பக்கம் எண் :

பாண்டியன் பரிசு

இயல் 41


   { அன்னமஎன் பேழையைத் தேடித் தருவோனையே
நான் மணப்பேன என்றாள். }


முன்பாண்டு வைத்தியத்தில் முறைநடாத்தி
முத்தாண்டான் எனும்பெயரை நிலைநி றுத்தும்
தென்பாண்டி நாட்டான்பால் என்மூ தாதை
சிறைச்சோழ னைவென்று, பெற்ற தான
என்பாண்டி யன்பரிசை எனக்க ளிப்போன்
எவனெனினும் அவனுக்கே உரியேன் ஆவேன்
அன்பாண்டாரே, இதுஎன் உறுதி யாகும்
அருள்புரிய வேண்டுமென்றாள் தெருள் உள்ளத்தாள்.

காற்றுக்கும் ஆடாமல், கனல்த னக்கும்
கரியாமல் நன்முறையில் முப்ப ழத்தின்
சாற்றுக்கு நிகரான மொழியா ளே,நீ
சாற்றுமொழி ஒவ்வொன்றும் நோக்கும் போது
நூற்றுக்கொன் றேஅன்றோ மானே! உன்றன்
நுண்ணுறிவால் நீயுரைத்த வாறு நானும்
ஏற்றுக்கொண் டேனதுபோல் ஆகட்டும்; தீர்ப்
பிதுவென்றான் மதிபெற்ற வேழ மன்னன்.








( 5 )





( 10 )




( 15 )
இயல் 42

   { அன்னத்தின் எண்ணத்தை அரசன் ஒப்பினான்.
இம்முடிவை முரசறைவிக்கக் கேட்டுக் கொண்
டாள் அன்னம் }


"இம்முடிவை நாட்டார்க்கு முரச றைந்தே
இயம்புவிக்க வேண்டுகின்றேன என்றாள் அன்னம்!
செம்முடியை அசைத்திட்டான் மன்னன், ஆங்கே
செயல்முடிப்போம் என்றார்கள் அங்கிருந்தோர்...
"அம்முடிவால் தீமைபல நேர்தல் கூடும்.
அன்னமே, மருமகளே, இதனைக் கேட்பாய்!
தன்முடிமேல் பேழையினைத் தூக்கி வந்த
தண்டூன்று கிழவரை நீ மணப்ப துண்டோ!"

எனக்கேட்டான் நரிக்கண்ணன், அன்னம் சொன்னாள்;
'ஈவார்ஓர் கிழவரெனில் எனைம ணக்க
நினைப்பாரோ? நினைப்பரெனில் கிழவ ரல்வர்-
நெஞ்சத்தில் இளைத்தாரே வயதில் மூத்தார
எனஉரைக்கப், பின்னும்நரிக் கண்ணன்: "நோயால்
இடருற்றோன் என்றாலோ?" என்று கேட்டான்.
"தனியரசு போக்காத நோயை நானே
தவிர்க்கின்ற பேறுபெற்றால் மகிழ்வேனஎன்றாள்.

"பகையாளி யாயிருந்தால் தீமை" என்றான்
"பகையாளி உறவாளி ஆதல் உண்டு;
மிகஉறவும் பகையாளி ஆதல்உண்டு
வியப்பில்லைஇது" என்றாள், 'குழந்தை யாயின்
நகையாரோ" என்றுரைத்தான். "அவ்வ ரும்பு
நன்மணத்தைச் செய்யுமெனல் நகைப்பே!" என்றாள்
"இகழ்சாதி ஒப்புவதோ!" என்று கேட்டான்,
"இவ்வுலகில் எல்லாரும் நிகரே" என்றாள்!

