Untitled Document | | நரையும் திரையும் மூப்பும் நண்ணி வெறுப்பு மிகுந்த விரக்த னாகாது நன்மை தீமைஎந் நாளும் ஒன்றாய்க் கலந்து தங்கும்இக் காசினி மீது வாழ்வதில் மிக்க மகிழ்ச்சி யுடையோன், புவியில் அழகிய பொருளைத் தெரிந்து சொந்த மாக்கிடச் சுதந்திர முடையோன், தனக்கென வாழாத் தரும சீலன் - என்றம் மக்கள் ஏத்துதற் குரிய மனிதன் ஒருவன் மண்ணில் தோன்றி அருளால் அனைத்தும் அறவே யொழித்து, இவ் வைய மீது மானிட ரெல்லாம் உய்யும் வழியை உணர்த்தும் மந்திரம் பாதலம் அதனில் பதுங்கிக் கிடப்பினும் இவ்வுலக கத்தினில் யாரும் இதுவரை அஞ்ஞா னத்தால் அறியா திருப்பினும், ஒய்வொழி வின்றி உழைத்திடு வானேல், எந்நா ளாயினும் எவ்விடத் தாயினும் வெளியாம்; நன்கு விளங்குதல் திண்ணம், தேடின கண்கள் தெரிசனம் செய்யும்; நடந்த கால்கள் நன்னிலம் சேரும்; பண்ணிய தியாகம் பழுதா காது; இவனே, காலனை வென்ற காலனும் ஆவான்; யான்இது செய்வேன்; யான்இது செய்வேன்; தியாகம் செய்யத் தேசமொன் றுண்டு அறிந்த மக்களே ஆயினு மாகுக; அறியா தவரே ஆயினு மாகுக; செய்திடச் துணியும்இத் தியாக மதனால் எண்ணிலா மக்கள் இன்பம் அடைவர்; இந்நாட் டுள்ள யாவருளத்தும் துடிக்கும் ஒவ்வொரு துடிப்பொடும் என்றன் உள்ளமும் ஓயாது ஒத்துத் துடிக்கும்; அழைத்து நிற்கும் அரிய சுடர்களே! வருகின் றேன்இதோ! வருகின்றேன்இதோ! | |
|
|