பக்கம் எண் :

228கவிமணியின் கவிதைகள்

Untitled Document
1347 புண்ணியஞ் செய்தவர் வாழும்நாடு - நெல்லைப்
     பொன்மலை போலக் குவிக்கும்நாடு;
எண்ணும்பல தொழில் செய்யும் நாடு - நீதி
     ஏந்திய செங்கோல் வளர்க்கும் நாடு.
1348 கொண்ட நிலத்தில் விளைந்து வரும் - அந்தக்
     கூழும் அமுதாகக் கொள்ளும் நாடு;
கண்டு தொழுதுகை கூப்பி நின்று - பெறும்
     காசை விடமாகக் காணும் நாடு.
1349 வெற்றி சுதந்திரம் வேண்டும் நாடு - சாதி
     வேற்றுமை என்றும் வெறுக்கும் நாடு;
ஒற்றுமையாக ஒழுகும் நாடு - தேச
     ஊழியத் தாலே உயரும் நாடு.
1350 தென்றல் உலவித் திரியும் நாடு - உடற்
     சீக்கெல்லாம் ஓட்டித் துரத்தும் நாடு;
என்றும் தழைத்தறம் ஏறும் நாடு - வையத்து
     ஏதும் இணையிலா நாஞ்சில் நாடே.

262. கைத்திறன்
1351 வெயில்வரினும் மழைவரினும் விரிகுடையாம் கையே;
வெயர்வைவரின் ஆற்றுசிறு விசிறியதாம் கையே;
துயிலவொரு மகவைத்தொட்டில் இட்டசைக்கும் கையே;
துரிதமுடன் எழுதவொரு தூவிகொளும் கையே!

1352 இனியசெந்நெற் புலம்உழுதற் கேர்பிடிக்கும் கையே!
இன்னிசைகள் கல்லெறியும் கவண்பிடிக்கும் கையே;
கனியுதிர்ப்பக் கல்லெறியும் கவண்பிடிக்கும் கையே;
கண்களிப்பப் படமெழுதிக் காட்டும் என்றன் கையே!

1353 தானதர்மம் செய்ய ஏதும் தளர்விலதாம் கையே;
தளர்பவரைக் கண்டுதலை தாங்கஎழும் கையே;
பானம்செய்தற் கேற்றவொரு பாத்தரமாம் கையே;
பையரவைப் போவந்து பயமுறுத்தும் கையே!

1354 மலரெடுத்து நல்லசெண்டு மாலைகட்டும்கையே;
வாய்க்கினிய பண்டமெலாம் வைத்துதவும் கையே;
சலமதனில் ஓடம்விடச் சலிப்பிலதாம் கையே;
தரையில் மோட்டார் ரயில்நடத்தச் சமர்த்துளதாம் கையே!