பக்கம் எண் :

தமிழ்

தமிழின் இனிமை

கனியிடை ஏறிய சுளையும் -- முற்றல்
கழையிடை ஏறிய சாறும்,
பனிமலர் ஏறிய தேனும், -- காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்;
நனிபசு பொழியும் பாலும் -- தென்னை
நல்கிய குளிரிள நீரும்,
இனியன என்பேன் எனினும், -- தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்!

பொழிலிடை வண்டின் ஒலியும் -- ஓடைப்
புனலிடை வாய்க்கும் கலியும்,
குழலிடை வாய்க்கும் இசையும், -- வீணை
கொட்டிடும் அமுதப் பண்ணும்,
குழவிகள் மழலைப் பேச்சும் -- பெண்கள்
கொஞ்சிடும் இதழின் வாய்ப்பும்,
விழைகுவனேனும், தமிழும் -- நானும்
மெய்யாய் உடலுயிர் கண்டீர்!

பயிலுறும் அண்ணன் தம்பி, -- அக்கம்
பக்கத்துறவின் முறையார்,
தயைமிக உடையாள் அன்னை -- என்னைச்
சந்ததம் மறவாத் தந்தை,
குயில்போல் பேசிடும் மனையாள், -- அன்பைப்
கொட்டி வளர்க்கும் பிள்ளை,
அயலவராகும் வண்ணம் -- தமிழ் என்
அறிவினில் உறைதல் கண்டீர் !

( 5 )

( 10 )
( 15 )

( 20 )
நீலச் சுடர்மணி வானம் -- ஆங்கே
நிறைக் குளிர்வெண்ணிலவாம்.
காலைப் பரிதியின் உதயம் -- ஆங்கே
கடல்மேல் எல்லாம் ஒளியாம்,
மாலைச் சுடரினில் மூழ்கும் -- நல்ல
மலைகளின் இன்பக் காட்சி
மேலென எழுதும் கவிஞர் -- தமிழின்
விந்தையை எழுதத் தரமோ?

செந்நெல் மாற்றிய சோறும் -- பசுநெய்
தேக்கிய கறியின் வகையும்,
தன்னிகர் தானியம் முதிரை, -- கட்டித்
தயிரோடு மிளகின் சாறும்,
நன்மதுரஞ்செய் கிழங்கு -- கானில்
நாவிலினி்த்திடும் அப்பம்,
உன்னை வளர்ப்பன தமிழா! --உயிரை
உணர்வை வளர்ப்பது தமிழே !
( 25 )
( 30 )

( 35 )
( 40 )
இன்பத் தமிழ்

தமிழுக்கும் அமுதென்று பேர் ! -- அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர் !
தமிழுக்கு நிலவென்றுபேர்! -- இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர் !
தமிழுக்கு மணமென்று பேர் ! -- இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர் !
தமிழுக்கு மதுவென்று பேர்! -- இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர் !

தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! -- இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல் !
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! -- இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன் !
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! -- இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள் !
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! -- இன்பத்
தமிழ் எங்கள் வலமிக்க உளமுற்ற தீ

( 45 )

( 50 )
( 55 )
தமிழ் உணவு

ஆற்றங் கரைதனிலே -- இருள்
அந்தியிலே குளிர் தந்த நிலாவினில்,
காற்றில் உட்கார்ந்திருந்தேன் -- வெய்யிற்
காலத்தின் தீமை இலாததினால் அங்கு
வீற்றிருந்தார் பலபேர் -- வந்து
மேல்விழும் தொல்லை மறந்திருந்தார்! பழச்
சாற்றுச் சுவைமொழியார் -- சிலர்
தங்கள் மணாளரின் அண்டையிருந்தனர்; (ஆற்றங்கரைதனிலே)

நாட்டின் நிலைபேசிப் -- பல
நண்பர்கள் கூடி இருந்தனர் ஓர் புறம்
ஓட்டம் பயின்றிடுவார் -- நல்ல
ஒன்பது பத்துப் பிராயம் அடைந்தவர்;
கோட்டைப் பவுன் உருக்கிச் செய்த
குத்துவிளக்கினைப் போன்ற குழந்தைகள்
ஆட்டநடை நடந்தே -- மண்ணை
அள்ளுவர் வீழுவர் அம்புலி வேண்டுவர்; (ஆற்றங்கரைதனிலே)

