பக்கம் எண் :

386கவிமணியின் கவிதைகள்

Untitled Document
1770 ‘சின்னஞ் சிறியன், மதுவுண்டு
     திரியும் லோலன்’ என்றுள்ளம்
கன்னக் கன்னப் பேசிஎனைக்
     கலங்கச் செய்வர் கருணையிலார்;
அன்னை! அப்பா! நின்கோயில்
     அடிமை யாக அணுகியபின்,
என்னை யானும் அறிவேனோ?
     யான்செய் கருமம் எனதேயோ?
101

1771 உன்னை உள்ளின் என்னுளத்தே
     ஊக்கம் பெருகும் ஐயமில்லை;
உன்னை யல்லால் ஒருவரையிவ்
     உலகில் நோக்கும் ஆசையிலேன்;
உன்னை நோக்கி என்முகமங்கு
     ஒளிரக் கண்டு மகிழ்ந்திடுவேன்;
என்னை நோக்கி என்னுள்நீ
     இருத்தல் கண்டு வாழ்த்திடுவேன்.
102

1772 நண்ணும் உயிருக் குயிர்நீயாம்;
     நாடும் அன்பு நீயேயாம்;
கண்ணுள் மணியும் நீயேயாம்;
     கருத்துள் ஒளியும் நீயேயாம்;
பண்ணின் சுவையும் நீயேயாம்;
     பாவின் நயமும் நீயேயாம்
எண்ணின் நீயல் லாதபொருள்
     யாரும் உண்டோ இவ்வுலகில்?
103

1773 ஓதும் வேதம் ஒன்றுமில்லை;
     உருட்டும் மணிதாழ் வடமில்லை;
ஆதி கோயில் தேடிநிதம்
     அங்கும் இங்கும் அலைவதில்லை;
சாதி இல்லை மதமில்லை;
     தாரணி மீதோர் ஆசையில்லை;
யாதும் கவலை இல்லை; எனக்கு
     யாரே நிகராம் இவ்வுலகில்;
104