பக்கம் எண் :

கண்ணகி புரட்சிக் காப்பியம்

இயல் 81

கல்லினில்அக் கண்ணகியைக் கற்பின் தாயைக்
கண்ணுறுதல் வேண்டுநாம்! கற்றச் சர்பால்
சொல்லிடுக! விரைந்துபணி முடிக்கச் செய்க!
துய்தான கல்நாட்டு விழாநாள் தன்னை
எல்லார்க்கும் தெரிவிக்க வருவார்க் கெல்லாம்
எல்லாமும் முன்னேற்பா டாக்கி வைக்க;
வில்லவனே கனகவிசயர்கள் தம்மை
விரைவினிலே வரவழைக்க என்றான் மன்னன்.

''வந்துநின்ற இருவரையும் வேந்தன் நோக்கி
மலைஇருந்த இடமெல்லாம் கடலும் ஆகும்.
பொந்துநின்ற இடமெல்லாம் மலையும் ஆகும
பொழில்நின்ற இடமெல்லாம் பாலை யாகும்;
வெந்துநின்ற இடமெல்லாம் நகரும் ஆகும்.
விரிந்துநின்ற இடஞ்சுருங்கல் ஆகும்; ஆனால்
செந்தமிழின் உண்மைநிலை எந்த நாளும்
சிறிதேனும் மாறாது நினைவில் வைக்க.

தேவரென்றும் உவப்பென்றும் ஆடு வெட்டும்
சிறுசெயலைத் தமிழரெல்லாம் வெறுக்கின் றார்கள்.
ஆவலுற்றே ஒருமகளைப் பலர்ம ணத்தல்
அறம்என்னும் தீயாரை உமிழ்கின் றார்கள்.
யாவருமே பிறப்பினிலே நிகர்என் பாரை
எதிர்ப்பாரைத் தமிழரெலாம் எதிர்க்கின்றார்கள
காவாத கொலைஞனுக்கும் கழுவாய் பேசும்
கயவர்களைக் கழுவேற்றச் சொல்வார்'' என்றான





( 5 )





( 10 )




( 15 )





( 20 )

இயல் 82

திருடித்தான் வாழ்ந்திடுதல் வேண்டும் என்றால்
செத்துத்தான் புகழ்காப்பேன் என்று சொல்வோன்.
இருள்தீர்ந்த பழந்தமிழன்!. ஆரி யன்தான்
இடரென்றால் திருடுவதும் நன்றே என்போன்;
குருடகல வடக்கரெலாம் மருந்துண்டு அணாமல்
குக்கலெனத் தமிழர்களைக் குரைத்தல் நன்றோ!
துகள்தீர்க என்றுநான் பணித்த தாகச்
சொல்லுகபோய் திருந்தாஉம் இனத்த வர்க்கே.

அருந்தமிழ்நான் மறைகண்டு மறைகண் டீர்கள்
அறம்பொருளின் பம்வீடு காணு கில்லீர்!
செந்தமிழர் துணைமறைகள் செய்தும் தந்தார்
சிறிதேனும் ஒழுக்கநெறி கண்டீர் இல்லீர்
எந்தமிழை எம்மருமை இலக்கி யத்தை
ஈடழித்தே எம்மன்னை நாட்டைப் பற்றிக்
குந்தியுண்ணத் திட்டமிட்டீர் அதன்முன் உங்கள்
குதிகாலைக் காத்துக்கொள் வீர்கள் என்றான்.

புறங்காட்டி ஓடிடவே பலநாட் டின்கண்
புலிகளையும் எலிகளே ஆக்கி எங்கள்
திறங்காட்டி ஆளுவதோர் அறமும் காட்டித்
திரும்பினோம் அல்லால்எம் கொடியை அங்கே
நிறங்காட்டச் செய்தோமா? மக்கள் செல்வ
நிழல்காட்ட ஒதுங்கியதும் உண்டா? தீய
குறுங்காட்டு நரிகளே செல்க'' என்றான்
கும்பிட்டுப் போனார்கள் ஆரியர்கள்.

