பக்கம் எண் :

388கவிமணியின் கவிதைகள்

Untitled Document
1778 துயரம் அடர்ந்து வளர்ந்துன்னைச்
     சுற்றி வளையும் வேளையிலே,
முயலும் முயற்சி யின்றி, ஒரு
     மூலை தேடி இருப்பதும்ஏன்?
அயலி லுள்ளார் படும்பாடு,
     அழுகண் ணீரும் கண்டு, உனது
மயலை முற்றும் மாற்றுவையே;
     மனத்தை நன்றாய்த் தேற்றுவையே.
109

1779 கண்ணும் உடைமை யாவையும்நீ
     நாசஞ் செய்து நாடுவையேல்,
உண்மை யாக உன்னையுமே
     உணர்ந்து கொள்வாய், ஐயமிலை;
மண்ணின் ஆசை நீங்கின், அருள்
     வள்ளல் ஆசை ஓங்கிவரும்;
எண்ணும் உள்ளத்து ஆசையிரண்டு
     இருக்க இடமும் உண்டோடா?
110

1780 உருளும் உலகில் ஒருநாளும்
     ஒன்றும் நிலையில் நிற்பதில்லை;
மருளும் மனிதர் வாழ்க்கைஒரே
     வழியிற் செல்வ துண்டோ? சொல்
பொருளை நோக்கிப் புகழ்விடுவார்;
     புகழை நோக்கிப் பொருள்விடுவார்;
அருளை நோக்கி இவைவிடுவார்
     அரியர், என்றம் அரியர், அம்மா!
111

1781 ஆழி சூழும் உலகாளும்
     அரச னாக வேண்டுமெனில்,
வாழும் வாழ்வில் உன்னையும்நீ
     மறந்து வாழ வேண்டுமடா!
ஏழை யாகி எளியவரின்
     எளிய னாக வேண்டுமடா!
தோழ னாகி யாவர்க்கும்
     தொண்ட னாக வேண்டுமடா!
112