பக்கம் எண் :

காதலா? கடமையா?

இயல் 11


"ஏழையேன் அவட்கும் தாழ்குழல் எனக்குமாய்
வாழுகின்றோம்."

தங்கவேல் போனபின் தனிமையில் மகிணன்
மங்கையை நினைத்து வாடலானான்.
அவன் கண்ணெதிரில்,
வெயில் தழுவியதோர் வெறுவெளி தனில், அவ்
அயில்விழிக் கிள்ளை அழகு காட்டினாள்;
மங்கா உடலெனும் மாற்றுயர் பொன்னையும்,
பொங்கும் சிரிப்புப் புத்தொளி முகத்தையும்,
வகைபெறு கழுத்து வலம்புரிச் சங்கையும்,
விழிநீ லத்தையும், மொழிஅமு தத்தையும்,
இதழ்ப்பவ ளத்தையும் இந்தா என்றே
எதிரில் வைத்தே எழிலுறு கிள்ளைதன்
அன்பெனும் நீர்வார்த் தளித்து நின்றாள்.
இன்பத்தை மகிணன் இருகையால் தாவினான்
இருவிழி ஏமாந்துபோக இஃதவள்
உருவெளித் தோற்றமென்றுணர லானான்.
ஏழையேன் அவட்கும் தாழ்குழல் எனக்குமாய்
வாழு கின்றோம் மணத்தின் பம்பெற
இன்றுநான் எண்ணினும் இயலும். ஆயினும்
கொன்றை நாட்டைமுன்னின்று நடாத்த

என்னைத் தலைமை ஏற்கச் செய்தனர் ;
'நாடு தந்த நல்லதோர் புகழால்
தேடரும் கிள்ளையைத் தேடிக்கொண்டான்'
என்று வையம் என்னை இகழும்.
என்றே எண்ணி இருக்கையில்
அமைச்சன் வந்தான்.
விடுதலை அறிக்கை வெளிவந்ததுவோ?

என்று மகிணன் இயம்ப, அமைச்சன்
கொன்றை கிள்ளையைக் கொடுப்பின், அன்றே
மாழை, விடுதலை வழங்குமாம் என்றான்.
கேட்டவன் யார் என்று கேட்டான் மகிணன்
வாட்படை கொண்ட மன்னன்என் றானவன்.
பறித்தார் பெறுவது பாவை உளமலர்:
மறுத்தாள் என்னின் மன்னன் செய்வதென்?
பெண்தந்து விடுதலை பெறச்சொல் வதுவோ?
கண்ணிருக்க மேன்மைக் கருத்திழந்தானோ?
என்று மகிணன்இசைத்தான். அமைச்சன்,
'ஒன்றுகோள் மகிணனே உன்னால் ஒருதடை
நேராது நடத்தல் நின்கடன்' என்றான்,
மகிணன் -- புகல்வான்;
சூல்கா ணினும் கதிர்பால் காணாத
காலே அரைக்கால் காணி அளவில்
விளையா நிலத்தை வித்தி, அறுத்தும்
எளியார்க் கீந்தபின் எஞ்சிய நெல்லால்
தன்னையும் தன், உடல் தளர்மனை வியையும்,
என்னையும் காக்குமோர் ஏழை உழவனின்

மைந்தன் நான்!
ஒருநாள் களத்தில் ஒட்டிய நெல்லைத்
தருவார்க்குத் தந்தபின் வருவாய் நோக்கினேன்.
செக்கேற்றம் இறைத்தவன் வைக்கோலைக் கூலியாய்க்
கைக்கொண்டதால் வெறுங்கை யோடு நின்றேன்.
நின்றஎன் அண்டையில் நீர்தேங்கி நின்றதால்
என்றன் உடல்நிழல் யான்அதில் கண்டேன்.
கற்பாறை போலக் கண்டேன்என் தோளை
நிற்கும் என்னுடலை நெடுநாள் ஓம்பிய
ஏழை யன்னையார், ஏழை அப்பர்
கூழின்றி வாடும் கொடும்பசி யுடையார்,
அம்முதி யோர்க்கே இம்மலை யுடலதால்?
இம்மியும் - பயனே இல்லை யன்றோ?

