பக்கம் எண் :

புகழ் மலர்கள்

தமிழ்நாட்டுத் தவக்கொழுந்தின் மறைவு!

நல்லதொரு நேரத்தில் பொல்லாச் சேதி
நாம்கேட்க ஆயிற்றா? தமிழர் தங்கள்
வல்லஒரு படைத்தலைவன் அறத்தின் மிக்கான்
மறத்தமிழன் சர்பன்னீர் செல்வன் இந்நாள்
இல்லை; அவன் மறைந்துவிட்டான் வரவேமாட்டான்
மீளாத விடைபெற்றான் என்கின் றார்கள்.
சொல்வதுண்டோ தமிழர்படும் துன்பந் தன்னைத்
தூர்ப்பதுண்டோ தமிழரது கண்ணீர் ஊற்றை!

நாட்டுரிமை யின்பேரால் தமிழர் தம்மை
நச்சரவுக் கூட்டத்தார் காய்த்துக் கொண்டு
கேட்டையெலாம் தமிழர்க்குத் தந்து தங்கள்
கிளையோடு நலத்தையெலாம் உறிஞ்சு தற்கே
மாட்டவந்தார் இந்தியினைத் தமிழ ரெல்லாம்
மறுத்துநின்று போரிட்டார் வெற்றி கண்டார்!
தோட்டமுதம் தமிழர்உணும் நேரம் பன்னீர்
செல்வனையோ பிரிவுற்றுத் திகைக்க வேண்டும்!

தமிழர் நலம் காப்பதற்கு நீதிக்கட்சி
தமிழ்நாட்டில் தோற்றுவித்த அறிஞர்க் குப்பின்
சமர்விளைக்கத் தலைவனின்றி யிருந்த காலை
தனித்துவந்தோன் தமிழர்பிரான் இராம சாமி
"நமரங்காள் அஞ்சாதீர என்றெழுந்தான்!
நன்றெனவே உடனெழுந்தான் பன்னீர் செல்வன்
தமிழர்பிரான் தன்னருமைப் படைத்தலைவன்
தனையிழந்தால் சலியாதோ ? சலியா உள்ளம்!

ஆரியரின் சூழ்ச்சியினால் கனத்த மண்ணை
ஆழ்உழுது ஒற்றுமையை விதைத்தும் வாழ்வு
நீரளித்தும் தமிழர்நலம் என்னும் வாழை
நிலையுயர்ந்து பூத்துக்காய்த் திருக்கு மட்டும்
சீரியநற் றொண்டு செய்தான் பன்னீர் செல்வன்
செந்தமிழர் தமைஇந்நாள் பிரிந்தான்-அந்தோ!
கோரியநற் பழம்பழுக்கும் தமிழ்நாட்டார்கள் கூடிஉண்பார் அவனை எண்ணி இரங்குவாரே!

இங்கிலாந்தில் இந்தியரின் அமைச்ச ரின்பால்
இருந்துதவக் கோரியதால் பன்னீர் செல்வன்
மங்கியுள்ள தமிழர்நலம் கோரிச் செல்ல
மணங்கொண்டான், தனதுநலம் மறுத்த செம்மல்!
துங்கமுறு தமிழரது செல்வந் தன்னைச்
சுமந்துசென்ற ' அனிபால் ' ஆ காய ஊர்தி
இங்குள்ள படைச்சிறியர் களிப்புக் கொள்ள
இட்டதுவோ நடுக்கடலில் துயர்தான் என்னே!

"தமிழ்நாடு தமிழ்ர்க்குத் தமிழர் நாட்டில்
சனியாக வந்துள்ள ஆரி யர்கள்
நமரல்லா நம்பகைவர் அந்நாள் தொட்டே!
நமதுகலை வாழ்க்கைமுறை வேறே உண்டு
நமையேநாம் நம்பிடுவோம்! பிறரின் சூழ்ச்சி
நஞ்சுதனை விலக்கிடுவோம்!' என்று சொல்லும்
அமுதான மொழிகளெல்லாம் பன்னீர் செல்வன்
அழகியவாய் இருந்துவரக் கேட்பதுண்டே!

