பக்கம் எண் :

கண்ணகி புரட்சிக் காப்பியம்

இயல் 71

தந்தத்தன தந்தத்தன தான தான
தந்தத்தன தந்தத்தன தான தான

வஞ்சிக்கிறை செங்குட்டுவன் வாழ்க! வாழ்க!
மன்பொற்கொடி திங்கட்குடைவாழ்க! வாழ்க!
மிஞ்சிச்செலும் வெங்கட்படை வாழ்க! வாழ்க!
நெஞ்சொக்கமு ழங்கப்பறை வாழ்க! வாழ்க!
நின்றெக்களி சங்கத்திரு வாழ்க! வாழ்க!
துஞ்சத்தகு வெங்கட்பகை வீழ்க! விழ்க!
வஞ்சிப்படை வென்றிப்படி வாழ்க நேரே.

தனதனதன தனதனதன தத்தத் தத்தா
தனதனதன தனதனதன தத்தத் தத்தா
வழிகுழிபெற நிலநெளிவுற எட்டுத் திக்கே
மலிபொடிஎழ மிசைஇருள்பெற ஒட்டுப் பட்டே
விழிஎரிதர மடமடஎன முற்பட் டுத்தோள்
விடுபடைஎறி படைதொடுபடை எட்டத் தொட்டே
ஒழிவதுபகை ஒழிவதுபகை தட்டுக் கெட்டே
உறுவதுபுகழ் எமதிறைஎன வெற்றிச் சொற்கே
மொழிஎனஒரு தமிழர்கள்படை முற்பட் டுத்தீ
முடுகியதென விரைவதுவட வெற்புக் கற்கே.

ஆடிநடந் தனபரிகள்; அணியா னைகள்
அசைந்துநடந் தன,தேர்கள் கலக லென்று
பாடிநடந் தனதேர்கள் கலக லென்று
படைதொடங்கித் தேர்ப்படையின் கடைவ ரைக்கும்
ஓடித்தான் பார்ப்பதென எண்ணி னோர்கள்
ஓடுகின்றார் ஓடுகின்றார் காணார் இன்னும்!
ஓடிக்கொண்டேஇருக்கின்றார்கள் என்றால்
படைநீளம் நீலமலை வரைக்கும் உண்டாம்.






( 5 )





( 10 )




( 15 )





( 20 )




( 25 )

இயல் 72

கண்டதிரும் நீலமலைப் புறத்தே தானை
கடும்பகலில் பாடிவீ டிறங்க மன்னன்
அண்டையினோ ருடன்இருக்கை வீற்றி ருந்தான்;
அவிழ்த்துவிடப் பட்டன,தேர்ப் பரிகள் எல்லாம்.
விண்தொடும்போர் யானைளும் கரும்பு வாழை
விளாவீழ்த்திப் பலாப்பழத்தோ டுண்டு லாவத்
திண்டிறலோர் நீராடி உடைகள் மாற்றித்
தெங்கிளநீர் முதிராவழுக்கை உண்டார்.

அரசரொடு போர்மறவர் எவரு மாக
அடியரிந்த நரம்பகற்றிக் குருத் திலைகள்
வரிசையினில் இட்டுச்சோ றிட்டு நெய்யா
றதுபாய்ச்சிக் கறிவகைகள் பண்ணி யங்கள்
பரிமாறிச் சுவைநீரும் அருகில் வைக்கப்
பார்அங்கே பாரிலுள்ளோர் இங்கே என்ன
இருவரிசை மூவாயிரங்கோல் நீளம்
இருந்துண்டார் எழுவர்என எட்டவில்லை.

