பக்கம் எண் :

42கவிமணியின் கவிதைகள்

Untitled Document
259   இடைவிடாது தபால் - உலகில்
     எங்கும் கொண்டு செல்வேன்;
சடைவி லாமலே - பலரைத்
     தாங்கியும் போவேன்.

260   நன்மை செய்யவந்தேன் - அதை
     நன்குண ராமல்,
வன்மைப் போரில்எனை - இபத்து
     மாட்டி விட்டார், ஐயோ!

261   தீவினை செய்ய - என்னைத்
     தினமும் ஏவுகிறார்;
பூவிலக மெல்லாம் - சுட்டுப்
     பொசுக்கச் சொல்கிறார்;

262   அன்பைக் கொன்றுவிட்டார்; - மனிதர்
     அரக்கர் ஆகிவிட்டார்;
துன்பம் செய்திடவே - இன்று
     துணிந் திறங்கிவிட்டார்.

263   ஆசைப் பேயெங்கும் - தலைவிரித்து
     ஆடு கின்றதையோ!
நாச காலம்ஐயோ - புவியும்
     நரக மாகுதையோ!

264   காட்டில் ஓநாயும் - நரியும்
     கடுவா யும்புலியும்
நாட்டு நாகரிகம் - கண்டு
     நகைக்க லாச்சுதையோ

265 சாந்த மூர்த்தியின் - அகிம்சா
     தருமம் மேற்கொண்டு
மாந்தர் இவ்வுலகில் - நன்றாய்
     வாழ்வ தெந்நாளோ?