பக்கம் எண் :

374கவிமணியின் கவிதைகள்

Untitled Document
1722 எழுதிச் செல்லும் விதியின்கை
     எழுதி எழுதி மேற்செல்லும்;
தொழுது கெஞ்சி நின்றாலும்
     சூழ்ச்சி பலவும் செய்தாலும்
வழுவிப் பின்னாய் நீங்கியொரு
     வார்த்தை யேனும் மாற்றிடுமோ?
அழுத கண்ணீ ராறெல்லாம்
     அதிலோர் எழுத்தை அழித்திடுமோ?
53

1723 உயிரின் ஒளியும் மணமுமெலாம்
     உன்பேர ரருளில் உதிப்பனவாம்;
மயலின் மாசு நீங்கிடவே
     வறுமை சூழ வைத்தனைநீ,
எயிலும் அரணும் காப்பதிலுன்
     இணையா மடிகட்கு இணையாமோ?
அயலும் காவா மனிதருலகு
     அனைத்தும் காக்கும் ஆண்டவனே!
54

1724 புந்தி ஈசன் திருவடியிற்
     பொருந்தா உலகம், பொய்யுலகம்
முந்து துயரம் மூடுலகம்,
     மூட உலகம், எந்நாளும்
வெந்து தீயும் நரகினுக்கு
     விறகு தேடி இடுமுலகம்;
இந்த உலகில் ஏன், ஐயா!
     இன்னும் ஆசை வைப்பாய்நீ?
55

1725 வீடும் பழவீ டாகுதடா!
விட்டம் கூரை சுவரெல்லாம்
ஆடி அலைந்து விழுநாளும்
அண்டி அண்டி வருகுதடா!
நாடி இதனை இன்னும்நீ
நம்பி மோசம் போகாமல்,
பாடிப் பாடி, எம்பெருமான்
பாதம் போற்றி வாழ்வாயே.
56