எங்கே நெல்லென எனையவர் கேட்டால்
இல்லை என்பதோ இருக்கும்இக் கொடியேன்
என்று வருந்தினேன்.
அன்றுதான் என்னருங் கொன்றைநாட்டன்பர்

மக்களுக் குழைக்க வாஎன் றழைத்தனர்.
நான்அதைத் தந்தையார்க்கு நவின்றேன், தந்தையார்
கூனுடல் தாயர்பால் கூறினார்
தாயார் சாற்றினார்:
காலே அரைக்கால் காணியை விற்றும்
பாலேறியநம் பசுவை விற்றும்
செம்புழுக் கலரிசி சேர்த்து வாங்கித்
தும்பைப் பூவெனச் சோறு சமைத்தே
எருமை முதுகெலும்பு பருமனில் கொல்லை
முருங்கை மரத்திற் பெருங்காய் பறித்துக்
குழம்பிட்டுன் தந்தைக்குக் கும்பிட்டுப் படைப்பேன்;
தொழும்புபட்ட நாட்டுக்குத் தொண்டுசெய்!
என்றருள் செய்தார், நன்றென்று வந்தேன்,
தந்தை யார்க்கும் தாயார் தமக்கும்
எந்த நலமும் இல்லா என்னுடல்
எழிற்பெரு மக்களை ஈன்ற நாட்டுக்கு
விழிப்பொடு சிறிது வேலைசெய் ததாய்
இருப்பின், இன்பம் எனக்கதைப் பார்க்கிலும்
இராது, கிள்ளை என்னை விரும்பினாள்;
என் உளம்ஐயா என்சொற் கேட்காது
தென்னையின் வரியணில் புன்னையில் பாய்தல்போல்
கொடியிடைக் கிள்ளைபால், குடிபோ யிற்றே.
விடுதலை விரும்பாக் கொடியன் நானோ?
என்று பெருமூச் செறிய நின்றான்
இன்னல் என்ன எய்துமோ
என்றுநல்இமைச்சன் ஏகினானே.








( 5 )




( 10 )




( 15 )





( 20 )




( 25 )





( 30 )




( 35 )




( 40 )




( 45 )





( 50 )




( 55 )




( 60 )




( 65 )




( 70 )




( 75 )




( 80 )




( 85 )




( 90 )
இயல் 12

"மன்னனை மணந்தால் வருவது விடுதலை
மறுத்தால் வருவது கெடுதலை யாகும

என்னருந் தங்கையே, எழிலுறு கிள்ளையே,
இன்னல் வந்ததே உன்னால் என்றான்.
அண்ணன் இவ்வா றறைதல் கேட்ட
கிள்ளை, என்னால் கேடோ விளைந்தது?
விளைந்த தெவ்வாறு விளம்புக என்றாள்.
மன்றின் மாடியில் மன்னன் உலவினான்;
அன்றுநீ நன்னீர் ஆடச் சென்றனை,
கண்ணாற் கண்டான் காதல் பொங்கினான்;
புண்பட மன்னன் புகல்வ தென்எனில்,
அவள்என் பட்டத் தரசி ஆனபின்
இவண்நான் விடுதலை ஈவேன் என்றான்.
என்று வாட்பொறை இயம்பி நின்றான்.
இவ்வுரை கேட்ட எழில்சேர் கிள்ளையின்
செவ்விதழ் துடித்தது, சேல்விழி எரிந்தது.

மகிணனைக் கொண்டவள் மன்னனைக் கொள்வளோ?
அகன்ற மார்பினன்; அடல்மலைத் தோளினன்;
பெருமக்கள் நலம் பேணும் ஆற்றலன்;
அருள்மிக்க விழியினன்; அன்புளான் என்பால்
இதனை மன்னனுக் கெடுத்துரைத் தீரோ?
என்று கிள்ளை இயம்பிய அளவில்
ஒன்று சொல்வேன் உற்றுக்கேள் என்று

வாட்பொறை சொல்வான்:
நீ, இன்று
மன்னனை மணந்தால் வருவது விடுதலை;
மறுத்தால் வருவது கெடுதலை யாகும்.
நனிபசி கொண்ட நாட்டு மக்கள்
கிள்ளையால் இந்தக் கெடுதலை என்று
விள்ளுவார், விழிநீர் வெள்ளமாக
அழுவார், ஏழையர் அழுத கண்ணீர்
கூரிய வாள்எனக் கூறினர் பெரியோர்;
மேலும் கேட்பாய்.

