பக்கம் எண் :

கடல்மேல் குமிழிகள்

கதை உறுப்பினர்

திறல்நாடு்

புலித்திறல்
புலித்திறல் மன்னி
வையத்திறல்
செம்மறித்திறல்
பொன்னி
ஆண்டி
அழகன்
ஆண்டாள்
மின்னொளி

மன்னன்
மனைவி
மகன்
மன்னன் தம்பி
மன்னன் கொழுந்தி
காவற்காரன்
மகன்
பூக்காரி
மகள்

பெருநாடு

பெருநாட்டான்
பெருந்திரு
பிச்சன்

அரசன்
மகள்
அமைச்சன்
மலைநாடு

மலையன்
மலர்க்குழல்

அரசன்
மகள்

காட்சி 1

இடம்: திறல் நாட்டின் அரண்மனைத் தனியிடம்.

நேரம்: பகல் உணவுக்குப் பின்.

உறுப்பினர்: புலித்திறல் மன்னன், அவன் தம்பி
         செம்மறித் திறல்,

1
கடல்மேற் குமிழிகள்

(அகவல்)

புலித்திறல் உண்டபின் பொன்னொளிர் கட்டிலில்
ஒருபுறம் தனிமையில் உட்கார்ந் திருந்தான்.
செம்மறித் திறல்அங்கு வந்தான்.
"இம்மொழி கேட்பாய என்றான் வணங்கியே.

(விருத்தம்)

"பொன்னியை மணக்க வேண்டும்
அதைத்தானே புகல வந்தாய்?
பொன்னிஎன் கொழுந்தி. நீயோ
புலைச்சியின் மகனே அன்றோ?
என்னருந் தந்தை, வேட
ரினத்தவள் தன்னைக் கூடி
உன்னைஇங் கீன்றார், என்பால்
உறவுகொண்டாட வந்தாய்?"

புலித்திறல் இவ்வா றோதப்,
"புலைச்சி என் தாய்! என் தந்தை
நிலத்தினை ஆளும் வேந்தன்
நின்தந்தை அன்றோ அண்ணா?
புலப்பட உரைக்கின் றேன் நான்,
பொன்னிஉன் கொழுந்தி என்னைக்
கலப்புறு மணத்தாற் கொள்ளக்
கருதினாள் மறுப்பதேனோ?"

என்றுசெம் மறிதான் கூற
புலித்திறல் "இராதே" என்றான்.
பொன்னிஅந் நேரம் ஆங்கே
பொதுக்கென எதிரில் வந்து
தன்எழில் மூத்தார் காலைத்
தளிர்க்கையால் பற்றி, "என்னை
உன்தம்பி மணக்கும் வண்ணம்
உதவுக" என்று சொன்னாள்.

"தமக்கையை எனக்க ளித்தாய்
சாதியில் இழிவு பெற்று
நமக்கெல்லாம் பழிப்பா வானை
நங்கைநீ நாடு கின்றாய் இமைக்குமுன் புறஞ்செல் உன்றன்
எண்ணந்தான் மாறு மட்டும்
அமைக்கின்றேன் உன்னை என்றன்
அரண்மனைக் காவல் தன்னில

என்றுகாவலரைக் கூவ,
இருவர்வந் தழைத்துச் சென்றார்.
நின்றசெம் மறித்தி றற்கு
நிகழ்த்துவான்: "அரண்ம னைக்குள்
என்றுமே நுழைதல் வேண்டாம்
ஏகுக" என்று சொல்ல,
நன்றெனக் குன்றத் தோட்செம்
மறித்திறல் நடக்கலானான்.























( 5 )




( 10 )





( 15 )




( 20 )





( 25 )





( 30 )




( 35 )





( 40 )
காட்சி 2

இடம்: அரண்மனையில் ஒரு காவல் துறை.

நேரம்: மாலை.

உறுப்பினர்: பொன்னி, புலித்திறல் மன்னி, காவலர்.