>

( 25 )




( 30 )





( 35 )




( 40 )





( 45 )

இயல் 83

உலாவந்தும் உற்றாரைக் கண்டு வந்தும்
கண்ணகிக்கே இயற்றுகின்ற உருவம், கோயில்
எலாமுடியப் பணிமுடியும் ஊக்கம் தந்தும்
இல்வந்தே இன்னடிசில் முடித்தும் நல்ல
பலாவாழை மாஆன முக்க னிக்குட்
படாததாம் பெரியசுவை வேண்மாள் தன்னை
விலாஅணைய அணைத்தபடி நிலாமுற்றத்தில்
விடாக்காதற் சொற்பொழிவை நடாத்தென்றான்மன்

''வெண்ணிலவு பேசிக்கொண் டேஇ ருக்கும்,
விரிவானம் பேசாமல் இருக்கும், மேலும்
வெண்ணிலவு உள்ளன்பு நிறைந்ததன்று
விரிவானே அன்புடையதாகும்'' என்றாள
''உண்ணிறைந்த காதலிலே ஆணும் பெண்ணும்
ஒன்றேயாம்'' எனவேந்தன் உரைத்தான ''இல்லை
பெண்ணுள்ளம் நிறைகாதற் பேழை'' என்று
பிளந்தபாளைச்சிரிப்புக்காரி சொன்னாள

பேரின்பத் துறையினிலே காத லிக்குப்
பேச்சில்லை என்றுரைப்பார் நன்று! பெண்ணே,
பாரினிலே இன்பமெனல் ஆட வர்பால்
பாவையரும் பாவையர்ஆ டவர்தம் பாலும்
ஆருவதொன் றேதானா? என்று கேட்டான்.
ஐந்தடுக்கு மாளிகையி னின்று கீழே
பார்வையினைப் போகவிட்ட இளங்கோ வேண்மாள்
பச்சைமயில் இவளொருத்தி யார்யார் என்றாள்


( 50 )




( 55 )




( 60 )





( 65 )




( 70 )

இயல் 84

வேண்மாளும் குட்டுவனும் உரும றைத்தே
விரைந்துசெலும் அவ்வொருத்தி யைத்தொ டர்ந்தார்;
தூண்மாளும் வேலைஒரு புறத்தே! ஓவச்
சுவர்எழும்பும் மற்றொருபால்! கோயில் தன்னைக்
காண்பாரின் உளம்பறிப்ப தாம்மேற் கட்டுக்
கற்றச்சர் இன்கனவை உண்மை ஆக்கும்
வேண்மாளும் குட்டுவனும் அவற்றைத் தாண்டி
விள்ளரிதாம் ஒருவிடுதி உள்ளே சென்றார

கண்ணகிக்குக் கல்லுருவம் அமைப்பான் அங்கே
காலைபோம், நடுப்பகல்போம், மாலை யும்போம்,
எண்ணத்தை மீட்கவில்லை; கண்ணும் கையும்
எடுத்ததில்லை வேறுபுறம்! மனைவி யான
வண்ணமயில் எதிர்வந்தாள் பார்க்க வில்லை;
வாய்ப்பாட்டும் கேட்கவில்லை, ஆடலானாள்
உண்ணின்ற உயிரிருத்தும் உணர்வில்லாமல்
ஒழிந்ததுண்டோ எனமீண்டும் ஆடு கின்றாள்;

பண்ணடிக்கும் முழவடிக்கும் தக்க தாகப்
பச்சைமயில் ஆடிக்கொண் டேஇ ருக்க
விண்ணடிக்கும் மழைக்கசையாக் குன்றம் போல
விழிதிருப்பாக் கற்றச்சன் பணியே ஆனான்
கண்ணடித்தாள் பச்சைமயில் முகம்அ டித்துக்
கண்ணடித்துத்துக் கொண்டிருந்தான் கல்றச்சன்தான்
மண்ணடித்துப் போயிற்றோ காதல் என்றாள்;
மனமடித்துப் போயிற்றுக் கலைதான் என்றான்,



( 75 )




( 80 )





( 85 )





