பக்கம் எண் :

378கவிமணியின் கவிதைகள்

Untitled Document
1738 கான ரோஜா முகம்வெளிறிக்
     கவிழ்ந்து நிற்றல் கண்டவொரு
வானம்பாடி மனம்உருகி
     ‘மதுவுண், மதுவுண், மதுவுண்டால்
தீனம் நீங்கி உடல்தேறிச்
     செம்மை யாக வளர்ந்திடுவாய்;
ஏனம் மா! நீ வாடுகின்றாய்’
     என்று கூறிச் சென்றதுவே.
69

1739 உலகில் வாழும் இவ்வாழ்வின்
     உண்மை யறியாக் குயவன்செய்
கலச வாயை என்வாய்தான்
     கலந்து கொண்ட கதையிதுவாம்;
‘உலக வாழ்வு நிலையில்லை
     உண்இம் மதுவை உண்’எனவே
கலச வாய்என் வாயோடு
     கனிந்த சொல்லைச் சொன்னது. அம்மா!
70

1740 மன்னா மனிதர் ‘வாழ்வுஎன்றும்
     வழுவி வழுவிப் போகும்’ எனச்
சொன்னார்; சொன்ன சொல்லையின்னும்
     சொல்லிச் சொல்லிப் பயன் எதுவோ?
இந்நாள் இனிய நாளானால்,
     இறந்த நாளுக்கு இரங்குவதேன்?
பின்னாள் எண்ணி நடுங்குவதேன்?
     பெண்ணே! கிண்ணம் நிறையம்மா!
71

1741 என்னைக் கேளாது எங்கிருந்தோ
     இங்கே தூக்கி எறிந்திட்டான்;
என்னைக் கேளாது இன்னுமவன்
     எங்கே தூக்கி எறிவானோ?
என்ன செய்வேன்? இக்கொடுமை
     ஏழை உள்ளம் மறந்தொழிய,
வன்னக் கிளியே! ஒருகிண்ணம்
     மதுவை ஊற்றித் தருவாயே!
72