வயிறொன்று தனிப்பெட்டி யாய்இருந்தால்
வந்தஎலாம் வரவுவைத்துத் தோளில் தூக்கி
உயிரச்சம் இல்லாமல் செல்லலாமென்று
உரைத்தவனை மற்றொருவன் நோக்கி அண்ணே
துயர்என்ப தொன்றில்லை என்றிருந்தால்
தொண்ணூறு வடைஒன்றும் பண்ணா என்றான்.
அயல்நின்றான் கைப்பற்றி நின்றான் ஓர்ஆள்
அயலானைத் தூக்கிவிட்டு வீழ்ந்தான் ஓர்ஆள



( 30 )




( 35 )





( 40 )





( 45 )




( 50 )

இயல் 73

குடக்கோமான் உணவருந்தி அமைச்சர் யாரும்
கொண்டாட வீற்றிருக்கும் போதில், ஐயா
வடக்கிருந்து வந்துள்ளார் காண்பதற்கு
வரவிடவோ? என்றொருவன் வணங்கிக் கேட்க,
மடக்கிவைத்து ஆராய்க என்று மன்னன்
வாயெடுக்கத் "தமிழ்பேசும் துறவோர் ''என்று
நடுக்குற்றே அவன்சொல்ல வேந்தர் வேந்தும்
நடுக்குற்றான் ஓடினான் வணங்கி நின்றான.

''பார்துறந்தும் தமிழ்துறவாத் துறவீர் என்றன்
படிமீதில் அடிவாழ்க'' என்றழைத்துச்
சீர்புரிந்து நின்றபடி என்பால் என்ன
திருவருளோ எனக்கேட்க "மன்னர் மன்னா
ஆர்வருந்தார் அங்கிருக்கும் தமிழர் கொண்ட
அல்லல்சொல்லக்கேட்டால்? கற்கோள் எண்ணாத்
தேர்பரிகா லாள்யனை சேரச் சென்று
செயல்முடிப்பீர்! தமிழர்களின் குறையும் கேட்பீர்!

ஒன்றன்று பலகுறைகள் உண்டு நீவிர்
உயர்தமிழர் யாவர்க்கும் காட்சி தந்து
நன்றொன்று செய்வீரெல், நன்றாம என்றார்
நகைஒன்று புரிந்தரசர்க்கரசன் அந்தப்
பன்றியுண்டார் கண்காணத் தமிழர் கட்குப்
பரிவொன்று காட்டுவது கடமை என்றான்
என்றென்றும் வாழியவே வேந்தே என்றே
இரும்'' என்று சென்றார்கள் துறந்த மேலோர்.




( 55 )




( 60 )




( 65 )





( 70 )




( 75 )

இயல் 74

வண்கொங்கர் ஆடல்கண்டும் திறைகள் பெற்றும்
மன்னன்தான் விரல்அசைக்க வீரர் சில்லோர்
கண்டனர்போய்ப் பறையறைந்தார் சங்கெடு த்தார்
கணம்ஒன்றில் வரிசையுற நாற்ப டைகள்
உண்டென்றார் போல்நின்றார். மன்னர் மன்னன்
ஒருதேரில் ஏறினான் ஏறு கென்றான்
பண்டுமுதல் கொண்டுதமிழ் மறவர் பாடும்
படைப்பாட்டில் நடைபோட்டார் வீரர் யாரும்.

தனதத்தத் தனதானா தான தந்தா
தனதத்தத் தனதானா தான தந்தா
தமிழர்க்குப் பகையானோர் வாழ்வ தெங்கே?
தலையற்றுக் குவியாதோ ஊது சங்கே!
எமைநந்திப் பிழையாதார் போவ தெங்கே,?
இடருற்றுக் கெடுவாரே ஊது சங்கே!
குமிழொத்துத் திரிவோரே வாழ்வும் ஒன்றோ?
பெருவெற்றிக் குடையாரே சேரர் அன்றோ?
தமிழ்வெற்றித் திருநாளே வாழ்க என்றே
திசைஎட்டப் படிமீதே ஊது சங்கே.!