( 90 )




( 95 )

இயல் 85

அலைமனது காதலின்பம் தனைத்தள் ளாதே!
அவ்வின்பம் மறப்பதுண்டோ என்றாள் மஞ்ஞை!
கலைஇன்பம் ஒன்றுதான் கலைஞர்க் கின்பம்
கவிஇன்பம் கவிஞனுக்கே ஆனாற் போலே?
தலைவனுமே தலைவியுமே பிரியும் போது
காதலின்பம் அவர்தவிர்ந்தும் வாழ்தல் கூடும்
கலையுமொரு கலைஞனுமோ பிரிதல் இல்லை.
கலைஞன்வாழ் நாளெல்லாம் இன்ப நாளே!

கலைஞனுக்கு மனைவிதோள் ஓய்வு மெத்தை!
கைக்காத இன்பமிந்தக் கருங்கல் என்று
தலைகுனிந்தான் சிற்றுளியை எடுத்தான் கல்லின்
தையலும்தன் கண்ணுமாய்ப் பணிதொ டர்ந்தான்
வலைவீசும் விழியாளே என்கேள் விக்கு
மறுமொழியும் இதுதானா என்றான். மன்னி
மலைபேச வைக்கின்றான் கல்தச்சசன்தான்
வந்துநிலை யறிந்ததெனக் கின்பம் என்றாள்.

கற்றச்சுக் கலைஞனே வாழ்க உன்றன்
கைத்திறத்தை விரைவினிலே முடித்து வைக்க
மற்றந்தப் பெருங்கோயில் பணியும் தீர்க்க
மன்னிஇவள் முடிந்துவரும் கலைகா ணற்கே
உற்றதோர் ஆசையினை என்ன சொல்வேன்
உயிர்வாழ்ந்தாள் எனில்இந்தக் கண்ண கிக்குக்
கற்காணும் விழாமுடிக்க வாழ்ந்தாள் என்று
காவலன்சென் னான்அரசியோடு சென்றான




( 100 )





( 105 )





( 110 )




( 115 )




( 120 )

இயல் 86

நாட்டுக்கு முரசறைந்தார் உலகுக் கெல்லாம்
நல்லோலை செல்லவிட்டார் மகளிர் கற்பின்
காட்டுக்குக் கண்ணகியின் கல்நாட்டென்றார்;
கண்டவரும் கேட்டவரும் நமது வஞ்சி
நாட்டுக்கு வரஇன்றே கிளம்பி னார்-உள்
நாட்டாரும் ஆயத்தம் ஆகின் றார்கள்
வீட்டுக்குவீ டிந்த மகிழ்ச்சிப் பேச்சாம்
விளையாட்டுப் பாட்டும்கண்ணகியின் பாட்டே.!

அயல்நாட்டு மன்னவரும் பிறகு வந்தால்
அமைவதற்கும் ஆடுதற்கும் பாடு தற்கும்
துயில்வதற்கும் குளிப்பதற்கும் வெயில்ப டாமல்
சுற்றுதற்கும் மற்றெதற்கும் தகுதி யான
இயலமைந்த கருவிகளும் பொருளும் செய்தார்
இல்லையெனச் சொல்லாமல் எல்லாம் வைத்தார்
வயலெல்லாம் வழிநாளில் புத்து ருக்கே
வரப்பெல்லாம் புத்துருக்கின் மிடாவி ளிம்பே.

செங்கதிரும் வேறுவழி செல்ல வேண்டும்
செல்லாக்கால் சோற்றுமலை இடிக்கும் மற்றும்
இங்குள்ள பெருங்குளத்து நீர்இ றைத்தே
எம்மருங்கும் கரையெடுத்துத் தயிரைத் தேக்கித்
தங்கமலை மாடெல்லாம் தரும்பால் தேக்கத்
தடங்கடலை இடங்கேட்க வேண்டு மன்றோ
செங்குட்டு வன்பாலிவ் வாறு சொன்னார்
செயல்துறையின் மேலோர்கள் இன்னும் சொல்வார்.





