பக்கம் எண் :

81
மக்கள்  மனம்  ஒன்றிய   சோவியத் கூட்டுறவு அமைப்பு காதலர் மனப்
பிணைப்பு ஆனது. சோவியத் பூமியின் மீது,   அவர்   கொண்ட நேசம்
மீராவின் கனவுகளை   சோவியத்   கவிதையாகவும்   ஆக்கிற்று. அந்த
நாட்டின் எந்த மொழியில் மொழி பெயர்க்கப்பட்டிருந்தாலும் அங்கேயான
வாசகர் அதில் தம் மண்ணின் மணமே  முகர்ந்திருப்பர். தமிழ்க் கவிஞர்
பலர்   மீராவைத்   தொடர்ந்து   தாம்  நேசித்த   நாடுகளைத்   தம்
அன்னையாய்,   தோழியாய்,  தோழனாய்,  ஆசானாய்ப்  பாடித் தமிழ்க்
கவிதையை உலகப் பார்வை உள்ளதாக்கினர். மூன்றும் ஆறும்  மீராவின்
கவியரங்கக் கவிதைகள். தமிழக அரசின் விருது பெற்ற தொகுப்பு.

தற்காலத்   தமிழ்க்   கவியரங்கின் முதல் நிகழ்ச்சி 1944-ம் ஆண்டு.
திருச்சி வானொலியில் தமிழ்ப்   புத்தாண்டு   தினத்தில்.  ஐம்பதுகளில்
சிலம்புச்செல்வர்  கவியரங்கம்  மக்களைச்   சந்திக்கும் ஒரு வழி எனக்
கொண்டார். அறுபதுகளில், திராவிட இயக்கத்தின்   வெற்றிக்குச்   சற்று
முன்னும் தொடர்ந்தும் தமிழ்க் கவியரங்கம்   இளமையும்    புதுமையும்
கொண்டதாயிற்று. அந்த   அரங்குகளில்   இளங்கவி மீரா முதலிடத்தில்
இருந்தார். அடுத்த பத்தாண்டுகளில் மீரா, அப்துல் ரகுமான், தமிழன்பன்,
பொன்னிவளவன்,   முருகு   சுந்தரம்   ஆகியோரும் அவர்களது கவி
நண்பர்களுமே   ஆயிரக்கணக்கானவர்   நிரம்பிய   பெரும்   பெரும்
அரங்குகளில் கவி பாடினர். காசு கொடுத்து மக்கள் கவிதை  கேட்டனர்.
தமிழ்க் கவியரங்கம் தமிழ்ப்   பண்பாட்டு  மீட்சியின்   ஓரங்கம். அந்த
வரலாற்றுப் பணியில் முதலில் நின்ற கவிதைச் சேவகன் மீரா.

ஊசிகள்   மீராவின் குறும்பாக்கள். அதில் ஆங்கில லிமெரிக் போல
அங்கதம்   தொனி. ஈழத்துக் கவிஞர் மகாகவி தமிழ்  லிமெரிக் முயன்று
வெற்றி கண்டவர். தமிழ் நாட்டில் ஒருவரும் இல்லையா  லிமெரிக் எழுத
என்ற அவா தீர்த்தது ஊசிகள். இந்தச்  சமூகம்  வாழைப்பழம். மீராவின்
கவிதைகளே ஊசிகள்.