பக்கம் எண் :

172கவிமணியின் கவிதைகள்

Untitled Document
157. தில்லைப் பொருட்காட்சி

1081 தேசம் செழிப்படையச் செய்கருமம் நன்றாக
மாசில் புகழும் வளர்ந்தோங்க - ஈசனருள்
முந்தியெழுந் தில்லை முதுநகரின் காட்சியெலாம்
வந்தின்று காண்பீர் மகிழ்ந்து.

1082 கைத்திறன் கண்டோம் கதரின் பெருமை கண்டோம்
உத்தமநம் நாட்டின் உயர்வுகண்டோம் - அத்தன்
அருட்காட்சி கண்டதிரு வாதிரையில் தில்லைப்
பொருட்காட்சி கண்ட பொழுது.

1083 பண்டிழந்த செல்வமெலாம் பாரதத்தாய் கண் குளிரக்
கண்டுகண் டுள்ளம் களித்தனளே - தொண்டர்சீர்
நாடும் சிதம்பர நன்னகர்க்கிங் நாள்வாய்த்த
ஈடில் பொருட்காட்சி யில்.

1084 நல்லநல்ல பஞ்சிருக்க நங்கை துணையிருக்க
மில்லில் எழும் ஆடை விரும்புவதேன்? - இல்லிடத்தே
வெண்ணெய் இருக்க விலைக்குநெய் வாங்குவது
கண்ணியமோ புண்ணியமோ? காண்.

1085 கப்பற் படையைக் கடற்படையை ஓட்டுபடை
எப்பொழுதும் ஏழைகளுக் கேற்றபடை - இப் புவியில்
சாந்தியினைப் போற்றுபடை சர்க்காப் படை எங்கள்
காந்திமகான் கைப்படையே காண்.

1086 பாடுபட்டுத் தேடும் பணமெல்லாம் பாரதநல்
நாடுவிட்டுப் போதல் நலமாமோ? - கேடில்
பருத்தி பயிர்செய்வோம் பஞ்செடுப்போம் நூற்போம்
திருத்தமுற நெய்வோம் தினம்.

1087 கைத்தொழிலே மெய்த்தொழிலாம் கைகூப்பும் சேவகமே
பொய்த்தொழிலாம் என்னுமொழி போற்றியே - இத்தரையில்
வாழ்வை நடத்தும் வலிமை யுடையவர்க்குத்
தாழ்வில்லை என்றுமே தான்.