தஞ்சைபெற்ற தமிழ்நாட்டுத் தவக்கொ ழுந்து
தமிழ்மொழியின் படையாட்சி யுடைய நம்பி
நெஞ்சையள்ளும் பெருந்தன்மைச் செயல்ப டைத்தோன்
நிறைசெல்வன் குறைவற்ற பன்னீர் செல்வன்
பஞ்சையுளத் தானல்லன்; கொள்கைக் காகப்
பரிந்துபோ ராடும்அண்ணல் மறைந்தான் இங்கே!
மிஞ்சுமவன் பெரியபுகழ் மறைவதில்லை
மிகுதமிழர் அவன்நன்றி மறப்பதுண்டோ!




( 5 )





( 10 )




( 15 )





( 20 )





( 25 )




( 30 )





( 35 )



( 40 )





( 45 )





( 50 )




( 55 )
தமிழுக்கு உயிர்தந்த நடராசன்

இந்தி எதிர்ப்புப் போரில் சிறைக்குச் சென்றான்.
இளங்காளை நடராசன்; சென்னை வாசி;
அந்தமுறும் இலக்குமணன் அம்மாக் கண்ணாம்
அருந்தமிழர் பெற்றெடுத்த மருந்து போல்வான் ;
செந்தமிழிற் பற்றுடையான்; உத்தியோகச்
சிறு வாழ்வில் வெறுப்புடையான்; கைத்தொழில்மேல்
சிந்தைவைத்தான் பயின்றுவந்தான் திறமை யுள்ளான்;

தமிழ்நாட்டில் இந்தியினைக் கட்டா யத்தால்
சாரவிட்டால் தமிழ்சாகும் எனநினைத்தான்
அமுதொத்த தன்தமிழின் நிலைக்கு நொந்தான் ;
அண்டை அயற் பெரியார்பால் தனக்கேற் பட்ட
சமுசயத்தைத் தெரிவித்தான். உணவு நீத்தான்
சதாகாலும் இதே நினைவாய் இருந்து வந்தான்
தமிழகத்தார் எல்லார்க்கும் உணர்வு காட்டித்
தன்உருவம் காட்டிவிட்ட தமிழ்ப்பிராட்டி

நடராசன் எதிரேயும் வந்து நின்று
நானில்லா விடில்நீயும் இல்லை என்று
படபடத்த இதழாலும் துயர்க்கண் ணாலும்,
பகர்ந்து சென்றாள். வாழ்கதமிழ் வாழ்க ! வாழ்க !
இடரான இந்திமொழி வீழ்க ! வீழ்க !
என்றுரைத்தான் தமிழரிடம் தமிழ்நாட் டின்கண்!
அடாதசெயல் இதுஎன்றார் இந்திச் சர்க்கார்
அழகியோன் தான்தன்னைச் சிறையிற் காண்டான்.

நெஞ்சத்தில் வீற்றிருந்த தமிழ்த்தா யோடு
நெடுஞ்சிறையில் நடராசன் இருந்தான். அன்னோன்
கொஞ்சுமொழி தனைநினைத்துப் பெற்றோர் உற்றோர்,
கொடுஞ்சிறைக்கு வெளியினிலே இருந்தார், மற்ற
வஞ்சமிலாத் தமிழரெலாம் நடரா சன்பேர்
வாழ்த்திக் கொண்டிருந்தார்கள் சிலநா ளின்பின்
வெஞ்சுரந்தான் கண்டதுவாம், அதுநாள் தோறும்
மேலோங்கலா யிற்றாம் மெலிவுற்றானாம்.

