பக்கம் எண் :

48கவிமணியின் கவிதைகள்

Untitled Document
303   புள்ளி மயிலோடு
     புனங்காத்து நிற்கும் அந்த
வள்ளி மணவாளன்
     மதலையாய் வந்தானோ?

304   ஆயர் பதியில்
     அற்புதங்கள் செய்து நின்ற
மாயவனே இங்கெமக்கு
     மகவாகி வந்தானோ?

305   நாலா யிரக் கவியின்
     நல்லமுதம் உண்டிட, மால்
பாலாழி நீங்கியொரு
     பாலகனாய் வந்தானோ?

306   பெண்கள் சிறுவீட்டைப்
     பேணா தழித்து, அவர்தம்
கண்கள் சிவக்க வைக்கும்
     கண்ணபிரான் நீதானோ?

307   ஆரடித்தார் நீ அழுதாய்,
     அடித்தாரைச் சொல்லி அழு;
சீரெடுத்த செல்வச்
     சீமான் திருக்குமரா!

308   பாலை விரும்பினையோ?
     பணயாரம் வேண்டினையோ?
சோலைப் பசுங்கிளியே!
     சுந்தரமே! சொல்லி அழு.

309   சப்பாணி கொட்டித்
     தளர்ந்தனையோ? அல்லதுன்றன்
கைப்பாவைக் காக்க
     கலங்கி அழுதனையோ?

310 தித்திக்கும் தேனும்
     தினைமாவும் கொண்டுன்றன்,
அத்தை வருவாள்;
     அழ வேண்டாம்; கண்மணியே!