Untitled Document | | வெற்றிமேல் வெற்றி வென்று. வீர வெற்றி மாலை மிலைந்திட விருப்பம் எள்ளள வேனும்என் உள்ளத்து இல்லை. சிறுமை தந்திடும் தீவினை புரியேன்; பொறுமை நிதமும் போற்றி ஒழுகுவேன்; புழுதி நிறைந்த பூமி எனக்குப் பழுதி லாத பஞ்சணை யாகும். பாழிட மான பாலையை நல்ல வாழிட மாக மதித்து வாழ்வேன்; ஏழைப் பிராணி எதனொடும் அன்பாய்த் தோழமை பூண்டு துணைசெய் திடுவேன்; பணிசெய் பள்ளர் பறையர் அணியும் துணியை அரையில் சுற்றித் திரிவேன்; தெருத்தெரு வாகத் திரிந்து பெற்ற பருக்கையை உண்டு பட்டினி போக்குவேன்; குன்றும் குகையும் குத்துச் செடியும் அன்றி வேறெதும் அண்டி ஒதுங்கேன்; இரவும் பகலும் எவ்வெப் பொழுதும் பாரில் உயிர்கள் படுந்துய ரெல்லாம் புகுந்துஎன் உள்ளம் புண்படு கின்றது. ஆதலின், இன்ப வாழ்வை இகழ்ந்து நீக்கினேன்; துன்ப வாழ்வைத் துணிந்து போற்றினேன். சிறிய பெரிய தேவர் தம்முள் எல்லாம் வல்லார் எவரும் உளரோ? இரக்கமுள்ளார் இருக்கின் றனரோ? கண்ணால் அவரைக் கண்டவர் உண்டோ? வணங்கி நித்தம் வழிபடு வோர்க்குஅவர் செய்திடும் நன்மை சிறிதும் உளதோ? எத்தனை எத்தனை எத்தனை மனிதர் காலை மாலை கண்கள் இரண்டும் மூடி யிருந்து முணுமுணு வென்று செபங்கள் நிதமும் செபித்திடு கின்றனர்? | |
|
|