சாக்காட்டின் ஒட்டினிலே தவிக்கும் போது,
தமிழ்நாட்டைத், தமிழ்ர்களைப் பெற்றோர் தம்மைப்
பார்க்குமோர் ஆசைவந்து படுத்தும் போது
பழியேற்க அஞ்சாத சிறைத் தலைவர்
ஆக்கினைஒன் றிட்டாராம்! நடரா சாநீ
அரசினரை மன்னிப்புக் கேட்டுக் கொண்டால்
பாக்கியனாய் விடுதலையைப் பெறுவாய் என்றார்.
பைந்தமிழன் தன்நிலையை எண்ணலானான்.

மன்னிப்புக் கேட்டிடுவாய்; தமிழர்க் குள்ள
மானத்தை இழந்திடுவாம் என்று கூறிச்
சின்னபுத்தி அதிகாரி கேட்டு நிற்கச்.
செந்தமிழ்த்தாய் உன்அன்பின் அடையா ளத்தை இந்நிலையிற் காட்டுகநீ மைந்தா, மைந்தா
என்றேதன் தாமரைகை ஏந்தி நின்றாள்.
மன்னாதி மன்னர்களின் வழியில்வந்த
மாத்தமிழர் பழம்பெருமை பறிபோ காமே
காக்கஎன்று நின்றிருந்தார் கூட்ட மாகக்
கண்ணாலும், சிரிப்பாலும் தனது காதற்
போக்குணர்த்தி வந்தஓர் இளைய நங்கை
பூமானை, அன்புதர வேண்டி நின்றாள்.
வாய்க்கும் இவை அத்தனையும் நடராசன்தன்
மனோலோக நடைமுறையாம். என்ன செய்வான்.
ஆர்க்கும் முரசம்போல் 'மன்னிப்புக் கேளேன்' !
அருஞ்சிறையில் சாவற்கும் அஞ்சேன் என்றேன்.

தனைத்தந்தான் எனக்கென்றாள் செந்த மிழ்த்தாய்
தகதகெனக் களியாட்டம் ஆடா நின்றாள்!
தனக்கென்று வாழாத தமிழா என்று
தமிழரெலாம் அவன்பேரைப் பாடா நின்றார்!
தனிப்புகழ்சேர் நடராசன் தன்னைப் பெற்றோர்
தமிழுக்குப் பெற்றோம் என்றகம கிழ்ந்தார்!
நனித்த நறுங்காதலிதான் தேம்பி நின்றாள்!
தமிழ் வீரன் நடராசன் இறந்து போனான்.

அன்னவனின் புகழ்இந்தத் தமிழ்நாட் டின்கண்
ஆர்ந்ததற்குக் காரணத்தை அறிவிக் கின்றேன்
சின்னதொரு கல்வியினால் தறுக்குக் கொண்டு
தீமையெலாம் மக்களுக்குச் செய்து கொண்டு
தன்னலத்தை எண்ணி எண்ணித் தமிழர் நாட்டைத்
தரைமட்ட மாக்குகின்றான் அவர்போ லின்றி
இன்தமிழி்ற் கல்விகற்றான் நடரா சச்சேய்
எழில்பெற்றான் புகழ்பெற்றான் எல்லாம் பெற்றான்.



( 60 )





( 65 )




( 70 )




( 75 )





( 80 )




( 85 )





( 90 )




( 95 )





( 100 )




( 105 )




( 110 )





( 115 )





( 120 )




( 125 )
சீவானந்தம் புகழுடம்பிற்குப் புகழ்மாலை

சீவாநந்தத்தின்
     தமிழ்த் தொண்டு செப்புகிற
'நா' ஆனந் தத்தை
     நணுகுமன்றோ-பாவாணர்
நல்லாரைப் பாடியன்றோ
     நல்லின்பத்தைப் பெற்றார்
பொல்லாரைப் பாடுவரோ போய்?

சீவாவினவறிந்த
     நாள்முதல் செந்தமிழ்ச்சீர்
காவாத நேரத்தைக்
     கண்டவர் யார்? நாவாரச்
     சொற்பெருக் காற்றாத்
துறையுண்டா? யார்க்குமவர்
      பொற்பெருகச் சீறும் புலி.

