ஒரு நள்ளிரவில் அந்த நந்தவனத்தில் இருக்கிறேன் ஊமை இருட்டின் மௌன அழகை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
என் ஏகாந்தத்தைக் கலைக்கும் வண்ணம் நீ ஓடி வருகிறாய். காரணம் புரியாத காரிருள் என்மேல் படிகிறது “இந்த நேரத்தில் இப்படி வரலாமா?” என்கிறேன்.
“ஏன் பதறுகிறீர்கள்? ஊர் வாய்க்குப் பயப்படுகிறீர்களா!” என்கிறாய்,
“ஊர் வாய்க்கு மட்டுமல்ல; நம்மையும் மீறி இந்த உடல் பசி கொள்ளத் தொடங்கினால் என்ன செய்வது...” என்கிறேன்.
“நீங்கள் உடலைப் பற்றியே நினைக்கிறீர்கள். நானோ என் ஆன்மாவை உங்கள் திருவடிகளில் சமர்ப்பிக்க ஓடி வந்திருக்கிறேன்” என்கிறாய்.
நீ என் பார்வையில் நெடுவேள் குன்றம்போல் நிமிர்ந்து நிற்கிறாய். என் குற்றமுள்ள நெஞ்சத்தின் சார்பாக நான் தலை குனிகிறேன்.
69 |
|
|
|