பக்கம் எண் :

கண்ணகி புரட்சிக் காப்பியம்

இயல் 91

வஞ்சியிலே ஒருபடிவம் உலக மக்கள்
மனத்திலெலாம் ஒழுக்கவர லாறு வைத்த
எம்சிறந்த தமிழ்வேந்தே வாழ்க நீவிர்!
எம்நாடும் கற்பரசி அடியில் வாழத்
தம்சிறந்த துணைவேண்டும் இதனைச் செய்த
தலைசிறந்த கலைவல்லோர் கற்றச் சர்தாம்
வஞ்சியினை அங்கங்கு வைப்பார்! நீவிர்
வாழ்ந்தீர்போல் யாமெல்லாம் வாழ்வோம் என்றே

சீரிலங்கைக் கயவாகு செப்பி நின்றான்;
சீரியதே அஃதென்றார் உடனிருந்தோர்.
பாரிலங்கு குட்டுவனும் நன்றே மற்றிப்
படிவத்தால் நீவிர்உற்ற தென்ன என்றான்;
ஆரிலங்கைக் கேதுபுகல் என்றேன் அன்னை
அஞ்சலென்ற தன்வலக்கை தூக்கி நின்றாள்;
நேரிலங்கு நின்றிருந்தோள் நெஞ்சில் வந்தாள்
நீடூழி வாழ்கஎன வாய்மலர்ந்தாள்;

என்றுபல கயவாகு சொல்ல மற்றும்
இருந்திட்ட ஆரியனும் கல்தச் சார்தாம்
அன்னையினாள் நெஞ்சத்தைத் தன்நெஞ் சாக்கி
அதன்பின்னர் அவளழகைக் கல்லில் தேக்கித்
தின்னுமுன்னே சுவையூட்டும் தேன்கு ழல்போல்
திரும்புமுன்னே அறிவூட்டி அழகைக் காட்டும்
இந்நிலத்துக் கொருபடிவம் ஆக்கிப் பண்டே
இருந்ததமிழ்க் கலைக்குமுடி கவித்தார் என்றான்.





( 5 )





( 10 )




( 15 )





( 20 )

இயல் 92

வந்தாரின் மனமலரிற் போனா ளேனும்
வஞ்சியினை வஞ்சியா ளாயி ருந்தாள்;
இந்தாரும் எனவீடெ லாம்அ ழைக்க
ஏன்காணும் என்றுள்நாட்டாரும் சென்றார்.
முந்தாநாள் காணடித்த சின்ன பிள்ளை
முக்கூட்டுத் தெருவிலொரு வீட்டினின்று
செந்தாழை தான்பெற்று வீடு சேர்ந்தாள்
செவிடனைப்போய் வழிகேட்டுச் சிரித்தான் ஓர்ஆள்

தங்கஇடம் தந்தானின் தங்கை கொண்டான்
தங்கைகள் கூப்பிவிடை கேட்கும் போதில்
இங்கையா மணம்நடக்க வேண்டும் என்ன
இருக்கின்றோம் எனஉரைத்துப் போகும் போதில்
எங்கையா போகின்றீர் என்று கேட்க
ஏங்கையா எங்கள்மணம் ஆங்கென்றார்கள்
தங்கையா ஒப்பினாள், என்றான் தங்கை
தங்கையா எனச்சென்றாள் தங்காளாகி.

கருவூரின் ஒருமுதியோள் விருந்திற் பெற்ற
கனிவாழைத் தார்பலாச் சுளைகள் மற்றும்
ஒருநூறு கொய்யாமா முப்பத் தைந்தும்
ஒன்றாகக் கட்டி, அதைப் பேரர்க் கென்றே
இருகையால் தூக்குவாள் முடிய வில்லை;
இருக்கவிட்டுப் போகமனம் வரவு மில்லை;
பெருங்குரங்கு பத்துவந்து விழுங்கித் தீர்த்தும்
பின்னும்உண்டோ எனக்கேட்கும் கிழக்குரங்கை

( 25 )




( 30 )





( 35 )




( 40 )





( 45 )

இயல் 93

கண்ணில்விழா நேரமில்லை உருவம்! வாழ்த்துக்
காதில்விழா நேரமில்லை நாள்க டந்தும்
எண்ணில்விழாக் காணவந்தோர் தம்ஊர் நோக்கி
ஏகுவார் பன்னாளும் வாய்தி றந்து
கண்ணகியின் புகழ்வாழ்க என்று சொல்லக்
காதாரக் கேட்டுக்கேட் டங்கி ருந்த
வண்கிளையிற் பறவைகளும் அதையே சொல்லும்.
வான்பருந்தும் செந்தமிழாம் தேனைச் சிந்தும்.