பாட்டெழுதக் கேட்டிடுவார்
     பன்னாளும் ஓர் நாள், நீர்
பாட்டெழுதும், என்று
     பகர்ந்திட்டேன் -- கேட்ட அவர்
ஏழை நிலை எண்ணி
     எழுதிய பாட்டொவ்வொன்றும்
வாழவகை செய்யும் மருந்து.

இறைக்கஞ்சி ஏங்கும்
     தலைவர்போல் அன்றிச்
சிறைக்கஞ்சா சிங்கத்தைச்
     சாவு மறைத்ததனை
எண்ணினால் நெஞ்சம்
     இறங்கும், தமிழின்நிலை
எண்ணினால் கண்ணிர் வரும்!

எப்போது பெண்கொண்டார்?
     இல்லத்தில் மக்கள் தமை
எப்போது கையில்
     எடுத்தணைத்தார்? -- முப்போதும்
மாசுடையும் மாற்றாத
     சீவாவுக் கூர்ஊராய்ப்
பேசுவது தானே பெரிது.

தாமரைக்கோர் ஆசிரியர்
     தாய்மொழிக்கோர் ஆய்வாளர்
ஊமரையும் பேசவைக்கும்
     உண்மையிதழ்த் 'தாமரை'யோ
கல்விப் பசிக்கு நல்
     கட்டமுது! கற்றாரை
வெல்விக்கும் வெற்றி முரசு
.
நாட்டுக்குப் பேசித்தன்
     நாட்டுக் கெழுதி உயிர்
நாட்டுக்கே நல்கிய
     'சீவா'வை -- நாட்டில்
இருக்கும் படிசெய்வோம்!
     கல் நாட்டிச் சீர்த்தி
பெருக்கும் படிசெய்வோம் நாம்!
இருந்தும் வரைந்தார்
     இறந்தும் வரையத்
திருந்து புலவரையும்
     செய்தார்! -- விருந்தினரைத்
தாமரை என்றும்
     தழுவவைத்தார் ஆதலினால்
நாமவரை நாளும் மறவோம்.

தாங்கொண்ட கொள்கை
     தழைக்கப் பெரிதுழைப்பார்
தீங்குவரக் கண்டும்
     சிரித்திடுவார் -- யாங்காணோம்
துன்பச் சுமைதாங்கி!
     சீவானந்தம் போன்ற
அன்புச் சுமைதாங்கும் ஆள்,

சீவா புகழ்காப்போம்!
     செம்மல் மனைமக்கள்
மூவா மகிழ்ச்சியினில்
     மூழ்க வைப்போம் -- சீவா
தொடங்கிய வற்றைத்
     தொடர்ந்து முடிப்போம் .
நடுங்கோம் தமிழ்மீட்க நாம் !


( 130 )





( 135 )




( 140 )





( 145 )





( 150 )




( 155 )





( 160 )





( 165 )





( 170 )



( 175 )





( 180 )





( 185 )




( 190 )





( 195 )
எஸ். இராமநாதன்

                   (உரைமுழக்கம்)

நெல்வேலிச் ஜில்லாவில் ஆண்டு தோறும்
        நிகழுசுய மரியாதைப் பெரிய கூட்டம்
சொல்வாய்ந்த தூத்துக்கு டிக்கண் இன்று
        தொடங்கினார் என்பதையும் அவ்வி டத்தில்
வல்லாளர், நல்லறிஞர், செல்வர் யாரும்
        வந்திருந்தார் என்பதையும் அக்கூட்டத்தில்
எல்லாரும் எஸ்ராமநாதன் தன்னை
        எழிற்றலைவ னாய்க்கொண்டார் இதையும்கூறி,

சிறப்பாய்இந் நாட்டினுக்கும் பொதுவாய் மற்றத்
        தேசத்து மக்களுக்கும் ராம நாதன்
அறப்பாதை இதுவென்றே கூறிவிட்டார்
        அம்மொழியை நன்றாக எடுத்துக் காட்டி,
"நிறப்பேச்சை மதப்பேச்சைச் சாதிப் பேச்சை
        நிறுத்துங்கள் வாழுங்கள் என்றார அந்தத்
திறப்பேச்சைக் குறிப்பாகச் சொல்லிக் காட்டிச்
        செகமதிர வீராநீ முரசறைவாய்.