மன்னனை மணப்பதால் மாட்சி குறையாது
மகிணனை மணந்தால் நகுவர் உறவினர்
வயிறொட்டிய நாயும், வெயில்கண்டு கூவாது
துயில்கின்ற சேவலும் பயில்சிற் றூரில்
காட்டா மணக்கும் கள்ளியும் மறைக்குமோர்
மோட்டு வளைசுரை மூடிய குடிசையில்
அரிசி கிடைப்பின் அடுப்பு மூட்டும்நாள்
திருநா ளாகக் கருதும் எளியார்க்குக்
கந்தை சுமந்து கையால் கசக்கி
வந்து மரவட்டை மண்ணில் உலர்த்தும்
நகுமகன் அன்றோ மகிணன்? கருதுவாய்
தகுமகள் அன்றோ தையல்நீ? என்னலும்,
கண்ணீர் அருவி வெண்துகில் நனைத்து
மண்ணிற் சாய்ந்து வழியக், கைம்மலர்
முகமலர் கண்ணைமூட, விம்மி
அகமலர் மொய்ம்மலர் அதிரக் கிள்ளை
ஓய்எனக் கூறினும் ஓயாதழுதாள்
சேயிழைக் குரிய செம்மல் மகிணனை
இகழ்ந்தது பற்றி அகம்கொதித்தாள்என
வாட்பொறை எண்ணினான். வஞ்சி," ஐயகோ
பொருளிலார் இழிந்தோர் என்று புகலும்
இருளுளம் படைத்தோர் இருக்கின்றாரே!
அயர்ந்தார் அயர அகப்பட்டது சுருட்டப்
பயின்றார் கையிற் பட்ட பழிப்பொருள்
இழிஞன்என் றொருவனை இயம்பு மாயின்
அழிபொருள் இன்றே அழிதல் வேண்டும்;
அழிபடத் தக்க வழிதான் என்னெனில்
உண்ண உடுக்க உறைய நுகரஆம்
மண்பொருள் சரிநிகர் மக்கட் பொதுவெனச்
சட்டம் செய்வதாம்."
அண்ணா, நீவிர்என் அன்பனைப் பழித்தீர்
எண்ணிலாப் பெரும்பொருள் எனக்கும் உண்டு.
மாயாது நான்உயிர் வைத்திருப் பதற்கோ
அப்பொருள் காரணம் அல்ல அல்ல.
தக்கஅம் மேலோன் மக்கள் நலத்திற்குத்
தொண்டு செய்து தொலைக்கும் நாட்களில்
ஒருநாள் ஒருபொழு தொருநொடி என்னெதிர்
வருவான்; மின்என மறைவான்; அதனால்
மாயாது மண்ணில் வாழுகின்றேன்.
ஒன்றுதான் என்றன் உறுதி; உயர்வுறு
குன்றினில் சுடர்படு கொடிபடர்ந்ததுபோல்
அவன்தோள் என்னுடல் ஆரத்தழுவுதல
என்றாள். வாட்பொறை நின்றான்.
சென்றான் கீழ்நோக்குகின்ற முகத்தொடே.








( 95 )




( 100 )





( 105 )




( 110 )





( 115 )




( 120 )





( 125 )




( 130 )




( 135 )




( 140 )




( 145 )




( 150 )




( 155 )




( 160 )




( 165 )
இயல் 13

"அங்கே அரசன் அவள் நினைவாக
இருந்திடு கின்றான் எரிந்திடும் உளத்தொடு"

'செங்கதிர் இல்லையேல் திங்கட்குச் சீர்இலை'
என்பது போல, மங்கை
'மகிணன் இல்லையோல் வாழேன்' என்றாள்
மகிணனோ,
தன்னைக் கிள்ளைக்குத் தந்ததாய்ச் சாற்றினான்'
என்றான் அமைச்சன்.
'எங்ஙனம் விடுதலை' என்றான் தங்கவேல்.
அங்கே அரசன் அவள் நினைவாக
இருந்திடு கின்றான் எரிந்திடும் உளத்தொடு!
மருந்தொன்றும் அறியேன் மக்கள் நோய்க்கு!
மகிணனும் கிள்ளையும் மற்றவர் தம்மினும்
மிகுந்த விருப்பினர் விடுதலை பெறுவதில்;
அவர்பால் என்னநாம் அறைதல் கூடும்?
தவறோ இழைத்தனர்? சற்றும் இல்லையே?
என்றான் அமைச்சன்.
தங்கவேல், "தீங்கைத் தவிர்க்க எண்ணி, அம்
மங்கை மன்னனை மணந்து கொள்வது
நன்றே அன்றோ" என்று கூறினான்
"முன்ஒரு வன்பால் முழுதும் சென்று
பின்ஒரு வன்பால் பெயர்வதென்பது
சிலர்உளப் பாங்கு; சிலர்அதை ஒப்பர்;
இருவர் கொண்ட எண்ணமதனில்
தலையிடல் என்பது சரியல; இதுதான்
மக்கட்கு மக்கள் வைக்கத் தக்க
உயர்வாம என்று கூறி
அயலில் சென்றான் அமைச்சன் ஆங்கே.








