பக்கம் எண் :

46கவிமணியின் கவிதைகள்

Untitled Document
287   தேனே! பாலே! முத்தந் தா,
     தெவிட்டாக் கனியே! முத்தந் தா;
மானே! மயிலே! முத்தந் தா,
     மடியில் வந்து முத்தந் தா.

44. தாலாட்டு

288   ஆராரோ? ஆராரோ?
     ஆரிவரோ? ஆராரோ?

289   மாமணியோ? முத்தோ?
     மரகதமோ? மன்னவர்தம்,
தாம முடிமீது
     தயங்கும் வயிரமதோ?

290   முல்லை நறுமலரோ?
     முருகவிழ்க்குந் தாமரையோ?
மல்லிகைப் பூவோ?
     மருக்கொழுந்தோ? சண்பகமோ?

291   தெள்ளமுதம் உண்டு,
     தெவிட்டாக் கனிஉண்டு, எம்
உள்ளங் குளிர
     உரையாடும் பைங்கிளியோ?

292   கற்கண்டு, சீனி,
     கனியுங் கனிந்தொழுகு
சொற்கொண்டு எமக்குச்
     சுகமளிக்கும் பூங்குயிலோ?

293   நெஞ்சிற் கவலையெலாம்
     நீங்கத் திருமுகத்தில்,
புஞ்சிரிப்பைக் காட்டி, எம்மை
     போற்றும் இளமதியோ?

294 பல்லக்கில் அம்மான்
     பவனி வரும்பொழுது,
மெல்ல மடியிருந்து
     விளையாடும் பைங்கிளியோ?