடுசெல்க என்றான் மன்னன்.






( 50 )




( 55 )





( 60 )





( 65 )




( 70 )
இயல் 35

   { அன்னம் முதலியவர் அரண்மனையடைந்
தார்கள்: ஆளி, அரண்மனையில் தேடியதில்
பேழை இல்லை என்றான். }


முன்போல ஆணுருவம் பூண்டாள் ஆத்தா,
முழுநீள வாள்ஒன்றும் இடையில் சேர்த்தாள்!
பின்தொடர்ந்தான் கணக்காயன், வாளும் ஏந்திப்
பிற, காலாட்படைதொடர அரண்மனைக்கு
முன்,வாயில் தனையடைந்தார்! மேலும் உள்ளே
மொய்த்தபடை மேல்சென்று மொய்த்து நிற்கச்
சின்னதொரு படைத்தலைவன் ஆளி என்பான்
"தேடியதில் பேழையினைக் காணோம என்றான்.

திடுக்கிட்டான் கணக்காயன்! நரிக்கண் ணையா
தெருக்கதவின் அருகினிலும் போக வேண்டாம்;
படைமறவர் யாவருமே வெளிச்செல் லாதீர்-
பகரும்இது வேழவரின் ஆணை யாகும்!
அடுக்களையோ ஆடரங்கோ எவ்விடத்தும்
அணுவணுவாய்ப் பேழையினைத் தேடவேண்டும்!
நடுவிலுள்ள உமையும் ஆராய வேண்டும்
நகராதீர்! என்றுரைத்தான்; நன்றென்றார்கள்.







( 75 )




( 80 )





( 85 )
இயல் 36

   { கணக்காயன் முதலியவர்கள் தேடினார்கள்,
அங்கிருந்த மற்றவர்கள் அவ்விடம் விட்டு
வெளியிற் செல்லாமல் இருக்கவேண்டும்.
ஆனால், ஒருவன் மட்டும் வெளியில் ஓடுகி
றான். ஆத்தா பின்தொடர்கின்றாள். }


கணக்காயன் எவ்விடத்தும் துணைவ ரோடு
கடிதாகத் தேடுகையில், ஆட்கள் தம்முள்
இணைப்பாக நின்றிருக்கும் ஒருவன் கண்ணை
இமைக்காமல் நாற்றிசையும் செலுத்து வோனாய்
அணித்தான தெருவாயில் நோக்கி மெல்ல
அகலுவதைக் கருத்தாக ஆத்தா பார்த்தே,
'கணுக்காலை வெட்டுவேன் செல்லேல்' என்றாள்
கடிதுபறத் தான்; பறந்தாள்: வாளை ஓச்சி!








( 90 )




( 95 )
இயல் 37

   { ஓடியவன் கணுக்காலை ஆத்தா வெட்ட,
அதே போதில் அவன் அவளின் இடது
கையை வெட்ட, இருவரும் ஓரிடத்தில் வீழ்ந்
தார்கள். }


அரசநெடுந் தெருநீங்கிப் பல்கலைகள்
ஆய்கூடம்,நோய்நீக்கும் மருத்துவத்தின்
பெருநிலையம் நீங்கியப்பின், குறுக்கே ஓடிப்
பிறைக்கோட்டு யானைபல நிறுத்தும் கூடத்து
அருகினிலோர் இருள்கிடக்கும் பொதுமன் றத்தில்
அவன் புகுந்தான். கணுக்காலை வெட்டினாள், தன்
அரிதான இடக்கையை இழந்தாள் ஆத்தா!
இருமுதியார் அருகருகு துடித்து வீழ்ந்தார்...

செந்நீரில் புரளுகின்ற இரண்டு டம்பும்
தெண்ணீரின் கரைமீனாய்த் துடிக்கும்! "ஆவி
இந்நிலையில் ஆயிற்றா" என்னும் வாய்கள்!
இரண்டுள்ளம் சுரப்பற்ற பசுக்காம் பைப்போல்
எந்நினைவும் இல்லாமல் துன்ப மேயாம்!
'இம்' மென்னும் இருகுரல்கள் வைய வாழ்க்கை
சின்னேரம் சின்னேரம் என்ப தெண்ணத்
திடுக்கிடும் அவ் விருமுதுமைப் பருவம் ஆங்கே!

தனக்குந்தன் கணவனுக்கும் இடையில் வாய்த்த
தடை,பிரிவு கசப்பனைத்தும் பல்லாண் டாகப்
புனத்திலுறும் புதல்போலே வளர்ந்ததாலே
புறத்தொடர்பே இல்லாத முதிய ஆத்தா
அனற்கொள்ளி பட்டபிள்ளை கதறும் போதில்
அம்மாஎன் பதுபோலே, துணைவன் தன்னை
நினைத்தவளாய்த் தாழ்குரலில் " அத்தான என்றாள்;
நிறைவியப்பால் வீரப்பன் "ஆத்தா" என்றான்!









( 100 )





( 105 )




( 110 )





( 115 )




( 120 )
இயல் 38

   { வீரப்பன் தன் மனைவியான ஆத்தாவைப் புரண்
டணைத்தான்; அவளும் அவ்வாறே! }


"ஆண் என்று வாள்சுமந்தும் எனைத்தொ டர்ந்தும்
ஆள்என்றும் மரமென்றும் தெரியாப் போதில்
காண்என்றும் கணுக்காலைத் தீர்த்தாய் என்உள்
கனிஎன்றும் கரும்பென்றும் கிடந்த நீதான்;
வீண்என்று கருதுகிலேன்! என்செய்கைக்கு
விளைவென்று கருதுகின்றேன்! கொடிய சாவைப்
பூண்என்று புகன்றாலும் மகிழ்வேன என்று,
புரண்டணைத்துப், 'பொன்னே'என்றழுதான் கூவி!

