|
4.சொல் விளக்கம்
|
|
கலப்பை
|
கருமைபெற்ற கடல்நீரும்,
நீல வானும்
கைகோத்துக் கொண்டிருக்கும் இடத்தை விட்டுப்
பெருமைபெற்ற செங்கதிரோன் மேற்கே சென்றான்;
பேச்சளந்து கொண்டுசிலர் கிழக்கே சென்றார்.
உரிமைபெற்ற வரிவண்டு, பூத்த பூவை ஊதிற்று;
நீராடப் பெண்டிர் சென்றார்;
எருமைபெற்ற ஏருழவன் குப்பன் என்பான்
ஈரவயல் வெளிநோக்கி விரைந்து சென்றான்.
தங்காமல் தயங்காமல், வாய்க்கால் வெள்ளம்
ததும்பவழிந் தோடிவரக் கண்ட குப்பன்,
"வங்காளக் கடல்நோக்கி ஓடும் நீரே,
வயலுக்குப் போ" வென்று பாய்ச்ச லானான்.
சங்கீதக் குரலுடையோன் எட்டி என்பான்,
தனித்தமிழ் மருதப்பண் பாட, வேலூர்
வெங்கோடன், வெண்காந்தள் அரும்பு போன்று
விளங்கிய கூர் கொழுமுனையால் சேறு செய்தான்.
வெடித்திருந்த வயலெல்லாம் தண்ணீ ராலே
மெய்யெழுத்தின் முன்னுயிர்போல் பொருந்திக்
கொள்ள,
தொடிப்புழுதி எருவிட்ட வயலில், ஏரின்
துணைகொண்டு தொழிலுழவர் வேலை செய்தார்.
படிப்படியாய் வெயிலேறச் சேறு செய்தோர்
பலர்தலையில் சூடேறக் கண்ட குப்பன்,
தடித்ததொரு மரத்தின்கீழ் வந்த மர்ந்தான்;
தையானும் மெய்யானும் ஆங்கே வந்தார். |
|
|
|