பக்கம் எண் :

292கவிமணியின் கவிதைகள்

Untitled Document
நாஞ்சில் நாட்டு வேளாளர் பாக வழக்கு
கண்ணன் துதி
1408 தஞ்சம் என்றவர் தம்மை அளிப்பவன்
கஞ்சன் மாமரு கன்கழல் போற்றுவோம்.
நஞ்செய் நன்னிலம் ஓங்கிய நாடதில்
விஞ்சுபாக வழக்கை விளம்பவே.

வேறு
காரணவரைக் கண்டு அனந்திரவர்கள் கூறுவது
1409 காணியெல்லாம் ஆளும் காரணவர் - உம்மைக்
கண்டு தொழுதிவை சொல்ல வந்தோம்;
வீணர் இவரென் றிகழ்ந்திடாமல் - கேட்டு
வேண்டும் விடைகள் பகரும், ஐயா!
1410 பற்றுப் பருக்கையும் உண்டுவிட்டீர் - வெறும்
பானையைப் பங்கிட வைத்துவிட்டீர்;
சற்றும் கருணை உமக்கிலையே? - எங்கள்
சங்கட முற்றும் அறிகிலீரோ?
1411 வட்டியிலே நெல் அளந்து நீர் - ஒவ்வொரு
மாதமும் தந்திட வேதனை ஏன்?
குட்டிக் கரணங்கள் போட்டிடினும் - இனிக்
கோர்ட்டு விதிகள் அழிவதுண்டோ?
1412 யானைக் குலத்து நீர் வந்தவரோ - நாங்கள்
ஏழை எறும்பின் குலத்தவரோ?
மான மிலாது பெரும்பங்கு கேட்டிட
வாயும் சிறிதுமே கூசலையோ!
1413 கைப்பொருள் எல்லாம் கடத்திவிட்டீர் - நூறு
கள்ளக் கடன்களும் காட்டிவிட்டீர்;
பப்படம் போல நொறுங்கிடோமோ? - இந்தப்
பாரமும் நாங்கள் பொறுப்போமோ?
1414 கூனக் கிழவிகள் கொட்டை நூற்று - முன்னம்
கூட்டி தேட்டம் எமக்கிலையோ?
ஆனபொருளில் அதிகம் எடுக்க - நீர்
ஆசைப் படுவது எக்காரணமோ?