பக்கம் எண் :

சுரதாவின் தேன்மழை7


பல்கலைச் செல்வர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார்

      நான் பள்ளியில் படிக்கும்போது இனிச் செய்யுள்கள் எழுதுவதால்
பயனில்லை என்ற எண்ணம் பரவியது. பசித்து வாடும் பறவை பாடுவது எங்கே?
அதனால் அந்தக் கொள்கையைப் பேசவும் தொடங்கினர். ஆனால் அழுதாலும்
பாட்டாக அழுகின்ற நாட்டில் பாட்டிற்குத் தடையிட முடியுமா? பாடினாலும் பழம்
பாட்டுப் போலவே பாடவேண்டும் என்று அறிஞர் பலர்வற்புறுத்தினார்கள். காளை
கிழவன் போலப் பேச முடியுமா? இது ஒருபுறம். பழமையே வேண்டாம்; தேடித்
தேடி இலக்கண விதியை ஒதுக்கித் தள்ளினால்தான் தனியுரிமைச் செய்யுள்
தழைக்கும் என்பவர்கள் மற்றொரு புறம், இருளிருந்தால்தான் வெளிச்சம் இருக்கும்.
இருளின்றி வெளிச்சம் என்று பேச வாய் ஏது? இருளும் ஒளியும் மாறி மாறி
வருவதே உலகம், இரு வேறு போக்குகளின் மாறாட்டப் போக்கே கவியுலகம்.

      இந்த இரண்டையும் ஒருங்கிணைத்துப் பாலம் அமைப்பாரும் உள்ளனர். அந்த
நடுநிலை உலகைச் சேர்ந்தவர் கவிஞர் சுரதா. அவருடைய பாடல்கள் இரு
கூட்டத்தாருக்கும் பிடிபடாமல் போகலாம், இவர் பாடல் சிரஞ்சீவிப் பாடல்களாகுமோ
ஆகாதோ என்று சிரஞ்சீவி படலத்தில் நானும் புகவில்லை. இரண்டு கொள்கையினைரையும்
அணைத்துச் செல்லும் இவர் பாடற்போக்கு ஒரு பெரிய தொண்டையே செய்து
இருவர் பாடற்களுக்கும் முன்னுரையாக அமைகிறது என்றே முன்னுரை கூறவந்தேன்.

      பழம் பாடல்களை அறியாதவர்கள் இங்கே இருபதாம் நூற்றாண்டு வடிவில்
அவற்றைக் காணலாம்; புதிய கருத்துக்களின் புதிய வடிவத்தையும் இங்கே காணலாம்;
செய்யுளாக இனிக்கப் பாடும் கலை நயம் எளிமையில் கை வந்திருப்பதைப் பாட்டில்
எங்கும் காணலாம்.

      இதன் விளக்கம் கூறவேண்டுவதில்லை. பாடலைப் பாடியே பாருங்கள்.

                                                    தெ.பொ. மீனாட்சிசுந்தரம்