அகவல்

உலக மக்களில் உயர்வுதாழ் வுரைக்கும்
கலக மக்களைக் கருத்தால் தூற்றிக்
காதற் கண்ணீர் வெளிப்பட
மாது நின்றனள் வன்காப்பாறையிலே.

கண்ணி்

""என்ன உனக்கில்லை பொன்னி? -- உனக்
கேனிந்த எண்ணம்? புலைச்சி
தன் மகன் மேல்மைய லுற்றாய் -- எமைத்
தாழ்வு படுத்த நினைத்தாய
என்று புலித்திறல் மன்னி -- மிக
ஏசிக்கொண் டேஎதிரில் வந்தாள்
"இந்நில மக்கள்எல் லோரும் -- நிகர
என்று புகன்றனள் பொன்னி.

"நாலு வகுப்பினர் மக்கள் -- எனில்
நானிலம் ஆள்பவர் நாமே
மேலொரு பார்ப்பனர் கூட்டம் -- உண்டு
மூன்றா மவர்பொருள் விற்போர்!
காலத னாலிட்ட வேலை -- தனைக்
கைகளி னாற்செய்து வாழும்
கூலி வகுப்பினன் அன்னோன -- என்று
கூறி முடித்தனள் மன்னி.

"ஆளப் பிறந்தவர் தாமும் -- மே
லானவர் என்பவர் தாமும்
கூளங்கள் அல்லர்; கடல்மேல் -- காணும்
குமிழிகள் அன்னர் என்பேன்
மாளாப் பெருங்கடல் மக்கள் -- அங்கு
மறைபவர் ஆள்பவர் என்பேன்
வேளை வரும் அக்கா -- தீரும்
வேற்றுமை" என்றனள் பொன்னி.

"உன்னை மணந்திட வேண்டி -- இவ்
வுலகிடை எண்ணிக்கை யில்லா
மன்னர்கள் உள்ளனர் பொன்னி -- உன்
மனநிலை மாறுதல் வேண்டும்
அன்னது மட்டும் கிடப்பாய் -- பிறர்
அண்டுதல் இல்லா அறைக்குள்
என்னடி வேண்டும் இப்போது -- சொல
என்றாள் புலித்திறல் மன்னி.

"கன்னங் கறுப்புடை ஒன்றும் -- மாற்றிக்
கட்டிடப் பின்னொன்றும் வேண்டும
என்றே உரைத்தனள் பொன்னி -- ஒன்
றீந்தாள் புலித்திறல் மன்னி.
"என்னுயிர் போன்றவன் தன்னை -- இனி
யானடைந் தின்புறு மட்டும்
என்னுடைநீ" என் றுடுத்தாள் -- நகை
யாவும் கழற்றினள் பொன்னி.








( 45 )







( 50 )




( 55 )





( 60 )





( 65 )




( 70 )





( 75 )




( 80 )





( 85 )
காட்சி 3

இடம்: ஆற்றிடை என்னும் சிற்றூர்

நேரம்: நிலவெறிக்கும் இரவு

உறுப்பினர்: செம்மறித்திறல்.

(அகவல்)

இந்நிலத்தில் இருகுரல் -- ஒன்று,
"மன்னர் நாங்கள என்பது; மற்றொன்று
"பெரு நிலத்தில் யாம் பெருமக்கள என்பதாம்.
சரிநிகர் மக்கள் என்னும் அரியதோர்
அமைதிக் குரலினை ஆர்தல் எந்நாள்?
சமையம் சாதி தவிர்வது எந்நாள்?
என்றுசெம் மறித்திறல் கறுப்புடை
ஒன்றினை ஏந்தி உரைப்பான் ஆங்கே.

பஃறொடை வெண்பா

மன்னர் பலரும் மணக்க இருக்கையிலும்
என்னை மணப்பதென்றே எண்ணினாள் எண்ணியதால்
என்ன இடர்ப்பட்டாள்! ஏச்செல்லாம் ஏற்றாளே!
அன்னவளை நான்மணக்கும் ஆவலினால் வாழ்கின்றேன்!