மதங்கள் எனும் படுகுழிகட்கு அப்பா லன்றோ
        மக்களது முன்னேற்றம் உண்டென்கின்றார்
இதங்கனிந்த நெஞ்சத்தால் ராம நாதன்
        இசைக்கின்றார் ஓகோகோ வீரா! இந்நாள்
மதங்கொண்ட யானைமேல் முரசம் ஏற்றி
        வையத்தார் எழுச்சியுறக் குணிலை ஓச்சிச்
சதங்கூறி முழக்கஞ்செய்! மக்கள் யாரும்
        சமம்என்று முழக்கஞ்செய் முழுக்கஞ் செய்நீ.

கொடுமையெலாம் உறைவிடத்தைக் கோயி லென்றும்
        கொடுமைகளின் பொக்கிஷத்தை நூற்களென்றும்
மடுமொழிகள் பேசுவதும் தீண்டோ மென்றும்
        மக்களை விலக்குவதும் அறிவுக் கொவ்வா
நெடுமூடப் பழக்க வழக்கங்கள் கொண்டு
        நிலஞ்சிரிக்க வாழ்வதுண்டோ என்று சொன்னார் விடுதலைகொள் நெஞ்சத்தால் இராம நாதன்
        விளம்பியதை விளம்பிமுரசறைவாய் நன்றே.

விடுதலைப்பெண் மக்களினை நமதுநாட்டில்
        வெற்றடிமைப் பெண்மக்க ளாக்கி விட்டார்!
கெடுதலையை நீக்குங்கள்! வறுமைப் பேயைக்
        கிழித்துப்போ டுங்கள்! விஞ் ஞானத் தேர்ச்சி
அடையுங்கள் எத்தொழிற்கும் ஆலைக் கூட்டம்
        அமையுங்கள் அழையுங்கள் புதிய வாழ்வைக்
கொடையன்பர் இராமநா தன்சொல் வாழ்த்திக்
        கொட்டடா முரசத்தை! அன்னார் வாழி!



( 200 )




( 205 )





( 210 )





( 215 )




( 220 )





( 225 )





( 230 )




( 235 )
இ.மு. சுப்பிரமணியம்

               (சந்திரசேகரப் பாவலர)

நேர்மை நீதி அஞ்சாமை
      நிறைந்த பன்னூல் தேர்புலமை
சீர்மை கணிய நூலறிவு
       சித்தாந்தத்தில் பேரறிவுக்
கூர்மை, ஆரியக் கூட்டத்தைக்
       குப்பைக் கூளப் புராணத்தைத்
தீர்ப் புரைக்கும் திறனாய்வால்
       தெளியச் செய்தான் தமிழ்நிலமே!

செந்தமிழுக்குத் தீதென்றால்
       சிறுகுறும்பு பார்ப்பனர்கள்
முந்துவார்கள் அவர்கள் தம்
       மூக்கறுக்கும்படிச் செய்யும்
தந்தை பெரியார்க் கொரு துணைவன்
       தமிழன் குடியர சேடுதனில்
சந்திர சேகரப் பாவலனாய்
       சாய்த்தான் பார்ப்பார் கொட்டத்தை.

இராமா யணத்தின் இழிவெல்லாம்
       எத்துப் புலவர் கூற்றெல்லாம்
பராவி வணங்கும் வால்மீகி
       பல்லைப் பிடித்துக் காட்டியவன் ;
வராத தீமை வந்ததெலாம்
       வழிபட்டேற்ற கம்பனவன்
திராவிடத்தில் செயும் தீமை
       தெரியச் செய்தான் இ. மு. சு.

