பக்கம் எண் :

சுரதாவின் தேன்மழை8

     பாரதியாருக்கு ஒரே ஒரு பாரதிதாசன்தான் கிடைத்தார். அனால் பாரதிதாசனுக்கோ பல
தாசர்கள் கிடைத்தனர். அவர்களுள் நானும் ஒருவன்.

      நான் பிறரைப் பின்பற்றி எழுதுவதுமில்லை; பிறர் என்னைப் பாராட்ட வேண்டும்
என்பதற்காக எழுதுவது மில்லை.

     புரிந்து கொள்ளாத போதும், பொறாமைப் படும் போதும் மற்றவனை முட்டாள் என்று
முடிவு கட்டுகின்ற மனிதனின் பாராட்டுப் படலம் ஒரு மாதங்கூட நிலைத்திருப்பதில்லை.
என்பதை நான் நன்கறிவேன். எனவேதான் நான் பாராட்டுரைகளுக்குப் பலியாகி
விடுவதில்லை.

    கலைஞர் கருணாநிதி அவர்கள் எனக்கு வாய்ப்பளித் திருக்காவிட்டால், நான்
நாடறிந்த கவிஞனாகியிருக்க முடியாது. அவர் செய்த நல்ல உதவிக்கு என் நன்றி.

      தொழுவூர் வேலாயுத முதலியார் இல்லாவிட்டால் இராமலிங்க அடிகளாரின் அருட்பா
வெளி வந்திருக்காது. கவிஞர் வெள்ளையாம்பட்டு சுந்தரம் அவர்கள் இல்லாவிட்டால், இந்த
நூல் உருவாகியிருக்காது. அவரை நான் காரணங்கருதிப் பாராட்டுகிறேன். என் நன்றியைத்
தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

     என்னுடைய நூல் இவ்வளவு பெரிய அளவில் இதுவரை வெளிவந்ததில்லை. என்
எழுத்துக்களை நம்பி சேகர் பதிப்பகத்தார் இதனை மிகச் சிறந்த முறையில்
வெளியிட்டுள்ளனர். அவர்களை என்றென்றும் நான் மறக்க முடியாது.

     பன்மொழிப் புலவர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் அவர்களை நான் பெரிதும்
மதிப்பவன்.அவர்கள் இந்நூலுக்கோர் அணிந்துரை வழங்கியுள்ளார்கள். அவர்களுக்கும்
என் நன்றி.

அண்ணாமலைப்புரம்
சென்னை - 28                                                               சுரதா