தன்னன்பு மூத்தாளைத் தானிழக்க வுந்துணிந்தாள்
இன்னந்தன் மேன்மை எலாமிழக்கவுந் துணிந்தாள்
என்னன்பு நோக்கினிலே யான் நோக்கத் தன்னருமைத்
தென்னம்பா ளைச்சிரிப்பால் தின்னுவளே என்ஆவி!

போகுமட்டும் பூரிப்பாள் போகவிடை பெற்றுப்பின்
ஏகுமட்டும் பின்னழகு பார்த்திருப்பாள் யான்திரும்பித்
தோகையினை மட்டாக நோக்கினால் தான்குனிந்து
சாகுமட்டும் நான்மறவாப் புன்னகையைச் சாய்த்திடுவாள்.

"மூத்தாள் மணாளன் முடிவேந்தைக் கேட்டபின்
போய்த்தார் மணமன்றில் பூண்போம்; பெருமக்கள்
வாழ்த்திடும் வாழ்த்தால் மகிழ்வோம்பின், பஞ்சணையில்









( 90 )




( 95 )







( 95 )






( 100 )





( 105 )
தீர்த்தோம்நம் ஆவல்எனச் சேர்ந்திருப்போம் என்றுரைப்பாள்.


பொன்னால் மணியால் புனைந்த நகையிழந்தாள்
தன்னால் முடியாத தொல்லையினால் சாய்ந்தாளோ!
மின்னால் செயப்பட்ட மெல்லிடைக்கு நேர்ந்தவெல்லாம்
என்னால் என்னால் என்னால் காராடை ஏற்கிறேன்!

தண்ணிலவு கொண்ட மகிழ்ச்சி தனைக்கருதி
வெண்மை உடையணிந்து விண்ணில் துலங்குவதாம்
துன்பம் உடையேன் கரிய துகில்பூண்டேன்
என்னருமைப் பொன்னியைநான் எந்நாள் மணப்பேனோ?

பொன்னியும் நானும்ஒரு காதற் புனல்முழுகா
திந்நாள் தடுப்பதெது?" "மண்ணாள ஏற்றவர்கள
"இன்னலுற ஏற்றவர்கள்?" என்னும் பிளவன்றோ?
இந்நிலையை மாற்றாதிரேன்.




( 110 )





( 115 )

காட்சி 4

இடம்: அரண்மனை

நேரம்: மாலை

உறுப்பினர்: புலித்திறல் மன்னி, அவள் மகன் வையத்திறல்,
ஆண்டாள், அவள் மகள் மின்னொளி, காவற்காரன் மகன்
அழகன்.

அகவல்

மன்னியைச் சுமந்த பொன்னூசல், கூடத்தில்
தென்னாட்டுத் தோழியர் செந்தமிழ்ப் பாட்டில்
மிதந்துகொண் டிருந்தது, மென்கை அசைவத்தால்!
எதிரில் ஆண்டாள். இவள்மகள் மின்னொளி
மன்னி ஆணைக்கு வாய்பார்த் திருந்தனர்
மன்னி திருவாய் மலர்ந்தருள் கின்றாள்;
"வையத் திறல்நம் பையன் பிறந்தநாள்!
நாளை! அவ்விழா நன்மலர் அனைத்தும்

வேளையோடு நீதரல் வேண்டும். அதன்விலைப்
பொன்னும் பெறுவாய், பரிசிலும் பூணுவாய்.
மின்னொளி யுடன் நீ விருந்தும் அருந்தலாம்."
என்றாள்! ஆண்டாள் இளித்தாள்!
நின்ற மின்னொளி ஆழ்ந்தாள் நினைவிலே.