( 125 )





( 130 )




( 135)





( 140 )

இயல் 87

காய்கறிகள் தோட்டங்கள் நூறு போதும்
கமழ்ஏலம் முதலியன ஐந்து வீடு
வாய்படுமுன் குடல்இனிக்கும் கரும்பின் கட்டி
வண்டிஐ யாயிரமே முன்ஏற் பாடு.
வேய்பிளந்த பெருமத்து விளைத்த வெண்ணெய்
வெற்பளவு! நல்லெண்ணெய்க் குடம்இ லக்கம்!
நோய்தீர்ந்த இளந்தேங்காய் உரிப்பார் ஓர்பால்
நூறுவண்டி காத்திருக்கும் மட்டை ஏற்ற.

பருப்பெல்லாம் இருப்பாக்கி மாஇ டித்துப்
பையாக்கி நெல்லெலாம் அரிசி ஆக்கி,
விருப்பாக்க விருந்தினரைக் கடுகும் ஈர்த்து
வீணாக்கி டாதுவெயிற் காய்ச்ச லாக்கி
நெருப்பாக்கி டாதுளுத்தம் பயற்றை எல்லாம்
நெடியாக்கும் பொன்வருவல் ஆக்கித், தாளிப்
புரித்தான எல்லாமும் தூய்மை யாக்கி
உயர்ந்தபாக் கியமாக்கி வைத்தார் என்றார்.

குளிப்பார்க்கு நறும்பொடிகள. தூங்கு தற்கும்
குடிப்பதற்கும் சுவைநீரே நீட்டு தற்கும்
விளிப்பார்க்கே இதோவந்தேன் என்பதற்கும்
வெந்நீரே கேட்பார்க்குத் தருவ தற்கும்
வெளுத்தாடை தரக்கேட்டால் வெளுப்ப தற்கும்
வியர்வென்றால் அயராமல் விசிறு தற்கும்
ஒளிப்பின்றி ஒருவருக்கோர் ஆள்வி ழுக்காடு
ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்றார்.

( 145 )




( 150 )





( 155 )




( 160 )





( 165 )

இயல் 88

மேல்நோக்கும் கீழ்த்திசையாம் கோவில் ஒன்றின்
வெளிக்கதவு திறந்திடவும் பரிதி தோன்றும்!
ஆனஇமைக் கதவுதிறந் திடவும் கண்கள்
அனைவோர்க்கும் வெளித்தோன்றும்! சோர்வே என்ற
ஊனநெடுங்க கதவுதிறந் திடவும் யார்க்கும்
உணர்வுதோன் றும்!தோன்ற உலகோர் வாழ்த்த
வானுயர்ந்த கண்ணகியின் பெரிய கோயில்
மணிக்கதவு திறந்திடவும் கற்புத் தோன்றும்.

திறல்வேந்தன் குட்டுவன்அப் பெரிய கோயில்
திருக்கதவு திறக்கவைத்துக் கேளீர் கேளீர்
பிறர்நெஞ்சு புகாள்;புகார் பெற்ற செல்வம்
பிழைஒன்றும் அறியானைத் தான்வாழ் வுக்கே
உறவானைப் பழிகூறிக் கொன்றோன் நாட்டோடு
ஒருபுரட்சித் தீயிவிட்டாள்: ஊன்உ டம்பை
அறநீக்கிக் கற்பினாற் புகழடைந்தாள்
அவள்இவளே உலகீரே காண்மின் என்றான

வாழியவே கண்ணகியின் சீர்த்தி என்று
வாழ்த்தினார் நாட்டாரும் வந்தோர் யாரும்
ஆழிசூழ் உலகத்து மகளிர்க் கெல்லாம்
அகமுடையான் பேர்காத்தல் அறமாம் என்னும்
வாழுநெறி காட்டினாள் கற்பின் அன்னை,!
வாழியவே எனவாழ்த்தி நின்றாள் வேண்மாள்;
வாழியவே தமிழ்என்றார்! மகிழ்ந்தாராகி
மலர்மாரி இசைமாரி பெய்திருந்தார்.


