பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு23

Untitled Document
இலக்கியம் (3)

21. உரையாசிரியர்
106 கண்ணைக் கெடுப்பர் கவிராயர்; அக்கண்ணை
எண்ணி உரைகாரர் ஈவாரே - மண்ணுலகில்
ஆக்கு பவரோ அழிப்பவரோ மேலாவார்?
நோக்கிநீ உண்மை நுவல்.


22. கவிதை
107   வண்டி அற்புதப் பொருளாம் - வண்டி
     மாடும் அற்புதப் பொருளாம்;
வண்டி பூட்டும் கயிறும் - என்றன்
     மனத்துக் கற்புதப் பொருளாம்.

108   வண்டல் கிண்டி உழுவோன் - கையில்
     வரிவில் ஏந்தி நின்ற
பண்டை விஜயன் போல - இந்தப்
     பாரில் அற்புதப் பொருளாம்.

109   பறக்கும் குருவி யோடென் - உள்ளம்
     பறந்து பறந்து திரியும்;
கறக்கும் பசுவைச் சுற்றி - அதன்
     கன்று போலத் துள்ளும்.

110   ஈயும் எனக்குத் தோழன் - ஊரும்
     எறும்பும் எனக்கு நேசன்;
நாயும் எனக்குத் தோழன் - குள்ள
     நரியும் எனக்கு நண்பன்.

111   கல்லின்கதைகள் எல்லாம் - இரு
     காது குளிரக் கேட்பேன்;
புல்லின் பேச்சம் அறிவேன் - அதைப்
     புராண மகா விரிப்பேன்.

112 அலகில் சோதி யான - ஈசன்
     அருளி னாலே அமையும்
உலகில் எந்தப் பொருளும் - கவிக்கு
     உரிய பொருளாம், ஐயா!