கண்ணிகள்

வாழிய வாழிய -- ஊசல்
மகிழ்ந்தாடு கின்றனை மன்னீ
தோழியர் ஆட்டினர் ஊசல் -- கை
சோர்ந்திட நின்றனர் மன்னீ
தோழியரும் சற்று நேரம் -- ஆடச்
சொல்லுக என்னருந் தாயே
வாழிய வாழிய மன்னீ -- அவர்
மகிழ்ந்தாடவும் செய்க தாயே!"

என்றனள் மின்னொளி தானும்!-- மன்னி
எள்ளி நகைத்துப் புகல்வாள்;
"மன்னியும் தோழியர் தாமும் -- நில
மாந்தரில் ஒப்புடை யாரோ?
என்னடி மின்னொளி இன்னும் -- உனக்
கேதும் தெரிந்திடவில்லை?"
என்றுரைத் தாள்! அந்த நேரம் -- மகன்
;என்ன'வென்றேஅங்கு வந்தான்.

"தூண்டா விளக்கேஎன் கண்ணே -- என்
தூய வையத் திறல் மைந்தா!
ஆண்டாள் மகள் சொன்ன தைக்கேள் -- ஊசல்
ஆட்டிய தோழிகள் ஆட
வேண்டுமென் றேசொல்லி நின்றாள் -- இவள்
வேற்றுமை காணாத பேதை
வேண்டாம் இப்பேச்சுக் கள்என்றேன -- என்று
விண்டனள் சேயிடம் மன்னி!

மாவடு வொத்தகண் ணாளை -- இள
வஞ்சிக் கொடிக்கிணை யாளைத்
தாவிநல் வாயிதழ் ஓரம் -- உயிர்
தாக்கிடும் புன்சிரிப் பாளைத்
"தேவைஉன் எண்ணமும் பெண்ணே -- அதில்
தீங்கில்லை வையத்துக்' கென்றான்.
பாவையும் அம்மொழி கேட்டாள் -- எனிற்
பாங்கியர் ஆடுதல் காணாள்.

அழகனும் அவ்விடம் வந்தான் -- தன்
அன்புறு தோழனை நோக்கி
"எழுதிய ஓவியந் தன்னை -- நீ
ஏன்வந்து பார்த்திட வில்லை?
பிழைத்திருந் தால் உரைப் பாயே -- என்
பின்வரு வாய்' என்று சொல்ல
வழியில்லை தப்புதற் கென்றே -- அவ்
வையத்திறல் பிரிந்திட்டான்.











( 120 )




( 125 )





( 130 )







( 135 )




( 140 )





( 145 )





( 150 )




( 155 )





( 160 )





( 165 )




( 170 )
காட்சி 5

இடம்; அரண்மனைக் கூடம்.

நேரம்: நடுவேளை.

உறுப்பினர்: ஆள்வந்தார் கூட்டம்: புலித்திறல் மன்னன்.
         வையத்திறல், மின்னொளி, ஆண்டாள், தோழியர்  

அகவல்

மதிறல்நாட்டு மன்னனின் திருமகள் இருபதாண்டு
நிறைவு விழாவில் நிகழ்ந்த விருந்தில்
ஆளப் பிறந்தார் அனைவரும்
வேளையோடு வந்தார் விருப்போடுண்ணவே.

கண்ணிகள்

பத்தாயி ரம்பெயர்கள் -- அரண்மனைப்
பாங்கிலோர் கூடத்திலே
ஒத்த தலைவாழை -- இலைக்கெதிர்
உண்டிட வந்தமர்ந்தார்
எத்தாவி லும்கிடையா -- தெனும்படி
எண்ணி ரண்டுவகையாம்
புத்தம் புதிய கறிகள் -- நறுமணம்
பூரிக்க வேபடைத்தார்
தித்திக்கும் பண்ணியங்கள், -- அப்பவகை
தேடரு முக்கனிகள்.
தைத்திடும் கல்லையிலே -- நறுநெய்யும்
தயிர்ஒரு குடமும்
அத்தனை பேர்களுக்கும் -- எதிரினில்
அமைத்து நெய்ச்சோறு்
முத்துக் குவித்தாற்போல் -- பருப்போடு
முயங்க வேபடைத்தார்!
முன்உண்ண அள்ளிடுவார் -- உயர்த்திய
முழங்கை நெய்வழியும்
பின்உண்ண ஊன்றியகை -- கறிவகை
பெற்றிட ஆவலுறும்
மன்னவன் உண்டிருந்தான் -- அவன்மகன்
வையத் திறலினுடன்!
இன்ன நிலைமைஎல்லாம் -- அரண்மனை
ஏழையர் பார்த்திருந்தார்.

