பக்கம் எண் :

பெண்ணுலகு

பெண்களைப் பற்றிப் பெர்னாட்ஷா

புவிப்பெரியான் ஜார்ஜ் பெர்னார்ட்ஷா உரைத்த
   பொன்மொழியைக் கேளுங்கள் நாட்டில் உள்ளீர்!
"உவந்தொருவன் வாழ்க்கைசரி யாய்நடத்த
   உதவுபவள் பெரும்பாலும் மனைவி ஆவாள்!
அவளாலே மணவாளன் ஒழுங்கு பெற்றான்!"
   அவளாலே மணவாளன் சுத்தி பெற்றான்!
குவியுமெழிற் பெண்களுக்கே ஊறுசெய்யும்
   குள்ளர்களே, கேட்டீரோ ஷாவின் பேச்சை!

அவனியிலே ஒருவனுக்கு மனைவியின்றேல்
   அவனடையும் தீமையை யார் அறியக்கூடும்?
கவலையுற ஆடவர்கள் நாளும் செய்யும்
   கணக்கற்ற ஊழல்களை யெல்லாம் அந்த
நவையற்ற பெண்களன்றோ விலக்குகின்றார்?
   நானிலத்தில் மார்தட்டும் ஆடவர்கள்
சுவைவாழ்விற் கடைத்தேறத் தக்கதான
   சூக்ஷீமமும் பெண்களிடம் அமைந்ததன்றோ!

கல்வியில்லை உரிமையில்லை பெண்களுக்குக்
   கடைத்தேற வழியின்றி விழிக்கின்றார்கள்!
புல்லென்றே நினைக்கின்றீர் மனைவிமாரைப்
   புருஷர்களின் உபயோகம் பெரிதென்கின்றீர்!
வல்லவன்பே ரறிஞன்ஷா வார்த்தைகேட்டீர்
   மனோபாவம் இனியேனும் திருந்தவேண்டும்.
இல்லையெனில் எதுசெயலாம்! பெண்ஆண்என்ற
   இரண்டுருளையால்நடக்கும் இன்பவாழ்க்கை!

( 5 )

( 10 )
( 15 )

( 20 )
கைம்மைப் பழி

கோரிக்கை அற்றுக் கிடக்குதண்ணே  இங்கு
வேரிற் பழுத்த  பலா-மிகக்
கொடியதென் றெண்ணிடப் பட்டதண்ணே குளிர்
வடிகின்ற வட்ட நிலா!
சீரற்று இருக்குதையோ குளிர்             தென்றல்
சிறந்திடும் பூஞ்                      சோலை-சீ
சீஎன்று இகழ்ந்திடப் பட்டதண்ணே          நறுஞ்
சீதளப் பூ                          மாலை.

நாடப்படா தென்று நீக்கி               வைத்தார்கள்
நலஞ்செய் நறுங் கனியைக்-கெட்ட
நஞ்சென்று சொல்லிவைத் தார் எழில் வீணை
நரம்புதரும் தொனியை
சூடப் படாதென்று சொல்லிவைத்தார் தலை
சூடத்தகும் க்ரீ டத்தை-நாம்
தொடவும் தகாதென்று சொன்னார் நறுந்தேன்
துவைந்திடும் பொற் குடத்தை!

இன்ப வருக்கமெல் லாம்நிறை வாகி
இருக்கின்ற பெண்கள் நிலை-இங்
கிவ்விதமாய் இருக்குதண்ணே! இதில்
யாருக்கும் வெட்க மிலை!
தன்கண வன்செத்து விட்டபின் மாது
தலையிற்கைம் மைஎன ஓர்-பெருந்
துன்பச் சுமைதனைத் தூக்கிவைத் தார்; பின்பு
துணைதேட வேண்டாம் என் றார்.

துணைவி இறந்தபின் வேறு துணைவியைத்
தேடுமோர் ஆடவன் போல்-பெண்ணும்
துணைவன் இறந்தபின் வேறு துணைதேடச்
சொல்லிவிடுவோம் புவி மேல்.
'கணைவிடு பட்டதும் லட்சியம் தேடும்' நம்
காதலும் அவ்வாறே-அந்தக்
காதற் கணைதொடுக்காத உயிர்க்குலம்
எங்குண்டு சொல் வேறே?

காதல் இல்லாவிடம் சூனியமாம் புவி
காதலினால் நடக்கும்!-பெண்கள்
காதலுளத்தைத் தடுப்பது, வாழ்வைக்
கவிழ்க்கின்றதை நிகர்க்கும்.
காதல் சுரக்கின்ற நெஞ்சத்திலே கெட்ட
கைம்மையைத் தூர்க்காதீர்!-ஓரு
கட்டழகன் திருத் தோளினைச் சேர்ந்திடச்
சாத்திரம் பார்க்காதீர்!

