ஓர் அந்தியில், பழக்கமான அந்தப் பசும்புல் கம்பளத்தில் அமர்ந்தவாறு நாம் கண்களின் மொழியைக் கௌரவப் படுத்திக் கொண்டிருக்கிறோம்.
யாரோ ஒருவன் தடையாய் வருகிறான். வாயைத் திறக்கிறான்;
“நான் தேவன். இதோ, இந்தக் கனியைக் கொடுக்கவே வந்தேன்; இதை உண்டால் உன்மேனி, சுக்கைப்போல் உலராது; உன் இளமை கடற்கரையில் பதிந்த அடிச்சுவட்டைப்போல் விரைவில் அழியாது. ஒவ்வோர் இரவும் நீ உறங்கும் போது உன்னுள் பரவும் நரையும் திரையும் மூப்பும் உன்னை விட்டு ஓடும். ஓராயிரம் ஆண்டுகள் யயாதியைப் போல் நீ வாலிபத்தின் வாசனையை நுகர்ந்து கொண்டிருக்கலாம். இந்தா, பெற்றுக்கொள்; இதற்குப் பதிலாக இந்தக் கன்னியைத் துறந்துவிடு”
வந்தவன் வாய் ஒருவாறு ஓய்கிறது.
நான் அமைதியாகச் சிரிக்கிறேன்; “நீ கண்ணாடியைக் காட்டி வைரத்தை வாங்கப் பார்க்கிறாய் ஆபரணத்தை நீட்டி மானத்தை உரியக் கருதுகிறாய். உன் கனியோ ஓராயிரம் ஆண்டு வாழ்வோ எனக்கு வேண்டாம். என் காதலியோடு வாழும் ஒவ்வொரு வினாடியும் ஓராயிரம் ஆண்டுகள் வாழ்ந்ததாக நிறைவடைவேன். நீ தேவனோ இல்லையோ, உன் கனிக்காக என் வாழ்வை விற்றுவிடும் கயவன் நான் இல்லை” என்கிறேன்.
நீ என்னைக் கட்டிப் பிடித்துக் கொள்கிறாய்; என் உடல் நரம்பு ஒவ்வொன்றிலும் நளினமான நாதம் பிறக்கிறது.
இதுவும் ஒரு கனவுதான்! ஒரு கற்பனைதான்.
இப்படி எத்தனை கனவுகள்...! எத்தனை எத்தனை கற்பனைகள்!
70 |
|
|
|