கூழையே னுங்கொண்டு காட்டு மேட்டுக்
கொல்லையே னும்சுற்றித் திரியு மந்த
ஏழையே னும் கண்ணுக் கினியான் இன்றேல்
இம்மியே னும்வாழ்வை இனியான் வேண்டேன்!
"கோழையே னும்பெண்டீர் இவ்வா றோதும்
கொள்கைஏ னில்லைகாண்: இன்பம் இன்றேல்,
பேழைஏன்? சீர்த்திஏன்? பெற்றிருக்கும்
பெண்மை ஏன்? இளமைஏன்?" என்றான் மாமன்.

ஒத்தஅன்பால் ஒருத்திபெறும் காத லின்பம்
ஒன்றுதான் இங்குள்ள தென்று ரைத்தாய்;
செத்தவன்பால் ஒருத்திபெறும் இன்பம் உண்டு
சேதிஇது புதிதாகும்; கேட்கவேண்டும்:
மெத்த, வன்பால் வஞ்சத்தால் மான மின்றி
மிக்கபெரு மக்களெல்லாம் ஏங்க ஏங்கச்
சொத்துஅவன்பால் பெற்றவனை மாற்றி அந்தத்
தூயான்பால் அன்பர்பெறச் செய்தல் இன்பம்!

இன்பம்வரும் வழிகள்பல உண்டு மண்ணில்!
எதிர்த்துநேர் வெற்றிபெற முடியா தென்றே
அன்பமைய உறவாடித் தன்கை வாளால்
அழித்துப்பின் முழுநாடும் அடைந்தான் என்றால்,
பின்பவன்பால் பொன்னாட்டை மீட்கப் போக்கும்
பெருநாட்கள் ஒவ்வொன்றும் திருநா ளாகும்!
வன்பகையால் துடிக்கையிலும் தொண்டு செய்வோன்
வரவேற்கும் இன்பத்துக் களவே இல்லை!

என்றுபல கூறியபின். எழில்வேந் தன்பால்,
"என்பாண்டியன் பரிசைத் தேடு விக்க
இன்றுமுதல் நீவிர் நடு நின்று நோக்கி
இடரின்றிக் காப்பதுநும் கடனே" என்றாள்.
நன்றுமட மயிலேநீ செல்க என்றான்,-
"நரிகண்ணா, இருக்கின்றேன் நானும் இங்கே;
ஒன்றுபிழை என்றாலும் ஒப்பேன்! அன்னம்
ஒருத்திஉயிர் உன்குடியின் உயிருக்கொப்பாம்!

அன்னத்தின் அன்புடையார்; நரிக்கண் ணற்கே
ஆனவர்கள் என்னுமோர் பாகு பாடு
தன்னை நம் படைமறவர், உளவு காண்போர்
சற்றேனும் கருதாமல் நடத்தல் வேண்டும்;
சின்னநரிக் கண்ணனவன் வஞ்சம், சூழ்ச்சி,
செயநினைப்பான்; செய்திடுமுன் என்பால் சொல்க!
மன்னுகவே சரிநீதி என்று மன்னன்
வழுத்தினான் எல்லாரும் வணங்கிச் சென்றார்.








( 20 )





( 25 )




( 30 )





( 35 )




( 40 )





( 45 )





( 50 )




( 55 )





( 60 )





( 65 )




( 70 )





( 75 )




( 80 )
இயல் 43

   { முரசறையப்பட்டது! }

கதிர்நாட்டின் வீதியெல்லாம் யானை மீது
கடிமுரசு முழங்கினான்; அன்னம் என்னும்
கதிரைவேல் மன்னன்மகள் இழந்து போன
கவின் பாண்டியன் பரிசைத் தேடி
அதுபோதே அவனையோ அவன் குறிக்கும்
ஆளனையோ அவள்மணப்பாள்! தேடுவோர்க்கும்
எதிர்ப்பில்லை,-எவராலும் இடரும் இல்லை,
இதுவேழ மன்னவனார் ஆணை"என்றான்.