( 25 )
( 30 )

( 35 )
( 40 )

( 45 )

( 50 )
( 55 )

( 60 )


கைம்மைக் கொடுமை

கண்கள் நமக்கும் உண்டு -- நமக்குக்
   கருதும் வன்மை யுண்டு
மண்ணிடைத் தேசமெல்லாம் -- தினமும்
   வாழ்ந்திடும் வாழ்க்கையிலே
எண்ண இயலாத -- புதுமை
   எதிரில் காணுகின்றோம்
கண்ணிருந்தென்ன பயன்? நமக்குக்
   காதிருந்தென்ன பயன்?

வானிடை ஏறுகின்றார் -- கடலை
   வசப்படுத்துகின்றார்
ஈனப் பொருள்களிலே -- உள்ளுறை
   இனிமை காணுகின்றார்
மேனிலை கொள்ளுகின்றார் -- நாமதை
   வேடிக்கை பார்ப்பதல்லால்
ஊன்பதைத்தே அவைபோல் -- இயற்ற
   உணர்ச்சி கொள்வதில்லை.

புழுதி, குப்பை, உமி -- இவற்றின்
   புன்மைதனைக் களைந்தே
பழரசம் போலே -- அவற்றைப்
   பயன்படுத்துகின்றார்!
எழுதவும் வேண்டாம் -- நம்நிலை
   இயம்பவும் வேண்டா!
அழகிய பெண்கள் -- நமக்கோ
   அழுகிய பழத்தோல்!

கைம்மை எனக்கூறி -- அப்பெரும்
   கையினிற் கூர்வேலால்
நம்மினப் பெண்குலத்தின் -- இதய
   நடுவிற் பாய்ச்சுகின்கிறோம்.
செம்மை நிலையறியோம் -- பெண்களின்
   சிந்தையை வாட்டுகின்றோம்;
இம்மை இன்பம் வேண்டல் -- உயிரின்
   இயற்கை என்றறியோம்.

கூண்டிற் கிளிவளர்ப்பார் -- இல்லத்தில்
   குக்கல் வளர்த்திடுவார்,
வேண்டியது தருவார்; -- அவற்றின்
   விருப்பத்தை அறிந்தே!
மாண்டவன் மாண்டபின்னர் -- அவனின்
   மனைவியின் உளத்தை
ஆண்டையர் காண்பதில்லை -- ஐயகோ,
   அடிமைப் பெண்கதியே!

( 65 )
( 70 )

( 75 )
( 80 )

( 85 )

( 90 )
( 95 )

( 100)


மூடத் திருமணம்

'முல்லை சூடி நறுமணம் முழுகிப்
பட்டுடை பூண்டு பாலொடு பழங்கள்
ஏந்திய வண்ணம் என்னருமை மகள்
தனது கணவனும் தானு மாகப்
பஞ்சணை சென்று பதைப்புறு காதலால்
ஒருவரை ஒருவர் இழுத்தும் போர்த்தும்
முகமல ரோடு முகமலர் ஒற்றியும்.
இதழோடு இதழை இனிது சுவைத்தும்,
நின்றும் இருந்தும் நேயமோடு ஆடியும்
பிணங்கியும், கூடியும் பெரிது மகிழந்தே
இன்பத்துறையில் இருப்பர் என்று எண்ணினேன்.
இந்த எண்ணத்தால் இருந்தேன் உயிரோடு!
பாழும் கப்பல் பாய்ந்து வந்து
என்மகள் மருகன் இருக்கும் நாட்டில்
என்னை இறக்கவே, இரவில் ஒருநாள்
என்மகள் -- மருகன் இருவரும் இருந்த
அறையோ சிறிது திறந்து கிடந்ததை
நள் இராப்பொழுதில் நான் கண்ட போதில்
இழுந்துச் சாத்த என்கை சென்றது;
கழுத்தோ கதவுக்கு உட்புறம் நீண்டது!
கண்களோ மருகனும் மகளும் கனிந்து
காதல் விளைப்பதைக் காண ஓடின!
வாயின் கடையில் எச்சில் வழியக்
குறட்டை விட்டுக், கண்கள் குழிந்து
நரைத்தலை சோர்ந்து, நல்லுடல் எலும்பாய்ச்
சொந்த மருகக் கிழவன் தூங்கினான்!
இளமை ததும்ப, எழிலும் ததும்பி
காதல் ததும்பக் கண்ணீர் ததும்பக்
என்மகள் கிழவனருகில் இருந்தாள்.
சிவந்த கன்னத்தால் விளக்கொளி சிவந்தது!
கண்ணீர்ப் பெருக்கால் கவின்உடை நனைத்தாள்!
தொண்டு கிழவன் விழிப்பான் என்று
கெண்டை விழிகள் மூடாக் கிளிமகள்
காதலும் தானும் கனலும் புழுவுமாய்
ஏங்கினாள்; பின்பு வெடுக்கென்று எழுந்தாள்.
சர்க்கரைச் சிமிழியைப் பாலில் சாய்த்தாள்.
செம்பை எடுத்து வெம்பி அழுதாள்.
எதையோ நினைத்தாள்! எதற்கோ விழித்தாள்!
உட்கொள்ளும் தருணம் ஓடிநான் பிடுங்கினேன்.
பாழுந் தாயே! பாழுந்தாயே!
என்சாவுக்கே உனை இங்கு அழைத்தேன்!
சாதலைத் தடுக்கவோ தாய்எமன் வந்தாய்?
என்று -- எனைத் தூற்றினாள். இதற்குள் ஓர்பூனை
சாய்ந்தபாலை நக்கித் தன்தலை
சாய்ந்து வீழ்ந்து செத்தது கண்டேன்.
மண்ணாய்ப் போக! மண்ணாய்ப்போக!
மனம் பொருந்தா மணம் மண்ணாய்ப்போக!
சமூகச் சட்டமே! சமூக வழக்கமே!
நீங்கள், மக்கள் அனைவரும்
ஏங்காதிருக்க மண்ணாய்ப் போகவே!