( 170 )




( 175 )





( 180 )





( 185 )




( 190 )

இயல் 89

மாதரியும் ஐயையும் தேவந்தி தானும்
மற்றவரும் கண்ணகியைத் தேடித் தேடி
ஈதறிவோம் என்றவரின் வாய்ச்சொல் கேட்டே
இங்குவந்தோம் மன்னவரே மன்னி யாரே!
ஏதுற்றோம் யாம்பொறோம் என்றே ஓடி
எதிர்நின்ற கண்ணகியின் அடியில் வீழ்ந்து
தீதுற்றாய் என்றலைந்தோம் எனினும் அன்னாய்
திருவுற்றாய் புகழான உருவம் உற்றாய்!

என்றழுதார் திருமுகம்பார்த் தேங்கி ஏங்கி!
எழில்மன்னன் அன்னவர்பால் பலவும் கேட்டே
நன்றான கோவலனின் கூத்தி யான
நங்கைநிலை ஏதென்றான். அவர்கள் "வேந்தே
முன்தானை கோவலர்க்கு விரித்த தன்றி
முகமொன்றும் அறியாத மாத விக்கே
ஒன்றான மகள்மணிமே கலையும் நெஞ்சம்
ஒன்றானாள் துறவில்தன் இளமை பெய்தாள்.

எனக்கேட்ட மன்னவனும் வியப்புற் றானாய்
எதிரிலுறு கண்ணகியை நோக்கி நின்றான்;
புனைதாரன் இலங்கைக்கோன் கயவா கென்பான்
பூண்முடிஆ ரியவேந்தர் குடகக் கொங்கர்
மனமுயர்மா னலவேந்தன் வணங்கி வாழ்த்தி
வஞ்சியர்க்கு வாழ்வளிக்க வந்த அன்னாய்
இனிதாக எம்நகர்க்கும் எழுந்தருள்க
எனச்சொல்லித் திருமுகத்தில் விழிவைத்தார்கள்.



( 195 )




( 200 )





( 205 )





( 210 )




( 215 )

இயல் 90

நின்றிருந்த கோலத்தைப் பல்லோர் தாமும்
நெடுநேரம் பார்த்தபடி இருந்தார்; நெஞ்சம்
ஒன்றொன்றும் கேட்டதனைப் பெற்று மீளும்
உதவமறுத் தாள்என்ப தொன்று மில்லை.
இன்றொன்றை நாமளித்தால் நாளைக் கொன்றை
எமக்களிப்பாள் எனும்மடமை எழவே இல்லை.
குன்றுதரும் அருவிபோல் அழகு வெள்ளம்
கொழிப்பனவாம் உறுப்புக்கள் யாவும் ஆங்கே.

பேசிக்கொண்டேயிருக்கும் இரண்டிதழ்கள்!
பீரிட்டுக் கொண்டிருக்கும் அருளைக் கண்கள்!
வீசிக்கொண் டேயிருக்கும் ஒளியை நெற்றி!
விளைத்துக்கெண் டேயிருக்கும் நகைம கிழ்வைக்!
கூசிக்கொண் டேயிருக்கும் மகளிர்கொல்லாம்
கொடுத்துக் கொண்டேயிருக்கும் புருவம் வீரம்!
ஏசிக்கொண்டேயிருக்கும் ஆரியர்க்கே
இயம்புவது தமிழறத்தை முழுமைத் தோற்றம்.

வில்லவன்கோ தைதன்பால் ஆட்சி நல்கி
வேண்மாளோ டிங்கிருந்து மக்கள் தொண்டைப்
புல்லுகஎன் றருளினாள் அன்னை என்று
புதுக்கோயில் மனைவியுடன் வாழ்ந்தான் மன்னன்
செல்லுமுன் மன்னனிடம் இளைய ஐயை
முதலானோர் செப்பினார் எங்கள் அன்னை
நல்லகத்தில் துணையிருப்பேன் என்றாள் என்று
நடந்தார்கள் ஊர்நோக்கி மகிழ்ச்சி யோடே!




( 220 )




( 225 )




( 230 )





( 235 )




( 240 )