( 85 )
இயல் 44

   { ஊர்ப் பேச்சுக்கள் }

முழக்கத்தைக் கேட்டவர்கள் பல உரைப்பார்;
முறையறியா நரிக்கண்ணன் மகனாய் வந்த
கொழுக்கட்டை அன்னத்தை மணந்து கொள்வான்;
கொடுத்திடுவான், எடுத்திருக்கும் பேழை தன்னை!
வழக்கத்தை விடுவானோ? வஞ்சம் சூழ்ச்சி
வற்றாத கடலன்றோ? உற்றார் தம்மை
இழக்கத்தான் செய்தானே! இருக்கும் பெண்ணை
இழுக்கத்தான் இச்சூழ்ச்சி செய்தான் என்பார்.

கள்ளர்பலர் இருக்கின்றார் தென் மலைக்குள்
கைப்பற்றிப் போயிருப்பார் : அங்குச் சென்றால்
உள்ளபொருள் அகப்படுமே என்பார்; ஆனால்
உட்செல்ல யார் துணிவார் என்று ரைப்பார்,
பிள்ளைகள் போய் அரண்மனையில் விளையா டுங்கால்
பெட்டியினை எடுத்திருப்பார். அவர்கள் அப்பன்
கொள்ளையடித் துக்கொள்வான்; அன்னமென்னும்
கோக்காத முத்தை' என்று சிலபேர் சொல்வார்.

அவ்வமைச்சன் பொல்லாத திருட னன்றோ?
ஆளில்லா நேரத்தில் அடித்துக் கொன்று
செவ்வையாய் இந்நாளில் அன்னத் திற்குத்
தித்திப்புக் காட்டி அந்த மாம்ப ழத்தைக்
கவ்விடுவான் அள்ளூறக் கசக்க 'எட்டிக்
காயா' என்பார் சிலபேர்! அந்தப் பேழை
இவ்வால மரத்தடியில் என்பார் சில்லோர்;
இத்தோப்பில் இக்கிணற்றில் என்பார் பல்லோர்.




( 90 )




( 95 )





( 100 )





( 105 )




( 110 )
இயல் 45

   { நீலி என்னும் தோழியிடம் அன்னம் வருத்த
முரைத்தாள். }


நிலவெரிக்கும் இரவினிலே அரச அன்னம்
நீலிஎனும் தோழியிடம் நிகழ்த்து கின்றாள்;
குலையெரிந்து போனதடி! ஆத்தா வின்கை
குறைப்பட்டுப் போனது; அவள் மணாளர்
நிலைகலங்கக் கணுக்காலை இழந்து போனார்!
நெற்றியிலே வாளின்நுனிபட்டதாலே,
மலைநிகர்த்த தோளுடையான் வேலனுக்கு
வாடிற்றாம் மலர் முகமும்! என்னால்! என்னால்!!

வீரப்பக் கிழவரைநான் கண்டேன்; அன்னார்
விளக்கமுறச் சொல்லவில்லை எனினும், "பெண்ணே!
ஆரப்பன் நாட்டுக்கு நரிபி றந்தான்?
அதுவெல்லாம் இல்லைஇனி நீயே ஆள்வாய்
நேரப்போ வதையெல்லாம் அறிவார் யாவர்?
நிலயறியா நரிக்கண்ணன் கூத்த டித்தான்!
தீரட்டும் என்நோயும்; ஆத்தா நோயும்!
சேரப்பல் லாண்டுநீ வாழி! என்றார்.






( 115 )




( 120 )





( 125 )
இயல் 46

   { நீலியும் அன்னமும் பேசியிருக்கையில் நரியின்
மகன் பொன்னப்பன் வந்தான். }


பெரியார்வாய்ச் சொற்பலிக்கும் என்றாள் அன்னம்;
'பிழையார்செய் தாலுமவர் பிழையார் அம்மா!
உரியார்க்கோ தாயமும் உரிய தாகும்,-
ஒன்றுக்கும் அஞ்சற்க" என்றாள் நீலி!
நரியாரின் மகன்வந்தான் அங்கப் போது-
நான்உன்றன் அத்தான்என் றான் சிரித்தான்?
தெரியாதா நான் நேற்றுக் காலை, வீட்டுத்
தென்புறத்தில் நின்றிருந்தாய் பார்த்தேன் என்றான்.