பாரதத்தின் பார்ப்பனரின்
       பழக்க வழக்க ஒழுக்கமன்றி
வீரம் நீதி ஒன்றுமிலை
       வெட்கம் கெட்ட குடும்பத்தின்
சோரம் போன கதையென்று
       தோலுரித்துக் காட்டியதார்?
சாரம் மிகுந்த எங்களுயர்
       சந்திரசேகரப் பாவலனே!



( 240 )




( 245 )





( 250 )





( 255 )




( 260 )





( 265 )


மானவீரன் வ. உ. சிதம்பரன்

வெள்ளையன் கப்பலாலே
வரிந்தஇந் நாட்டின் செல்வம்
கொள்ளைகொண்டோடல் கண்டு
கொதிப்புற்ற சிதரம்பரன் பேர்
பிள்ளைதான் பேரூக்கத்தால்
பிழைக்கவந் தடிமை கொண்ட
நொள்ளையர் மாயச் செய்தான்
நோன்மைசேர் கப்பல் விட்டான்!

கடல்பிறக் கோட்டிச் சென்ற
கால்வழி வந்த எங்கள்
அடல்மிகு விடுதலைப்போர்
அரிமாக்கள் ஆயிரத்தை
தடந்தோளில் நெஞ்சில் சேர்த்த
தமிழனை நினைக்கும் வெள்ளைக்
குடலெலாம் கலங்கும் தூத்துக்
குடியதன் குடிமை காத்தான்.

இந்தியத் தலைவர் எல்லாம்
இந்திய வீரர் எல்லாம்
செந்தமிழ்ச் சிதம்பரத்தின்
செந்தணல் சிந்தனைக்கே
முந்தித்தம் செவிகொடுப்பார்
முடிவினை எடுப்பார் வெல்வார்.
அந்தமிழ்ப் பாரதிக்கும்
அவனன்றோ அரிய அம்மான்.

பகைவனைப் பரங்கிப் பேயைப்
பாரத நாட்டிருந்து
தகைப்பதும் உரிமை நாட்டில்
தலைநிமிர்ந் துயர்ந்து வாழ்தல்
வகையென வேங்கையாகி
வடக்கொடு தெற்கனைனதும்
தொகை தொகை மறவர் கூட்டம்
தொகுத்தனன் வெடிமருந்தாய்!

விடுதலை மறவனுக்கு
வெள்ளையர் சுரண்டல் கூட்டம்
கெடுதலை கோடி தந்தார்
உலகினைக் கெடுக்க வந்தார்
படுகொலை வழக்கு நூறு
பாய்ச்சினர்; சிறைக் கோட்டத்துள்
கொடுதலை என்றார், வீரச்
சிறுத்தையா கோழை யாகும்?

கல்லுடை என்றார் வெள்ளைக் காரரின் அதிகாரத்தின்
பல்லுடைப் பதனைப் போல
பாறைகள் உடைத்தார், நெஞ்சின்
மல்லுடைத் திட்டதில்லை
மறத்தமிழ் நெஞ்சம் இன்பச்
சொல்லுடைபடாத பாக்கள்
சொல்லிடும் துயர் துடைக்கும்!

திக்கெலாம் திருட வந்த
சிவந்ததோல் பரங்கியர்கள்
வெட்கிட புரட்சித் தீயின்
வெடிகளாய்ச்சி தம்பரத்தின்
சுக்கு நூறாக்கும் தோழர்
தொல்லைகண்டிடிந்த போது
செக்கினை இழுக்கச் செய்தார்
சிதம்பரப் பெரியோன் தன்னை.

எண்ணெயைப் பிழிவதைப் போல்
ஏ வெள்ளைக் கார ரேநும்
மண்டையைப் பிழிவோம் என்று
மனத்தினில் எண்ணி எண்ணி
கண்ணீரைப் பொழிந் திடாமல்
கடுந்துயர் உள்ளம் கொள்ளும்;
திண்ணையில் பார்ப்பனர்கள்
தெருச்சோறுண் டுவகை பூப்பார்!