( 170 )




( 175 )




( 180 )




( 185 )




( 190 )
இயல் 14

"கோடையிற் குளிர்மலர் ஓடை எங்கே?
ஆடுமயில் எங்கே? பாடுகுயில் எங்கே?"

மறுநாள் ஊர்ப்பொது மன்று சூழ
நிறைபெரு மக்கள் நின்றனர். மன்னனை
விடுதலை அறிக்கை வேண்டிக் கூவினர்;
'விடுவழி விடுவழி வேந்தனிடத்துச்
சென்று நானே செய்தி அறிவேன்'
என்றான் ஒருவன். நன்றே இதுதான்
என்றான் ஒருவன். எந்நாள் கொடுப்ப
தென்றான் ஒருவன். இந்த நிலையில்
தங்க வேலன் அங்கு வந்தான்.
அங்கிருந்தார்க் கெலாம் அறிவிக்கின்றான்:
'அமைதியாய் இருப்பிடம் அடைவீர்; விடுதலை
தமைஅடை யத்தகும் நாள்தொலை வில்லை
உமக்கிதை உறுதியாய் உரைத்தேன்' என்னலும்
நன்றென நவின்று சென்றனர் மக்கள்.
தங்கவேல் மன்றில் தனித்திருந்து
பொங்கு காதலால் புழுவாய்த் துடிக்கும்
மன்னனைக் கண்டான். மன்னன், 'எங்கே
புன்னகை? எங்கே புதிய நிலவு
கோடையிற் குளிர்மலர் ஓடை எங்கே?
ஆடுமயில் எங்கே? பாடுகுயில் எங்கே?
எங்கே கிள்ளை?" என்று பதறினான்.
அங்கே அவளை அடைவோம், என்று
தங்கவேல் தணிவு சாற்றினான். மன்னன்
"அவள்தன் விருப்பம் அறிவித் தாளா?
இவண் அதை உரைப்பாய என்றான் தங்கவேல்,
"வெயில்நிகர் மணிகள் அயில்ஒளி பதக்கம்
பயிலும் மார்பும் பட்டுச் சட்டையும்
படர்விழி பறிக்கும் பன்மணி முடியும்
கடலிடை எழுந்த சுடர்நிகர் முகமும்
கட்டிள மையும் கிள்ளையின் கண்ணில்
பட்டால் அவள்உளப் பறவைநும் வலையில்
கட்டா யம்படும்! கடிது புறப்படும்!"
என்னலும் மன்னன் ஏதும் உரையாது
பொன்னுடை மணிஇழை பூண்டு, தங்கவேல்
வழிநடக்க நடந்து சென்றான்
அழகிய தங்கத் தேரென ஆங்கே.







( 195 )




( 200 )




( 205 )




( 210 )




( 215 )




( 220 )




( 225 )
இயல் 15

"குருத்து படர் முல்லை
பெருந்தேக்கிற் சென்று பொருந்துதல்
இல்லையோ"?

