நான் புறப்படப்போகிறேன் என்று தெரிந்ததும் என் நேயர்கள் எல்லோரும் என் அருகில் வருத்தமாக நிற்கிறார்கள்;
“பேரவைகளிலும் கலை இலக்கியப் பெருமன்றங்களிலும் உன் புகழ் எதிரொலிக்கும் என்று எதிர்பார்த்தோம்; கிணற்றுக்குள் கேட்கும் குரல்போல் அது குறுகி அடங்கி விட்டதே;
ஜனசக்தியின் ஒளியில் அரும்பி ஒரு மகாகவியாக மலர்ந்து கொண்டிருந்த நீ இடையில் இப்படி ஒரு பலவீனத்தின் கரம்பட்டுக் கருகி விட்டாயே!
சரி...... ஏதாவது விட்டு விட்டுப் போகிறாயா?” என்கிறார்கள்.
நான் சொல்கிறேன்; அவளும் நானும் சந்தித்த- அழகுகள் கூடிக் குலாவும்- அந்தப் பாதையை விட்டுச் செல்கிறேன்
அந்தப் பாதை நெடுக நாங்கள் நடக்கும்போது குளிர்ந்த நிழலையும் கூடவே பூக்களையும் காய்களையும் தூவிக் கொண்டிருந்த வேப்பமரங்களை விட்டுச் செல்கிறேன்.
அந்தப் பாதைக்கு நேர் உச்சியில் அருட்கைகளாகத் தோன்றும் ஐப்பசி மேகங்களை விட்டுச் செல்கிறேன்.
அந்தப் பாதையிலே வளர்ந்த வசீகரமான கனவுகளையும் கற்பனைகளையும் விட்டுச் செல்கிறேன்”
நான் புறப்படுகிறேன்.
82 |
|
|
|