புனலும் நிலாவொளியும் -- அங்குப்
புதுமை செய்தே நெளிந்தோடும்! மரங்களில்
இனிது பறந்து பறந் -- தங்கும்
இங்கும் அடங்கிடும் பாடிய பறவைகள் !
தனிஒரு வெள்ளிக்கலம் -- சிந்தும்
தரளங்கள் போல்வன நிலவு நக்ஷத்திரம்!
புனையிருள் அந்திப் பெண்ணாள் -- ஒளி
போர்தத்துண்டோ எழில் பூத்ததுண்டோ அந்த (ஆற்றங்கரைதனிலே)

விந்தை உரைத்திடுவேன் -- அந்த
வேளையில் அங்கொரு வாள்விழி கொண்டவள்
முந்த ஓர் பாட்டுரைத்தாள் -- அது
முற்றும் தெலுங்கில் முடிந்து தொலைந்தது!
பிந்தி வடக்கினிலே -- மக்கள்
பேசிடும் பேச்சினில் பாட்டு நடத்தினள்
எந்தவிதம் சகிப்பேன்? -- கண்ட
இன்பம் அனைத்திலும் துன்பங்கள் சேர்ந்தன; (ஆற்றங்கரைதனிலே)
( 60 )


( 65 )
( 70 )


( 75 )
( 80 )


( 85 )
பொருளற்ற பாட்டுக்களை -- அங்குப்
புத்தமுதென்றனர்; கைத்தாளமிட்டனர்;
இருளுக்குள் சித்திரத்தின் -- திறன்
ஏற்படுமோ இன்பம் வாய்த்திடக்கூடமோ?
உருவற்றுப் போனதுண்டோ -- மிக்க
உயர்வுற்ற தமிழ்மக்கள் உணர்வுற்ற நல்வாழ்வு?
கருவுற்ற செந்தமிழ்ச் சொல் -- ஒரு
கதியற்றுப் போனதுண்டோ அடடா அந்த (ஆற்றங்கரைதனிலே!)

சங்கீத விற்பனனாம் -- ஒரு
சண்டாளன் ஆரம்பித்தான் இந்துஸ்தான் ஒன்றை;
அங்கந்தப் பாட்டினிலே -- சுவை
அத்தனையும் கண்டுவிட்டது போலவே
நம்குள்ளர் வாய்திறந்தே -- நன்று
நன்றென ஆர்ப்பரித்தார்; அந்த நேரத்தில்
எங்கிருந்தோ தமிழில் -- ஓர்
இன்பநறுங்கவி கேட்டது காதினில் (ஆற்றங்கரைதனிலே)

'அஞ்சலை, உன் ஆசை -- என்னை
அப்புறம் இப்புறம் போகவிடாதடி
கொஞ்சம் இறங்கிடுவாய் -- நல்ல
கோவைப் பழத்தினைப் போன்ற உதட்டினை
வஞ்சி, எனக்களிப்பாய்!' -- என்ற
வண்ணத் தமிழ்ப்பதம் பண்ணில் கலந்தென்றன்
நெஞ்சையும் வானத்தையும் -- குளிர்
நீரையும், நிலவையும் தமிழர் குலத்தையும்

ஒன்றெனச் செய்ததுவே! -- நல்
உவகை பெறச்செய்ததே தமிழ்ப் போசனம்.
நன்று தமிழ் வளர்க! -- தமிழ்
நாட்டினில் எங்கணும் பல்குக! பல்குக!
என்றும் தமிழ் வளர்க! -- கலை
யாவும் தமிழ்மொழியால் விளைந்து ஓங்குக!
இன்பம் எனப்படுதல் -- தமிழ்
இன்பம் எனத்தமிழ் நாட்டினர் எண்ணுக!

( 90 )
( 95 )


( 100 )


( 105 )
( 110 )

( 115 )
( 120 )
தமிழ்ப் பேறு

ஏடெடுத்தேன் கவி ஒன்று வரைந்திட
'என்னை எழு' தென்று சொன்னது வான்!
ஓடையுந் தாமரைப் பூக்களும் தங்களின்
ஓவியந் தீட்டுக, என்றுரைக்கும்!
காடும் கழனியும் கார்முகிலும் வந்து
கண்ணைக் கவர்ந்திட எத்தனிக்கும்!
ஆடும்மயில் நிகர் பெண்களெல்லாம் உயிர்
அன்பினைச் சித்திரம் செய்க, என்றார்!

