பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு387

Untitled Document
1774 படுவெம் பாலை ஒருபுறமும்
     பயிர்வாழ் நன்செய் ஒருபுறமும்
நடுவண் ஒடுங்கி ஓடுமொரு
     நந்த வனமும், அவ்வனத்தில்
அடிமை அரசர் இவரில்லாது
     அமையும் அரிய நல்வாழ்வும்,
உடைமை யாகப் பெறுவேனேல்,
     உம்பர் நாடும் வேண்டேனே.
105

1775 வெய்யிற் கேற்ற நிழலுண்டு;
     வீசும் தென்றல் காற்றுண்டு;
கையில் கம்பன் கவியுண்டு;
     கலசம் நிறைய மதுவுண்டு;
தெய்வ கீதம் பலவுண்டு;
     தெரிந்து பாட நீயுமுண்டு
வையந் தருமிவ் வனமன்றி
     வாழும் சொர்க்கம் வேறுண்டோ?
106

1776 பொல்லான் என்பர்; அதனாலென்?
     புனிதன் என்பர்; அதனாலென்?
கல்லன் என்பர்; அதனாலென்?
     கலைஞன் என்பர்; அதனாலென்?
சொல்லா வசைகள் சொன்னாலென்?
     சூழ்ந்து நின்று புகழ்ந்தாலென்?
எல்லா நாளும் ஒருநாள்போல்
     இருக்க வேண்டும் என்மனமே.
107

1777 ‘புயலே யனைய கொடையாளர்,
     புவன மடங்காப் புகழடையார்,
இயலும் கல்விக் கிணையில்லார்’
     எனவே தத்தம் முன்னோரின்
செயலும் குணமும் சிறப்பும் அனு
     தினமும் மிகவே போற்றிடுவீர்;
வயலைப் பயிர்செய் யாதுபழ
     வைக்கோல் கிண்டிப் பயன்எதுவோ?
108