பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு119

Untitled Document
760 தூய காற்றும் நன்னீரும்,
     சுண்டப் பசித்த பின்உணவும்,
நோயை ஓட்டி விடும், அப்பா?
     நூறு வயதும் தரும், அப்பா!

761 அருமை உடலின் நலமெல்லாம்
     அடையும் வழிகள் அறிவாயே;
வருமுன் நோயைக் காப்பாயே;
     வையம் புகழ வாழ்வாயே.

98. நாட்டுக்கு உழைப்போம்
762 என்றும் தமிழ்மக்கள் யாவரும் ஒத்திணங்கி,
ஒன்றித்து நின்றால் உயர்வுண்டாம்; - அன்றெனில்,
மானம்போம், செல்வம்போம், மானிட வாழ்விற்குரிய
தானம்போம், யாவும்போம், தாழ்ந்து.

763 பண்டைத் தமிழர் பழம்பெருமை பாடிஇன்னும்
மண்டை யுடைத்து வருந்துவதேன்? - அண்டும்இக்
காலத்திற் கேற்றகல்வி கற்றுக் கடைப்பிடித்து
ஞாலத்தில் வாழ்ந்திடுவோம் நன்கு.

764 வாணிகம் செய்வோம்; வயலிற் பயிர்செய்வோம்;
காணரிய கைத்தொழிலும் கண்டு செய்வோம் - பேணிநம்
சந்தத் தமிழ்வளர்ப்போம்; தாய்நாட்டுக்கே உழைப்போம்;
சிந்தை மகிழ்ந்து தினம்.

765 தெய்வம் தொழுவோம்; திருந்தத் தமிழ்கற்போம்;
செய்வினையும் நன்றாகச் செய்திடுவோம் - ஐயமின்றி
எவ்வெவ் வறமும் இனிது வளர்த்திங்குச்
செவ்வையுற வாழ்வோம் தினம்.

99. பிஜித் தீவுத் தமிழருக்கு வாழ்த்து
766 தென்னாடு விட்டேகித் தீவாந்; தரத்தையெலாம்
பொன்னாடாய் மாற்றிப் புரந்திடுவோர் - எந்நாளும்
ஓங்கும் அறிவால் உழைப்பால் பெரும்புகழைத்
தாங்கும் தமிழரே தாம்.