என் அப்பன் உன் மாமன் ஆத லாலே
எனக்கு நீ மைத்துனிதான்! நானுன் அத்தான்!
பொன்னப்பன் என்று பெயர் எனக்கு! நான், மேல்
போட்டிருக்கும் பொன்னாடை பார் நகைபார்!
உன்னைப்போல் நான் அழகன்; அழகி நீயும்;
ஒன்பதுதேர் எனக்குமுண்டு வெள்ளியாலே!
தின்னப்பல பண்டங்கள் வீட்டிலுண்டு
திடுக்கிட்டுப் போவாய்நீ அவற்றைக் கண்டால்!

தேனாலும் பாலாலும் என்றன் மேனி
செம்மையுடன் வளர்ந்ததுண்டு மெய்தான். இந்நாள்
மானாலும் கிளியாலும் இளைத்துப் போனேன்.
மலர்ச்சோலை தன்னில்நான் ஓடி ஆடி!
ஆனாலும் ஒருபேச்சுக் கேட்பாய்; நானோ
அரசன்மகன்! பலர்என்னை மணக்க வந்தார்
போனாலும் போகட்டும் அன்ன மென்னும்
பூவையைத்தான் மணப்போமே எனநி னைத்தேன்.

எவ்வளவோ வேலையுண்டு முடிக்கவேண்டும்;
இங்கிருந்து போய்முதலில் முரச றைந்தே
எவ்வூர்க்கும் திருமணத்தை முழக்கச் சொல்லி
எங்கெங்கும் விதிகளை விளக்கச் சொல்லி
ஒவ்வொரு வீடும்சிறப்புச் செய்யச் சொல்லி
உன்பேரும் என்பேரும் எழுதி ஓலை
செவ்வையுறப் பிறநாட்டு மன்னர்க் கெல்லாம்
திருமணத்தின் அறிவிப்பை அனுப்ப வேண்டும்.

மணந்துகொண்டால் என்னிடமே இருக்க வேண்டும்
மரியாதை யாய்நடந்து கொள்ள வேண்டும்!
பிணம்போல எப்போதும் தூங்க வேண்டாம்!
பிச்சைக்காரர் வந்தால் அரிசி போடு!
பணம்போடு, குறைந்துவிடப் போவ தில்லை!
பாலினிக்கும்! நம்வீட்டில் மோர்பு ளிக்கும்!
துணிந்துநிற்பாய் என்னோடு திருடர் வந்தால்!
சுருக்கமென்ன முகத்தினிலே? அதெல்லாம் வேண்டாம்.

மனைவிஎன்றும் கணவனென்றும் இருந்தால் ஏதோ
மகிழ்ச்சியினால் கலாம்புலாம் எனக்கிடத்தல்
அனைவர்க்கும் உள்ளதுதான்; ஆனால் நாட்டின்
அரசனென்றும் குடிகளென்றும் இருத்த லாலே
எனைவந்து தொந்தரவு செய்ய லாமா?
எனக்கன்றோ அதுகுறைவு? நீயே சொல்வாய்
மனிதனுக்குத் தொலையுண்டு பண்ணு கின்றாய்;
மனைவியா மற்றென்ன விலங்குதானோ?

இவ்வகையாய்ப் பொன்னப்பன் அடுக்கு கின்றான்
இளவஞ்சி, நீலிமுகம் பார்த்துப் பார்த்தே
செவ்விதழின் கதவுடைத்து வரும்சிரிப்பைத்
திருப்பிஅழைத் துள்ளடக்கிக் கொண்டி ருந்தாள்
எவ்வளவோ சொல்லிவிட்டான், இன்னும் சொல்வான்;
என்தம்பி உனக்கென்ன பகையா? உன்னை
அவ்வளவாய் மதிக்கவில்லை என்று சொன்னால்
ஆர்குற்றம்? அப்படி நீ வைத்துக் கொண்டாய்!