சோலைக் குளிர் தரு தென்றல் வரும், பசுந்
தோகை மயில் வரும் அன்னம் வரும்.
மாலைப் பொழுதினில் மேற்றிசையில் விழும்
மாணிக்கப் பரிதி காட்சிதரும்
'வேலைச் சுமந்திடும் வீரரின் தோள் உயர்
வெற்பென்று சொல்லி வரைக' எனும்
கோலங்கள் யாவும் மலைமலையாய் வந்து
கூவின என்னை! -- இவற்றிடையே,

இன்னலிலே, தமிழ் நாட்டினிலேயுள்ள
என் தமிழ் மக்கள் துயின்றிருந்தார்.
அன்னதோர் காட்சி இரக்கமுண்டாக்கியென
ஆவியில் வந்து கலந்ததுவே
'இன்பத் தமிழ்க் கல்வி யாவரும் கற்றவர்
என்றுரைக்கும் நிலை எய்திவிட்டால் --
துன்பங்கள் நீங்கும், சுகம் வரும் நெஞ்சினில
தூய்மை யுண்டாகிடும், வீரம் வரும்.'

( 125 )

( 130 )
( 135 )

( 140 )


எங்கள் தமிழ்

இனிமைத் தமிழ்மொழி எமது -- எமக்
கின்பந் தரும்படி வாய்த்தநல் அமுது!
கனியைப் பிழிந்திட்ட சாறு -- எங்கள்
கதியில் உயர்ந்திட யாம்பெற்ற பேறு!
தனிமைச் சுவையுள்ள சொல்லை -- எங்கள்
தமிழினும் வேறெங்கும் யாங்கண்டதில்லை!
நனி்யுண்டு நனியுண்டு காதல் -- தமிழ்
நாட்டினர் யாவர்க்குமே தமிழ்மீதில்         (இனிமைத்)

தமிழ் எங்கள் உயிர் என்பதாலே -- வெல்லுந்
தரமுண்டு தமிழருக்கிப்புவி மேலே
தமிழ்என்னில் எம்முயிர்ப் பொருளாம் - இன்பத்
தமிழ்குன்றுமேல் தமிழ்நாடெங்கும் இருளாம்
தமிழுண்டு தமிழ் மக்களுண்டு -- இன்பத்
தமிழுக்கு நாளும் செய்வோம் நல்ல தொண்டு
தமிழ் என்று தோள் தட்டி ஆடு! நல்ல
தமிழ் வெல்க வெல்க என்றே தினம் பாடு!       (இனிமைத்)
( 145 )
( 150 )

( 155 )
( 160 )
தமிழ் வளர்ச்சி

எளிய நடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும்.
இலக்கண நூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும்.
வெளியுலகில், சிந்தனையில் புதிது புதிதாக
விளைந்துள்ள எவற்றினுக்கும் பெயர்களெலாங் கண்டு
தெளியுறுத்தும் படங்களொடு சுவடியெலாம் செய்து
செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும்.
எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லை என்றால்
இங்குள்ள எல்லோரும் நாணிடவும் வேண்டும்.

உலகியலின் அடங்கலுக்கும் துறைதோறும் நூற்கள்
ஒருத்தர் தயை இல்லாமல் ஊரறியும் தமிழில்
சலசலென எவ்விடத்தும் பாய்ச்சிவிட வேண்டும்!
தமிழொளியை மதங்களிலே சாய்க்காமை வேண்டும்.
இலவச நூற் கழகங்கள் எவ்விடத்தும் வேண்டும்.
எங்கள் தமிழ் உயர்வென்று நாம் சொல்லிச் சொல்லித்
தலைமுறைகள் பலகழித்தோம்; குறைகளைந் தோமில்லை.
தகத்தகாயத் தமிழைத் தாபிப்போம் வாரீர்!
( 165 )


( 170 )

( 175 )
தமிழ்க் காதல்

கமலம் அடுக்கிய செவ்விதழால் -- மலர்க்
காட்டினில் வண்டின் இசைவளத்தால்
கமழ்தரு தென்றல் சிலிர் சிலிர்ப்பால் -- கருங்
கண்மலரால் முல்லை வெண்ணகைப்பால் -- மயில்
அமையும் அன்னங்களின் மென்னடையால் -- மயில்
ஆட்டத்தினால் தளிர் ஊட்டத்தினால்
சமையும் ஒருத்தி -- அப் பூஞ்சோலை -- எனைத்
தன்வசம் ஆக்கிவிட்டாள் ஒருநாள்.

