பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு239

Untitled Document

2. மாமி அரசியற் படலம்

1392 155   இவர்கதை இவ்வா றாக, இனிஎன்
மாமி கதையை வகுப்பேன் கேளும்.
அரங்கு பூட்டாம், அறைப்புரை பூட்டாம்;
தட்டுப் பூட்டாம், சாய்ப்புப் பூட்டாம்;
அரிசியை நிதமும் அளந்து வைப்பாள்,

  160   நல்ல மிளகை நறுக்கி வைப்பாள்,
கொல்ல மிளகைக் குறக்கி வைப்பாள்,
உப்பில் புளியை உருட்டி வைப்பாள்,
கறிக்குத் தேங்காய் கருக்கி வைப்பாள்,
கடுகையும் எண்ணிக் கணக்கிட்டு வைப்பாள்;

  165   தீபா வளிக்குத் தீபா வளியே
எண்ணெ யறியும் என்தலை, அம்மா!
அரைக்க மஞ்சள் அளித்திடா மாமி
குளிக்க மஞ்சள் கொடுத்திடு வாளோ?
உம்மே லாணை, ஒருநா ளாகிலும்

  170   கஞ்சியோ கூழோ காடி நீரோ
கும்பி யாரக் குடித்ததே யில்லை;
கந்தைத் துணிகள் கட்டின தல்லால்,
கண்டாங் கிகளைக் கண்டதே யில்லை,
அடுக்களை நடையே நிலைய மாயினும்

  175   அங்கும் இங்கும் ஆக அவ்வீடு
எங்கும் இருப்பாள் எங்கள் மாமி.
இவளொரு கண்ணுக் கிணை அவ் இந்திரன்
ஆயிரம் கண்ணும் ஆகா துண்மை
பின்னே நோக்கினும் முன்னுள தறியும்;

  180   முன்னே நோக்கினும் பின்னுள தறியும்;
எறும்பும் காணா இடத்திவள் காண்போம்;
புகையும் நுழையா இடத்திவள் புத்திபோம்.
ஆணாய்ப் பிறந்தால் அகிலம் ஆளுவாள்;
இருகண் இருப்பின் இடமிது போதுமோ?