கடலும் மழைத்துளிகளும்
கடல் :
மழைத் துளிகாள், மழைத் துளிகாள்,
என்னி டத்திலே
வந்து நீங்கள் சேர்ந்த தாலே
மகிமை பெறுகிறீர்.
அழகு, ஆழம், அகலம், நீளம்
என்னைப் போலவே
யாரி டத்தில் உண்டு? நீங்கள்
கூற முடியுமோ?
மழைத் துளிகள்:
ஆறு, ஏரி, குளங்க ளெல்லாம்
அளவில் சிறியவை.
ஆன போதும் அவற்றில் சேர்ந்தால்
அதிகம் மகிழுவோம்.
ஊரில் உள்ளோர் தாகம் தீர
உதவி செய்யலாம்.
உப்புக் கரிக்கு தென்று சொல்லித்
துப்பு வார்களோ? |