பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு25

Untitled Document
25. கவியமுதம்
120   அம்புவிக்கு வாய்த்த அருட்கவி, ஐயமின்றி
உம்பரமு தொத்த உயிர்க்கவி - கம்பனும்தன்
மந்திரச் சொல்லால் வனைந்தகவி, என்றேனும்
வெந்திடுமோ, தீயால்? விளம்பு.

வேறு

121   ஓலை எரியும் தாளெரியும்
     உள்ளத் தெழுதி வைத்துநிதம்
காலை மாலை ஓதுகவி
     கனலில் வெந்து கரிந்திடுமோ?

122   சிந்தை மகிழ விழாக்கண்ட
     தேர்ந்த புலவர் முன்வந்து
சந்த மெழவே பாடுகவி
     தழலில் வெந்து நீறாமோ?

123   உள்ளத் துவகை பொங்கியெழ
     உரைகள் சொல்லப் பொருளேறித்
தெள்ளத் தெளிந்த கவியமுதம்
     தீயில் வெந்து பொடியாமோ?

26. திருவள்ளுவர்
124   வையம் புகழ்ஞானி வள்ளுவன் மக்களெலாம்
உய்யும் படிமுப்பால் ஓதினான் - ஐயமின்றி
இம்மை மறுமை யிரண்டுக்கும் நேர்வழியைச்
செம்மையிற் கண்ட தெளிந்து.

125 ஜாதி மதபேதம் சற்றேனு மின்றி நடு
நீதி நிலைகண்ட நீள்புகழோன் - கோதிலாச்
செந்தமிழ்ச் செல்வன் திருவள் ளுவன்பாதம்
சிந்தையிற் கொள்வோம் தினம்.

126 புத்தகம் நூறு புரட்டிக் களைப்புற்றச்
சித்தம் கலங்கித் திகைப்பதேன்? வித்தகன்
தெய்வப் புலவன் திருவள் ளுவன்சொன்ன
பொய்யில் மொழியிருக்கும் போது.