மாமியார் ஒன்றுசொன்னால் மறுக்கின்றாயே
மருமகளைக் கப்பதெல்லாம் யார் பொறுப்பு
நாம்யார் அவரைவிடச் சிறியோ மன்றோ?
நம்பிள்ளை குட்டிகளை வளர்ப்பவர் யார்?
மீமீஎன் றழும்ஒன்று, மற்றும் ஒன்று
விளையாடும், ஒருபிள்ளை தேர்ந டத்தும்-
ஆமிந்த வேலையெலாம் அவர்பார்க் கட்டும்;
அதிலே நீ தலையிடுதல் சரியே இல்லை!

மணவீட்டின் வாயிலே கமுகும் தெங்கும்
வாழையும்கட் டுதல்வேண்டும்; ஒருபு றத்தில்
கணகணென இசைக்குருவி முழங்க வேண்டும்;
கைகாட்டிக் கண்காட்டி ஆடும் மாதர்
மணியரங்கில் அணிசெய்ய வேண்டும் அங்கு
வருவார்க்கு வெற்றிலையும் பாக்கும் தந்து
வணக்கத்தைச் சொல்லியனுப் புதலும் வேண்டும்-
வாயார நமைவாழ்த்தி அவர்கள் போவார்!

இவையெல்லாம் ஒருபுறமி ருக்க, நானோ
ஏழைகட்குச் சோறிட்டுத் துணியும் தந்து
கவலையிலா திருக்கும்வகை செய்வதென்று
காப்புக்கட் டிக்கொண்டேன்! அதுவு மின்றி
தவில்அடிப்போன் காதெல்லாம் கிழிப்பான்; அந்தச்
சந்தடியை விலக்கிவிட வேண்டும்! மிக்க
உவகையுடன் தாலியினைக் கட்டு கின்றேன்
உன்கழுத்தை என்பக்கம் திருப்புநன்றாய்-

ஏன்வெட்கப் படவேண்டும்? கட்டு வோன்நான்
இதனாலே யாருன்னை இகழ்வார் கூறு?
கூன் என்ன? நிமிர்ந்திருந்தால் நல்ல தன்றோ?
கூட்டமாய் வந்தவர்கள் போன பின்பு
ஏனத்தில் பசுப்பாலை ஏந்தி வந்தே
எனக்குமுனக் கும்கொடுக்கும் போது, நீஎன்
மானத்தைக் கெடுக்காதே சொன்னேன் சொன்னேன்:
வாங்கிக்கொள் நான்குடிப்பேன்; குடிப்பாய் நீயும்.

பிள்ளைகளை தூங்க வைத்த பிறகுதானே
பெற்றவள்தூங் கிடவேண்டும்? அதைவி டுத்துச்
சொள்ளொழுக நீமுன்பு தூங்க லாமா-
சொல்என்றான் கொட்டாவி விட்டுக் கொண்டே!
பள்ளிக்குப் போகையிலே பிள்ளை கட்குப்
பண்டங்கள் கொடுத்தனுப்பச் சொன்னான்; சொல்லி,
வெள்ளைவிழி காட்டி உடல் துவண்டு குந்தி
மெதுவாகப் படுத்துப்பின் குறட்டை விட்டான்!

சிரிக்கின்ற நீலியினை நோக்கி அன்னம்
தெளிந்திடும்உள் ளத்தோடு செப்பு கின்றாள்;
"இருக்குமென நான்நினைத்தேன் அந்தப் பேழை
இவனிடத்தில் இல்லையடி, நல்ல வேளை;
சிரிக்க உடல் எடுத்தவனை மணக்கத் தக்க
தேவைஇல்லை; ஆனாலும் இவனைப் போலே
பொருத்தமில்லான் பேழையினைக் கொண்டு வந்தால்
பொற்றாலி புனையவோ வேண்டும்?!' என்றாள்.