ஏழைப் பணியாளர் -- ஒருபுறம்
ஏங்கி இருந்தார்கள்;
கூழைக் கரைத்தவுடன் -- ஒருபுறம்
கூப்பிடப் பட்டார்கள்
தோழியர் கூழ்குடித்தார் -- ஒருபுறம்
தோகைநல் மின்னொளிதான்
தாழையின் தொன்னையிலே -- கூழினைத்
தாங்கிக் குடித்திருந்தாள்.

விழவு தீர்ந்தவுடன் -- சிறப்புடன்
விருந்து தீர்ந்தவுடன்
அழகு மின்னொளிபால் -- அவள்தாய்
ஆண்டாள் "என்மகளே
விழவு மிக்கநன்றே -- அவ்விருந்தும்
மேல்!' என்று சொல்ல, அவள்!
"இழவு பெற்றார்கள் என் அன்னாய்
ஏழையர என்றுரைத்தாள்.

"ஆளும் இனத்தார்க்கும் -- பார்ப்பனர்
அத்தனை பேர்களுக்கும்
தாளா மகிழ்ச்சியன்றோ!
தனிச்சிறப்பன்றோ!
ஆளாகி வாழும்இடம் -- விருந்துண்ண
ஆவலும் கொள்வதுவோ?
நாளும் அவர்மகிழ்ச்சி -- நம் மகிழ்ச்சி
என்று நவின்றாள் தாய்!.












( 175 )







( 180 )




( 185 )




( 190 )




( 195 )




( 200 )





( 205 )





( 210 )




( 215 )





( 230 )
காட்சி 6

இடம்: அரண்மனையில் தனியறை.

நேரம்: உணவுக்குப்பின், இரவு.

உறுப்பினர்: வையத்திறல், அழகன்

அகவல்

நிலவு குளிர்வார்க்கக் காற்று நெளிய,
அலைகடல் இசையை அளிக்க மலர்சேர்
பஞ்சணையில் தனியே படுத்தான்.
நெஞ்சில் அவள்கூத்து நிகழ்த்துகின்றாளே!

கண்ணிகள்

மின்னொளி இன்முக நிலவே -- நிலவு
விண்ணிலவே அகலாயோ!
அன்னவள் இன்சொல் இசையே -- இசையாம்
ஆர்கடல் வாயடக் காயோ!
கன்னருங் கருங்குழல் மணமே -- மணமாம்!
காட்டில் மலர்காள் அகல்வீர்!
என்ன உரைப்பினும் இனியும் -- எனையேன்
இன்னற் படுத்துகின்றீர்கள்?

காவற் பணிசெய்யும் அழகன் -- இன்னும்
காணப் படவில்லை இங்கே!
ஆவலெல் லாம்அவ னிடமே -- கூறி
ஆவன செய்திட வேண்டும்.
பாவைஅம் மின்னொளி தன்னை -- நானே
பார்க்கவும் பேசவும் வேண்டும்.
தேவைப்படுமிந்த நேரம் -- தெரிந்தும்
தீமை புரிந்திடுகின்றான்.

