பக்கம் எண் :

சுரதாவின் தேன்மழை63

ஊருக்கும் உலகுக்கும் வாழ்வ ளிக்கும்
       உழவரெல்லாம் வாய்ப்பேச்சை வளர்க்க லானார்.
"ஈரத்தின் வரலாறே மேக மாகும்;
       ஏருழவின் வரலாறே வைய மாகும்;
பாருக்குச் சோறளித்துப் பாது காக்கும்
       பயிர்தொழிலே உயிர்த்தொழிலாம்!" என்று வீர,
சூரப்பன் விரிவா விளக்கிக் கூறித்
       தொண்டைக்கு நீர்பாய்ச்சிக் கொண்டிருந்தான்;

"உழவனுக்கே நிலம்சொந்தம் என்றி ருந்தால்,
       உலகத்தில் நமைப்போன்ற உழவ ரெல்லாம்,
அழுபவர்கள் ஆவோமோ? ஒருகூட் டத்தார்
       அனுபவிப்போர் ஆவாரோ? எறிந்த கல்போல்
விழுபவர்கள் ஆவோமோ? ஏய்ப்போர் நம்மை
       மிதிப்பாரோ படித்துறைபோல்?" என்றான் எட்டி,
"முழுவுரிமை பெற்றாக வேண்டும்; இன்றேல்
       முன்னேற்றம் முயற்கொம்பே!" என்றான் ஏவி.

"சாவதெனில் உரிமைக்குச் சாவ தன்றோ
      தமிழ்நாட்டின் வரலாற்று வீர மாகும்;
கூவுவதிற் பயனில்லை" என்றான் குப்பன்.
       குறிஞ்சியென்பான் "ஆமப்பா ஆம்ஆம்" என்றான்;
நாவரசன் கொக்கரித்தான்; அப்போ தங்கே
      நல்லூரான் கலப்பையொடு வந்து சேர்ந்தான்.
ஏவியெனும் பெயருடையான்,"கலப்பை என்றே
       ஏனிதனை அழைக்கின்றோம் குப்பா?" என்றான்.

"நிலத்திலுள்ள மேல்மண்ணைக் கீழ்மண் ணோடு
      நீண்டுள்ள கூர்முனையால் ஒன்று கூட்டிக்
கலப்புதனை உண்டாக்கும் கார ணத்தால்
       கலப்பையென்று பெயரிட்டார்; கலப்பை மூலம்