மூவாயுள் கடுஞ் சிறைக்குள்
மூடினார் சிதம்பரத்தைச்
சாவாயுள் விழுங்குதற்கும்
தவித்தது தமிழ் மானத்தை!
நோய்வாயில் புகுத்து தற்கும்
தோற்றது சிறை நொடிப்பு.
மாவாயில் திறந்ததோர்நாள்
மானவேள் வெளியில் வந்தான் .

உடல் பொருள் ஆவியெல்லாம்
உற்றநாட்டு டுரிமைப் போர்க்கு
கெடல்இல்லை என இழந்தோன்
கீழ்ப்பட்ட சிறையிருந்து
மடங்கலாய் வந்தான்; ஆனால்
ஆரிய மடியில் வாழ்ந்தோர்
அட்டவோ சிதம்பரத்தை
அணுகிடக் கூசினார்கள்,

நன்றிகெட் டுயிர் வாழ்கின்ற
காங்கிரசியக்கத் தார்கள்
பன்றிக்கும் கீழ்ப்பட்டோரே
பரங்கியன் சுரண்டற்குப்பின்
வென்றி என்றுவப்பதெல்லாம்
வெற்றுவேட்டு ரிமை யாகும்
என்றிவர் வாழ்வார்? இல்லை
இடியுண்ட மரம்போல் வீழ்வார்
( 270 )




( 275 )




( 280 )




( 285 )






( 290 )





( 295 )




( 300 )





( 305 )





( 310 )




( 315 )





( 320 )




( 325 )





( 330 )





( 335 )




( 340 )




( 345 )





( 350 )




( 355 )

பவானந்தம் பிள்ளை

ஆங்கில மொழியின் அறிவிருந்தாலே
தாங்கள் உயர்ந்தவர் தமிழுக்குத் தாம்செயும்
தொண்டு பெரிதென்று சொல்விப் பார்ப்பன
நண்டுகள் வளையிலே நாடகம் நடத்தும்
பண்பிலாச் செயலி்ல் பலர் இங்கிருக்கையில்
கண்இழக்காத கற்றவர் சான்றோர்
சிவானந்தத்திலே சிந்தை செலுத்தா
பவானந்தத்தின் பணியை எண்ணினால்
உண்மை அறிஞனின் உழைப்பை எழுதிடும்
வண்ணம் தமிழுக்கு வரவில்லை என்பேன்,

சொல்லும் செயலும் ஒழுக்கத் திணைய
மெல்லிதழ் முறுவல் முகத்தில் மிதக்கப்
பழமையில் பழுத்தவன் ; புதுமையில் மலர்ந்தவன் ;
புலமையில் சீர்த்த தெளிவு பெற்றவன் ;
இலக்கியம் இலக்கணம் எண்ணிக் கற்றவன் ;
அன்பில் விளைவதே அறமெனக் கொண்டவன் ;
தென்பில் செந்தமிழ்க் குழைப்பதில் தேர்ந்தவன்!

ஒருநாள் நீலப் பட்டாடை உடுத்தே
அரும்பொன் வேலைப் பாடுகளுடனே
தொழில்திறம் காட்டி விழிமுன் ஆடினாள்;
அழகி நீ யாரென 'அந்தமிழ்' என்றாள்
"புத்தக வடிவிலே பொலிந்த நூல்மகள்
பிள்ளை பவானந்தம் பெற்றவள என்றாள்.

அன்னைநீ அன்னைநீ கன்னித்தமிழுனை
மடங்களின் சோற்றால் வயிறு வளர்ப்பவர்
கிடங்கிலிருந்து கிளர்ந்தெழு ஞாயிறாய்
அனைவர்த்கும் உன் அருமை விளங்க
ஒளியை உண்ண வெளிப்படுத் தியவன்
தெளிந்தவன் சிறந்த கல்வியில் தேர்ந்தவன்
பதிப்பித் தீந்தான் மதிப்பித் தீந்தான்
வாழிய அவன்திறம்! வண்டமிழ்த்
தாயினைத் தந்த தமிழனே வாழ்க!


( 360 )




( 365 )




( 370 )





( 375 )




( 380 )





( 385 )