என்று துடிக்கின்ற வேளை -- அழகன்
"இளவரசே" என்று வந்தான்,
"ஒன்றுசெய் ஒன்றுசெய் அழகா -- அழகா!
ஒண்டொடி வீட்டுக்குச் செல்வாய்
நன்று கிழவனை நோக்கிப் -- பழங்கள்
நாலைந்து கொண்டுவரச்சொல்
சென்றிடு வான்பழத் தோட்டம் -- நோக்கிச்
செல்லுக" என்றான் இளங்கோ!
      (அழகன் போகின்றான்)









( 235 )







( 240 )




( 245 )





( 185 )





( 250 )




( 255 )


காட்சி 7

இடம்: சிற்றூர், மின்னொளி வீடு

நேரம்: நள்ளிரவு

உறுப்பினர்: மின்னொளி, அவள் தந்தையாகிய
          கிழவன், அழகன், வையத்திறல்


அகவல்

   'அன்னைஇன் றிரவில் அரசர் அரண்மனை
   தன்னில் தங்கினாள் போலும்! தந்தையே,
   சிறிது நேரம், செந்தமிழ்ப் பாட்டொன்று்
   பாடுக' என்றாள் மின்னொளி!
   பாடுமுன் வந்தான் அழகன் பரிந்தே

பஃறொடை வேண்பா

"அன்பு முதிர்ந்தவரே. ஐயா, விரைவில்நீர்
மன்னர் மகன்விரும்பும் மாங்கனிகள் ஐந்தாறு
தூயனவாய்க் கொண்டுவரத் தோப்புக்குப் போய்வாரும்
வாயூறிப் போகின்றான் வையத்திறல்அங்கே
என்றான் அழகன், உடன் ஏகினான் அம்முதியோன்!

"மன்றிடை ஆடும் மயிலேநல் மின்னொளியே!
மாவின் கனிமீது மையலுற்ற நம்இளங்கோ.
மாவின்மேல் ஏறியிங்கு வந்திடுவான் இந்நேரம்!
என்றான் -- இளமங்கை "ஏன் நீ நடந்துவந்தாய்?
மன்னன் மகன்குதிரை ஏறி வருவதென்ன?
உன்னிளங்கால் நோகா திருக்குமா? மன்னன்மகன்
தன்கால்கள் மட்டுமா மென்கால்கள்?" என்றே

அழகன் நிலைமைக் கிரங்கி அவனை
முழுதன்பால் போக்கி முழுநிலவு சாய்த்திருந்தாள்!
வையத் திறல்வந்தான், வஞ்சி வரவேற்றாள்,
கையால் தடுக்கிட்டாள் காற்சிலம்பால் பாட்டிசைத்தாள்.
இன்புருக காட்டி எதிரினிலே நின்றிருந்தாள்;
அன்பால் 'அமர்க' என வையத் திறல் சொன்னான்;
சற்றே விலகித் தரையினிலே கையூன்றி
மற்றுமிரு வாழைத் துடைகள் ஒருக்கணித்து
மின்னொளியும் உட்கார்ந்தாள் மேலாடை தான்திருத்தி

"மின்னொளியே வீட்டில் விருந்தும் அருந்தினையோ?"
என்று வினவினான், கேட்ட எழில்வஞ்சி
"அந்தப் பெரியவிருந் தேழைக் கருத் 'தினை'யோ?
இந்தவகை நீமட்டும் ஏன்தான் அருந்தினையோ?
கூழ்குடித்தார் இவ்வூர்க் குடித்தனத்தார் எல்லோரும்
வாழ்வுக்கே வந்தவர்கள் வாய்ப்பாய் விழுங்கினரே"
என்றாள் முகஞ்சுருக்கி. "இன்னல் உளங்கவர
மன்னர் வகுப்பென்றும் மற்றவகுப் பென்றும்
இந்நாட்டில் இல்லா தினிமேற் புரிந்திடுவேன
என்றான்! அவ்வேளை முதியோன் எதிர்வந்து
"தித்திக்கும் மாம்பழங்கள் தேடிக் கொணர்ந்தேன்நான்
பத்துக்கு மேலிருக்கும் பாராய் இளங்கோவே"
என்றான். பழத்தோடு வையத் திறலோ, தன்
குன்றை நிகர்த்த குதிரைஏறிச்சென்றான்!