கங்கையாற் றைக்கடந்தார் நண்பர் ஆன
கன்னயநூற் றுவர்கொணர்ந்த ஓட மேறி
அங்குள்ள பகைநாட்டிற் புகுந்து நன்றே
அமைத்தஒரு பாசறையில் இனிதிருந்தார்
தங்கியது கேட்டார்கள்; ஆரியர்க்குத்
தலைவராம் கனகவிச யர்கள், மன்னர்
'இங்கிருந்தத் தமிழர்களின் ஆற்றல் காண்போம்'
என்றாராம் தமிழரசும் 'நன்றென்றானா'ம்.





( 80 )





( 85 )




( 90 )





( 95 )




( 100 )

இயல் 75

ஆரியநாட் டரசர்களின் படைவீ ரர்கள்
கனகவிச யர்படையோ டொன்று சேர்ந்து
போரிடுவார் திரைகடலே போன்றார். சங்கும்
போர்ப்பறையும் முழங்கினார் முழக்கம் கேட்டே
ஆரியரா? தமிழர்களா? வைய கத்தை
ஆளுவோர் யார்என்றார் பன்னாட் டாரும்?
சேரர்படை புகக்கண்டார் தேரினின்றே
சிங்கமொன்று புகக்கண்டார் பகைப்படைக்குள்!

அவர்வாளும் தமிழ்மறவர் எடுத்த வாளும்
அவர்வீச்சும் தமிழ்மறவர் விரைந்த வீச்சும்
தவறொன்றும் வீழ்ந்ததலை நூறும் ஆகச்
சாய்குருதி மிதப்பனவாம் பிணம லைகள்!
இவர் எங்கே ஓடுகின்றார் கூட்டத் தோடே
எனத்தொடர்வார் வில்லேந்து தமிழர் ஓர்பால்;
'அவன்கனகன் அவன்விசயன்' என்பார் ஓர்பால்!
அரைநாளில் தமிழ்வெற்றித் திருநாள் கண்டார்.

ஓரைம்பான் இருமன்னர் உருவம் மாற்றி
ஒளிந்தவரும் சடைமுடிகள் ஒட்டி னோரும்
கூரம்பால் மூகம்கீறி அம்மா பிச்சை
கொடுப்பீரெனத் திரிந்தோரும் ஆனாரமன்னன்
நேரந்தக் கனகவிசயர்கள் கட்டி
நிறுத்தப்பட்டார்பல்லோர் துரத்தப் பட்டார்
''ஆரங்கே வில்லவன்கோதை கற்கொள்க!
கங்கைநீ ராட்டுவிழா முடிக்க'' என்றான்.




( 105 )





( 110 )




( 115)




( 120 )




( 125 )

இயல் 76

கனகனையும் விசயனையும் கல்சுமக்கக்
கையோடு கூட்டியே தமிழ வீரர்
அனைவரொடும் இமயமலை தனைஅடைந்தான்
அறிவமைச்சன் வில்லவன் கோதைதான் அங்கு
வினைமுடித்தே அவர்தலையில் கல்லை ஏற்றி
வீரரையும் உதவிக்குக் கங்கை ஆட்டிப்
புனைவில்லும் பொற்கயலும் புலியும் வானின்
பூண்என்ன நீள்கொடிகள் மின்னைச் செய்ய;

சங்கொலிக்கப் பறைமுழங்க ஆடல் பாடல்
கதையுரைக்கப் பரியானை தேர்கா லாட்கள்
பொங்குகடல் நடந்ததெனப் புகல வையப்
புகழ்சுமந்த வில்லவன்கோ தைதன் னோடும்
எங்குள்ளோ ரும்காணக் கற்சு மந்தே
என்செய்வோம் எனக்கனக விசயர் கூற
அங்கங்கு நின்றுவரும் ஊர்வலத்தில்
''ஆரியம்தோற் றது,தமிழே வென்றதெ'ன்பார்!

