பக்கம் எண் :

552கவிமணியின் கவிதைகள்

Untitled Document
சான்று. ஆனால், இவ்வகைப் பிரபந்தங்களில் இறைவனோடு பக்தனுக்கு இருக்கும் தொடர்பு மிக அணியதாய்க் காணப்படுவதில்லை. உதாரணமாக,

காகத் திருகண்ணிற் கொன்றே மணிகலந் தாங்கிருவர்
ஆகத்து ளோருயிர் கண்டனம் யாமின்றி யாவையுமாம்
ஏகத் தொருவ னிரும்பொழி லம்பல வன்மலையில்
தோகைக்குந் தோன்றற்கு மொன்றாய் வருமின்பத்துன்பங்களே


என்ற திருக்கோவைச்           செய்யுளைக் (71) கூறலாம். இதனினும்
அணித்தாயுள்ளது தலைவனையும் தலைவியையும் படர்க்கையில்வைத்துக் காதற்குறிப்புத் தோன்றப் பேசுதலாகும். உதாணரமாக,

முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்,
     மூர்த்தி யவனிருக்கும் வண்ணம் கேட்டாள்;
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்,
     பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யானாள்;
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்;
     அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தை;
தன்னை மறந்தாள்; தன்நாமம் கெட்டாள்;
     தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே.


இதனினும் மிகமிக அணித்தாயுள்ளது காதலி தானே நேர்படக்காதலனைக் குறித்துப் பாடுதலாகும்.

சிறையாரும் மடக்கிளியே, இங்கேவா தேனோடுபால்
     முறையாலே உணத்தருவன்; மொய்பவளத் தொடுத்தரளம்
துறையாரும் கடற்றோணி புரத்தீசன் துளங்குமிளம்
     பிறையாளன் திருநாமம் எனக்கொருகால் பேசாயே
                                            (தேவாரம், 160, 10)

என்ற சம்பந்தர் திருப்பாட்டும்,

கருப்பூரம் நாறுமோ? கமலப் பூ நாறுமோ?
     திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித் திருக்குமோ?
மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்
     விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல் ஆழி வெண்சங்கே!
                                            (நாய்ச்சியார், 7, 1)

என வரும் ஆண்டாள் பாசுரமும் தக்க உதாரணங்களாம்.

     இம்மூன்றாவது நிலையினின்றே   தே.வி.யின் கீர்த்தனங்களில் பல
இறைவன் மீது அவர் காதல் கூர்ந்த செய்தியைப் புலப்படுத்துகின்றன.