( 130 )




( 135 )





( 140 )

-



( 145 )




( 150 )





( 155 )




( 160 )





( 165 )





( 170 )




( 175 )





( 180 )





( 185 )




( 190 )





( 195 )




( 200 )





( 205 )





( 210 )




( 215 )





( 220 )





( 225 )




( 230 )
இயல் 47

   { நீலியும் அன்னமும் நிலா முற்றத்திற்சேர்ந்தனர்.
அதே இரவில் நரிக்கண்ணனும் அமைச்சும்
தனித்துப் பேசியிருந்தார்கள். }


சிரித்திருந்த நீலியவள் இரக்க முற்றாள்
சிலபேசி நிலாமுற்றம் நீங்கி னார்கள்!
விரித்திருந்த மெத்தையிலே தனிய றைக்குள்
மேம்பாட்டுத் தாமரைக்கண் கூம்ப லுற்றாள்
கிரிச்சென்னும் சுவர்க்கோழி வாய டங்கிக்
கிடக்கின்ற நள்ளிரவில் அமைதி யின்றி
நரிக்கண்ணன் தனக்குரிய அமைச்ச னொடு
நடுக்கமொடு பலபேசிக் கிடப்பானானான்,

தேன் வெறுக்கும் வண்டுண்டோ! நல் அறப்போர்ச்
செயல்வெறுக்கும் தமிழருண்டோ! தெண்ணீர் தன்னை
மீன்வெறுத்த துண்டோ? இவ் அன்ன மென்னும்
மின்னாள் தன் திருமணத்தை வெறுத்துரைத்தாள்
ஏன்வெறுத்தாள்? பேரின்பம் விரும்பு கின்றாள்!
எதைஅவள் பேரின்பமென நினைத்தாள்? யாவும்
தான்வெறுத்தும், என்குடியை வேரறுத்தும்
தன்பழிதீர்ப் பதையே பேரின்பம் என்றாள்.

பேழையினை, அதிலிருக்கும் பட்ட யத்தைப்
பெற்றபின்பு கதிர்நாட்டின் உரிமை தன்னை
வேழத்தா னிடம்காட்டி ஆட்சி பெற்று
வெள்ளெருக்கை என்வீட்டில் வளர்க்க அன்றோ
ஆழத்தில் உழுகின்றாள்! என்ன செய்வேன்!
அறிவுடையாய் உரைஎன்றான்! அமைச்சன் சொல்வான்;
பேழைகிடைக் காதபடி செய்ய வேண்டும்
கிடைத்துவிட்டால் பேரிழவே என்று சொன்னான்.

நமைச்சேர்ந்த படைமறவர் போல்உடுத்து
நம்மோடு நின்றிருந்தான் அவன்பால் தந்து
"சுமந்துபோய்த் தேரோட்டி யிடம் கொடுப்பாய்
தூய்தான பேழையினை" என்று சொன்னேன்
இமைக்குள்ளே கருவிழியைக் கொண்டு போகும்
எத்தனவன் பேழையினை ஏப்ப மிட்டான்
கமழாத புதர்ப்பூப்போல் திருடர் யாரும்
கதிர்நாட்டின் மலைமேல்தான் இருத்தல் கூடும்.

பெரும்பாலும் பேழையங்கே இருத்தல் கூடும்
பெருந்திரளாய் ஆட்களைநாம் அனுப்ப வேண்டும்!
ஒருவரையும் மலைப்பக்கம் விடுதல் வேண்டாம்!
ஊர்தோறும் தேடுவதும் தேவை என்று
நரிக்கண்ணன் உரைத்திட்டான். அமைச்சன் சொல்வான்:
நம்மலையில் பிறர்வருதல் கூடாதென்று
தெரிவித்தல் முறையல்ல, வேழ மன்னர்
திட்டத்தை நாம்மறுத்தல் கூடாதென்றான்.