பாசறையில் குட்டுவன்தான் வடக்கில் வாழும்
பைந்தமிழ்ப் பெரியோரை வரவேற் றுப்பின்
பேசுகையில் தமிழ்நெறியின் பெற்றி கூறிப்
பிறர்போக்கின் சிறுமையினை எடுத்துக் காட்டி
வீசுதலை விழும்போதும் தமிழர் நாக்கு
வெல்கதமிழ் எனவேண்டும் எனவு ணர்த்தி
ஆசையுடன் வருகின்ற ஊர்வலத்தை
அருகோடி வரவேற்று வாழ்க என்றான்.





( 130 )





( 135 )




( 140 )





( 145 )

இயல் 77

வஞ்சிக்கு வரவில்லை என்ம ணாளன்!
மங்கைக்கு முகம்காட்ட எண்ண வில்லை
கஞ்சிக்கு வழியில்லான் தேளுங் கொட்டக்
கலங்குகையில் கடன்காரன் வந்தாற் போல்என்
நெஞ்சுக்கு நெருப்பாக வந்த வட்ட
நிலவுக்குத் தப்புவதும் எளிதோ தோழி?
பஞ்சுக்கு நிகரான என்உ டம்பு
பற்றிற்றே எனத்துடித்தாள் இளங்கோ வேண்மாள்.

மாலைதான் ஏன்அனுப்பும் தென்றற் காற்றை?
மல்லிகைதான் ஏன்அனுப்பும் நறும ணத்தை?
சோலைதான் ஏன்அனுப்பும் குயிலின் பண்ணை?
தொல்கடல்தான் ஏன்அனுப்பும் பெருமு ழக்கை?
ஓலைதான் வருகின்றேன் எனென் அன்பன்
ஒன்றுதான் வரவிட்டால் அவை நடத்தும்
வேலைதான் செல்லுவதும் உண்டோ தோழி
விளம்பாயோ எனஅழுதாள் இளங்கோ வேண்மாள்.

மண்ணுக்கு நன்மணிகள் வேண்டும்; வைய
மகளிர்க்குக் கற்பொழுக்கம் வேண்டும்; காணும்
விண்ணுக்கு வெண்ணிலவு வேண்டும்; வாழும்
வீட்டிற்குச் சுடர்விளக்கு வேண்டும்; நல்ல
பண்ணுக்கு மூன்றுதமிழ் வேண்டும்; நீர்சூழ்
பாருக்கு நல்லோர்கள் வேண்டும்; என்றன்
கண்ணுக்குக் கண்ணாளன் சேரர் தோன்றல்
கட்டாயம் வேண்டுமென்றாள் இளங்கோ வேண்மாள்.

( 150 )




( 155 )





( 160 )




( 165 )





( 170 )

இயல் 78

யார்வந்து கேட்டாலும் இல்லை என்னா
இசைவந்த குடிவந்த பெண்ணே இந்த
ஊர்வந்தும் தெருவெல்லாம் திரும்பி வந்தும்
ஊர்வலத்தை முடித்துவரும் கண்ணொப் பாரின்
தேர்வந்த தாஎன்று பார்போய்; வந்தால்
திரும்பிவந்து சொல்லேடி என்றால், என்றன்
நீர்வந்த கண்துடைத்து நிற்கின் றாயே
நெஞ்சுவந்ததாஎன்றாள் இளங்கோ வேண்மாள்.

வாராத நேரமெலாம் துன்ப நேரம்
வாராயே கண்ணாட்டி என்றன் தோளைச்
சேராத நேரமெல்லாம் உயிரி னுள்ளே
தீராத நோயொன்று திருகும் நேரம்
பாராயோ அன்னவரை வழிமேற் சென்று?
பற்றித்தான் வாராயோ பற்றி லாரை?
ஆராயா திருந்தாயே என்நி லைதான்
அழிவுநிலை என்றுரைத்தாள் இளங்கோ வேண்மாள்.