( 105)
( 110)

( 115)

( 120)
( 125)
( 130)
( 135)
( 140)
( 145)
( 150)

எழுச்சியுற்ற பெண்கள்

மேற்றிசையில் வானத்தில் பொன்னுருக்கு
வெள்ளத்தில் செம்பருதி மிதக்கு நேரம்!
வேற்கண்ணி யாளொருத்தி சோலைதன்னில்
விளையாட நின்றிருந்தாள் மயிலைப்போலே!
காற்றடித்த சோலையிலே நேரம் பார்த்துக்
கனிய டித்துக் கொண்டு செல்லும் செல்வப்பிள்ளை
ஆற்றுவெள்ளம் போலாசை வெள்ளம் தூண்ட
அவளிடத்தே சில சொன்னான் பின்னுஞ் சொல்வான்;

விரிந்த ஒரு வானத்தில் ஒளிவெள்ளத்தை
விரைந்துவந்து கருமேகம் விழுங்கக்கூடும்!
இருந்தவெயில் இருளாகும் ஒரு கணத்தில்
இது அதுவாய் மாறிவிடும் ஒரு கணத்தில்
தெரிந்ததுதான்; ஆனாலும் ஒன்றேயொன்று!
தெளிந்த ஓர் உள்ளத்தில் எழுந்தகாதல்
பருந்துவந்து கொத்துமென்றும் தணிவதில்லை!
படைதிரண்டு வந்தாலும் சலிப்பதில்லை!

கன்னத்தில் ஒரு முத்தம் வைப்பாய் பெண்ணே,
கருதுவதிற் பயனில்லை தனியாய் நின்று.
மின்னிவிட்டாய் என் மனதில்! பொன்னாய்ப் பூவாய்.
விளைந்துவிட்டாய் கண்ணெதிரில்! என்று சொன்னாள்.
கன்னியொரு வார்த்தையென்றாள் என்னவென்றான்.
கல்வியற்ற மனிதனை நான் மதியேன் என்றாள்
பன்னூற்பண்டிதனென்று தன்னைச் சொன்னான்.
பழச்சுளையின் வாய்திறந்து சிரித்துச் சொல்வாள்.

பெருங்கல்விப் பண்டிதனே! உனக்கோர்கேள்வி;
பெண்களுக்குச் சுதந்தரந்தான்உண்டோ? என்றாள்.
தரும்போது கொள்வதுதான் தருமம் என்றான்.
தராவிடில்நான் மேற்கொண்டால் என்னவென்றாள்.
திருமணமா காதவள்தன் பெற்றோரின்றிச்
செயல்ஒன்று தான்செய்தல் அதர்மம் என்றான்.
மருவஅழைக் கின்றாயே, நானும் என்றன்
மாதா பிதாவின்றி விடைசொல்வேனோ?

என்றுரைத்தாள், இதுகேட்டுச் செல்வப்பிள்ளை
என்னேடி, இது உனக்குத் தெரியவில்லை.
மன்றல்செயும் விஷயத்தில் ஒன்றில்மட்டும்
மனம்போல நடக்கலாம் பெண்கள் என்றான்.
என்மனது வேறொருவன் இடத்திலென்றே
இவனிட்ட பீடிகையைப் பறக்கச் செய்தாள்.
உன்நலத்தை இழக்கின்றாய் வலியநானே
உனக்களிப்பேன் இன்பமென நெருங்கலானான்!

அருகவளும் நெருங்கி வந்தாள்; தன் மேல்வைத்த
ஆர்வந்தான் எனநினைத்தான்! இமைக்குமுன்னே
ஒருகையில் உடைவாளும் இடதுகையில்
ஓடிப்போ! என்னுமோரு குறிப்புமாகப்
புருவத்தை மேலேற்றி விழித்துச் சொல்வாள்;
புனிதத்தால் என்காதல் பிறன்மேலென்று
பரிந்துரைத்தேன்! மேற்சென்றாய்! தெளிந்தகாதல்
படைதிரண்டு வந்தாலும் சலியாதென்றாள்.