"என்னால் தடையோ எழில்விடு தலைக்கே"?
சொன்னால் நலம்எனத் தோகை கேட்டாள்.
"கிள்ளையே உன்னால் கெடுதலை இராதுதான்.
அள்ளக் குறையா அழகும் இளமையும்
வைய மாட்சியும் எய்திய மன்னன்,
தையல் உன்னிடம் தனிமையில் பேச,
வாயிலின் புறத்தே வந்துநிற் கின்றான்.!
தூயோய் நன்மொழி சொல்லுக". என்று
தங்கவேல் கெஞ்சினான். மங்கை ஒப்பினாள்.
அங்கது தெரிந்தே அரசன் வந்தான்.
இருக்கை காட்டினாள் இருந்தான் அரசன்.
முருக்கிதழ்க் கிள்ளையும் முனைவேல் அரசனும்
தம்மில் பேசினார். தங்கவேல் மறைந்தான்.
இம்மா நிலத்தில் எனக்கொன்று வேண்டும்.
அதுவோ. எனக்கோர் ஆவியாகும்.
புதிதாய் ஓவியர் புனைந்த பாவையே!
உனக்கொன்று தேவை. உனக்கும் அஃதுயிர்
இனிப்புக் கினிப்பென எழுந்த செங்கரும்பே!
உன்றன் தேவை என்றன் கையிலும்
என்றன் தேவை உன்றன் கையிலும்;
எனவே,
உன்னுயிர் என்னிடம் என்னுயிர் உன்னிடம்
மின்னி இருப்பது மறைப்பதற் கில்லை"
என்று மன்னன் இயம்பிய அளவில்,
"நாட்டுரிமை மக்கட்கு நல்குவோர், தாம்ஒன்று
கேட்டு நிற்பது கேட்ட தில்லையே,"
என்றாள் கிள்ளை.
வைய மன்னனும், மணிமுடி தாழ்த்தி
"ஐயம் என்றுவாய் அங்காந்து கேட்டதோர்
உயர்பொருள் உன்னிடம் உள்ளதே" என்றான்.
"அயல்ஒரு வர்க்கதை அளித்தேன்' 'என்றாள்.
வருந்திய மன்னன், "குருந்துபடர் முல்லை
பெருந்தேக்கிற் சென்று பொருந்துதல் இல்லையோ?"
என்றான்.
"காதல் என்னுமோர் கைதேர்ந்த தச்சன்
வாழ்தலில் சிறப்பொன்று மாட்டக் கருதி
என்னுடல் மற்றுமோர் பொன்னுயிர் இரண்டையும்
முன்னரே பொருத்தி முடித்தான என்றாள்!
முடிவை மாற்ற முடிந்தால் உனக்கும்
குடிகள் தமக்கும் கொற்றவன் எனக்கும்
நல்லது மயிலே! நல்லது மயிலே!
அல்லது தீமை அனைவர்க்கும் அன்றோ?"
என்று மன்னன் இரங்கிச் சொன்னான்.
ஒன்றும் உரையாது நின்றாள் பிள்ளை,
தன்சொற் கேளாது தள்ளாடி ஓடித்
தின்பண்டம் நாடும் சிறுகுழந்தைபோல்
மொய்குழல் மீது மொய்த்ததன் விழியை
வெய்துயிர்த்து மீட்டு, மன்னன்
வாயோய்ந்து வெளியில் வந்தான். அவனைக்
காயோ பழமோ? கழறுக" என்று
தங்கவேல் கேட்டான். மன்னன்
தங்கம் உருகுதல் தணற்கென்று ஏகினனே.







( 230 )




( 235 )




( 240 )




( 245 )




( 250 )




( 255 )




( 260 )




( 265 )





( 270 )