மிகப்பூவை பாடியதால் கூட்டில் ஓடி
மெல்லிஎனைக் கொல்வதுமுன் கருத்தா என்றே
புகப்பூவை நிகர்கைகள் நீட்டும் போதில்
புதுநிலவை முகின்மறைத்த தெனப்பின் நின்று
முகப்பூவை இருகைப்பூவால்மறைத்தே
முந்துபுகழ்க் குட்டுவன்தான் 'நான்யார்' என்றான்.
அகப்பூவில் வீற்றிருப்பார் என்றார் வேண்மாள்.
அல்லிப்பூ இதழ்முத்தம் ஐந்து வைத்தான்.

( 175 )




( 180 )




( 185 )





( 190 )




( 195 )

இயல் 79

பூம்புகார் பூவைக்குப் புகழெடுக்கப்
போனீரே பின்னடந்த தென்ன என்று
பாம்புகார் சடைக்குழலி கேட்டாள் ஆங்கே
படைச்செயலும் நடப்பெவையும் விரித்து ரைத்து
வேம்புதா ராத்திபுனை தமிழ்வேந் தர்க்கும்
விற்சுமந்த பகைவர்தாம் கற்சு மந்து
தாம்புகார் எனினும்அவர் புகுந்த செய்தி
சாற்றுகென ஆள்விட்டேன் என்றான் மன்னன்.

பீடுறுகண் ணகிகோவ லன்தந் தைமார்
பெருஞ்சிறப்புத் துறவடைந்தார்! இருவர் தாய்மார்
நீடுமகிழ் சிறப்புலகைச் சேர்ந்திட் டாராம்
நெடியமுடிச் சோழனவன் ஆட்சி நன்றாம்
மாடலனே இவ்வாறு சொன்னான் என்றான்
''வாழியவே நம்சீர்த்தி வருக வேநீர்
ஆடிடுவீர் அமுதுண்பீர்'' என்று மன்னி
அழைத்திட்டாள் மன்னவனும் நன்றே என்றான்.



( 200 )




( 205 )





( 210 )

இயல் 80

அரசியல்மா மன்றத்தில் குட்டுவன்தான்
அமர்ந்திருக்க நீலன்முதல் மெய்காப் பாளர்
வரலுற்றார்; வாழ்த்துரைத்துச் சொல்ல லுற்றார்;
மன்னவரே பாண்டியர்பால் சோழ னார்பால்
வரிசையுற வடநாட்டுச் செலவும், கல்லை
மன்னராம் கனகவிசயர்சுமந்து
வருமாறு புரிந்ததுவும் சொன்னோம் கேட்ட
மன்னர்அவர் சொன்னவுரை நன்றன் றென்றார்.

எம்மிடத்தில் தோற்றவரை மீண்டும் போருக்கு
இழுத்ததுவே சிறுமையாம் சேர வேந்தர்
தம்மிடத்தும் அவர் தோற்றார் எனில் வியப்போ!
தலைமறையப் புறங்காட்டி ஓடி னோரைச்
சும்மாடு தலைவைத்துக ல்லை ஏற்றிச்
சுமந்துவரச் செய்ததுவும் பெருமை தானோ?
நம்மிடத்தில் கனகவிசயர்கள் என்ற
நாய்க்குட்டிக் கதையுரைக்க வேண்டாம் என்றார்.

மெய்காப்பார் இதுசொல்லக் கேட்ட வேந்தன்
''மீன்கொடியார் புலிக்கொடியர் பொறாமை கொண்டார்;
துய்யவரே வறுமைபெறச் செய்த ஆட்சி
துடுக்காகக் கோவலனைக் கொன்ற ஆட்சி
செய்தவர்கள், கண்ணகிக்கும் கோவலற்கும்
செயத்தக்க செய்தஎனை இகழ்ந்தாரென்றால்
வெய்யவர்க்கு வெய்யவரே புகழ்ச்சி பாட
வேண்டும் போலும்காணீர்'' என்று சொன்னான்.


( 215 )




( 220 )





( 225 )





( 230 )




( 235 )