பக்கம் எண் :

88கவிமணியின் கவிதைகள்

Untitled Document
550 உரைத்த உரையெல்லாம் - மாறி
     உரைத்திடு வாரில்லை;
துரைத்த னமுமில்லை - தொடரும்
     துன்பங் களுமில்லை.

551 நீதி மன்றமில்லை - முழங்கும்
     நியாய வாதியில்லை;
பாதி முதல்தனையும் - வழக்கில்
     பறிகொ டுப்பதில்லை.

552 நாளைக் கில்லையென - இன்று
     நைந்து நைந்துருகி
மூளை கலங்கியே - இருந்து
     முணுமு ணுப்பதில்லை.

553 உண்டிக் கலந்து போய்க் - கெஞ்சி
     ஒரும னிதனையும்
அண்டி வாழவேண்டாம் - ஏழை
     அடிமை யாகவேண்டாம்.

554 அச்சக் கும்பிடில்லை; - நடிக்கும்
     அன்புக் கும்பிடில்லை;
பிச்சை யெடுப்பில்லை - காட்டும்
     பித்த லாட்டமில்லை.

555 இரப்ப வருமில்லை - சோம்பி
     இருப்ப வருமில்லை;
புரப்ப வருமில்லை - அவரைப்
     புகழு வாருமில்லை.

556 பட்டுடை வேண்டாம் - வயிரப்
     பணிகள் பூணவேண்டாம்;
பொட்டிட வேண்டாம் - தலையில்
     பூவும் சூட வேண்டாம்.

557 வெற்றி தோல்வியில்லை - பணத்தால்
     வெறியும் கொள்வதில்லை;
கற்றறிந் தோமென்று - செருக்கும்
     காட்டி நிற்பதில்லை.