ஓடினான் ஓடினான் செல்வப்பிள்ளை
ஓடிவந்து மூச்சுவிட்டான் என்னிடத்தில்
கூடிஇரு நூறுபுலி எதிர்த்ததுண்டோ?
கொலையாளியிடமிருந்து மீண்டதுண்டோ?
ஓடிவந்த காரணத்தைக்கேட்டேன், அன்னோன்
உரைத்துவிட்டான்! நானவற்றைக் கேட்டுவிட்டேன்.
கோடிஉள்ளம் வேண்டுமிந்த மகிழ்ச்சிதாங்கக்
குலுங்கநகைத்தேயுரைத்தேன் அவனிடத்தில்;

செல்வப்பிள்ளாய் இன்றுபுவியின் பெண்கள்
சிறுநிலையில் இருக்கவில்லை; விழித்துக் கொண்டார்!
கொல்லவந்த வாளைநீ குறைசொல்லாதே!
கொடுவாள் போல் மற்றொருவாள் உன்மனைவி
மெல்லிடையில் நீகாணாக் காரணத்தால்,
விளையாட நினைத்துவிட்டாய் ஊர்ப் பெண்கள்மேல்!
பொல்லாத மானிடனே, மனச்சான்றுக்குள்
புகுந்துகொள்வாய்! நிற்காதே! என்றேன்; சென்றான்.


( 155)

( 160)

( 165)

( 170)

( 175)

( 180)
( 185)

( 190)
( 195)
( 200)

( 205)
( 210)

( 215)
குழந்தை மணத்தின் கொடுமை

ஏழு வயதே ஏழிற்கருங் கண் மலர்!
ஒருதாமரைமுகம்! ஒருசிறு மணியிடை!
சுவைத் தறியாத சுவைதருங் கனிவாய்!
இவற்றை யுடைய இளம்பெண் -- அவள்தான்,
கூவத்தெரியாக் குயிலின் குஞ்சு;
தாவாச் சிறுமான், மோவா அரும்பு!
தாலியறுத்துத் தந்தையின் வீட்டில்
இந்தச் சிறுமி யிருந்திடு கின்றாள்;
இவளது தந்தையும் மனைவியை இழந்து
மறுதாரமாய்ஓர் மங்கையை மணந்தான்.
புதுப்பெண் தானும் புதுமாப்பிளையும்
இரவையே விரும்பி ஏறுவர் கட்டிலில்!
பகலைப் போக்கப் பந்தாடிடுவர்!
இளந்தலைக் கைம்பெண் இவைகளைக் காண்பாள்!

தனியாய் ஒருநாள் தன்பாட்டியிடம்
தேம்பித் தேம்பி அழுத வண்ணம்
ஏழுவயதின் இளம்பெண் சொல்லுவாள்;
'என்னை விலக்கி என்சிறு தாயிடம்
தந்தை கொஞ்சுதல் தகுமோ?' தந்தை
'அவளை விரும்பி, அவள் தலை மீது
பூச்சூடுகின்றார்; புறக்கணித்தார் எனைத்!'
'தாமும் அவளும் தனியறை செல்வார்;
நான் ஏன் வெளியில் நாய்போல் கிடப்பது?'
'அவருக்கு நான் மகள்! அவர் எதிர் சென்றால்,
நீ போ! என்று புருவம் நெறிப்பதோ?'
பாட்டி மடியில் படுத்துப் புரண்டே
இவ்வாறு அழுதாள் இளம்பூங்கொடியாள்!
இந்நிலைக்கு இவ்வாறு அழுதாள் -- இவளது
பின்நிலை எண்ணிப் பாட்டி பெரிதும்
அழுத கண்ணீர் வெள்ளம், அந்தக்
குழந்தை வாழ்நாள் கொடுமையில் பெரிதே.


( 220 )

( 225)
( 230)

( 235)
( 240)
( 245)


பெண்ணுக்கு நீதி

    கல்யாணம் ஆகாத பெண்ணே! -- உன்
    கதிதன்னை நீநிச்சயம் செய்க கண்ணே! (கல்)

வல்லமை பேசியுன் வீட்டில் -- பெண்
வாங்கவே வந்திடு வார்கள் சில பேர்கள்;
நல்ல விலை பேசுவார் -- உன்னை
நாளும் நலிந்து சுமந்து பெற்றோர்கள்
கல்லென உன்னை மதிப்பார் -- கண்ணில்
கல்யாண மாப்பிள்ளை தன்னையுங் காட்டார்;
வல்லி உனக்கொரு நீதி 'இந்த
வஞ்சகத் தரகர்க்கு நீ அஞ்சவேண்டாம்'      (கல்)