பானைமுதற் செய்கின்ற குலாலர் தாமும்
பண்ணியங்கள் செய்கின்ற இல்லோர் தாமும்
யானைமுதற் செய்கின்ற வினைவல்லாரும்
இரும்புமுதல் வார்ப்படத்துக் கன்னார் தாமும்
தேனைமுதல் சிறிதெடுத்தே இதழ்கள் செய்தும்
சிரிப்புமுதற் செய்துபின் மூக்கும் காதும்
மானைநிகர் திருவிழியும் செய்து கற்பு
மணிசெய்து பின்தொட்ட பணிசெய்வார்கள்.

உழவுதொழில் வாணிகமே தச்சுக் கல்வி
உயர்வரைவே எனும்ஆறின் வகையின் வாழும்
பழங்குடியாம் தமிழரெல்லாம் இல்லந் தோறும்
பகல்தோறும் இரவுதொறும் காணு கின்ற
ஒழுகலா றுகள்தம்மிற் சிறப்பி லெல்லாம்
ஒண்டொடியாள் கண்ணகியே வந்து நிற்பாள்!
மழைதென்றல் பெண்குழந்தை தமிழ்நலத்தை
வாயூறி அடடாகண்ணகிதான் என்பார்.


( 50 )




( 55 )




( 60 )





( 65 )




( 70 )

இயல் 94

செந்தமிழ்நான் மறைமறைக்க, வையம் கேட்டால்
சிரிப்பதோர் ஆரியநான் மறையைச் செய்தோம்,
தந்ததிரு வள்ளுவன்நூல் மறைக்க நான்கு
சாதிசொல்லும் மனுநூலைச் செய்தோம். மற்றும்
எந்நூலும் தமிழ்நூலே எனல்ம றைக்க
இழிநூலாற் கலப்படத்தைச் செய்தோம்; இந்தக்
கல்நூலைக் கண்ணகியை மறைக்க இந்நாள்
காணும்நூல் எதுஎன்றார் ஆரியர்கள்.

"தமிழ்ஒழுக்க வேர்இருக்கும் வரைதமிழ்ச்சீர்
தடங்கிளையும் அடிமரமும் இருக்கும். இந்நாள்
தமிழ்ஒழுக்க வேரழிந்தால் தமிழர் வாழ்வு
தலைகவிழும எனும்முயற்சி கைகூடுங்கால்
அமைவுடைய நெடுஞ்செழியன் நான்கு சாதி
அறம்என்றான்; நாட்டோடும் அழியச் செய்தாள்;
தமிழரசி கண்ணகியைத் தொலைப்பதெந்நாள்
தமிற்கூடி ஆரியர்இவ்வாறு ரைத்தார்.

செம்பிலும், கல்லிலும் மஞ்சள் சாணி,
சேற்றிலும் எவனமைக்கும் உருவி னுக்கும்
நம்பெரியோர் ஆரியர்கள் மறையைக் கொண்டே
நல்லுயிர்ஏற்றுதல்வேண்டும் என்ற சட்டம்
பொய்ம்மைஎன் றாக்கியே கண்ண கிக்கும்
பொலிவுறவே உயிரமைத்தான் தமிழத் தச்சன்
நம்பொய்மை கற்கோட்டை தூளாயிற்று
நாளைநிலை என்என்றார் ஆரியர்கள்

>



( 75 )




( 80 )





( 85 )





( 90 )




( 95 )

இயல் 95

வாயழிகண் ணகிகற்பு! வைய மெல்லாம்!
வாழியசெந் தமிழ்மாண்பு! தமிழ கந்தான்
வாழிய!வா ழியதமிழர்! யாண்டும் நன்று
வாழுகின்ற தமிழரெலாம் தமிழர் ஆட்சி
ஆழ்கடல்சூழ் தமிழ்நிலத்தில் நிலவச் செய்தல்
அறம்என்று திறங்காட்டும் தோள்கள் வெல்க
வாழியவே புலி, கயல் வில் ஒருங்கியன்ற
மணிக்கொடிதான்! வாழ்கஅறம் வாழ்க நன்றே!



( 100 )