ஆம்! இதற்கோர் சூழ்ச்சியினை நானுரைப்பேன்
அம்மலையில் இப்போதே பூதம் ஒன்றை
நாம்அனுப்பி அஞ்சும்வகை செய்யச் சொல்லி
நாடெல்லாம் அந்நிலையைப் பரப்ப வேண்டும்
போம்மக்கள் போவதற்கு நடுங்கு வார்கள்
போய்த்தேடு வாரெல்லாம் நாமே யாவோம்
நீமாறு பேசாமல் இதனைச் செய்க
நெடும்பேழை கிட்டும்என நரியுரைத்தான்.







( 235 )




( 240 )



-

( 245 )





( 250 )




( 255 )





( 260 )





( 265 )




( 270 )





( 275 )




( 280 )
இயல் 48

   { நரிங்கண்ணனின் ஏற்பாட்டின்படி 'எட்டி'
என்பான் பூதம்போல் மலைமேல் ஏறிக்
கூச்சலிட்டான். }


"எட்டி" எனும் ஓர்ஆளை அழைத்து வந்தே
எரிவிழியும் கருமுகமும் நீண்ட பல்லும்
குட்டைமயிர் விரிதலையும் கொடுவாள் கையும்
கூக்குரலும், நீர்ப்பாம்பு நெளியும் மார்பும்
கட்டியதோர் காருடையும் ஆக மாற்றிக்
காணுவார் நிலைப்படியே பூதம் ஆக்கி
விட்டார்கள் மலையின்மேல்! "எட்டி" நின்று
வெளியெல்லாம் அதிர்ச்சியுறக் கூச்சலிட்டான்.









( 285 )
இயல் 49

   { பூத்ததைக் கண்டவரும் கேள்வியுற்றவரும்
அஞ்சி நிலைகுலைந்தோடினார்கள். }


ஒளிவிளைக்கும் கதிரவனும், தோன்றாக் காலை
உயிர்விளைக்க நெல்விளைக்கும் உழவரெல்லாம்
களிவிளைக்கும் தமிழாலே பண்டி தர்க்குக்
கலைவிளைக்கும் எளியநடைப் பாட்டுப் பாடிக்
குளிர்விளைக்கும் மலைசார்ந்த நன்செய் நாடிக்
கொழுவிளைக்க உழச்சென்றார்; காதில் கேட்டார்
வெளிவிளைத்த கூச்சலினை! மலைமேற் கண்டார்
விழிவிளைக்கும் எரியோடு கரும்பூதத்தை

ஆழ்ந்தடிக்கும் ஏரடியும் தாற்றுக் கோலும்
அயலடிக்கும் வால்எருதும் நோக்கா ராகி
வீழ்ந்தடித்துக் கொண்டோடி நகர டைந்து
விலாஅடிக்கும் பெருமூச்சுவிட்டு நின்று
சூழ்ந்தடித்துத் தின்னஒரு கரிய பூதம்
சுடரடிக்கும் கொடுவாளும் கையுமாகத்
தாழ்ந்தடிமேல் அடிவைத்து வருங்கால் அந்தச்
சந்தடிகேட் டடியேங்கள் வாழ்ந்தோம் என்றார்.

இதுமட்டும் சிலர்உரைக்கக் கேட்கு மட்டும்
இன்னொருவன் புளுகினான் இயன்ற மட்டும்,
அதுமட்டும் தனியல்ல வான மட்டும்
அளவுடைய ஐந்தாறு பெரும்பூ தங்கள்
குதிமட்டும் நிலத்தினிலே தோன்றா வாகிக்
கொண்டமட்டும் ஆட்களையும் வாயிற் கௌவி
எதுமட்டும் வருவேன்என் றெனையே பார்க்கும்
என்மட்டும் தப்பினேன் என்று சொன்னான்.