பெற்றவருக்கு எஜமானர் -- எதிர்
பேசவொண் ணாதவர் ஊரினில் துஷ்டர்.
மற்றும் கடன் கொடுத்தோர்கள் -- நல்ல
வழியென்று ஜாதியென் றேயுரைப் பார்கள்;
சுற்றத்திலே முதியோர்கள் -- இவர்
சொற்படி உன்னைத் தொலைத்திடப் பார்ப்பார்,
கற்றவளே ஒன்று சொல்வேன் -- 'உன்
கண்ணைக் கருத்தைக் கவர்ந்தவன் நாதன்!'    (கல்)

தனித்துக் கிடந்திடும் லாயம் -- அதில்
தள்ளியடைக்கப் படுங்குதிரைக்கும்
கனைத்திட உத்தரவுண்டு -- வீட்டில்
காரிகை நாணவும் அஞ்சவும் வேண்டும்;
கனத்த உன் பெற்றோரைக் கேளே! -- அவர்
கல்லொத்த நெஞ்சை உன் கண்ணீரினாலே
நனைத்திடுவாய் அதன் மேலும் -- அவர்
ஞாயம் தராவிடில் விடுதலை மேற்கொள்!     (கல்)

மாலைக் கடற்கரை ஓரம் -- நல்ல
வண்புனல் பாய்ந்திடும் மாநதிதீரம்
காலைக் கதிர் சிந்து சிற்றூர் -- கண்
காட்சிகள், கூட்டங்கள், பந்தாடும் சாலை
வேலை ஒழிந்துள்ள நேரம் -- நீ
விளையாடுவாய் தாவி விளையாடு மான்போல்!
கோலத்தினைக் கொய்வதுண்டோ? -- பெண்கள்
கொய்யாப் பழக்கூட்டம்' என்றே உரைப்பாய்.

( 250)

( 255)

( 260)
( 265)

( 270)
( 275)
( 280)


கைம்பெண் நிலை

    கண்போற் காத்தேனே -- என்னருமைப்-
    பெண்ணை நான்தானே                (கண்)

    மண்ணாய்ப் போன மாப் பிள்ளை
    வந்ததால் நொந்தாள் கிள்ளை
மணமக னானவன் -- பிணமகனாயினன்
குணவதி வாழ்க்கை எவ் -- வணமினி ஆவது?  (கண்)

    செம்பொற் சிலை, இக் காலே
    கைம் பெண்ணாய்ப் போன தாலே
திலகமோ குழலில் -- மலர்களோ அணியின்
உலகமே வசைகள் -- பலவுமே புகலும்       (கண்)

    பொன்னுடை பூஷ ணங்கள்
    போக்கினாளே என் திங்கள்!
புகினும் ஓர் அகம் சகுனம் தீதென
முகமும் கூசுவார் -- மகளை ஏசுவார்!         (கண்)

    தரையிற் படுத்தல் வேண்டும்
    சாதம் குறைத்தல் வேண்டும்
தாலியற்றவள் -- மே லழுத்திடும்
வேலின் அக்ரமம் -- ஞாலம் ஒப்புமோ?       (கண்)

    வருந்தாமல் கைம்பெண் முகம்
    திருந்துமோ இச்சமுகம்
மறுமணம் புரிவது -- சிறுமைஎன்றறைவது
குறுகிய மதியென -- அறிஞர்கள் மொழிகுவர்    (கண்)


( 285)


( 290)

( 295)

( 300)

( 305)
இறந்தவன்மேல் பழி

அந்திய காலம் வந்ததடியே! -- பைந்தொடியே!
-- இளம்பிடியே! பூங்கொடியே!
சிந்தை ஒன்றாகி நாம் இன்பத்தின்           எல்லை
தேடிச் சுகிக்கையில் எனக்கிந்தத்           தொல்லை
வந்ததே இனி நான் வாழ்வதற்கில்லை
மனத்தில் எனக்கிருப்ப தொன்றே -- அதை -- இன்றே --
     குணக்குன்றே! -- கேள்நன்றே!       (அந்நிய)
கடும்பிணியாளன்நான் இறந்தபின், மாதே!
கைம்பெண்ணாய் வருந்தாதே, பழிஎன்றன் மீதே.
அடஞ்செய்யும் வைதிகம் பொருள் படுத்தாதே!

