பக்கம் எண் :


குன்றம்

மாலை வானும் குன்றமும்

 

தங்கத்தை உருக்கி விட்ட
வானோடை தன்னி லேஓர்
செங்கதிர் மாணிக் கத்துச்
செழும்பழம் முழுகும் மாலை,
செங்குத்தாய் உயர்ந்த குன்றின்
மரகதத் திருமே னிக்கு
மங்காத பவழம் போர்த்து
வைத்தது வையம் காண!

( 5 )




( 10 )


ஒளியும் குன்றும்

அருவிகள், வயிரத் தொங்கல்!
அடர்செடி, பச்சைப் பட்டே!
குருவிகள், தங்கக் கட்டி!
குளிர்மலர், மணியின் குப்பை.
எருதின்மேற் பாயும் வேங்கை,
நிலவுமேல் எழுந்த மின்னல்,
சருகெலாம் ஒளிசேர் தங்கத்
தகடுகள் பார டாநீ!



( 15 )




( 20 )


கிளி எறிதல்

தலைக்கொன்றாய்க் கதிரைக் கொத்தித்
தழைபசுஞ் சிறக டித்து
மலைப்புன்னை மரத்தின் பக்கம்
வந்திடும் கிளிக்கூட் டத்தில்
சிலைப்பொண்ணாள் கவண் எறிந்து,
வீழ்த்தினேன் சிறகை என்றாள்
குலுக்கென்று சிரித்தொ ருத்தி
"கொழும்புன்னை இலைகள என்றாள்.





( 25 )



குறவன் மயக்கம்

பதட்டமாய்க் கிளிஎன்றெண்ணி
ஆதொண்டைப் பழம்பார்த் தானை
உதட்டினைப் பிதுங்கிக் "கோவை"
உன்குறி பிழைஎன் றோதும்!
குதித்தடி மான்மான் என்று
குறுந்தடி தூக்கு வானைக்,
கொதிக்காதே நான் அம்மானே
எனஓர் பெண் கூறி நிற்பாள்!


( 30 )




( 35 )


குன்றச் சாரல், பிற

குன்றத்தின் "சாரல குன்றின்
அருவிகள் குதிக்கும் "பொய்கை"
பன்றிகள் மணற்கிழங்கு
பறித்திடும் "ஊக்கம, நல்ல
குன்றியின் மணியால், வெண்மைக்
கொம்பினால் அணிகள் பூண்டு
நின்றிடும் குறத்தியர்கள்
"நிலாமுகம பாரடா நீ!




( 40 )




குறத்தியர்

"நிறைதினைக் கதிர் முதிர்ந்து
நெடுந்தாளும் பழுத்த கொல்லைப்
புறத்தினில் தேர்போல் நீண்ட
புதுப்பரண் அமைத்து, மேலே
குறத்தியர் கவண்எடுத்துக்
குறிபார்க்கும் விழி, நீலப்பூ!
எறியும்கை, செங்காந்தள்பூ!
உடுக்கைதான் எழில்இடுப்பே!

( 45 )




( 50 )


மங்கிய வானில் குன்றின் காட்சி

மறைகின்றான் பரிதி; குன்ற
மங்கையோ ஒளியி ழந்து,
நிறைமூங்கில் இளங்கை நீட்டி
வாராயோ எனஅ ழைப்பாள்!
சிறுபுட்கள் அலறும்! யானை
இருப்பிடம் சேரும்! அங்கோர்
குறுநரி ஊளைச் சங்கால்
இருள்இருள் என்று கூவும்



( 55 )




( 60 )


நிலவும் குன்றும்

இருந்தஓர் கருந்தி ரைக்குள்
இட்டபொற் குவியல் போலே,
கருந்தமிழ்ச் சொல்லுக் குள்ளே
கருத்துக்கள் இருத்தல் போலே
இருள்மூடிற்றுக் குன்றத்தை!
நாழிகை இரண்டு செல்லத்
திரும்பிற்று நிலவு; குன்றம்
திகழ்ந்தது முத்துப் போலே!





( 65 )



எழில் பெற்ற குன்றம்

நீலமுக்காட்டுக் காரி
நிலாப் பெண்ணாள், வற்றக் காய்ந்த
பாலிலே உறைமோர் ஊற்றிப்
பருமத்தால் கடைந்து, பானை
மேலுற்ற வெண்ணெய் அள்ளிக்
குன்றின்மேல் வீசி விட்டாள்!
ஏலுமட்டுந் தோழா நீ
எடுத்துண்பாய் எழிலை எல்லாம்!


( 70 )




( 75 )


முகில் மொய்த்த குன்றம்

ஆனைகள், முதலைக் கூட்டம்,
ஆயிரம் கருங்குரங்கு,
வானிலே காட்டி வந்த
வண்முகில் ஒன்று கூடிப்
பானையில் ஊற்று கின்ற
பதநீர்போல் குன்றில் மொய்க்கப்
போனது; அடிமை நெஞ்சும்
புகைதல்போல் தோன்றும் குன்றம்!




( 80 )