( 275 )
இயல் 16

"மாழை நாட்டினர் வந்தபின் அன்றோ
ஏழ்மை தன்னை எய்திற்று கொன்றை"
"கெஞ்சிப் பார்த்தேன். கேள்நீ ஒள்ளியோய்
அஞ்சுமாறு கிள்ளைக்கும் அனைவர்க்கும் சொன்னேன்.
சென்றஎன் உள்ளமோ திரும்புவ தின்று
மின்னிடை தன்பால் வீழ்ந்தது, துன்பம்
கடக்குமுறை எதுவெனக் காணின், நாட்டில்
அடக்குமுறை ஒன்றினால் ஆகும். ஒள்ளியோய்
உன்னிலும் எனக்கோ ஒருவரும் நற்றுணை
இந்நி லத்தில் இல்லை. அமைச்சனோ
கொன்றை நாட்டுக்குக் கொடுக்கும் உரிமையை
இன்றே கொடுத்தல் ஏற்றதென் கின்றான்."
என்று மன்னன் இயம்பும் போதே
அன்றுபோல் இன்றும் மன்று சூழ
ஊர்ப்பெரு மக்கள் ஒன்று சேர்ந்து
தீர்ப்பீர் "குறை" எனச் சென்று கூவினர்.
மாடியில் அரசன் மக்கள் குரல்கேட்டு
வாடிய முகத்தோடு வாளா இருந்தான்.
ஒள்ளியோன் மாடியின் உச்சியி னின்று
வெள்ளம் போலும் வீதியில் இருப்பார்க்குச்
சொல்லுகின்றான்:
" கொன்றை நாட்டினரே, கூறுவது கேளீர்!
மன்னன், விடுதலை வழங்கு முன்பு
இந்நாடு விடுதலைக் கேற்ற தகுதி
உடையதா என்பதை நடைமுறை தன்னில்
கடிதில் ஆராய்தல் கடமை அன்றோ?
ஆதலால்,
பொறுப்பீர என்று புகன்றான். மக்கள்
நீவிர் இங்கு நெடுநாள் தங்கி
யாவும் அறிந்துளீர். எந்நிலை அறியீர்?
அரச னிடத்தில் அறைந்தீரோ? என்று
வெறுப்புடன் நின்றனர். விளம்புவான் ஒருவன்:
விரைவில் விடுதலை வேண்டும் எமக்கே.
கற்றனர் நாட்டினர் கண்டீர் அன்றோ?
ஒற்றுமை உடையோம் உணர்ந்தீர் அன்றோ!?
வேற்றுமைக் குள்ள வித்தும்இங்குளதோ?
ஆற்றுந் தொண்டெலாம் அறத்தொண்டு அல்லவோ?
மாழை நாட்டினர் வந்தபின் அன்றோ?
ஏழ்மை தன்னை எய்திற்றுக் கொன்றை?
ஆளுந்திறமை அற்றோமா? எம்
கேளும் கிளையும் கெட்டழிந் தனவோ?
சிங்கம் சுமந்த செழுமணி இருக்கையும்,
மங்காது மின்னும் மணிக்கொடி மதிலும்
இன்னும் முன்போல் இருத்தல் அறியீரோ?
மன்னர் பெருங்குடி வாழ்வதும் அறியீரோ?
என்று கூறினான்.
வாட்பொறை மாமன் மகனாம் "தாரோன
கேட்பாய் ஒள்ளியோய் கிளத்து கின்றேன்,
கோழி நாட்டுக் கொற்றவன் உன்றன்
மாழை நாட்டை வளைப்பதற்குப்
பெரும்படை திரட்டினான்; விரைவிற் கிளம்புவான்;
தருவதோர் விடுதலை தந்து முடித்தால்
உன்றன் நாட்டுக் குதவியாய்க் கொன்றை
நன்று முயற்சி நடத்து மன்றோ?
இச் செயல் விரைவில் இயற்றீராயின்
எத்தீங்கு நேருமோ? எண்ணுக இதனை;
என்றான். ஒள்ளியோன் எம்இறை ஆணையை
இன்று நீவிர் இகழாது செல்வீர்
என்று சினத்தொடும் இயம்பினான். மக்கள்
சென்றனர். தாரோன் சிரித்துச் சென்றான்.
ஒள்ளியோன் அரசனிடத்தில்
விள்ள லானான் நடந்ததை விரித்தே.



( 280 )




( 285 )




( 290 )




( 295 )




( 300 )




( 305 )




( 310 )




( 315 )




( 320 )




( 325 )




( 330 )




( 335 )
இயல் 17

"தன்உரு மாற்றினான் மன்னன்
அன்னவன் மனைவி ஆனான் ஒள்ளியோனே

நன்று கூறினை நாட்டாரி டத்துநீ
கொன்றை மக்கள்மேல் குற்றங் காட்டிச்
சிலரைப் பிடித்துச் சிறையில் அடைத்தும்
பலரை இன்னற் படுத்தியும் பார்க்க
எண்ணி இருந்தேன்; என் எண்ணம்போல்
நண்ணிய மக்கள்பால் நன்று கூறினை.!
நம்உரு மாற்றி நாட்டைச் சுற்றுவோம்
இம்மக் கள்பால் எக்குறை காணினும்
நாட்டைமுன் னின்று நடத்துவோர் மேல்அதைப்
போட்டுச் சிறையில் புகுத்துவோம் அவரை
என்னஉன் எண்ணம் என்றான் மாழையான்!
அன்னதே என்றான், வன்புடன் ஒள்ளியோன்!
பழந்து ணித்தலைப் பாகையும், சட்டையும்,
முழந்துணித் தமேல் விரிப்பும் நரைத்த
முடியும் மீசையும்! தாடியும் குடையும்
வாடிய முதுமையும் வாய்க்கும் வண்ணம்
தன்உரு மாற்றினான் மன்னன்!
அன்னவன் மனைவி ஆனான் ஒள்ளியோனே.




( 340 )




( 345 )




( 350 )




( 355 )
இயல் 18

"பாரிடைப் படர்ந்து பறிபடாச் சாதியின்
வேரிடை வெந்நீர் விட்டுக் களைந்தனர்."