ஆசைக்குரியவனை நாடு -- மகிழ்வோடு -- தார்சூடு
     நலம்தேடு!                      (அந்நிய)
கற்கண்டு போன்றபெண் கணவனை இழந்தால்
கசந்த பெண் ஆவது விந்தைதான் புவி       மேல்!
சொற்கண்டு மலைக்காதே உன் பகுத்தறிவால்
தோஷம், குணம் அறிந்து நடப்பாய் -- துயர் கடப்பாய் --
     துணை பிடிப்பாய் -- பயம் விடுப்பாய்.  (அந்நிய)

( 310)
( 315)
( 320)

கைம்மைத் துயர்

பெண்கள்துயர் காண்பதற்கும் கண்ணிழந்தீரோ!
கண்ணிழந்தீரோ! உங்கள் கருத்திழந்தீரோ!      (பெண்)

   பெண்கொடி தன்துணையிழந்தால்
   பின்பு துணை கொள்வதிலே
மண்ணில் உமக்காவதென்ன வாழ்வறிந்தோரே?
வாழ்வறிந்தோரே! மங்கை மாரை ஈன்றோரே!    (பெண்)

   மாலையிட்ட மணவாளன் இறந்து விட்டால்
   மங்கைநல்லாள் என்ன செய்வாள்? அவளை நீங்கள்
   ஆலையிட்ட கரும்பாக்கி உலக இன்பம்
   அணுவளவும் அடையாமல் சாகச் செய்தீர்!

பெண்டிழந்த                       குமரன் மனம்
பெண்டு கொள்ளச்                   செய்யும் எத்தனம்

கண்டிருந்தும் கைப்பெண் என்ற கதை சொல்லலாமோ? )
கதை சொல்லலாமோ? பெண்கள் வதை கொள்ளலாமோ?(பெண்)

துணையிழந்த பெண்கட்குக் காதல் பொய்யோ?
   சுகம்வேண்டாது இருப்பதுண்டோ அவர்கள் உள்ளம்?
அணையாத காதலனை அணைக்கச் சொன்னீர்
   அணைக்கடந்தால் உங்களைதடை எந்தமூலை?
பெண்ணுக்கொரு                    நீதி கண்டீர்
பேதமெனும்                        மதுவை யுண்டீர்
கண்ணிலொன்றைப் பழுதுசெய்தால் கான்றுமிழாதோ?
கான்றுமிழாதோ புவி தான் பழியாதோ?         (பெண்)
( 325)

( 330)

( 335)


( 340)

கைம்மை நீக்கம்

நீ எனக்கும், உனக்கும் நானும் -- இனி
நேருக்கு நேர் தித்திக்கும் பாலும், தேனும்   (நீ)

   தூய வாழ்வில் இதுமுதல் நமதுளம்
   நேயமாக அமைவுற உறுதிசொல்! அடி (நீ)

   கைம்பெண் என் றெண்ணங் கொண்டே
   கலங்கினாயோ கற்கண்டே?

காடு வேகு வதை ஒரு மொழியினில்
மூடு போட முடியுமோ உரையடி? ததி     (நீ)

பைந்தமி ழைச்சீ                  ராக்கக்
கைம்மைஎன் னும்சொல்            நீக்கப்
பறந்து வாடி அழகிய மயிலே!
இறந்த கால நடைமுறை தொலையவே.     (நீ)

பகுத்தறிவான                     மன்று
பாவை நீஏறி                     நின்று
பாரடீ உன் எதிரினிற் பழஞ் செயல்
கோரமாக அழந்தொழிகுவதையே         (நீ)

கருத்தொரு மித்த                 போது
கட்டுக்கள் என்ப                  தேது
கைம்மை கூறும் அதிசய மனிதர்கள்
செம்மை யாகும் படிசெய மனதுவை! அடி!   (நீ)


( 345)


( 350)

( 355)

( 360)

தவிப்பதற்கோ பிள்ளை

விளக்கு வைத்த நேரத்தில் என் வேலைக்காரி
வெளிப்புறத்தில் திண்ணையிலே என்னிடத்தில் வந்து
களிப்புடனே 'பிரசவந்தான் ஆய்விட்ட' தென்றாள்!
காதினிலே குழந்தையழும் இன்னொலியும் கேட்டேன்!
உளக்கலசம் வழிந்துவரும் சந்தோஷத்தாலே
உயிரெல்லாம் உடலெல்லாம் நனைந்துவிட்டேன் நன்றாய்
வளர்த்துவரக் குழந்தைக்கு வயது மூன்றின்பின்
மனைவிதான் மற்றுமொரு கருப்பமுறலானாள்.

பெண்குழந்தை பிறந்ததினி ஆண்குழந்தை ஒன்று
பிறக்குமா என்றிருந்தான். அவ்வாறே பெற்றாள்!
கண்ணழகும் முக அழகும் கண்டு நாட்கள்
கழிக்கையிலே மற்றொன்றும் பின் ஒன்றும் பெற்றாள்!
எண்ணுமொரு நால்வரையும்
எழில் மனைவி தன்னுடலில் முக்காலும் தேய்ந்தாள்!
உண்ணுவதை நானுண்ண மனம் வருவதில்லை;
உண்ணாமலே மனைவி பிள்ளைகளைக் காத்தாள்.