"போய்வருவேன என்றான் அழகன்; இளவஞ்சி
வாயு மிரங்க; மனமிரங்க "நீநடந்தா
போகின்றாய்?" என்றாள். "புதிதல்ல" என்றழகன்
ஏகலுற்றான் மின்னொளியை ஏய்த்து.












( 260 )







( 265 )





( 270 )





( 275 )




( 280 )





( 285 )




( 290 )




( 295 )




( 300 )
காட்சி 8

இடம்: அரண்மனை

நேரம்: காலை

உறுப்பினர்: பெருநாட்டின் அமைச்சன், புலித்திறல்.

அகவல்

அரியணை அமர்ந்த அரசனின் எதிரில்
பெருநாட் டமைச்சன் பிச்சனும் அமர்ந்தே
"அரசே, உன்னைநான் அணுகிய தேன்எனில்
பெருநாட்டு மன்னனின் ஒருமகளான்
பெருந்திரு என்னும்அப் பேரெழி லாளைஉன்
திருமகன் வையத் திறல்மணப்பது
பெருவான், நிலாவைப் பெறுவ தாகும்!
இந்த உறவினால், இவ்வையத்தில்
எந்தப் பகைவரும் இல்லா தொழிவர்;
அதனால், திறல்நாடும் அப்பெருநாடும்
எதனாலும் மேன்மை எய்துதல் கூடும்!
திருவுளம் யா" தெனக் கேட்டான்.
அரசன் மகிழ்ச்சியால் அறைவான் ஆங்கே.

கண்ணிகள்

மிக்க மகிழ்ச்சி அமைச்சே -- மிக
மேன்மை யுடையதிவ் வெண்ணம்
சிக்கல்கள் பற்பல தீரும் -- பல
தீமைகள் மாய்வது திண்ணம்;
திக்கை நடுங்கிட வைக்கும் -- இத்
திருமண வுறவு! மெய் யன்றோ!
விக்குள் எடுக்கையில் தண்ணீர் -- உன்
விண்ணப்பம் என்றனன் மன்னன்.
"வையத் திறற்கிதைச் சொல்க -- அவன்
மணந்துகொள் ளத்தக்க வண்ணம்
செய்க எனக்கிதை நாளை -- நீ
தெரிவிக்க" என்றனன் பிச்சன்.
"செய்திடு வேனிதை இன்றே -- நான்
செப்பிடுவேன் பதிலை நாளை!
துய்யஎன் மன்னி கருத்தும் -- கேட்டுச்
சொல்லுவேன என்றனன் மன்னன்.











( 305 )




( 310 )




( 315 )







( 320 )




( 325 )




( 330 )

காட்சி 9

இடம்: அரண்மனை மகளிர் இல்லம்

நேரம்: முதிர்காலை

உறுப்பினர்: புலித்திறல், மன்னி.

அகவல்

   பாங்கியர் அப்புறப் படுத்தப் பட்டனர்
   ஆங்கொரு கட்டிலில் அரசனும், மன்னியும்
   விரைவில்வந் தமர்ந்தனர்; வேந்தன் முகத்தில்
   புதுமை கண்டாள் மன்னி!
   அதனை யறிய ஆவல் கொண்டனளே!