"படையாளிற் பகைஆள்போல் இருந்தாய் அத்தான்!
பாண்டியனார் பரிசென்னும் நீண்ட பேழைக்கு
உடையாளின் பணியாள்நான்! நரிக்கண் ணற்கே
உளவாளாய் நாயங்கே ஓடினாய் என்று
அடையாளம் தெரியாமல் இழைத்த குற்றம்;
அறிவாளா, பொறுத்திடு" என்று நெஞ்சம்
உடைவாளாய் இருகையால் அணைத்த மெய்யை
ஒருகையால் அணைத்தன்பில் உயர்வாளானாள்!

பிள்ளையெங்கே?' எனக்கேட்டான் வீரப்பன்தான்;
"பெருங்குடிசை தனிலெனையும் வேந்தன் பெற்ற
கிள்ளை யையும் சிறைசெய்ய நரிக்கண் தீயன்
கிளப்பிவிட்ட கொடுமறவர் உயிரை அங்கே
கொள்ளையிட்டுக் கொண்டிருந்தான்; அன்னம் என்னும்
கோவையிட்ட செவ்விதழாள் உள்ளத் துள்ளே
முள்ளையிட்டார் போல்அச்ச மேமேலிட்ட
முறையிட்டாள், இட்டுவந்தேன என்றாள் ஆத்தா.

மண்காண முகில்கிழித்து நிலவு வந்து
மற்றவர்கள் நமைக்காண வைத்தல் காண்பாய்;
புண்காண இடருற்றுக் கிடக்கின் றோமே!
புறஞ்சென்று நலங்காண வகையு மில்லை!
பண்காணும் மொழிஅன்னம் தனையும், பெற்ற
படிகண்ட பிள்ளையையும் இந்நாள் என்றன்
கண்காணு மோஎன்றான்! துன்பத் துக்கோர்
கரைகாணா மற்கிடந்தார் இருவர் அங்கே








( 125 )





( 130 )




( 135 )





( 140 )





( 145 )




( 150 )
இயல் 39

   { நரிக்கண்ணனை வேழ மன்னன் சீறினான். }

திகழ்வேழ மன்னனுடன் அமைச்சன், அன்னம்,
செயலுடையார் திருமன்றில் அமர்ந் திருந்தார்!
அகம்வேறு பட்டநரிக் கண்ணன் அங்கே
அழைத்தபடி வந்துநின்றான்; வணக்கம் செய்தான்!
இகழ்ச்சிமுடி பூண்டவனே, என்செய் தாய்நீ
இந்நாட்டு மன்னவனைப் பின்னிருந்து
நகைபுரியக் கொலைசெய்தாய்; அடடே நாட்டின்
நங்கையினைத் தங்கையென்றும் பாராய்; கொன்றாய்!

நாடிழந்தாள்; நற்றந்தை, தாயி ழந்தாள்;
நலமிழந்தாள், கலமிழந்தாள்; கொடி பறந்த
வீடிழந்தாள்; புகழ் இழந்தாள்; மண மிழந்த
விரிமலரைப் போலிருந்தாள்! அரச அன்னப்
பேடிழந்த அனைத்துக்கும் நீ ஆளாகிப்
பெற்றவற்றில் மீதியுள்ள உயிர்இ ழக்கத்
தேடுகின்றாய்; ஆத்தாவைத் தீர்த்திட் டாயோ,
திருடிவிட்டாய் பாண்டியனார் பரிசை ஏடா!

பின்னறிவாய் என்தோளின் வாளின் சீற்றம்!
பிழை செய்ததேன என்று மன்னன் கேட்டான்.
-"முன்னறியும் அறிஞர்க்கு முதல்வ ரான
மூதறிஞரே,முழுதும் அறிவீர் என்னை!
என்னறிவால் வானொடுவிண் ணறிய நாயேன்
எக்கொலையும் செய்தறியேன்; பொருத்த ருள்க.
கன்னலிடைக் கணுக்கண்டு பொறாரோ? தங்கள்
கைவாளால் வீழ்த்திடுமுன், காலில் வீழ்ந்தேன்!





( 155 )




( 160 )





( 165 )





( 170 )




( 175 )
இயல் 40

   { தான் கொலை செய்யவில்லை; என் மகனை
இவளே மணந்துகொண்டு, இந்நாட்டை இவளே
ஆளட்டும் என்றான் நரிக்கண்ணன், }


அன்னத்தைக் கொலைபுரிதல் இல்லை; அந்தோ
ஆத்தாவைக் கொலைபுரிதல் இல்லை; அந்தப்
பொன்னொத்த பேழையினைக் கண்ட தில்லை
பொய்யுரைப்ப தாய்இல்லை; இதையும் கேட்பீர்;
கன்னத்தைத் தன்நகமே கீறிடாது!
கதிர்நாட்டை ஆண்டான்என் மைத்து னன்தான்!
தன்அத்தை மகனைஇவள் மணந்து கொண்டு
தானாள்க இந்நாட்டைப் பின்நாள் என்றான்.

நரிஇவ்வா றுரைத்தஉடன், அரசன், "ஆம்ஆம்
நன்முடிவு!நன்முடிவே! அன்ன மேஉன்
கருத்தென்ன? அதுதானே? என்று கேட்டான்.
கனிமொழியாள் கூறுகின்றாள்; குயிலி னங்கள்
திருச்சின்னம் ஊத, நறுந் தென்றல் வீசச்,
செவ்வடியால் அன்னம்உலா வரும்நாடாள்வீர்!
ஒருத்தன்எனை மணப்பதெனில் அன்னோன், என்றன்
உயர்பேழை தனைத்தேடித் தருதல் வேண்டும்.








( 180 )






( 185 )




( 190 )