வரும்படியை நினைக்கையிலே உள்ளமெலாம் நோகும்!
வாராத நினைவெல்லாம்வந்து வந்து தோன்றும்!
துரும்பேனும் என்னிடத்தில் சொத்தில்லை! நோயால்
தொடர்பாகப் பத்துநாள் படுத்துவிட்டால் தொல்லை!
அரும்பாடு மிகப்படவும் ஆக்ஷேபமில்லை;
ஆர்தருவார் இந்நாளில் அத்தனைக்கும்கூலி?
இரும்பா நான்? செத்துவிட்டால் என் பிள்ளைகட்கே
என்னகதி? ஏன்பெற்றேன்? எனநினைக்கும் நாளில்,

ஒருதினத்தில் பத்துமணி இரவினிலே வீட்டில்
உணவருந்திப் படுக்கையொடு தலையனையும் தூக்கி
தெருத்திண்ணை மேல்இட்டேன்! நித்திரையும் போனேன்!
சிறுவரெல்லாம் அறைவீட்டில் தூங்கியபின் என்றன்
அருமனைவி என்னிடத்தே மெதுவாக வந்தாள்.
'அயர்ந்தீரோ' என்றுரைத்தாள்! மலர்க்கரத்தால்தொட்டாள்!
'தெருவினிலேபனி' என்றாள், ஆமென்று சொன்னேன்;
தெரிந்து கொண்டேன் அவள் உள்ளம். வார்த்தையென்ன
                               தேவை;

மனைவியாளும் நானுமாய் ஒருநிமிஷ நேரம்
மவுனத்தில் ஆழ்ந்திருந்தோம் வாய்த்ததொரு கனவு;
'கனல்புரளும் ஏழ்மையெனும் பெருங்கடலில், அந்தோ!
கதியற்ற குழந்தைகளோர் கோடானு கோடி
மனம் பதைக்கச் சாக்காட்டை மருவுகின்ற நேரம்
வந்ததொரு பணம்என்ற கொடிபறக்கும் கப்பல்;
இனத்தவரின் குழந்தைகளோ. ஏ! என்று கொஞ்ச,
ஏறிவந்த சீமான்கள் சீ! என்று போனார்.'

கனவொழிய நனவுலகில் இறங்கிவந்தோம் நாங்கள்;
காதல்எனும் கடல்முழுக்கை வெறுத்துவிட்டோம். மெய்யாய்த்
தினம் நாங்கள் படும்பாட்டை யாரறியக்கூடும்?
சீ! சீ!! சீ!!! இங்கினியும் காதல் ஒரு கேடா?
எனமுடித்தோம். ஆனாலும் வீட்டுக்குள் சென்றோம்.
இன்பமெனும் காந்தந்தான் எமையிழுத்த துண்டோ!
தனியறையில் கண்ணொடுகண் சந்திக்க ஆங்கே
தடுக்கி விழுந்தோம் காதல் வெள்ளத்தின் உள்ளே!

பத்துமாதம் செல்லப் பகற்போதில் ஒர்நாள்,
பட்டகடன்காரர்வந்து படுத்துகின்ற நேரம்,
சித்தமெலாம் மூத்தபெண் சுரநோயை எண்ணித்
திடுக்கிடுங்கால், ஒருகிழவி என்னிடத்தில் வந்து
முத்தாலம்மை வைத்த கிருபையினால் நல்ல
முகூர்த்தத்தில் உன்மனைவி பிள்ளைபெற்றாள் என்றாள்!
தொத்துநோய், ஏழ்மை, பணக்காரர் தொல்லை
தொடர்ந்தடிக்கும் சூறையிலே பிள்ளையோ பிள்ளை!

காதலுக்கு வழிவைத்துக் கருப்பாதை சாத்தக்
கதவொன்று கண்டறிவோம். இதிலென்ன குற்றம்?
சாதலுக்கே பிள்ளை? தவிப்பதற்கோ பிள்ளை?
சந்தானமுறை நன்று; தவிர்க்கும்முறை தீதோ?
காதலுத்துக் கண்ணலுத்துக் கைகள் அலுத்துக்
கருக்தலுத்துப் போனோமே! கடைத்தேற மக்கள்
ஓதலுக்கெல்லாம் மறுப்பா? என்னருமை நாடே,
உணர்வுகொள் உள்ளத்தில் உடலுயிரில் நீயே.

( 365)
( 370)

( 375)
( 380)
( 385)

( 390)
( 395)


( 400)

( 405)
( 410)

( 415)
( 420)

( 425)

ஆண் குழந்தை தாலாட்டு

ஆராரோ ஆரரிரோ ஆரரிரோ ஆராரோ
ஆராரோ ஆரரிரோ ஆரரிரோ ஆராரோ

காராரும் வானத்தில் காணும் முழுநிலவே!
நீராரும் தண்கடலில் கண்டெடுத்த நித்திலமே!

