பக்கம் எண் :

32கவிமணியின் கவிதைகள்

Untitled Document
169   நாட்ட மொழியுமவன் பாட்டினிசையில் - மிக்க
     நல்ல கற்கண்டினிமை சொட்டுமே, அடா!
ஏட்டிலிம் மந்திரந்தான் கண்டவருண்டோ? - ஈதவ்
     ஈசன் திருவருளென் றெண்ணுவாய், அடா!

170   உள்ளந் தெளியுமொரு பாட்டிலே, அடா! - மிக்க
     ஊக்கம் பிறக்குமொரு பாட்டிலே, அடா!
கள்ளின் வெளிகொளுமோர் பாட்டிலே, அடா! - ஊற்றாய்க்
     கண்ணீர் சொரிந்திடு மோர் பாட்டிலே, அடா!

வேறு

171   'கரும்புத் தோட்டத்திலே' - எனுங்கவி
     காதைச் சுடுகுதடா!
இரும்பு நெஞ்சமே - நீராய்
     இளகியோடுதடா!

172   'செந்தமிழ் நாட்டின்' - முதன் மொழி
     செவியிற் சேருமுன்னே,
அந்தமில் லாமல் - உள்ளத்தில்
     அமுதம் ஊறுதடா!

173   'பாப்பாப் பாட்டி'லே - நெஞ்சைப்
     பறிகொ டுத்தேனடா!
சாப்பா டேதுக்கடா! - சீனி
     சர்க்கரை ஏதுக்கடா!

174   அன்னை 'பாஞ்சாலி - சபதம்'
     அறைதல் கேட்டேனடா!
முன்னைக் கதையெல்லாம் - கண்ணின்
     முன் நடந்ததடா!

175   'வந்தே மாதரத்' தைப் - பாடவே
     வாய்தி றந்தவுடன்,
சந்தேக மில்லை - ஒருபுதுச்
     சக்தி தோன்றுதடா!

176 'எங்கள் நாடு' தான் - பூங்கா
     இசையி லேறிடுமேல்,
கங்கை யாறுபோல் - உள்ளத்தில்
     களிப்பொ ழுகதடா!