ஏற்றம் மிதிப்பார் இருவர், ஒருவன்
சேற்றநீர்ச் சாலினைச் செங்கை பற்றிப்
பாடி இருந்தான் பழமை பற்றியே
பாடல் என்எனில்,
"ஐந்து சாதிகள் அந்தநாள் இருந்தன.
கொந்தி எடுக்குமே குடிகளை அவைகள்,
மேலான சாதி வேலைசெய் யாமல்
பாலான சோறும் பருப்பொடு நெய்யும்
உண்டு வாழுமே! ஊரில் மற்றவை
கண்டு நடுங்குமே கைகட்டி நிற்குமே!
கீழான சாதிஎக் கேடுகெட் டேனும்
கூழேயும் இன்றிக் குடிசையில் தூங்குமே!
அப்போது நானோ ஆர்என்று கேட்டால்
தப்புடைய மேலான சாதியைச் சேர்ந்தோன்."
உழவன் பாட்டை ஒருசொல் விடாமல்
கிழவனும் மனைவியும் கேட்டிருந் தார்கள்.
" பாரிடைப் படர்ந்து பறிபடாச் சாதியின்
வேரிடை வெந்நீர் விட்டுக் களைந்தனர்
ஆரும் மறவா ஐந்து சாதியின்
பேரும் மறந்தார் பெருநாட்டார்கள
என்றான் கிழவன். இயம்புவாள் மனைவி
"நற்றொண் டாயினும் நாம்இதை இன்று
குற்ற மென்று கூற வேண்டுமே; "
எனலும், ஆம் ஆம் என்றான் கிழவன்.
"மனு எனும் கடவுள் மக்களுக் களித்த
சாதி ஒழுக்கம் தலைகீழ் ஆம்படி
தீது செய்தீர் தீது செய்தீர்!
என்றுநாம் குற்றம் இயம்ப வேண்டும் "
என்றான் கிழவன். ஏட்டில், மனைவி,
நிறத்தின் வேறுபாட்டை
அறுத்தது குற்றம்என அழுத்தினாள் எழுத்தையே.






( 360 )




( 365 )




( 370 )




( 375 )




( 380 )




( 385 )
இயல் 19

"செலவுக்குத் தருக என்றான் நின்ற
இலவுக்குநிகர் இதழ் ஏந்திழை மகிழ்ந்தாள

ஆல மரத்தின் அடியில் ஒருவன்
காலைச் சப்பளித்துக் கணக்கனொடு குந்தி
உறுதி மொழியை உரைத்தான். ஏனெனில்
குறைவிலா எனது கொன்றைநாட்டு ஆணையில்
இந்த அறமன்றில் என்உள்ளம் அறியநான்
வந்தார்க்குத் தீர்ப்பு வாய்மையில் வழங்குவேன்.
என்னலும்,
உடனே ஒருத்தி மடமயில் போன்றாள்
நெடுவிழி நீரால் நிறைய அழுது
மன்றுளீர் மன்றுளீர் என்றன் தலைவன்
மணமா காத மங்கையை நாடிப்
பணமாய்ப் பட்டாய் அணியாய் அவட்கு
நாடொறும் நாடொறும் நல்குவான் ஆனான்.
ஈடேறும் வகை எதுவும் காணேன்
இருக்கும் சொத்தில் என்விழுக் காட்டை
அளிக்கும் படியும், அன்றழெதிய மணத்தைக்
கிறுக்கும் படியும் கேட்பதென் வழக்கென"
மன்றுளான் சாற்றினார் வருக என்னலும்
அறுவர் சான்றினார் ஆம்எனப் புகலவும்
மறம்இழைத் தானை வருக என்னலும்
வந்தவன், பிழையை மறைக்க முயலலும்
இந்தா தீர்ப்பென இயம்புவான் மன்றினன்;
மங்கை தன்னை மதியாமை குற்றம்.
பங்குக் குரியவள் பகர்ந்த மறுப்பையும்
எண்ணா தொருத்திக்கு ஈந்தது குற்றம்!
ஆதலின்,
நாட்டின் பேழைக்கு நாற்பது வராகன்
கட்டுக, சொத்திரு கூறு படுத்துக,
ஒருகூறு தருக ஒண்டொடி தனக்கு
வரும்உன் பங்கில் இருபது வராகன்
சேயிழை இனிமேல் செயத்தகு மணத்தின்
செலவுக்குத் தருக என்றான் நின்ற
இலவுக்கு நிகர்இதழ் ஏந்திழை மகிழ்ந்தாள்.
மறைவில் நின்று வழக்கு நடந்த
முறையை அறிந்த முதியனும் மனைவியும்
தம்மில் பேசுவார்,
இம்முறை நன்றென இயம்பினான் கிழவன்.
அரசினர் மன்றம் அங்கே இருக்கையில்
ஒருமன் றிவர்கள் உண்டாக்கினர்எனக்
குற்றம் சுமத்தினாள். கூறியது
சொற்றியம் என்று சொன்னான் கிழவனே.