வாலிருந்த தா? என்றே ஒருசேய் கேட்டான்
வாலில்லை பின்புறத்தில் ஏதோ ஒன்று
கோலிருந்ததோ என்றும் கொடியோ என்றும்
கூறமுடியா நிலையில் இருந்த தென்றான்
மேலிருந்து வந்திடுமோ என்றான், அந்த
வீதிவரை வந்தனைப் பார்த்தேன் என்றான்
காலிருந்தும் போதாமல் இறக்கை வேண்டிக்
கடிதாக ஓடினான் ஐயோ என்றே!

அவனோடக் கண்டொருவன் ஓடஅங்கே
அத்தனைபே ரும்பறந்தார்! பூதம்! பூதம்
இவணோடி வந்ததெனக் கூச்ச லிட்டார்!
இவ்வீதி அவ்வீதி மக்கள் எல்லாம்
கவணோடும் கல்லைப்போல் விரைந்தா ரேனும்
எவ்விடத்தில் போவதென்றும் கருதவில்லை
கவலைஎரு துகள்போல மக்கள் யாரும்
கால்கடுக்க நகர்சுற்றிச் சுற்றி வந்தார்.

அத்தெருவில் அவ்வீட்டில் பூத மென்றும்
அதுபூதம் இதுபூதம் எனப்பு கன்றும்
தொத்துகின்ற வௌவால்போல் மரத்தின் மீதும்
தூங்குகின்ற பூனைபோல் பரண்கள் மீதும்
முத்தெடுக்கும் மனிதர்போல் கிணற்றி னுள்ளும்
மூட்டையினைப் போல்வீட்டின் இடுக்கி னுள்ளும்
மொய்த்திருக்க லானார்கள்! கருத்தின் பூதம்
முன்னிற்கும் பூதமாய் எங்கும் கண்டே!

முன்நடப்போர் பின்வருவோர் தம்மை எல்லாம்
முகம்திருப்பிப் பார்க்கும்முனம் பூதம் பூதம்
என்றலறி எதிர்வருவோர் தமைஅணைக்க
என்செய்வோம் பூதமென அவரும் ஓடி
நின்றிருக்கும் குதிரையையோ எதையோ தொட்டு
நிலைகலங்கி விழும்போதும் புழுதி தூற்றி
முன்றிலிலே பிள்ளைகளின் கண்கெடுத்து
முழுநாட்டின் எழில்கெடுக்க முழக்கஞ்செய்வார்.





( 290 )




( 295 )





( 300 )





( 305 )





( 310 )






( 315 )




( 320 )





( 325 )






( 330 )




( 335 )






( 340 )
இயல் 50

   { அமைச்சன் மகனும் பேழை தேடக்துவங்கினான். }

நாடுமுழு தும் பூத நடுக்கம் கொள்ள
நரிக்கண்ணன் ஆட்களெல்லாம் பேழை தன்னைத்
தேடுவதில் இருந்தார்கள் தென்ம லைமேல்!
சிலஅறிஞர் நாம்பேழை தேடப் போனால்
கேடுபல சூழ்ந்திடுவான் புதிய மன்னன்,
கிடக்கட்டும் நமக்கென்ன என்றி ருந்தார்!
பாடுபட்டுப் பார்ப்போமே எனநி னைத்தே
பலிஇடத்தும் அமைச்சன்மகன் அலைதலுற்றான்!

சீனி எனும் கணக்காயன் தன்பால் கற்கும்
திறனுடைய இளைஞர்களை அழைத்தழைத்துத்
தானினைக்கும் இடமெல்லாம் தேடச் சொல்லித்
தளர்வின்றி முயன்றிடுவான். அன்னமெனும்
தேனிதழாள் வானிமிர்ந்த சோலை தன்னில்
திண்ணையிலே உட்கார்ந்த வண்ண மாக
ஏனடியே நீலியே பேழை தன்னை
யானடையுப் நாள்வருமோ என்று நைவாள்.



( 345 )




( 350 )





( 355 )




( 360 )