கண்ணிகள்

"பெண்ணேஉன் மகனுக்கும் பெருநாட்டான் -- தன்
பெண்ணைக் கொடுப்பதெனும் நல்ல செய்தியைக்
கொண்டுவந்தான் அமைச்சன் என்ன சொல்கின்றாய் -- உன்
கொள்கையும் தெரிந்திட வேண்டும் அல்லவோ?
அண்டைநாட் டரசனின் உறவாலே -- நமக்
கல்லல் குறையுமெனல் உண்மை யல்லவா?
தொண்டைக் கனிநிகர்த்த இதழாளே -- எண்ணம்
சொல்லுக" என்று மன்னன் சொன்ன அளவில்,
"அண்ணன் எனக்கிருக்க மகளிருக்கப் -- பெண்
அயலிற் கொள்வது தக்க தல்லவே!
வெண்ணெயை வைத்துநறு நெய்க்கழுவதா -- என்ன
வேடிக்கை" என்றுமன்னி துன்பமடைந்தாள்!
"கண்ணுக்குப் பிடித்தவள் அண்ணன்மகளா -- அக்
கட்டழகியா இதனை மைந்தனிடமே
எண்ணியுரைக்கும்படி சொல்லிவிடுவோம் -- அவன்
எண்ணப்படி நடப்பம என்றனன் மன்னன்.
"சேயை அழைத்துச் சொல்லுக" வென்றா!
ஆயினும் காவலரை விரைந்தனுப்பி - இங்
கழைப்பிக்க வேண்டுமென" மன்னன் உரைத்தான்
"தூயஎல் லைப்புறத்தின் கட்சிதனையே -- அவன்
துய்த்திடச் சென்றதுண்டு வந்தபிறகே
ஆயஇச் செய்திதனை அறிவிக்கலாம -- என
அரசி அரசனிடம் சொல்லி மறுத்தாள்!












( 335 )







( 340 )




( 345 )




( 350 )




( 355 )
காட்சி 10

இடம்: அரண்மனைத் தனியறை.

நேரம்: காலை.

உறுப்பினர்: மன்னி, வையத்திறல், மன்னன்,

அகவல்

பவையத் திறலை மன்னி அழைத்துத்
"துய்ய மகனே, வையத்திறலே,
உன்மணம் பற்றி உன்னிடம் பேச
மன்னர் தேடினார் மகன்இல்லை என்று
சொன்னேன், உன்னை முன்னே நான்கண்
டென் கருத்தினை இயம்ப எண்ணினேன்.
பெருநாட் டானின் 'பெருந்திரு' தனைநீ
திருமணம் செய்யத் திட்ட மிட்டனர்.
என்னருந் தமையன் ஈன்ற பொண்ணாள்
உன்னரும் பண்புக் கொத்தவள் அன்றோ
அழகிற் குறைவா? அன்பிற் குறைவா?
ஒழுக்கம் அனைத்தும் ஓருருவானவள்
அவளைநீ மணப்பதாக
அவரிடம் கூறுவாய என்றாள் அரசியே!

கண்ணிகள்

ஆய கலைகள் ஆறுபத்து நான்கையும் அம்மா -- நான்
ஆராய்ந்தபின் னேமணம் ஆர்ந்திட எண்ணினேன் அம்மா
தீயன் நல்லன காணாத இப்பரு வத்தே ... ஒரு
சேயிழை யோடறம் செய்வதெவ் வாறுளம் ஒத்தே?
தூயஇந் நாட்டினை ஆளுந் திறம்பெற வேண்டும் -- நான்
தொல்லறி வோரிடம் கல்வி பயின்றிட வேண்டும்
பாயும் பகைவர் தமக்கிடையேஉலகாள -- எனைப்
பாரோடு போராடும் வண்ணம் பயிற்றுக" என்றான்.









( 360 )




( 365 )




( 370 )







( 375 )




( 380 )

வையத் திறல்சொன்ன பேச்சினைக் கேட்டனள் மன்னி -- தன்
வாயை அடக்கினள் ஏதும்சொல் லாம லிருந்தாள்.
பையவந் தானந்த நேரத்தி லேஎழில் மன்னன் -- எந்தப்
பாவையை நீமணம் செய்திட எண்ணினை" என்றே


( 385 )
துய்யதன் மைந்தனைக் கேட்டனன். அன்னையுரைப்பாள்--அவன்

துயக்க நினைப்பது பல்கலை யே" என்று சொன்னாள்.
வையக மாளும் புலித்திறல் மன்னவன் கேட்டே -- தன்
மைந்தன் கருத்தினை நன்றெனச் சொல்லி நடந்தான்.



( 389 )