பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு361

Untitled Document
உமர் கய்யாம் பாடல்கள

1670 காலைச் சிறுவன், கல்லினை அக்
     கங்குற் பானை யகமிட்டான்;
நீல வானின் மீனெல்லாம்
     நில்லா தோடி ஒளித்தனவே!
தாலத் தொருகீழ்த் திசைவேடன்
     தாங்கும் கதிரின் கண்ணிகளால்,
சீலக் கோமான் திருக்கோயில்
     சிகரம் கொண்டான், காணீரோ!
1

1671 அருணன் உதிக்கும் வேளையிலே
     ஆரோ அந்தச் சாலையிலே
'மருவும் வாழ்வின் கிண்ணமது
     வற்றி வறண்டு போகும்முனம்,
பருக மதுவைத் தாரீரோ?
     பாய்விட் டெழுந்து வாரீரோ?
அருமை மங்கை மாரே!' என்று
     அழைத்தல் கேட்டேன், அறிவீரே.
2

1672 காகம் கரைதல் கேளீரோ?
     கதவைச் சற்றே திறவீரோ?
ஆகஇரண்டு கணப்பொழுதுக்கு
     அப்பால் இங்கே தங்கோமே;
தேகம் அலுத்துச் செல்வோமோ,
     சென்றால் மீண்டு வாரோமோ;
வாகின் அமைந்த சாலைஇதன்
     வாயில் காக்கும் காவலரே!
3

1673 புலர்ந்து விடியும் பொழிதினிலே,
     பொய்கைக் கரையஞ் சோலையிலே,
மலர்ந்து நல்ல மணம்வீசி
     மகிழும் மலர்கள் ஆயிரமாம்;
உலர்ந்து வாடிச் சேற்றினிலே
     உதிருமவையும் ஆயிரமாம்;
கலந்த உலக வாழ்வைஇதில்
     கண்ணாற் கண்டு தெளிவாயே.
4