சோலை அணங்கொடு திண்ணையிலே -- நான்
தோளினை ஊன்றி இருக்கையிலே
சேலை நிகர்த்த விழியுடையாள் -- என்றன்
செந்தமிழ்ப் பத்தினி வந்துவிட்டாள்!
சோலையெலாம் ஒளி வானமெலாம் -- நல்ல
தோகையர் கூட்டமெலாம் அளிக்கும்
கோல இன்பத்தை என் உள்ளத்திலே -- வந்து
கொட்டி விட்டாள் எனைத் தொட்டிழுத்தாள்!
( 180)

( 185)
( 190)
எந்நாளே?

என்னருந் தமிழ்நாட்டின் கண்
     எல்லோரும் கல்விகற்றுப்
பன்னறும் கலைஞானத்தால்,
     பராக்கிரமத்தால், அன்பால்,
உன்னத இமமலைபோல்
     ஓங்கிடும் கீர்த்தி எய்தி
இன்புற்றார் என்று மற்றோர்
     இயம்பக் கேட்டிடல் எந்நாளோ?

கைத்திறச் சித்திரங்கள்,
     கணிதங்கள் வான நூற்கள்
மெய்த்திற நூற்கள், சிற்பம்,
     விஞ்ஞானம், காவியங்கள்
வைத்துள தமிழர் நூற்கள்
     வையத்தின் புதுமை என்னப்
புத்தகசாலை எங்கும்
     புதுக்குநாள் எந்தநாளோ?

தாயெழில் தமிழை, என்றன்
     தமிழரின் கவிதை தன்னை
ஆயிரம் மொழியில் காண
     இப்புவி அவாவிற்று என்ற
தோயுறும் மதுவின் ஆறு
     தொடர்ந்தென்றன் செவியில் வந்து
பாயுநாள் எந்தநாளோ,
     ஆரிதைப் பகர்வார் இங்கே?

பார்த்தொழில் அனைத்தும்கொண்ட
     பயன் தரும் ஆலைக்கூட்டம்
ஆர்த்திடக் கேட்பதென்றோ?
     அணிபெறத் தமிழர்கூட்டம்
போர்த்தொழில் பயில்வதெண்ணிப்
     புவியெலாம் நடுங்கிற்றென்ற
வார்த்தையைக் கேட்டு நெஞ்சு
     மகிழ்ந்து கூத்தாடல் என்றோ?( 195)
( 200)

( 205)

( 210)
( 215)

( 220)வெள்ளம்போல் தமிழர் கூட்டம்
     வீரங்கொள் கூட்டம்; அன்னார்
உள்ளத்தால் ஒருவரே மற்று
     உடலினால் பலராய்க் காண்பார்
கள்ளத்தால் நெருங்கொணாதே;
     எனவையம் கலங்கக்கண்டு
துள்ளும்நாள் எந்நாள்? உள்ளம்
     சொக்கும் நாள் எந்தநாளோ?

தறுக்கினால் பிறதேசத்தார்
     தமிழன்பால் -- என் -- நாட்டான்பால்
வெறுப்புறும் குற்றஞ்செய்தார்
     ஆதலால் விரைந்தன்னாரை
நொறுக்கினார் முதுகெலும்பைத்
     தமிழர்கள் என்றசேதி
குறித்தசொல்கேட்டு இன்பத்திற்
     குதிக்கும் நாள் எந்தநாளோ?

நாட்டும்சீர்த் தமிழன் இந்த
     நானில மாயம்கண்டு
காட்டிய வழியிற் சென்று
     கதிபெற வேண்டும் என்றே
ஆட்டும்சுட்டுவிரல் கண்டே
     ஆடிற்று வையம் என்று
கேட்டுநான் இன்ப ஊற்றுக்
     கேணியில் குளிர்ப்பதெந்நாள்?