ஆசை தவிர்க்கவந்த ஆணழகே சித்திரமே!
ஓசை யளித்துமலர் உண்ணுகின்ற தேன்வண்டே!

உள்ளம் எதிர்பார்த்த ஓவியமே என்மடியில்
பிள்ளையாய் வந்து பிறந்த பெரும்பேறே!

சின்ன மலர்வாய் சிரித்தபடி பால்குடித்தாய்
கன்னலின் சாறே கனிரசமே கண்ணுறங்கு!

நீதிதெரியும் என்பார் நீள்கரத்தில் வாளேந்திச்
சாதியென்று போராடும் தக்கைகளின் நெஞ்சில்

கனலேற்ற வந்த களிறே, எனது
மனமேறு கின்ற மகிழ்ச்சிப் பெருங்கடலே!

தேக்குமரம் கடைந்து செய்ததோரு தொட்டிலிலே
ஈக்கள் நுழையாமல் இட்டதிரை நடுவில்,

பொன் முகத்தி லேயிழைத்த புத்தம் புதுநீலச்
சின்னமணிக் கண்ணை இமைக்கதவால் மூடிவைப்பாய்;

அள்ளும் வறுமை அகற்றாமல் அம்புவிக்குக்
கொள்ளைநோய் போல் மதத்தை கூட்டியழும் வைதீகத்தைப்

போராடிப் போராடிப் பூக்காமல் காய்க்காமல்
வேரோடு பேர்க்கவந்த வீரா, இளவீரா!

வாடப்பல புரிந்து வாழ்வை விழலாக்கும்
மூடப்பழக்கத்தைத் தீதென்றால் முட்டவரும்

மாடுகளைச் சீர்திருத்தி வண்டியிலே பூட்டவந்த
ஈடற்ற தோளா, இளந்தோளா, கண்ணுறங்கு!

'எல்லாம் அவன் செயலே' என்று பிறர்பொருளை
வெல்லம்போல் அள்ளி விழுங்கும் மனிதருக்கும்

காப்பார் கடவுள்உமைக் கட்டையில்நீர் போகுமட்டும்
வேர்ப்பீர், உழைப்பீர் என உரைக்கும் வீணருக்கும்,

மானிடரின் தோளின் மகத்துவத்தைக் காட்டவந்த
தேனின் பெருக்கே, என் செந்தமிழே கண்ணுறங்கு!

( 430)


( 435)( 440)

( 445)

( 450)


( 455)( 460)

பெண் குழந்தை தாலாட்டு!

ஆராரோ ஆரரிரோ ஆரரிரோ ஆராரோ
ஆராரோ ஆரரிரோ ஆரரிரோ ஆராரோ

சோலை மலரே! சுவர்ணத்தின் வார்ப்படமே!
காலைஇளஞ் சூரியனைக் காட்டும் பளிங்குருவே!

வண்மை உயர்வு மனிதர் நலமெல்லாம்
பெண்மையினால் உண்டென்று பேசவந்த பெண்ணழகே!

நாய்என்று பெண்ணை நவில்வார்க்கும் இப்புவிக்குத்
தாய்என்று காட்டத் தமிழர்க்கு வாய்த்தவளே!

வெண்முகத்தில் நீலம் விளையாடிக் கொண்டிருக்கும்
கண்கள் உறங்கு! கனியே உறங்கிடுவாய்!

அன்னத்தின் தூவி அனிச்ச மலரெடுத்துச்
சின்ன உடலாகச் சித்தரித்த மெல்லியலே!

மின்னல் ஒளியே, விலைமதியா ரத்தினமே!
கன்னல் பிழிந்து கலந்த கனிச்சாறே!

மூடத்தனத்தின் முடைநாற்றம் வீசுகின்ற
காடு, மணக்கவரும் கற்பூரப் பெட்டகமே!

வேண்டா சாதி இருட்டு வெளுப்பதற்குத்
தூண்டா விளக்காய்த் துலங்கும் பெருமாட்டி!
புண்ணிற் சரம்விடுக்கும் பொய்ம்மதத்தின் கூட்டத்தைக்
கண்ணிற் கனல்சிந்திக் கட்டழிக்க வந்தவளே!

தெய்வீகத்தை நம்பும் திருந்தாத பெண்குலத்தை
உய்விக்க வந்த உவப்பே! பகுத்தறிவே!

எல்லாம் கடவுள் செயல் என்று துடைநடுங்கும்
பொல்லாங்கு தீர்த்துப் புதுமைசெய வந்தவளே!

வாயில்இட்டுத் தொப்பை வளர்க்கும் சதிக்கிடங்கைக்
கோயிலென்று காசுதரும் கொள்கை தவிர்ப்பவளே!

சாணிக்குப் பொட்டிட்டுச் சாமிஎன்பார் செய்கைக்கு
நாணி உறங்கு; நகைத்துநீ கண்ணுறங்கு!

( 465)( 470)


( 475)


( 480)


( 485)