பக்கம் எண் :

சுரதாவின் தேன்மழை64

நிலத்தில்நாம் உண்டாக்கும் கலப்பை, மாந்தர்
       நெஞ்சத்தில் உண்டாக்கி விடுமோ மாயின்,
கலப்புமணம் உருவாக வழியுண் டாகும்;
       கலப்புமணத் தால் சாதி செத்தே போகும்!"

என்றுரைத்தான் கல்லாடம் கற்ற குப்பன்;
       எல்லாரும் தலையசைத்தார்; மீண்டும் குப்பன்;
"குன்றெடுத்த நம் நாட்டில் முன்னர் இந்தக்
      கொடுமையெல்லாம் இருந்ததில்லை; இவற்றை எல்லாம்,
தின்றுவிட்டுத் தூங்குகின்ற தமிழர் கட்குத்
       தீவிரமாய்த் எடுத்துரைக்க வேண்டும்" என்றான்;
"ஒன்றுபட்டு வாழ்வதற்குத் தடையாய் நிற்கும்
       ஒருகோடி வேற்றுமையை ஒழிப்போம்" என்றார்.

பாம்பு
`கொக்கறுகோ, கொக்கறுகோ, கொக்கொக்` என்றே
       கூவிற்றுத் தீக்குடுமிச் சேவல் , அந்தச்
சொக்கழகி விழித்தெழுந்தாள்,`வீட்டு வேந்தன்`
       சொக்கனென்பான் `விழிவாசல்` திறந்தா னில்லை,
பக்குவமாய் நிழல்தனிலே கனிந்த வாழைப்
       பழம்போன்றாள், அன்னவனைத் தொட்டெ ழுப்பச்
சொக்கனென்பான் புரண்டபடி விழித்தெ ழுந்தான்;
       சூரியனோ, கருக்கிருட்டைக் கிழித்தெ றிந்தான்.

படுக்கைதனை விட்டெழவே, விரித்த பாயைப்
       பாவையவள் மெதுவாகச் சுருட்ட லானாள்,
வடித்ததமிழ் போன்றவளைச் சொக்கன் நோக்கி,
       "வானவரம் பன்நாட்டில்பூத்த பூவே!
அடிக்கடிநான் செஞ்சுருட்டி பாடு கின்றேன்;
       அநுதினம்நீ பாய்சுருட்டிப் பழகு கின்றாய்;