( 390 )




( 395 )




( 400 )




( 405 )




( 410 )




( 415 )




( 420 )




( 425 )
இயல் 20

"கொழுத்த பன்றியின் கழுத்தை யறுத்துப்
படைய லிட்டுப் பணிவதுண்டாம

குறியதோர் வீட்டின் அறையி னுள்ளே
சிறுவிசிப் பலகையில் உறுநோயாளி
படுத்திருந்தான். அடுத்தொரு மருத்துவன்
எடுத்துப் பலபல இயம்புகின்றான்:
கழலையை அறுத்தேன் கட்டினேன் மருந்திட்டு
இன்னும் இரண்டுநாள் எனை அழைக்காமல்
முன்போல் வாளா மூடி வைத்திருந்தால்
சாக்காடு தான்என்று நோயாளி கூறுவான்:
அன்னை எதையோ அரைத்துப் பூசினாள்.,
இன்னே இந்நோய், இராதென்று சொன்னதால்
நாட்கள் சென்றன என்று நவில.
நாட்டு மருத்துவன் நகைத்து, முன்னெல்லாம்
அச்சம் தரும்படி முச்சியன் வரைந்ததை
மெச்சும் உருவென மேற்சுவரில் மாட்டி
அதற்குச் சோறு முதற்பல படைத்தும்
எதிர்கீழ் வீழ்ந்தும், இருகை கூப்பியும்,
இறையே இறையே எனக்கும் மனைக்கும்
உறைமக் களுக்கும் கறவை மாட்டுக்கும்
பிணியென ஒன்றும் அணுகா வண்ணம்
அணிந்திருந் தருள்வாய் என்ப துண்டாம்;
அன்றியும்,
மைந்தர்க்கு நோய் வரின் மலையின் உச்சியில்
குந்தி இருப்பதாய்க் கூறும் இறைக்குக்
கைப்பொருள் கொண்டு காலிடை வைப்பதாய்
செப்பி, அங்குளான் தின்னத் தருவதோர்
உறுதி சொல்லி, உறுநோய் மைந்தன்
இறுதி பெறும்வரை இருப்பராம் வாளா!
எல்லைக் கடவுள் என்பதொன் றுண்டாம்
தொல்லை தீர்க்கச் சொல்லி அதற்குக்
குருதியும் சோறும் தெருவில் இட்டே
இருகை கூப்பி இறைஞ்சுவாராம்.
கூரை சலசலப்புக் கொள்ளு மாயின்
சீரிலாக் கடவுள் சீறிற்றென்று
தோப்பில் மண்ணால் ஏற்ப டுத்திய
காப்புக் கடவுள் கருத்து மகிழக்
கொழுத்த பன்றியின் கழுத்தை யறுத்துப்
படைய லிட்டுப் பணிவதுண்டாம்!

நோய்வரா திருக்கவும் நோய்வரின் தணிக்கவும்
போய்ப்பல கடவுளைப் போற்றுவ துண்டாம்!
நடைமுறை பிழையாது நடத்தல் இல்லையாம்!
மடைமையை ஒழிக்கும் வழிகாணாராம்!
கல்வி அறிவு காண எண்ணாராம்!
அவர்போல் நீவிரும் கவலை யின்றிக்
கழலைக்கு நல்ல கருவியிட்டாற்றாது
வாளா இருந்து வந்தீர்! என்றான்.
ஒளிந்திருந்து கண்ட ஒருத்தியும் கிழவனும்
தெளிந்த பகுத்தறிவு தெரிந்தனர் ஆயினும்
கடவுளைக் கடிந்தது குற்றம்
விடப்படாதென்று விண்டு சென்றனரே.




( 430 )




( 435 )



( 440 )




( 445 )




( 450 )




( 455 )




( 460 )




( 465 )





( 470 )




( 475 )