பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு47

Untitled Document
295   பூமாலை வாடும், மணம்
     பொன் மாலைக் கில்லையென்று,
பாமாலை வைத்தீசன்
     பாதம் பணிபவனோ?

296   பாலமுதம் உண்டுதமிழ்ப்
     பாமாலை பாடி, இந்தத்
தாலம் புகழவரும்
     சம்பந்தன் நீதானோ?

297   கொன்றையணிந் தம்பலத்தில்
     கூத்தாடும் ஐயனுக்கு
வன்றொண்ட னாக
     வளர்ந்தவனும் நீதானோ?

298   கல்லைப் பிசைந்து
     கனியாக்குஞ் செந்தமிழின்
சொல்லை மணியாகத்
     தொடுத்தவனும் நீதானோ?

299   பூவில் அயனும், இந்தப்
     பூமீது வள்ளுவர்தம்
பாவின் நயம் உணரப்
     பாலகனாய் வந்தானோ?

300   கம்பன் கவியின்
     களியமுதம் உண்டிட, மால்
அம்புவியில் வந்திங்கு
     அவதாரம் செய்தானோ?

301   தேவாரப் பாகும்,
     திருவா சகத்தேனும்,
நாவார உண்ண எம்மான்
     நம்மகவாய் வந்தானோ?

302 ஆக்கம் பெருக,
     அறம்வளர, நாட்டையெலாம்
காக்கும் பெருமான்
     கருணைத் திருவுருவோ?