விண்ணிடை இரதம் ஊர்ந்து
     மேதினி கலக்குதற்கும்
பண்ணிடைத் தமிழைச் சேர்த்துப்
     பாரினை மயக்குதற்கும்
மண்ணிடை வாளையேந்திப்
     பகைப்புலம் மாய்ப்பதற்கும்
எண்ணிலாத் தமிழர் உள்ளார்
     எனும்நிலை காண்பதென்றோ?

கண்களும் ஒளியும்போலக்
     கவின் மலர் வாசம்போலப்
பெண்களும் ஆண்கள் தாமும்
     பெருந்தமிழ் நாடுதன்னில்.
தண்கடல் நிகர்த்த அன்பால்
     சமானத்தர் ஆனார் என்ற
பண்வந்து காதில்பாயப்
     பருகுநாள் எந்தநாளோ?
( 225)
( 230)

( 235)
( 240)

( 245)

( 250)
( 255)

( 260)சங்க நாதம்

   எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
   மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
   எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்:
   இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!
திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
                           உடுக்களோடும்
மங்குல் கடல் இவற்றோடும் பிறந்தமிழுடன் பிறந்தோம்
                           நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
                           முழங்கு சங்கே!
   சிங்களஞ்சேர் தென்னாட்டு மக்கள்
   தீராதி தீரரென்று ஊதூது சங்கே!
   பொங்கும் தமிழர்க்கின்னல் விளைத்தால்
   சங்காரம் நிஜமெனச் சங்கே முழங்கு!
வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
                           வெற்றித் தோள்கள்.
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
                           எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனில்கமழ்ந்து லீரஞ்செய்கின்றதமிழ்
                           எங்கள் மூச்சாம்! (எங்)

( 265)
( 270)
( 275)
( 280)

தமிழ்க் கனவு

தமிழ்நாடெங்கும் தடபுடல்! அமளி!!
பணமே எங்கணும் பறக்குது விரைவில்
குவியுது பணங்கள்! மலைபோல் குவியுது!!
தமிழின் தொண்டர் தடுக்கினும் நில்லார்,
ஓடினார், ஓடினார், ஓடினார் நடந்தே!
ஆயிரம் ஆயிரத்து ஐந்நூறு பெண்கள்
ஒளிகொள் விழியில் உறுதி காட்டி
இறக்கை கட்டிப் பறக்கின்றார்கள்!
ஐயோ, எத்தனை அதிர்ச்சி, உத்ஸாகம்!
சமுத்திரம் போல அமைந்த மைதானம்!
அங்கே கூடினார் அத்தனை பேரும்!

குவித்தனர் அங்கொரு கோடி ரூபாய்!
வீரத் தமிழன் வெறிகொண்டெழுந்தான்!
உரக்கக்கேட்டான்: 'உயிரோ நம் தமிழ்?'
அகிலம் கிழிய ஆம்! ஆம்! என்றனர்!!
ஒற்றுமை என்றான்; 'நற்றேன்' என்றனர்.
உள்ளன்பு ஊற்றி ஊற்றி ஊற்றித்
தமிழை வளர்க்கும் சங்கம் ஒன்று
சிங்கப் புலவரைச் சேர்த்தமைத்தார்கள்!
உணர்ச்சியை, எழுச்சியை, ஊக்கத்தையெலாம்
கரைத்துக் குடித்துக் கனிந்த கவிஞர்கள்
சுடர்க்கவி தொடங்கினார்! பறந்தது தொழும்பு!
கற்கண்டு மொழியில் கற்கண்டுக் கவிதைகள்,
வாழ்க்கையை வானில், உயர்த்தும் நூற்கள்,

தொழில் நூல், அழகாய்த் தொகுத்தனர் விரைவில்!
காற்றிலெலாம் கலந்தது கீதம்!
சங்கீதமெலாம் தகத்தகாயத்தமிழ்!
காதலெலாம் தமிழ் கனிந்த சாறு!
கண்ணெதிர்தமிழ்க் கட்டுடல் வீரர்கள்!
காதல் ததும்பும் கண்ணாளன்தனைக்

கோதை ஒருத்தி கொச்சைத் தமிழால்
புகழ்ந்தாளென்று, பொறாமல் சோர்ந்து
வீழ்ந்தான்! உடனே திடுக்கென விழித்தேன்.
அந்தோ! அந்தோ! பழய
நைந்த தமிழரொடு நானிருந்தேனே!

( 285)
( 290)
( 295)

( 300)
( 305)

( 310)

( 315)( 319)